Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சிங்களச் சுற்றுலாப் பயணிகள் மீதான இனவெறித் தாக்குதல்

மறுபிரசுரம்

தற்போதய செய்தி: சென்னை ரயில் நிலையம் திருச்சி மதுரை நகரங்களில்  புத்த பிக்குகள், சிங்கள யாத்திரிகள்   மீது தாக்குதல்!

முன்னைய செய்தி: தஞ்சாவூர், பூண்டி மாதா திருக்கோயிலுக்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு!

இந்த ஆக்கம் மேலே உள்ள செய்திக்கும் பொருந்தும் என்பதனால் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

தமிழகத்தின் அரசியல் அமைப்பொன்றின் உறுப்பினர்கள் அம் மாநிலத்துக்குச் சுற்றுலாப்பயணமாகச் சென்றிருந்த சிங்களப் பொதுமக்கள் மீது இனவெறித் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆழ்ந்த மனவருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

 

சிங்கள மக்களுக்கு தங்குமிடங்களை வழங்க வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து "நாம் தமிழர்" அமைப்பு நடத்தியுள்ள ஆர்ப்பாட்டமும், தொடர்ச்சியாக சிங்கள மக்கள் மீது அவர்கள் பயன்படுத்திவரும் இனவாதச் சொற் பயன்பாடும் கண்டிக்கத்தக்கத்து.

இலங்கையில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாகவும், முழு இலங்கை மக்களதும் நல்வாழ்வுக்கான போராட்டத்திலும் அக்கறை கொண்டுள்ள எமக்கு இச்செய்தி அருவருப்பூட்டுவதுடன்  இலங்கையின் அரசியல் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான போராட்டம் என்பது, இலங்கை சிங்கள பவுத்த மக்களுக்கே சொந்தமானதென்றும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டாந்தரக் குடிமக்கள் என்றும் வலியுறுத்திவரும் சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

பேரினவாத சக்திகளோடு உடன்பட்டுக்கொண்டு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை அரச இயந்திரத்தின் மூலம் செய்துவரும் ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

இன்றுவரை தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் நியாயமான அதிகாரப் பகிர்வையும் அரசியல் தீர்வையும் வழங்க மறுத்து இழுத்தடித்துவரும் அரசாங்கங்களுக்கு  எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் -சிங்கள முரண்பாட்டை ஊதிப்பெருக்கி சாதாரண மக்களை வதைத்தபடி தமது நலன்களுக்காக இலங்கையில் தலையிட நினைக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு எதிரானதாக அமைய வேண்டும்.

தமிழ் மக்களது அரசியற் கோரிக்கைகள் ஒருபோதுமே சிங்களப் பொதுமக்களுக்கு எதிரானதாக இருக்கக்கூடாது.

ஆனால் வருத்தமளிக்கும் விதமாக தமிழ் மக்களின் அரசியல் உரிமைப்போராட்டத்தை சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும் சிங்கள மக்கள் மீதான வன்முறையாகவும் தடம் மாற்றிக்கொண்டுபோகும் குறுகிய இனவாதக் கண்ணோட்டத்தையே பல்வேறு தமிழர் அமைப்புக்கள் கொண்டிருந்தன, கொண்டிருக்கின்றன.

இலங்கைப்பிரச்சினையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வெறும் வாய்ப்பேச்சும் உணர்ச்சிவசப்படுதலும் நிரம்பியதாக உரிமைப்போராட்டத்தை மாற்றி அதனைக் கேலிக்குரியதாக மாற்றுகின்றன.

இது இனப்பகையை மேலும் மேலும் தூண்டுவதன் மூலம் .  மக்களுக்கு எதிரான சக்திகளுக்கு நன்மை செய்வதாக மாறிப்போகும்.

இத்தகைய அமைப்புக்களை இனம்கண்டு புறக்கணிக்கவும் தோற்கடிக்கவும் தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.

சிங்கள பவுத்த பேரினவாத சக்திகளைப் புறக்கணிக்கும் சிங்கள மக்களோடு,  இந்த நாட்டின் அனைத்துமக்களும் சமமான அதிகாரங்களோடும் சம வாய்ப்போடும் வாழவேண்டும் என்று நேர்மையாக விரும்புகிற சிங்கள மக்களோடு இணைந்து போராட முயற்சி செய்யவேண்டும்.

இத்தகையை போராட்டமானது இலங்கையில் வாழும் அனைத்து மக்களதும் நல்வாழ்வுக்கானதாக அமையும். கொள்ளைக்கார உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளைத் தோற்கடித்து இலங்கையர்களுக்கு  சிறப்பான எதிர்காலம் ஒன்றினை அமைத்துக்கொடுக்கும்.

தமிழர் மீது நடந்த நடந்துவரும் பேரினவாத வன்முறையை ஒவ்வொரு தருணத்தும் தவறாது கண்டித்து வருகிறவர்கள் என்ற முறையில், அதே நியாயத்தின் அடிப்படையில் தமிழரின் பேரல் நடக்கும் வெறியாட்டைத்தைக் கண்டிக்கும் கடமையும் உரிமையும் நமக்குண்டு என்று நாம் கருதுகிறோம்.

சிங்கள மக்கள் மீது தமிழகத்தில் இடம்பெற்ற இனவெறி கொண்ட வன்முறைகளுக்காக தமிழர் என்ற அடிப்படையில் சிங்கள மக்களிடம் மன்னிப்பைக் கோருகிறோம்.

-ம. முரளிதரன்

-August 15, 2011