Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

NDMLP இன் 34வது ஆண்டுவிழாவும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 34வது ஆண்டு விழாக் கூட்டம் 28.07.2012ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. இதில் ‘சமகால அரசியல் போக்குகளும் அவற்றின் எதிர்கால வளர்ச்சியும்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்குக் கூட்டம் பு.ஜ.மா.லெ.கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர். வெ. மகேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. இதில் தோழர். பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல், தோழர்கள் க.தணிகாசலம், ச.பன்னீர்செல்வம், கா. செல்வம் கதிர்காமநாதன், த. பிரகாஸ், ஆர். நெல்சன் மோகன்ராஜ் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். கூட்டத்தின் முடிவில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 

28-07-2012 அன்று இடம்பெற்ற புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் 34வது ஆண்டு விழா பொது கூட்டத்தில் நிறைவேற்றப்பட் தீர்மானங்கள்.

* அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல் சகல பொருட்களினதும் விலைகளை அரசாங்கம் தொடர்ந்து உயர்த்தி வருவதால் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மற்றும் அனைத்து உழைக்கும் மக்களும் கடுமையான பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர். எனவே மக்களை பட்டினி நிலைக்கு தள்ளிவரும் விலை அதிகரிப்புகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை தொழிலாளர்களுக்கும், அரசாங்க தனியார் துறை ஊழியர்களுக்கும் அவர்கள் எதிர்நோக்கும் வாழ்கைச் செலவுக்கு ஏற்ற நியாயமான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.

 

* ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிற் சங்க உரிமைகள், ஊடக சுதந்திரம் என்பனவற்றின் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுப்புகள் அச்சுறுத்தல்கள் அடாவடித்தனங்கள் மிரட்டல்கள் தாக்குதல்கள் தடைவிதித்தல்கள் போன்றவற்றை உடன் நிறுத்த வேண்டும்.

* சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மீது தொடரப்படும் பாகுபாடுகள், புறக்கனிப்புகள், வன்முறைகள், கொலைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும். அதேவேளை அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அத்துடன் காணாமல் போனோர் பற்றிய விபரம் உறவினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

* வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் திட்டமிட்ட வழிகளில் நிலப்பறிப்பு நில ஆக்கிரமிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. யுத்தத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் முன்னின்று இந்த நிலப் பறிப்பிலும் ஆக்கிரமிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் வாழ்விடங்கள், தொழிலிடங்கள் மற்றும் காணிகள் இவ்வாறு நிலப்பறிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றன. இதனால் மக்களது மீள் குடியமர்வு தடுக்கப்படுகிறது. எனவே அரசாங்கமும் படையினரும் திட்டமிட்டவகையில் முன்னெடுத்தவரும் நிலப்பறிப்பையும் நில ஆக்கிரமிப்பையும் கண்டிப்பதுடன் அவை உடன் நிறுத்த வேண்டும்.

* மீள் குடியேற்றப்பட்ட மக்களின் புனரமைப்பும் புனர்வாழ்வும் கவனிப்பார் அற்ற நிலையிலேயே இருந்து வருகின்றன. அதேவேளை பாதுகாப்பு படைகளால் பிடித்து வைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் தொழில் இடங்கள் பொது இடங்கள் ஆகியவற்றுக்கு மக்கள் மீள் குடியமரச் செய்வது மறுக்கப்படுகிறது. இந் நிலைக்கு உடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

* மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தின் மூலமான சம்பள உயர்வுக்கு பதிலாக வாழ்கைச் செலவுக்கும் வாழ்க்கைத்தர உயர்வுக்கும் ஏற்ற சம்பள உயர்வு தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். அத்துடன் மலையக மக்களின் காணி உரிமை, வீட்டுரிமை வழங்கப்பட்டு அவர்களுக்குரிதாக்கப்பட வேண்டும்.

* தேசிய இனப்பிரச்சினைக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சித் தீர்வு காணப்படுவதன் வாயிலாகத் தேசிய இனங்கள் மத்தியில் ஐக்கியத்தையும் சமத்துவத்தையும் சமாதானத்தையும் நிலை நாட்ட முடியும். ஆனால் பேரினவாதமும் தரகு முதலாளித்துவமும் நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதை விரும்பாது. இந்தப் பேரினவாத, தரகுமுதலாளியச் சக்திகளை முறியடிக்கும் வகையில் அதிகாரப் பகிர்வினை உடனடி அரசியல் தீர்வாகவும், தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சுயநிர்ணய உரிமையுடனான சுயாட்சியினை நீண்ட காலத்தீர்வாகவும் வழங்க வேண்டும் என வற்புறுத்துகின்றோம்.

* அபிவிருத்தி எனும் பெயரில் நவ கொலனித்துவத்தின் கீழ் மறு கொலனியாக்கச் செயற்பாடுகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவை அந்நிய முதலீட்டாளர்கள் கடன் வழங்கியோர் அவர்களது உள்நாட்டுக் கூட்டாளிகள் பங்குதாரர்களுக்கும் ஆளும் தரப்பினர்களுக்கும் பணக் குவிப்பையே ஏற்படுத்தி வருகின்றன. தூர நோக்கத்திற்கன்றி

* சுய இலாபத்திற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் இவ் அபிவிருத்தி என்பதன் ஊடாக நாட்டிற்கும் மக்களுக்கும் பெரும் நன்மைகளோ சுபீட்சமோ கிடைக்காது. எனவே இயற்கையையும் சுற்றுச் சூழலையும் நாசப்படுத்தும் அழிவுகர செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

* நாட்டில் குற்றச் செயல்கள், கொலைகள், பாலியல் வன்புனர்ச்சிகள், சிறுவர்கள் பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள் போதைப் பொருள் பாவனை இளைஞர் யுவதிகளின் சீரழிவுகள் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இவை யாவும் ஏகாதிபத்திய உலகமயமாதலினதும் நவ பொருளாதார கொள்கைகளின் எதிர்விளைவாகும் இவற்றை தடுத்து நிறுத்த உள்ள ஒரே வழி மக்களை விழிப்புற வைப்பதும் அணிதிரட்டுவதுமாகும்.

* நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் எதிராக இன்றைய தரகு முதலாளித்துவ பேரினவாத பாசிச அரசாங்கம் முன்னெடுத்து வரும் சகல நிலை ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து அனைத்து மக்களும் அணிதிரன்டு வெகுஜன எழுச்சிப் போராட்டங்களுக்கு முன்வரல் வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.