Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

மகிந்து, வாழும் புத்தர், கைத்தடி இல்லா காந்தி

முனீஸ்வரத்தில் விலங்குகளை பலியிடுவதை தடுத்து ஆடுகளையும், கோழிகளையும் பாதுகாத்ததை நினைத்து, நினைத்து அதி உத்தம ஜனாதிபதி மகிந்து பெருமிதம் கொண்டார். அவருடைய அன்புத் தொண்டன் மெர்வின் சில்வா தன்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை, இல்லாட்டி பத்து பேருக்கு மண்டையிலே போட்டாலும் பரவாயில்லை ஆடு மட்டும் அடிக்க விடமாட்டேன் என்று அகிம்சையின் மொத்த வடிவமாக குரல் கொடுத்ததை நினைத்து கட்சிக்கொள்கைகளை பயலுகள் என்னமா கடைப்பிடிக்கிறானுகள் என்று சந்தோசப்பட்டுக் கொண்டார். அவரது கண்களில் கருணை வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

அன்பு வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது காலையில் போட்டுத் தாக்கிய இடியப்பம், மாசிக்கருவாடு, கோழிக்கால் பொரியல் எல்லாம் சேர்ந்து பெரிய ஏப்பமாக வந்தது. வயிறு சரியில்லை, ஆட்டுக்கால் சூப்பு வைக்க சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டார்.

மயிலிற்கு போர்வை தந்த பேகனை வள்ளல் என்று வரலாறு சொல்வதைப் போல, ஆட்டுக்கு அன்பு செலுத்திய தன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதற்காக இணையத்தளங்களை மேய்ந்து கொண்டிருந்தார். தமிழ் மக்களையும், இலங்கை முற்போக்கு சக்திகளையும் கொன்று குவிக்கும் நீர் எல்லாம் அகிம்சையை பற்றி கதைப்பதா என்று ஒரு இணையதளத்தில் யாரோ ஒரு மண்டை கழண்டவன் எழுதியிருந்தான். மேர்வின் சில்வா ஒரு கொலைகாரன், மொள்ளமாரி, பேமானி, மக்களின் பணத்தை ஆட்டய போடுறவன். இவன் அகிம்சை கதைக்கிறது ஆட்டுக்குள்ளே மாட்டை விடுகிறது மாதிரி என்று ஒருத்தன் அலம்பி இருந்தான். வர, வர எல்லாரும் டபுள் மீனிங்கிலேயே எழுதுறானுகள் என்று அதி உத்தமர் கவலைப்பட்டுக் கொண்டார்.

ஜெயலலிதா கூடங்குளத்திலே போராடுபவர்களை கொல்லுறா, சிறையிலே போடுறா. ஆனா இவனுகள் அவவை அம்மா என்கிறானுகள், ஈழத்தாய் எண்டு காலிலே விழுகிறானுகள். ரண்டு மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து ஒரு போரையே முடித்து வைத்த கருணாநிதியை உலகத்தமிழர்களின் தலைவர் என்கிறான்கள். நாறாயணசாமி என்ற பாண்டிச்சேரித் தமிழ் மந்திரி, ரண்டு மாதமாக கடல்தொழிலிற்கு போகாமல் எப்படி கூடங்குளத்திலே போராடுகிறார்கள், காசு எப்படி வந்தது என்று கேட்கிறார். அவரை மக்கள் பிரதிநிதி என்கிறானுகள். என்னை மட்டும் ஒரு சிங்கள பெளத்தன் என்பதால் கேலி செய்கிறார்கள். இவனுகள் சரியான இனவாதிகள் என்று கவலைப்பட்டுக்கொண்டார். இந்த நாறாயணசாமி ஒருமுறை தனக்கு பக்கத்தில் நின்று கதைத்த போது வந்த வாசத்தில் கதிகலங்கிப் போய் நாறாயணசாமி என்பது சொந்தப் பெயரா அல்லது காரணப் பெயரா என்று தான் அப்பாவித்தனமாகக் கேட்டதும் அவரிற்கு ஞாபகம் வந்தது.

பிறந்தால் தமிழனாகப் பிறக்க வேண்டும், தமிழனாக பிறந்திருந்தால் கோழிகளின் வேள்வியை தடுத்த கொற்றவனே, வாழும் புத்தனே, கைத்தடி இல்லாக் காந்தியே என்று உலகத்தில் உள்ள எல்லா நிறத்திலும் போஸ்ரர் அடித்திருப்பானுகள். காந்தியின் தலையைக் கட் பண்ணிவிட்டு என்ரை தலையை ஒட்டி கையிலே பிடிக்க  ஒரு தடியையும் தந்து கட் அவுட் பெரிதாக வைத்திருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே வேறொரு இணையத்திற்கு தாவினார். அதில் அரச ஆதரவாளர்கள் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுத்திருந்தார்கள்.

அட, இவ்வளவு பேர் வெளிநாடுகளிலே நமக்கு ஆதரவா என்று சந்தோசப்பட்டார். ஊன்றிக் கவனித்த போது அவரிற்கு தெரிந்தவர்கள் சிலரின் பெயர்கள் அந்த பட்டியலில் இல்லாததைக் கண்டு கோபப்பட்டார். உடனே இரண்டாம் மேதகுவிற்கு போன் போட்டார். நான் உம்மை எவ்வளவு வசதியாக வைச்சிருக்கிறேன். ஆனால் நீர் உம்முடைய ஆட்களை என்னுடைய ஆதரவாளர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை என்றார். நான் எதிரிகளை மன்னித்தாலும் துரோகிகளை மன்னிப்பதில்லை என்று ஒரு பன்ச் டயலாக்கை தமிழ்ப்பட கதாநாயகன் மாதிரி சரியான இடம் பார்த்து அடித்தார்.

பதறிப்போன இரண்டாம் மேதகு என்ன நடந்தது என்று கேட்டார். ஒரு புத்தகத்தை வெளியிட்ட இணையம் ஒன்று என்னுடைய ஆதரவாளர்கள் என்று ஒரு பட்டியல் வைத்திருக்கிறது. அதிலே அந்த புத்தக வெளியீட்டிலே சிறப்பு விருந்தினராக வந்த உம்முடைய தொலைக்காட்சி ஆளின் பெயர் இல்லை. விருந்தினராகக் கூப்பிட்டவர்களிற்கே விசயம் தெரியாமல் மறைத்திருக்கிறீர்கள், பாவம் அந்த இணையம், அரசியல் ஆய்வாளர்களை ஏமாற்றிய பாவம் உம்மை சும்மா விடாது என்றார்.

அதி உத்தமரின் செயலாளர் வந்து ஊடகவியலாளர்களுடன் தேனீர் விருந்து இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்தினார். ஒரு பத்திரிகையாளர் தொடர்ந்து நீங்கள் நல்லவரா, கெட்டவரா என்று கேட்டு கொண்டே இருந்தார். பக்கத்திலே போன அதி உத்தமர், பத்திரிகையாளர் போட்டிருந்த சென்ட் வாசத்தை முகர்ந்த படியே கனிவு ததும்பும் குரலில், கருணை பொழியும் விழிகளால் பார்த்த படி, செண்டு போடுற உன் மேலே குண்டு போட வச்சிடாதே என்றார். அப்படியே பெண் ஊடகவியலாளர்கள் இருந்த இடத்திற்கு போய் வாய் நிறைய சிரிப்புடன் பேசிக்கொண்டிருந்த போது, செயலாளர் ஒருவரைக் கூட்டிக் கொண்டு வந்து இவர் தடாகம் பத்திரிகையாளர் என்று அறிமுகப்படுத்தினார். எப்படி மறைந்தார் என்று எல்லோரும் அதிசயபடும்படி மின்னலாய் மறைந்தார் அதி உத்தமர். பயத்துடன் பின்னாலே போன செயலாளரிடம் பல்லைக் கடிச்சுக் கொண்டு சொன்னார், சரியாக நான் பொம்பிளைகள் பக்கமாக நிக்கும் போது தடாகக்காரரை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறீர். நான் வேட்டி வேறை கட்டிக்கொண்டு நிக்கிறேன். அவர், நான் பயங்கர ஆயுதத்துடன் பெண்கள் பக்கம் நின்றேன் என்று எழுதப் போகிறார் என்றார் நடுங்கும் குரலில்.

29/09/2012