Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

இடதுசாரிகளின் தீண்டாமை அரசியல் தான், இனவாதமாக மதவாதமாக புளுக்கின்றது

இலங்கையில் இன - மத முரண்பாடுகளும், இன - மத பயங்கரவாதங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்து இருக்கின்றது. இது தோன்றாமல் இருக்கவும், தோன்றிய பின் அதைத் தடுக்கவும், இலங்கை இடதுசாரியம் என்ன செய்திருக்கின்றது? இன மத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அரசியல்ரீதியாகவும், நடைமுறைரீதியாகவும் எதை முன்வைத்திருக்கின்றது? இடதுசாரிய வரலாற்றில் எதையும் காண முடியாது. இதன் பொருள் இலங்கை இடதுசாரியம் என்பது சந்தர்ப்பவாத அரசியலை முன்னிறுத்திக் கொண்டு, வரட்டுத்தனமாக இயங்கியது, இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இடதுசாரிகளின் இன-மத விவகாரங்களில் கண்டனம், அறிக்கை, கொள்கை விளக்கம், அரசியல் ஆய்வுக் கட்டுரையைத் தாண்டி, இடதுசாரிய செயற்பாட்டை இன-மத விடையங்களில் காணமுடியாது. இதற்கு அப்பால் இன-மத வலதுசாரிகளின் போராட்ட எல்லைக்குள், தாங்களும் தங்கள் கொடியை பிடித்துக்கொண்டு, இடதுசாரிய கோசத்தை போடுவதுடன் நிறுத்திக் கொள்கின்றனர். இன-மத ஒடுக்குமுறைகள், முரண்பாடுகள், பகுத்தறிவற்ற சிந்தனைமுறை தங்கள் அரசியல் பிரச்சனையல்ல, வலதுசாரியம் தீர்வு காண வேண்டிய அரசியலாக்கிவிடுகின்றனர். வர்க்கப் போராட்டம் இதற்கு தீர்வு, அது வரை தாங்கள் அதில் தலையீடு செய்வதை நடைமுறையில் இலங்கை இடதுசாரிகள் தவிர்த்து விடுகின்றனர்.

சுரண்டல், சுரண்டல் அமைப்பு குறித்து எழுதும் இவர்கள், மதவாத இனவாதம் குறித்து எழுதுவதில்லை. மத-இன சிந்தனை முறையாகவுள்ள பெரும்பான்மை சமூகத்துடன், முரண்படாத சந்தர்ப்பவாத அரசியலாக இது இருக்கின்றது.

இந்த வகையில் இலங்கையில் இனம், மதம்.. சார்ந்த முரண்பாடுகள் குறித்து, வரட்டுத்தனமான பார்வையே இலங்கை இடதுசாரிய அரசியலாக இருக்கின்றது. இதை இயக்குவது சந்தர்ப்பவாத அரசியல். இனமத பிரச்சனையை வர்க்க சமூக அமைப்பின் விளைவாக விளக்குவதைத் தாண்டி, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து அதில் தலையிடுவதில்லை. கொள்கை அளவில் ஏற்றுக் கொள்வதைக் கூட, நடைமுறையில் சமூக இயக்கமாக முன்னெடுக்க முன்வருவதில்லை.

இன்று இலங்கை இடதுசாரிய வர்க்க நடைமுறை செயற்தளத்தில் உள்ளவர்கள் முதல் இடதுசாரியத்தை தங்கள் தனிப்பட்ட இருப்பிற்காக கட்டிப் பாதுகாக்கின்றவர்கள் வரை, ஒரே மாதிரியாகவே தான் சமூக முரண்பாடுகளில் தலையிடுவதில்லை.

இலங்கை தேர்தல் கட்சிகள் இனம், மதம் சார்ந்த பிரிவுகள், பிளவுகள் மூலம், சமூகத்தை கூறுபோடுகின்ற போது அந்த அரசியலில் இவர்கள் தலையிடுவதில்லை. மாறாக சமூக முரண்பாடுகள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்பட்டு விடும் என்பதே, இவர்களின் நடைமுறை கொள்கையாக இருக்கின்றது. அது வரை அதில் தலையிடாமை. அதாவது வர்க்கப் போராட்டம் வரை தலையிடாக் கொள்கை என்பதே இவர்களின் நடைமுறை. இது இனமுரண்பாட்டுக்கு தீர்வை முன்வைத்து செயற்படுவதை மறுதளிக்க வைக்கின்றது. மதவாதத்துக்கு எதிரான பகுத்தறிவுவாதத்தை முன்வைத்து, சமூகத்தை வழிநடத்துவதை மறுதளிக்கின்றது. இதனால் இன்று இடதுசாரியம், இனரீதியாக பிரிந்து கிடக்கின்றது. மதரீதியாக பரிணமிக்கும் அளவுக்கு, செயலற்ற போக்கு வழிகாட்டுகின்றது.

தமிழ் -சிங்கள் கட்சிகளாக, இருவேறு பரிணாமங்களைக் கொண்டு காணப்படுகின்றது. சிங்கள இடதுசாரியம் வர்க்க நடைமுறையை கொண்டு இயங்க, தமிழ் இடதுசாரியம் தங்கள் தனிப்பட்ட இருப்புக்கான, இடதுசாரியத்தை கொண்டு காணப்படுகின்றது.

இந்தப் பொதுப் பின்னணியில் தமிழ் இடதுசாரிகள் என்று கூறிக்கொண்டு இருப்பவர்கள், சாதிய மத சடங்குகளை, தாங்களே முன்னின்று தங்கள் வீடுகளில் செய்கின்றவர்களாக இருக்கின்றனர். அதை தங்களளவில் தாங்கள் கூட கேள்விக்குள்ளாக்குவதில்லை. அவர்களின் கட்சித் திட்டங்கள், வெகுஞன அமைப்பு கொள்கைத் திட்டங்கள் ஒப்புக்கு இனம் மதம் குறித்து மாரடிப்பதைத் தாண்டி, சமூகத்துக்கு முன்னோடியாக நடைமுறை எதையும் சொந்தமாக கொண்டிருப்பதில்லை. ஒரு இடதுசாரியாக, தன்னை பகுத்தறிவுவாதியாக முன்னிறுத்த முடியாதவனாக நடைமுறையில் இருக்கின்றனர். சாதி முதல் சடங்குகள் வரை கடைப்பிடிப்பதே, அவர்களின் வாழ்க்கையாக இருக்கின்றது. சாதி கடந்த திருமணத்தை ஊக்குவிக்க மறுக்கின்ற, சடங்குகள் சம்பிரதாயம் கடந்த திருமணங்களை ஊக்குவிக்க மறுக்கின்ற, கொள்கை அளவில் இடதுசாரிகளாகவும் இடதுசாரியமாகவும் இருக்கின்றது. அதாவது நடைமுறையில் போலி இடதுசாரியமாக இருக்கின்றது.

சமூகத்தில் நிலவும் நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கூறுகளை, தாங்களும், தங்கள் வீடுகளிலும், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கின்றவராகவே இருக்கின்றனர். பூநூல் போட்ட ஐயர் மந்திரம் சொல்ல, ஆணாதிக்க தாலியை பெண்ணுக்கு கட்டுகின்றவர்கள், வெள்ளாளிய சிந்தனையிலான தமிழ் இடதுசாரியத்தை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்டு உள்ளனர். வெள்ளாளிய சிந்தையிலான சமூக வாழ்வியல் கூறுகளில் கூடிக் கும்பி அடிக்கின்ற அதேநேரம், ஏகாதிபத்தியம் வரை கட்டுரைகள் எழுதுகின்ற போலி இடதுசாரியமே, இன்றைய சமூகத்தின் எல்லா கேடுகளுக்கும் அடிப்படையானதாகவும், அதை பாதுகாக்கின்றதாகவும்; இருக்கின்றது.

இந்த பின்னணியில் எல்லா மதவாதங்களும், இலங்கையில் செழித்து வாழ்வதற்கு ஏற்ற சூழலையே, இடதுசாரியம் உருவாக்கி கொடுக்கின்றது. இன்று சிங்கள இடதுசாரிய மாணவர்கள் கல்வியை தனியார் மயமாக்கும் அரசின் கொள்கைக்கு எதிராக போராடுகின்றனர். இதனால் கல்வியை அரசு தனியார் மயமாக்க முடியவில்லை. இப்படி வர்க்க அடிப்படையில் போராடும் இடதுசாரிய மாணவர்கள், கல்வியை மதமயமாக்கும் அரசின் கொள்கையையும், கல்விக்கூடங்களில் மத அடையாளம் புகுத்தும் மதவாதக் கொள்கையை எதிர்ப்பதில்லை. இதன் மூலம் மறைமுகமாக ஆதரிக்கின்றனர்.

இதுதான் இடதுசாரிய சந்தர்ப்பவாதம். இனம், மதம் போன்றவற்றில் நடைமுறையில் தலையிடாக் கொள்கை. கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதுடன், அரசியல் ரீதியாக முடித்து விடுவதும், நடைமுறையில் மறுப்பதும் இடதுசாரியமாக இருக்கின்றது.

இலங்கையில் இன முரண்பாடு, மத முரண்பாடு .. நீண்ட வரலாற்றைக் கொண்டது. மக்கள் முன்பு கூடி வாழ்ந்ததை விட, இன்று மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் பலியாகிக் கொண்டு இருக்கின்றனர். இதை தடுக்கும் எந்த செயல்திட்டமும் இடதுசாரியத்திட்டமும் கிடையாது.

இந்த வகையில் இலங்கை இடதுசாரியம் குறித்த விமர்சனம் என்பது, சமூக முரண்பாடுகளில் தலையிடும் நடைமுறையைக் கோருவதாக இருக்கின்றது. இதுமட்டும் தான், சமூகத்தில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரும்.