Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

கொரோனா (கோவிட் 19) மீட்பு நிதி எங்கிருந்து வருகின்றது!?

மக்கள் நலத் திட்டங்களுக்கு பணம் இல்லையென்றும், மக்கள் நலத் திட்டங்களை ஒழித்துக் கட்டியும், அரசு உடமைகளை தனியாருக்கு விற்று வந்த அரசுகள் தான், திடீரென கொரோனா தாக்கத்தில் இருந்து மூலதனத்தை மீட்க பெரும் நிதியை கொடுக்கத் தொடங்கி இருக்கின்றது. ஐp-20 நாடுகள் 5 ரில்லியன் (500 000) கோடி டொலரை இறக்கி இருக்கின்றது. கொரோனா தாக்குதலில இருந்து மக்கள் தப்பிப்பிழைக்க உதவும் மருத்துவ அடிப்படைக் கட்டுமானங்களின்றி உயிர் இழக்கின்ற சூழலில், மக்களை மீட்க முயற்சி எடுக்காமல், மூலதனத்தை மீட்க தாராளமாக அள்ளிக் கொடுக்;கப்படுகின்றது. எங்கிருந்து இந்தப் பணம் வருகின்றது?

கோரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்தும் நோக்கில், உலக உற்பத்தியில் 70 முதல் 50 சதவீத உழைப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டு மாதங்கள் உழைப்பை முடக்குவதன் மூலமே, மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியும் என்ற அறிவியல் முடிவுக்கு அமைய உற்பத்திகள் சடுதியாக நின்று போய் இருக்கின்றது. அதேநேரம் முடங்கிய உற்பத்தி மீள முடுக்கிவிடும் போது, ஏற்படும் மந்த நிலையில் இருந்து மீள, மேலதிகமாக குறைந்தது இரண்டு மாதங்களாவது தேவை என்று முதலாளித்துவம் கருதுகின்றது. இதற்கான பாரிய நிதித் திட்டங்களை அரசுகள் அறிவித்து வருகின்றது.

இந்த நிதி எங்கிருந்து வருகின்றது? அந்த நிதியை எப்படி, எந்த வடிவத்தில் பகிரத் தொடங்கி இருக்கின்றனர் என்பதை, கிடைக்கும் தரவுகளில் இருந்து ஆராய்வோம்.

நிதி, அரசின் வரவு செலவில் இருந்து வரவில்லை. மக்களிடம் இருந்து திரட்டப்படவில்லை. உலகின் முழு நிதி மூலதனத்தையும் குவித்து வைத்துள்ள செல்வந்தர்கள் கொடுக்கவில்லை. செல்வந்தர்களின் நிதி மூலதனத்தை அரசுடமையாக்கவில்லை. அப்படியாயின் எப்படி?

நிதி மூலதனங்களை தனியுடமையாக குவித்து வைத்துள்ளவர்களின் பணத்தை வட்டிக்கு வாங்கி, அதை அவர்களுக்கே மீளக் கொடுப்பதே கொரோனாவுக்கான மீட்புத் திட்டம்.

இதன் மூலம் முதலாளி குவித்துள்ள பணத்துக்கு லாபம் தரக் கூடிய மீட்புத்திட்டம். முதலாளிக்கு கொடுக்கும் வட்டியையும் மக்கள் கொடுக்க வேண்டும். மக்கள் கட்டும் வரியில் இருந்து அந்த வட்டியை அரசு கொடுக்கும். அதாவது மக்கள் முன்பை விட அதிக வரியை செலுத்த வேண்டும்.

முதலாளிகள் மனித உழைப்பைச் சுரண்டிக் கொழுத்த பணத்தை அரசு வட்டிக்கு எடுத்து, அதை மீள முதலாளிக்கு கொடுத்து விடுவதே மீட்புத் திட்டம். இதன் மூலம் தொடர்ந்து கொழுக்கவும், உற்பத்தியை விட்ட இடத்தில் இருந்து மீளவும் தன் சுரண்டலை தொடங்கவும் மீட்பு நடவடிக்கை. இதில் ஒரு சிறு பகுதியை உழைக்கின்ற வர்க்கத்திற்கு கொடுக்கின்றது. இதன் மூலம் முதலாளித்துவம் நெருக்கடியின்றி மீளும் ஏற்பாட்டை கச்சிதமாக செய்கின்றது. இது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது.

இந்த வகையில் முதலாளித்துவம் எந்தளவுக்கு மனித உழைப்பை சுதந்திரமாக சுரண்டுகின்ற உரிமையைக் கொண்டுள்ளதோ, அதற்கு அமைவாக இந்த மீட்சி நடவடிக்கைகள் வேறுபடுகின்றன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் (ஜரோப்பா - இதற்குள் வேறுபாடுகள் உண்டு) எடுத்து ஆராய்வோம். பிராஞ்சு முதலாளித்துவம் அமெரிக்க முதலாளித்துவம் போல் சுதந்திரமானதல்ல. பிரான்ஸ் பாரிய தொழிற்சங்கங்களைக் கொண்டதும் - பாரிய போராட்டங்களை தனித்துவமாக நடத்துகின்ற நாடு. தொழிலாளியை வேலையை விட்டு எடுத்த எடுப்பில் நீக்கிவிட முடியாது. பல்வேறு சட்ட வரம்புகளைக் கடந்துதான் நிறுத்த முடியும். ஆனால் அமெரிக்கா அப்படியல்ல. ஒரு முதலாளி விரும்பினால் அடுத்த வினாடி வேலையில் இருந்து வெளியே அனுப்ப முடியும்.

அமெரிக்கா கொரொனா தனிமைப்படுத்தலை அறிவித்த அடுத்தநாள் 33 லட்சம் (3.3 மில்லயன்) பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். வேலையை இழத்தல் முடியவில்லை மேலும் தொடருகின்றது. இதுதான் அமெரிக்க ஜனநாயகத்தின் எதார்த்தம்;. கொரோனா மெல்ல மெல்லக் கொல்லுகின்றது. அமெரிக்க முதலாளித்துவம் அடுத்த நிமிடமே கொன்று குவிக்கின்றது. கொரொனாவுடன் அமெரிக்க முதலாளித்துவத்தை ஒப்பிடும் போது கொரோனா இரக்கத்தன்மை கொண்டதாகவும், முதலாளித்துவம் கொடூரமானதாகவும் எதார்த்தத்;தில் இயங்குகின்றது.

பிரான்சில் என்ன நடக்கின்றது? யாரையும் வேலையில் இருந்து நிறுத்த முடியாது. சிறப்பு சட்டம் இயற்றப்படுகின்றது. வேலை செய்யாத நாட்களுக்கான சம்பளப் பணத்தை அரசு கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் சம்பளத்தைப் பெற்றவர்கள் சம்பளத்தை இழப்பின்றி பெறவும், அடிப்படை சம்பளத்தை விட கூடுதலாகப் பெற்றவர்கள் தங்கள் சம்பளத்தில் 84 சதவீதத்தை அரசு கொடுக்கின்றது. அத்துடன் அந்த சம்பளத்துக்கான ஓய்வூதிய மற்றும் சமூக நிதியை அரசே செலுத்தும். தனிமைப்படுத்தல் முடிந்தவுடன் விட்ட இடத்தில் இருந்து உற்பத்தி தொடங்கும். யாரையும் வேலையில் இருந்து நீக்க முடியாது. முதலாளிகளின் கட்டிட வாடை, மின்சாரம், தண்ணீர், தொலைபேசிக் கட்டணங்களை அரசு செலுத்தும். அதேநேரம் தனிநபர் தொழிற்றுறை (1500 ஈரோ) தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை, ஒரு நிதியை, எந்த விண்ணப்பமும் இன்றி கொடுக்கின்றது. இ;க்காலத்திற்கு வரி கிடையாது. கொடுக்கும் நிதி போதாது என்றால் விண்ணப்பிக்க முடியும். தனிமைப்படுத்தல் முடிந்து உற்பத்தி தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு பற்றாக்குறைகளுக்கு - அரசு நிதி திட்டங்களைக் கொண்டுள்ளது.

எப்படி மீட்சியை முதலாளித்துவத்துக்கு சேதமின்றி தொழிலாளி வர்க்கத்தின் கொந்தளிப்பின்றி பிராஞ்சு ஏகாதிபத்தியம் மீட்க முனைகின்ற வழிமுறைக்கு எதிர்மறையில் அமெரிக்க முதலாளித்துவம் வேலையில் இருந்தே தொழிலாளியை தூக்கி வீதியில் வீசி விடுகின்றது. முழுப் பணத்தையும் முதலாளிகளின் கையில் கொடுத்து, மீள வேலைவாய்ப்பை உருவாக்குமாறு மீட்புத் திட்டத்தை முன்வைக்கின்றது.

முதலாளித்துவம், முதலாளித்துவ ஜனநாயகம், ஏகாதிபத்திய தன்மைகள் .. எப்படி வேறுபடுகின்றது என்பதையும், இதன் பின்னணியையும் மக்கள் அனுபவரீதியாக புரிந்து கொள்ள உதவுகின்றது. மீட்புநிதி பிரஞ்சு முதலாளியை விட அமெரிக்க முதலாளி அதிகம் கொள்கையிடும் வண்ணம், இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும.

மீட்புநிதியை மக்களுக்கு கொடுக்காது, வேலை உத்தரவாதத்தை வழங்காத நாடுகள் மிக கடுமையான வர்க்கப் போhராட்டத்தை எதிர்கொண்டேயாக வேண்டும். உலகத்தை கொரோனா வெவ்வேறு கட்டத்துக்குள் அழைத்துச் செல்லுகின்றது.