Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ம.க.இ.க, மக்கள் அதிகார.. அமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு காரணம் என்ன?

ம.க.இ.க, மக்கள் அதிகாரம்.. போன்ற பல வெகுஞன அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், தொடர்ச்சியாக கட்சியை விட்டு விலகி வருகின்றனர் அல்லது கட்சியில் இருந்து விலக்கப்படுகின்றனர்.

கட்சியை விட்டு விலகியவர்கள் மட்டுமல்ல, தொடர்ந்தும் கட்சிக்குள் இருப்பவர்களும் கட்சியின் இன்றைய இந்த நிலைக்குப் பொறுப்பாளிகளே. அதாவது கட்சி எந்த வகையிலும் தன்னை நியாயப்படுத்த முடியாது என்பதுடன், விலகியவர்கள் இன்றைய இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல என்பது பொருள் அல்ல.

போராட்டத்தையே வாழ்க்கையாக வரிந்து கொண்டவர்கள், கட்சிக்குள் போராட முடியாதளவுக்கு கட்சி இருக்கின்றது என்றால், கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை கொண்டிருக்கவில்லை என்பது தான் பொருள்.

பல பத்து வருடங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வர்க்க விடுதலையையும், சமூக விடுதலையையும் இலட்சியமாக கொண்டு போராடியவர்களை, ஒரே நாளில் அதை இல்லை என்று மறுப்பவர் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. அதேநேரம் ஈடு இணையற்ற தியாகங்கள் மூலம், தங்கள் வாழ்க்கையை மக்களின் விடுதலைக்காக அர்ப்பணித்தவர்கள். தனிநபராக தங்களை முன்னிறுத்த, சமூகம் குறித்து புலம்பியவர்களல்ல.

கட்சியில் ஒன்றிணைந்து போராடுவதன் மூலம், மக்களின் விடுதலைக்கு தலைமைதாங்கி அதை வென்று எடுக்க முடியும் என்று எதார்த்தத்தைப் புரிந்து கொண்டவர்கள்.

இப்படி ஒன்றிணைந்தவர்கள் இன்று அனாதைகளாக, ஒருவருக்கு ஒருவர் எதிரியாக, மக்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக எதிர்வினையாற்ற முடியாது மனநோயாளியாக… தள்ளிவிடுவதை கம்யூனிஸ்டோ, கம்யூனிஸ்ட் கட்சியோ செய்ய முடியாது. நேற்று வரையான தோழர்களை, இன்று எதிரியாக சித்தரிப்பது என்பது அடிப்படையில் மனிதவிரோதக் கூறு. இதுவே தனிமனித வக்கிரமாக - முரண்பாடாக மாறி இருப்பது கம்யூனிஸ்ட்டுக்குரிய பண்பல்ல.

இவர்கள் முதலாளித்துவ, பார்ப்பனிய, இனவாத, ஆணாதிக்க … சிந்தனைமுறைக்கு திரும்பிச் சென்றுவிட்டவர்கள் அல்ல. எதிரியுடன் கூடிக் கூத்தாடும் தத்துவவாதிகளுமல்ல, அதன் செயல் வீரர்களும் அல்ல. வர்க்க விடுதலையையும் நம்புகின்றவர்கள்.

கட்சியும், அது கொண்டிருக்க கூடிய அமைப்பு வடிவமானது ஜனநாயக மத்தியத்துவதாலானது. இதற்கு மாறாக அதிகாரத்துவம் கட்சியாகும் போது, எதிரி நண்பனை பிரித்தறிய முடியாதளவுக்கு போராடும் பொதுத் தளத்தில் அரசியலற்ற குறுங்குழுவாதமாக மாறி, அமைப்பு முதன்மை பெறும் போது கட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லாது போகின்றது.

 

கட்சியில் ஜனநாயக மத்தியத்துவமின்மையே - அதிகாரத்துவத்தின் அடிப்படை

இன்று இந்த நெருக்கடியை முன்னிறுத்தி மார்க்சிய விரோதிகளோ, மார்க்சிய தத்துவத்தின் குறைபாடாக காட்டி, தங்கள் வர்க்க நலனை உயர்த்திப் பிடிக்கின்றனர். முதலாளித்துவ சிந்தனைமுறையில் உலகைக் காணும் தனிநபர் அரசியல் இலக்கிய புலம்பல்வாதிகள், தங்கள் இருப்புக்கு ஏற்ப இந்த நிலைமை மீது காறி உமிழ்கின்றனர். வேறு சிலர் குறிப்பான நிலைமைகளை விளங்கிக் கொள்ளும் கோட்பாடுகளின் குறைபாடாக காட்டி தப்பி விட முனைகின்றனர். உண்மை இதுவல்ல.

மாறாக தமிழக (இந்திய) மார்க்சியவாதிகளின் சிதைவுகளுக்கு அடிப்படைக் காரணம், ஜனநாயக மத்தியத்துவம் குறித்த பிரச்சனையேயாகும். கட்சியாக தங்களை ஒருங்கிணைத்துக் கொள்ளும் போது, கட்சிக்குள் இருக்கவேண்டிய ஜனநாயகம், சிதையும் போது கட்சியாக நீடிக்க முடியாது போகின்றது. தொடர்ந்து இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது. தத்துவ, கோட்பாட்டு விவாதங்களைக் கடந்து, கட்சி ஜனநாயக மத்தியத்துவதுடன் இருந்ததா என்ற கேள்விக்கு, சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பும் வெளிப்படையான சுயவிமர்சனத்தை செய்வதன் மூலம் - மீள ஒருங்கிணையும் வாய்ப்பை உருவாக்க வேண்டியது கம்யூனிட்டுகளினதும், கட்சியினதும் கடமையாகும்.

கட்சி என்பது ஸ்தாபன அமைப்பு வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஸ்தாபனம் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இதன் பொருள் பெரும்பான்மை கருத்தைக் கொண்டு, ஜனநாயகத்தை (சிறுபான்மை கருத்தைக்) கட்டுப்படுத்துவது கிடையாது. மாறாக பெரும்;பான்மைக் கருத்து சிறுபான்மை கருத்துக்கு ஜனநாயகத்தை எப்படி வழங்குகின்றது, அதை எப்படி நடைமுறைப்படுத்துகின்றது என்பதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தில் முழு அடிப்படையாகும். பெரும்பான்மையல்லாத கருத்து தன் கருத்தை சரியென்று முன்னிறுத்த, கட்சி என்ன பொறிமுறையைக் கொண்டிருந்தது? இதை சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும், சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்குவது அவசியமாகும். கட்சி முதல் கட்சியில் இருந்து விலகியவர்கள் இதை வெளிப்படையாக செய்யவில்லை என்றால், கட்சி அரசியலில் இருக்கத் தகுதியற்றவராக தங்களை தாழ்த்திக் கொள்கின்றனர் என்பது தான் பொருள்.

ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்டதே கட்சி என்று கட்சி கூறும் பட்சத்தில், முரண்பட்ட பல கருத்துகளை கொண்டதே கட்சி என்பது தான் பொருள். இதை மறுக்கும் போது அது

1.அதிகாரத்துவக் கட்சியாக மாறுகின்றது

2.தூய்மைவாதத்தை முன்னிறுத்தும் கட்சியாக குறுகிவிடுகின்றது

3.தனிநபர்களை முன்னிறுத்தும் கும்பல்வாத கட்சியாக சீரழிகின்றது

4.தனிநபர் அவதூறுகளை விதைக்கும் கட்சியாக வக்கிரமடைகின்றது

5.மையநிலைப்பாட்டை முன்னிறுத்தும் தனிநபர்களின் சந்தர்ப்பவாதக் கட்சியாகி விடுகின்றது

கடந்த பத்து வருடங்களாக நடந்து வந்த இந்தப் போக்கு - பல முனைகளில் நடந்திருப்பதைக் காண முடியும். நேற்று வரை தோழர்கள், இன்றோ துரோகி, ஓடுகாலி, சீரழிவுவாதி என்று கூறிவிடுவது எப்படி சாத்தியம்? துரோகி, ஓடுகாலி, சீரழிவுவாதி என்று கடந்த காலத்தில் மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் முன்வைப்பதன் மூலம், உள்ளார்ந்துள்ள ஜனநாயக மத்தியத்துவமின்மைக்கு தீர்வு காணமுடியாது.

எமது அனுபவத்தின் அடிப்படையிலும், அவதானத்திலும் தாம் அல்லாதவர்களை எதிர்க்கும் போது, கட்சி அணிகள் தனிநபர் தாக்குதல் மூலம் தம்மை முன்னிறுத்துவதைக் காணமுடியும்;. அரசியலற்ற தனிநபர் தாக்குதல், கும்பல்வாதத் தாக்குதல்கள், நூற்றுக் கணக்கில் நடந்ததை - பல்வேறு பின்னோட்டங்களில் காணமுடியும். இதைத் தலைமை அனுமதிக்கின்றதன் பொருள், கட்சி ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட அரசியலை இழந்துவிட்டது என்பது தான் பொருள். இதைக் கடந்த பத்து வருடங்களாக அவதானிக்க முடியும்.

நீண்ட நெடிய கட்சிக்கான அர்ப்பணிப்பு, உழைப்பு, தியாகங்களைக்; கொண்ட போராட்ட வாழ்க்கை எவ்வளவு தான் புரட்சிகரமானதாக இருந்தாலும், ஜனநாயக மத்தியத்துவமில்லாத கட்சி மக்களை வழிநடத்தும் புரட்சிகர கட்சியாக இருக்க முடியாது.

லெனின் தலைமையிலான கட்சியில் ஜனநாயக மத்தியத்துவமானது கோட்பாட்டு விடையங்களில், வேறுபட்ட கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரத்தைக் கொண்டு இருந்தது. சமூக ஜனநாயகக் கட்சி வரலாற்றில் இதைக் காணமுடியும். அன்று ஜனநாயக மத்தியத்துவமானது கட்சி விவாதங்கள் முதல் பத்திரிகையில் முரண்பட்ட சிறுபான்மை கருத்துகளை வெளியிடுமளவுக்கு ஜனநாயகம் இருந்தது. லெனின், மாவோ சிறுபான்மைக் கருத்தை கட்சிக்குள் முன்வைத்து, பெரும்பான்மையைப் பெற்றதன் மூலம் புரட்சிக்கு தலைமை தாங்கியவர்கள். அன்றைய ஜனநாயக வடிவங்களுக்குள் சிறுபான்மைக் கருத்து தன்னை பெரும்பான்மையாக்கிக் கொள்ளும் வண்ணம், ஜனநாயக மத்தியத்துவம் கட்சியின் அடிப்படையாக இருந்தது. ம.க.இ.க, மக்கள் அதிகாரம்.. பின்னணியில் இருந்த கட்சி இதை எப்படிக் கையாண்டது? அதிகாரத்துவம், தனிநபர் விசுவாசம்… மூலம் இதை கையாள முனைந்தால், புரட்சிகர கட்சியாக நீடிக்க முடியாது போகின்றது.

இன்று ஜனநாயகத்தின் வளர்ச்சியானது, பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக சமூகங்கள் விழிப்புறுவதும் – போராடுவதும் அரசியலில் நிகழ்கின்றது. இதை லெனின் காலத்திய கட்சி வடிவத்துக்குள் உள்ளடக்கி கையாண்டு விட முடியாது. போராட்ட இயக்கங்களுக்கு இடையிலேயே, ஜனநாயக மத்தியவத்துவத்தை கையாள வேண்டி இருக்கின்றது.

இன்று ஜனநாயகக் கருத்துகளை தனிநபர்களே சமூக ஊடகங்களில் முன்வைக்கும் அளவுக்கு முன்னேறிவிட்ட ஜனநாயகப் பொதுச் சூழலில், ஜனநாயக மத்தியத்துவத்தை இலகுவாக மையப்படுத்தும் அளவுக்கு பொது ஜனநாயக வெளி உருவாக்கி இருக்கின்றது. ஜனநாயக செயற்பாடுகள் மாறிவிட்ட வடிவங்களுக்கு ஏற்ப, தன்னை மேலும் ஜனநாயகப்படுத்துவதற்கு பதில், லெனின் கால வடிவத்துக்குள் முடக்கி - அதை கட்டுப்படுத்தும் அதிகாரமாக குறுக்கிவிடுவது என்பது, கட்சி சிதைவுக்கும் - கட்சியின் நெருக்கடிக்குமான காரணமாகும்.

போராட்டச் சூழல் மாறிக்கொண்டும், ஜனநாயக வடிவங்கள் மாறிக் கொண்டும் இருக்கும் போது, அதை எதிர்கொள்ளும் அளவுக்கு தன்னை வளர்த்துக் கொள்வதுதான், கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்தின் முரணற்ற தன்மையின் பொது வெற்றியாகும்.

முரணற்ற ஜனநாயக மத்தியத்துவத்தை சிறுபான்மை கருத்துக்கு, பெரும்பான்மை வழங்குவதில் இருந்து தான் புரட்சிகரக் கட்சியாக தன்னை முன்னிறுத்தும் தகுதியை கட்சி பெறுகின்றது. கட்சியின் தனிநபர்கள் இதற்காக போராடினார்களா என்பதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இரயாகரன்
29.02.2020