Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் திட்டம்

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி, தனக்கான ஓர் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திட்ட விரிவாக்க விளக்கமே, புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் அறிக்கையாகும். அரசியல் அறிக்கை, போராட்டத் தந்திரம், செயல் தந்திரத்தை அடிப்படையாக் கொண்டு அமைப்பு இயங்கும்.

இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்பும் முரண்பாடுகளும்
 
இலங்கை, நவகாலனிய தரகு முதலாளித்துவ நாடாகும். அத்துடன் நிலப் பிரபுத்துவ உற்பத்தி உறவுகள் சிதைந்து, அதன் பண்பாட்டுக் கலச்சாரக் கூறுகளைக் கொண்ட நவகாலனிய தரகு முதலாளித்துவ நாடாகும். இதில் வர்க்க வன்முறையின்றி, இலங்கையின் சிறப்பான வரலாற்றுச் சூழலினால் ஏற்பட்ட நிலப்பிரபுத்துவச் சிதைவு, (பார்க்க: விவசாயம் பற்றிய சிறப்பு ஆவணம்) பெருமளவிலான சிறு உடமையை உருவாகியுள்ளது. இலங்கை பெருமளவில் சிறு உடமையைச் சார்ந்த, குட்டிபூர்சுவா வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகும். இதனால் இடைவிடாது தேசிய முதலாளித்துவ வர்க்கக் கூறுகளை அதிகமாக உருவாக்கும் ஒரு நாடாகவும் இருக்கின்றது. இந்த வகையில் குட்டிபூர்சுவ வர்க்கக் கூறுகளை அதிகமாக கொண்ட தேசியக் கூறு, இலங்கையில் ஒரு ஜனநாயகப் புரட்சியைக் கோரி நிற்கின்றது.
 
நிதி மூலதனமும், அன்னிய மூலதனமும், தரகுமுதலாளித்துவமும் கூட்டுச் சேர்ந்து இயங்கும் இலங்கை சமூக பொருளாதார கட்டமைபிற்கும், தேசியக் கூறுகளுக்கும் இடையிலான வர்க்க முரண்பாடுதான் இலங்கையின் அடிப்படை முரண்பாடாக காணப்படுகின்றது.    
 
 
இலங்கை ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியைக் கோருகின்ற காரணங்கள்  
 
இலங்கையில் தரகு முதலாளித்துவமும், தேசங்கடந்த பன்நாட்டு முதலாளித்துவமும் காணப்படுகின்றதே ஒழிய, தேசிய முதலாளித்துவமல்ல. இந்த அரசியல் வேறுபாட்டை மறுக்கின்ற திரிபு, திரோஸ்க்கிய வழிவந்த இலங்கை இடதுசாரிய பாரம்பரியத்தில் காணப்படுகின்றது. இது குறைந்தபட்ச ஜனநாயக போரட்டத்தை மறுதளித்து விடுகின்றது. இதனால் இயல்பாக எழும் ஜனநாயக போராட்டங்களை, பாட்டாளி வர்க்கப் போராட்டமாக கருதிப்போராடி, தோற்ற வரலாறாக இலங்கை பாட்டாளி வர்க்கத்தின் பொதுவரலாறு உள்ளது.  
 
தரகு முதலாளித்துவமும், தேசங் கடந்த பன்னாட்டு முதலாளித்துவமும் சார்ந்த வர்க்க அரசே இலங்கையில் உள்ளது. இந்த வர்க்கம் சார்ந்த முதலாளித்துவ நாடாளுமன்றமே இங்கு உள்ளது. இது தேசிய முதலாளிதுவவர்க்கம் சார்ந்த அரசல்ல. தேசிய முதலாளிதுவ வர்க்கம் சார்ந்த நாடாளுமன்றமும் அல்ல. இந்த அரசு, நாடாளுமன்றம் - சட்டம் - நீதி என்ற அனைத்தும், தேசியக் கூறுகளைச் சாhந்தது அல்ல. இது ஜனநாயகக் கூறுகளைச் சார்ந்ததுமல்ல.
 
இது அன்னிய நலன் சார்ந்த நவகாலனிய வர்க்க அரசைப் பாதுகாக்கும் வகையில் சட்டமியற்றும் நாடாளு மன்றத்தை அடிப்படையாகக் கொண்டது. தேசவிரோத ஜனநாயகவிரோத அமைப்பு முறையை அடிப்படையாக கொண்டதே இலங்கை அரசு. ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தை இது மேலும் தெளிவாக்குவதுடன், அதன் அவசியத்தை கோருகின்றது.    
 
இந்தப் புரட்சிக்குரிய கட்டத்தை நாம் சரியாக அடையாளம் காணத் தவறின், புரட்சியின் வேறுபட்ட தன்மையையும் அதன் கூறுகளையும் அடையாளம் காண்பதில் தவறு ஏற்படும்;. இதனால் புரட்சியின் கட்டங்களையும், யுத்த தந்திரத்தையும் நோக்கி நாம் சரியாக வந்தடைய முடியாது.  
 
இந்த வகையில், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் நோக்கம், இலங்கையில் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுப்பதாகும். மார்க்சிய லெனினிய மாவோசிய சிந்தனையை வழி காட்டலாகக் கொண்ட, அதன் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை கோருகின்றது. ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சி, சோசலிச புரட்சி, கம்யூனிசப் புரட்சி என்ற பல்வேறு புரட்சிகர கட்டங்களை வேறுபடுத்தி, புதிய ஜனநாயகப் புரட்சியை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி முன் வைக்கின்றது. இது தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சிக்கு பதிலீடாக, பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில், புதிய முறையிலான புதிய ஐனநாயகப் புரட்சியை முன்னனெடுக்க கோருகின்றது.
 
இலங்கையில் ஐனநாயப் புரட்சியை நிறைவு செய்யாமல், புரட்சியின் அடுத்தடுத்த புரட்சிகரக் கட்டங் களை முன்னெடுக்க முடியாது. அதேவேளை தேசிய முதலாளித்துவ வர்க்கம், தன் தலைமையில் இந்த ஜனநாயகப் புரட்சியை முன்னடுக்க முடியாத வண்ணம், ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஊசலாட்டம் கொண்ட சரணடைவு வர்க்கமாகவுள்ளது. ஜனநாயகப் (முதலாளித்துவ) புரட்சிக் கடமையை தன் வர்க்கத் தலைமையில் நிறைவு செய்வதை, தன் சொந்த வர்க்க ஊசலாட்ட மூலம் அது தடுத்து நிறுத்துகின்றது. இதன் மூலமே ஐனநாயகப் புரட்சிக்குப் பிந்தைய சோசலிசப் புரட்சிக்குரிய வர்க்கச் சூழல் உருவாகாத வண்ணம் அதை தடுத்து நிறுத்துகின்றது.
 
இந்த சர்வதேச வர்க்க அரசியல் பின்னனியில் நடப்பது இதுதான். ஏகாதிபத்திய சகாப்தத்திலுருவான தரகு முதலாளித்துவமும், தேசங் கடந்த பன்னான்டு நிறுவனங்களும், தேசிய முதலாளித்துவ கூறுகளை உற்பத்தி சார்ந்து அழிக்கின்றது. சுரண்டும் தன்மை கொண்ட இந்த தேசியமுதலாளித்துவ உற்பத்திக் கூறு, இதற்குள் சரணடைகின்றது. அல்லது அழிந்து போகின்றது. அதேநேரம் இந்த வர்க்கம் எப்போதும் தன்னியல்பாகத் தொடர்ந்து உருவாகிய வண்ணமும் உள்ளது. அன்னிய உற்பத்திக்கு எதிரான இந்த புரட்சிகர தேசியக் கூறு, தொடர்ந்து புரட்சிக்கிடையில் நின்று ஊசலாடுகின்றது. இதன் மூலம் புரட்சியை தடுக்கும் வர்க்கக் கூறாகவும் இயங்குகின்றது. இதன் புரட்சிகர தேசியதன்மையையும், வர்க்க ஊசலாட்டத்தையும் சரியாக அடையாளம் கண்டு, புரட்சியின் பக்கம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரட்டும் அரசியல் யுத்த தந்திரந்தான் புதிய ஜனநாயகப் புரட்சியாகும்.
 
இலங்கையை நவகாலனிய தரகு முதலாளித்துவ நாடு என்று ஏன் அழைகின்றோம்?
 
இலங்கையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்ற, பல குறுநில மன்னர்களின் ஆட்சியை கைப்பற்றிய பல்வேறு காலனித்துவவாதிகள், தம் காலனிய நலனுக்கேற்ற ஆட்சி அமைப்புகளை காலத்துக்குக் காலம் உருவாக்கி வந்தனர். இறுதியில் தங்கள் காலனித்துவ நலனுக்கு ஏற்ற வண்ணம், ஒன்று படுத்தபட்ட இலங்கை நிர்வாக ஆட்சி அமைப்பை உருவாக்கினர். இப்படித்தான் இலங்கை என்ற நாடு உருவானது. இலங்கையில் உள்ள மக்கள், தங்கள் தேசியப் பொருளாதார நலன் சார்ந்த, தமக்கான இலங்கையை உருவாக்கவில்லை. இதனால் பவ்வேறு இன - வர்க்க - சாதிய - பிரதேச முரண்பாட்டை  கொண்ட ஒரு நாடாக அது இருக்கின்றது. இந்த முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, மக்களை பிரித்தாளும் வர்க்கங்களின் நலன் பேணும் நாடாக இலங்கை உள்ளது.
 
இப்படி ஒன்றுபட்ட ஒரு இலங்கையை காலனியவாதிகள் உருவாக்க, நீண்ட பல காலம் எடுத்தது. நிலப் பிரபுத்துவ வர்க்கசக்திகளுடன் ஏற்பட்ட சமரசங்களுடன் தான், இலங்கை முழுவதுக்குமான காலனித்துவ, அரை நிலப்பிரபுத்துவ ஆட்சி அமைப்பை காலனியவாதிகளால் நிறுவ முடிந்தது.
 
காலனித்துவத்தின் நோக்கம், இலங்கையிலிருந்து தேசிய மூலதனத்தை கடத்துவதும், மலிவான உழைப்பை தங்கள் மூலதனமாக்கி கடத்துவதும் தான். இந்த அடைப்படையில் தான் மூலதனமும், முதலாளித்துவ உற்பத்தி முறையும், காலனித்துவ நலனுடன் இலங்கையில் உருவானது. இப்படி உருவான, உருவாக்கிய மூலதனத்தைச் சார்ந்து உருவான வர்க்கம் தான், தரகு முதலாளித்துவ வர்க்கம் ஆகும். காலனித்துவ நலனை ப+ர்த்தி செய்யும் அடிப்படையில் உருவான தரகு முதலாளித்துவமும், தேசிய முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்டது.
 
தேசிய முதலாளித்துவம் சொந்தநாட்டு மக்கள் சார்ந்த சந்தை மூலம், மக்களை சுரண்டி உருவாகின்றது. இதனால் அது அன்னிய மூலதனத்துக்கும், காலனிய நலனுக்கும் எதிரானது. தரகு முதலாளித்துவம் காலனி ஆட்சி நலன்களை பூர்த்தி செய்யும் வண்ணம், சொந்த மக்களைச் சுரண்டி உருவாகின்றது. இப்படி உருவான தரகு முதலாளித்துவம், அரை நிலப்புரத்துவத்தைச் சார்ந்த காலனிய ஆட்சி முறைதான், இலங்கையில் காலனிக்கு முன்பும் காணப்பட்டது. 2ம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து உலகளவில் காலனிய ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை தடுத்த நிறுத்த, ஏகாதிபத்தியங்கள் தங்கள் நேரடிக் காலனிய முறைகளில் மாற்றம் செய்தனர். இந்த வகையில், 1948ஆம் ஆண்டு முதல் நேரடியான தங்கள் காலனித்து வத்துக்குப் பதில், அரைக் காலனிய முறைமூலம் அக் காலனியத்தை மாற்றீடு செய்தனர். காலனிய ஆட்சியில் தமக்கு சேவை செய்த தரகு முதலாளித்துவ, அரை நிலப்புரத்துவ சக்திகளிடம், ஆளும் ஆட்சி உரிமையை மாற்றீடு செய்தனர். தங்கள் உடமையையோ, தங்கள் வர்க்க நலனையோவல்ல. தாம் நேரடியாக ஆண்டதற்குப் பதில், தமது காலனிய நலனுக்குச் சேவைசெய்த வர்க்கத்திடம் தங்கள் ஆட்சியை மாற்றிக் கொடுத்தனர். இதன் மூலம் காலனிய நலன்- களை, அரைக் காலனியமுறை மூலமாக தக்கவைத்துக் கொண்டனர். இதை தேசிய முதலாளித்துவ வர்க்க ஆட்சி என்ற வரையறையிலான ஒரு அரசியல் திரிபாகும். காலனித்துவவாதிகள் இப்படிச் செய்ததன் மூலம், தங்கள் காலனிய நலன்களை தக்கவைத்தனர். இந்த காலனிய நலனை தங்கள் அரசியல் அடிப்படையாகக் கொண்ட திரோஸ்கிய கட்சிகள், காலனிய நலனை பேணிய தரகு முதலாளித்துவ வர்க்க ஆட்சியை மறுத்து, தேசிய முதலாளித்துவ வர்க்க ஆட்சியாக இதனைத் திரித்தனர். இலங்கையில்  பல இடதுசாரிய கட்சிகள் தொடர்ச்சியாக இந்த அடித்தளத்தில் நின்றுதான் இதனைப் பார்த்தனர், பார்க்கின்றனர்.       
 
இந்த தரகு முதலாளித்துவ ஆட்சி மாற்றத்தைத்தான் 'சுதந்திரம்" 'தேசியம்" என்று காட்டிக்கொண்டதன்   மூலம், அரைக் காலனித்துவத்துக்குச் சேவை செய்யும் தரகு முதலாளித்துவம், அரை நிலப்பிரபுத்துவ ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காலனிக்கு எதிரான மக்கள் போராட்டத்தைத் தடுக்க, காலனிய வாதிகள் செய்த மாற்றம் இதுதான். இந்த மோசடியை தரகு முதலாளித்துவ, அரைநிலப்புரத்துவ சக்திகள் இலங்கையில் சுதந்திரம் என்றனர். இது தமக்கான தரகு முதலாளித்துவ, அரைநிலப்புரத்துவ நாடாளுமன்;றதையும் உருவாக்கி  கொண்டனர். இந்த அரசியல் மோசடியை 'ஜனநாயகம்" என்றனர்.
 
மறுதளத்தில், தேசியம் சார்ந்த தேசிய முதலாளித்துவம் இலங்கையில் தோன்றுவதை இது அனுமதிக்க வில்லை. இது மட்டுமின்றி, தேசிய முதலாளித்துவ நாடாளுமன்றம் தோன்றுவதையும் இதன் மூலம் தடுத்து நிறுத்தியது.
 
காலனிய காலம் முதல் உருவாகி நீடித்துவந்த தரகு முதலாளித்துவ, அரை நிலப்பிபுரத்துவ சக்தி- களிடம்;, தமது ஆட்சி அமைப்பை மாற்றிய காலனித்துவ வாதிகள், தங்கள் நலனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டனர். இப்படி உருவான புதிய ஆட்சியாளர்கள், காலத்துக்குக் காலம் காலனிய மாற்றங்களுக்கு அமைவாகவும், மக்கள் நலன்களைக் கொண்ட ஜனநாயகவாதிகள் என்ற பாசங்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்த சிற்சில சீர்திருத்தத்தை புகுத்திவந்தனர். இதற்கு அமைவாக புதிய குடியேற்றங்கள், இனவாதக் குடியேற்றங்கள் நீர்ப்பாசனத் திட்டங்கள், நிலச் சட்டங்கள் என்பதான பல திட்டங்களைக் கொண்டுவந்தனர்.
 
அரைக் காலனிக்கு பதிலான நவகாலனிய அமைப்பு நலன் சார்ந்த மாற்றங்கள், அரை நிலப்பிரபுத்துவ உற்பத்திய உறவில் இருந்து, உழைப்பை படிப்படியாக விடுவித்தது. இது அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைமைக்கு பதில், 1970 பின்பாக சிறு உடைமை சார்ந்த விவசாயமாக மாறியது.
 
அதே நேரம் சர்வதேச ரீதியிலான நிதி மூலதனத்தின் பாச்சல், அரைக் காலனிய முறையை வேகமாக மாற்றி அமைத்தது. அதை நவகாலனியமாக மாற்றியது. இலங்கையானது அரைக்காலனிய, அரை நிலப் பிரபுத்துவ முறைமைக்குப் பதிலாக, அதிகளவில் சிறு உடமைசார்ந்த விவசாய நாடகும். அதே நேரம் தரகு முதலாளித்துவ உற்பத்தி முறைமையைத் தொடர்ந்ததுடன், தேசங் கடந்த பன்னாட்டு உற்பத்தி முறைமையைக் கொண்ட ஒரு நாடாக இலங்கையின் நிலை நீடிக்கின்றது. ஆகவே இலங்கை என்பது நவகாலனிய தரகு முதலாளித்துவ ஆட்சியமைப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகும்.  
            
இலங்கையை நிலப்பிரபுத்துவ கலச்சார பண்பாட்டைக் கொண்ட  நாடு என்று ஏன் கூறுகின்றோம்?
 
நிலப்பயன்பாடு சார்ந்தும், உற்பத்தி உறவு சார்ந்தும் காணப்பட்ட அரை நிலப்பிரபுத்துவ அமைப்பு முறை, 1970களின் பின்பு படிப்படியான, அளவு ரீதியான மற்றங்கள் மூலம் இலங்கையில் தகர்ந்து இருகின்றது. இத் தகர்வு ஏகாதிபத்திய சகாப்தத்தில் சாத்தியமான தொழிலாளர் வர்க்கத் தலைமையில் ஆன ஜனநயாகப் புரட்சி முலமாகவோ அல்லது அதன் பண்பு ரீதியாகவோ நடை பெறவில்லை. இந்த அளவு ரீதியான மாற்றம் என்பது, பண்ணைப் பயன் பாட்டுக்கான நிலக் குவிப்புகள் மூலமும் நடை பெறவில்லை. மாறாக, புதிய நிலங்கள் பயன்பாட்டுக்கு வந்ததன்      மூமாகவும், தொடர்சியான நீர்ப்பாசனத் திட்டங்கள் மூலமாகவும், நிலத்தின் அளவையும்; அதன் பயன்பாட்டை அதிகரித்ததன் மூலமாகவும், புதிய தொழில் நுட்பங்கள் மூலமாகவும், நிலத்தின் வளத்தை அதிகரித்தன் மூலமாகவும், இன ரீதியான திட்டமிட்ட குடியிருப்புகள் மூலமாகவும், நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் நிலத்தை பகிர்ந்தளித்தன் மூலமாகவும், குடும்ப உறுப்பினருக்கிடையில் நிலம் பிரிக்கப்பட்டதன் மூலமாகவும், இப்படி இன்னும் பல மூலங்களால் அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளில் இருந்து உழைப்புச் சக்திகளை விடுவித்தது.
 
இதேபோல் இலங்கையில் நடந்த ஆயுதமேந்திய மூன்று கிளர்ச்சியும், அவற்றயைடுத்து இலட்சக் கணக்கில் கொல்லப்பட்ட நிகழ்வுகள், இலங்கையில் தொடர்ச்சியாக அரங்கேறிய இராணுவ மயமாக்கமும், யுத்தம் சார்ந்த புலம் பெயர்வுகளும், வேலை தேடிய அன்னிய புலம் பெயர்வுகளும், சுதந்திர வர்த்தகவலையம் சார்ந்த வேலை வாய்ப்புகளும் .., அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்குரிய உழைப்பு சக்திகளை கிராமங்களில் இருந்து அகற்றியது.
 
மறுதளத்தில் தாய்மொழிக் கல்வியை பெற்றமையுடன், வடக்கில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்  மூன்று ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியும், பன்நாடுகள் சந்தை விரிவாகமும் நுகர்வுக் கலச்சாரமும்.., சமுதாயத்தின் பழமைக்கு எதிரான சமூக விழிப்புணர்வும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவை எல்லாம் சேர்ந்த அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுக்குரிய சக்திகளை, கிராமிய ரீதியிலிருந்தே இல்லாதாக்கியது.   
 
இப்படி இலங்கைக்கே உரிய விசேடமான சூழலில் நடந்த இந்த மாற்றம், நிலப்பிரபுத்துவ உற்பத்திய உறவில் இருந்து உழைப்பு சக்தியை விடுவித்தது. அதேவேளை விவசாய நிலப் பயன்பாடென்பது சிறு உற்பத்தி முறையாகியது. சமூகப் புரட்சியின்றி, அரை நிலப்பிரபுத்துவ கட்டமைப்பில் ஏற்பட்ட தகர்வு, சிறு உடமை சார்ந்த விவசாயத்தை உருவாக்கியது.
 
ஆனால் இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டு காலச்சாரக் கூறுகளை தகர்த்து விடவில்லை. மாறாக அதை தன்னகத்தே கொண்ட ஒன்றாக சிதைந்து, நவகலானியத்துக்கு அமைவாக மறுவடிவம் பெற்று வெளிப் படுகின்றது. இது முழுச் சமூக அமைப்புக்கும் ஏற்ற ஒன்றாகவே தொடர்ந்து நீடிக்கின்றது. ஜனநாயக மறுப்பை அடிப்படையாகக் கொண்ட நிலப்பிரபுத்துவ பண்பாட்டை முன்னிறுதுகின்றது. இது ஜனநாயகப் புரட்சியை தடுத்து நிறுத்தும், அரை நிலப்பிரத்துவ பண்பாட்டு கலச்சாரக் கூறாக தொடர்ந்து இயங்குகின்றது. இந்தப் பண்பாட்டு கலச்சாரம் சார்ந்த அரசியல் அடித்தளத்தில் தான் இனவாதமும், மத வாதமும், என்பன இலங்கையில் கூர்மைபெற்ற அரசியல் கூறாக தொடர்ந்து இயங்குகின்றது. அத்துடன் சாதியம், பிரதேசவாதம், ஆணாதிக்கம்.., என்பனவும் அக்கம்பக்கமாக தொடர்கின்றது. இப்படி ஜனநாயக விரோதக் கூறாக இவை மேலெழுந்து நிற்கின்றது.
 
இந்த அடிப்படையில் கூட, ஜனநாயகத்துக்கு விரோதமான நிலப்பிரபுத்துவ பண்பாட்டு கலச்சார கூறுகளுக்கு எதிரான, ஜனநாயகப் புரட்சியைத்தான் இலங்கை தொடர்ந்து கோரி நிற்கின்றது.
 
இலங்கை ஒரு சுதந்திரமான நாடு அல்ல என்று ஏன் கூறுகின்றோம்?
 
தேசத்தின் சுதந்திரமும், அதன் ஜனநாயகம் என்பதும், குறைந்தபட்சம் தேசிய முதலாளித்துவ உற்பத்தி முறைமை சார்ந்தது. சுதந்திரமான ஒரு நாட்டை இதற்கு வெளியில் பிரித்துப் பார்க்க முடியாது.அன்னிய மூலதனத்தை மையப்படுத்திய உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட அடிமை நாடே ஒழிய சுதந்திரமான நாடேயல்ல. தேசிய முதலாளித்துவத்தையும் தேச மக்களையும் மையப்படுத்திய, தேசிய உற்பத்தி முறைமைதான், தேசத்தின் நலன் சார்ந்தது. இது தேசியத்தை மட்டுமல்ல, சுதந்திரமான நாடாக இருக்கவும், இயங்கவும் வைக்கும்.
 
எம்மை எம் இனத்தவர், எம் நிறத்தவர், எம் சாதியினர், எம் பாலினார், எம் மதத்தினர் என எம்மவர்கள் ஆள்வதைக் காட்டி, அதை சுதந்திரம் என்பதா? இவற்றைக் காட்டி, இந்த சமூக ஒடுக்குமுறைகள் இல்லாது போய்விட்டது எனக் கூறமுடியுமா? இவற்றை காரணங்காட்டி எப்படிக் கூறமுடியாதோ, அப்படித்தான் தேசியமுமாகும். எம் நாட்டவர், அன்னிய நாட்டுக்கான உற்பத்தியில் ஈடுபடுவதைக் காட்டி, அதை தேசிய முதலாளித்துவம் எனவும் கூற முடியாது. இது தேசிய நலன் சார்ந்த உற்பத்தியல்ல. இதில் நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் என்பது எப்படி போலியானதோ, அதேபோல் இது மக்கள் ஆட்சியுமல்ல. மற்றவனுக்கு அடிமையாக, அன்னியனுக்கு சேவை செய்யும் பொருளாதாரக் கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மக்களும் தேசமும் சுதந்திரமாக இருப்பதாக எப்படிக் கூறமுடியும்?       
 
1948 ஆண்டு, நேரடிக் காலனி ஆதிக்கத்திலிருந்து நாடு விடுபட்டதைக் காட்டி, அதை சுதந்திரம் என்று கூறமுடியாது. இந்த ஆதிக்கத் திட்டத்தைக் கட்டிக் காப்போர், இதைச் சுதந்திரமாகக் காட்டியதன்   மூலம், காலனிய நலன்களைத் தொடர்ந்து பாதுகாத்துவருகின்றனர். இதன் மூலமாக இலங்கையின் ஆளும் வர்க்கங்கள், மக்களை முன்பு ஏமாற்றினர். தற்போதும் அப்படியே தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.
 
1948இல் நடந்தது என்ன? காலனித்துவ ஆட்சியின்போது, காலனித்துவ வாதிகளுடன் இணைந்து செயற்பட்ட வர்க்கங்கள் தான், 1948இல் ஆட்சிக்கு வந்தன. காலனித்துவ வாதிகள், தங்களின் நேரடிக் காலனிக்குப் பதிலாக, அரைக் காலனிய அமைப்புக்கு ஏற்ற ஆட்சியை மாற்றீடு செய்தனர். வெள்ளையின ஆட்சியளாருக்குப் பதில், கறுப்பின ஆட்சியாளர்களை மாற்றிய நிகழ்வைத்தான், சுதந்திரமாக அவர்கள் காட்டினர். அந்த ஆட்சியை ஏற்றவர்கள், அதற்கு ஏற்ப நடனமாடினர். இங்கு தோலின் நிறம் மட்டுந்தான் மாறின. இதைத்தான் இவர்கள் தேசத்தின் சுதந்திரம் என்றனர்.
 
ஆக, இங்கு எந்தச் சமூக மாற்றமும் நிகழவில்லை. காலனித்துவ ஆட்சியில் செயற்பட்ட காலனித்துவ கைக்கூலிகள், அதிகாரத்துக்கு வந்த நிகழ்வைத்தான், இலங்கையின் சுதந்திரம் என்றனர். இதன் பின்பாக இலங்கை ஒரு அரைக் காலனிய நாடாக இருந்தது. இந்த அரைக் காலனிய மாற்றத்தை இலங்கையில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலுங்கூட அக்கம் பக்கமாக அக்காலப் பகுதியில் அரங்கேறியது. சர்வதேச ரீதியாக, காலனிகளுக்கு எதிராக எழுந்த தேசியப் புரட்சிகளைத் தடுக்க, காலனித்துவவாதிகள் செய்த பித்தலாட்டந்தான் இந்த 'சுதந்திரம்". தங்கள் காலனிய வர்க்க நலன் சார்ந்த ஆட்சியை, தங்கள் கைக்கூலிகள் மூலம் மாற்றீடு செய்தனர். இதைத்தான் அவர்கள் சுதந்திரம் என்றனர். இதைத்தான் கைக்கூலிகளும் சுதந்திரம் என்றனர்.
 
ஆட்சியைக் கையேற்ற கைக்கூலிகள், தங்கள் உற்பற்தி முறைமையை தேசிய உற்பத்தி என்றனர். இதைத்தான் இடதுசாரிய திரிபுகளும், இது தேசிய உற்பத்தி என்றனர். தரகு முதலாளித்துவத்தை தேசிய முதலாளித்துவமாக மக்களுக்குப் படங்காட்டப்பட்டது.
 
ஆளும் வர்க்கமும், ஆட்சியும், ஆட்சி அமைப்பு முறையும், ஜனநாயகமும், சுதந்திரமும் இப்படித்தான் திரிந்து புரண்டு வெளிப்படுகின்றது. இப்படியான தொடர்ச்சியின் சர்வதேச ரீதியான காலனிய மாற்றங்களுக்கு ஏற்ப, இலங்கை அரைக் காலனியத்தில் இருந்து, நவகாலனியாக மாற்றப்பட்து. இவ்விடயம் போல உலகின் பல நாடுகளிலும், கிட்டத்தட்ட இதே சயத்தில் இவ்விடயம் நடந்தேறியது. இந்த வகையில் இலங்கையும், ஏகாதிபத்தியங்களின் தொங்குதசை நாடாக, அவற்றுக்கு சேவை செய்யும் நாட்டுக்கான நிலை உருவானது.     
 
இப்படியாக இலங்கை மக்களின் தேசிய நலன் மறுதளிக்கப்பட்டு, அதனிடத்தில் குறுகிய இனவாதம் மூலமான இனத் தேசியத்தை ஆளும் வர்க்கங்கள் கட்டியெழுப்பினர். இதனை இலங்கைத் தேசியமாக காட்டியதன் மூலம், மக்களை மோத விடுகின்றனர். இப்படித்தான் நாட்டை தொடர்ந்தும் ஏகாதிபத்தியத்துக்கு சேவையாற்றும் வண்ணம், தேசத்தையும் - தேசியத்தையும் காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கி வருகின்றனர். இவற்றை இலங்கையின் தேசியமாக - சுதந்திரமாகக் காட்டி அனைத்தையும் முன்னிறுத்தி வருகின்றனர்.
 
சமூக ஒடுக்குமுறைகள் வெறும் அடையாள ஒடுக்குமுறையாக மட்டும் இருப்பதில்லை என்று ஏன் கூறுகின்றோம்?  
 
இன ரீதியான, பால் ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, பிரதேச ரீதியான, சாதி ரீதியான, பண்பாட்டு ரீதியான, கலச்;சார ரீதியான.., அனைத்து சமூக ஒடுக்கு முறைகளையும் நாம் எப்படி எதிர்கொள்வது?
 
ஒடுக்குமுறையாளன் முன்தள்ளும் ஒடுக்குமுறை வடிவத்தைக் கொண்டு, நாமும் அவற்றை நேரடியாக எதிர்ப்பதில்லை. மனிதரைப் பிளக்கும் குறுகிய அடையாளம் சார்ந்த இந்த ஒடுக்குமுறையைக் கடந்து, அனைத்து வகையாலும் ஒடுக்கப்பட்ட மனிதர்களை, ஒடுக்குமுறையாளனுக்கு எதிராக ஒன்றிணைக்கும் வண்ணம், எம்மை நாம் அணிதிரட்டுகின்றோம். குறிப்பாக ஒடுக்கும் சமூகப் பிரிவைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுடன் அணிதிரண்டு போராடுவதை இத்தால் நாம் முன் வைக்கின்றோம்.
 
அடையாள ரீதியாக மக்களை ஒடுக்குகின்ற ஆளும் வர்க்கங்கள் தான், மக்களைப் பிளக்கும் வண்ணம் ஒடுக்குமுறைகளைத் திணிக்கின்றனவே தவிர, இவை ஒடுக்கப்பட்ட மக்களின் சொந்தத் தெரிவல்ல. இந்தவகையில் ஒடுக்கும் சமூகப் பிரிவிலுள்ள, ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரிவுகளின் வர்க்க நலன்களையும், ஒடுக்குவதை எதிர்க்கும் சமூகத்திலுள்ள வர்க்கப் பிரிவுகளின் வர்க்க நலன்களையும் கூட, நாம் கவனத்தில் எடுக்கின்றோம். இதில் சமூக ரீதியாகக் குறித்த ஒடுக்குமுறைகளுக்குள், நான்கு பிரதான கூறுகள் காணப்படுகின்றது.
 
1. குறித்த சமூக ஒடுக்குமுறை மட்டும் இங்கு தனித்து இருப்பதில்லை. மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட     அவை ஒத்த வேறுவேறான சமூக ஒடுக்குமுறைகள் இங்கு காணப்படுகின்றது. இதை இத் திட்டம்     கவனத்தில் எடுக்கக் கோருகின்றது. அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப்     போராடுமாறு     கோருகின்றது.


2. குறித்த ஒரு சமூக ஒடுக்குமுறை வடிவத்தை பயன்படுத்தி, ஒடுக்குமுறையைத் தூண்டி சுரண்டும்     வர்க்கம், தன் சொந்த சமூகப் பிரிவைச் சுரண்டுகின்றது. இந்த வகையில் ஒடுக்கும் சமூகப்     பிரிவிலுள்ள, சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டல் நலனை மையப்படுத்தியே, சமூக     ஒடுக்குமுறை இங்கு இயங்குகின்றது. இதை இத்திட்டம் கவனத்தில் எடுக்கக் கோருகின்றது.


3. குறித்த ஒடுக்குமுறை வடிவத்தைப் பயன்படுத்தி ஒடுக்கும் சமூகப் பிரிவுகூட, பொது ஒடுக்கு     முறையால் சில சலுகைகளைப் பெறுகின்றது. இதை இத்திட்டம் கவனத்தில் எடுக்கக்     கோருகின்றது.


4. இந்தச் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பயன்படுத்தி, போராடும் தரப்பு     சார்ந்த சுரண்டும் வர்க்கம், ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் தன் சமூகத் தரப்பை சுரண்டுகின்றது. இந்த வகையில், இந்த சமூக முரண்பாட்டினுள் சுரண்டும் வர்க்கத்தின் நலனை மையப்படுத்தியே, இதற்கு எதிரான கூறும் இயங்குகின்றது. இதனை இத் திட்டம் கவனத்தில் எடுக்கக்     கோருகின்றது.
 
இப்படி இதனை பலமுனையில் இனங்கண்டு எதிர்கொள்வதன் மூலம், இதன் குறுகிய அடிப்படைகளை நாம் எதிர்க்க வேண்டும்.
 
உதாரணமாக பால் ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பெண்களென்றும், இனரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஒரு இனமென்றும், சாதிய ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாதியமென்றும், இப்படி குறுகலாக அணிதிரள்வதும், எதிர்த் தரப்பை எதிராக முன்னிறுத்தி நிற்பதும், குறுகிய அடிப்படையைக் கொண்டது. இதை நாம் எதிர்க்க வேண்டும். மாறாக அனைத்து ஒடுக்கு முறைகளைம் எதிர்த்து, அணி திரள்வதையே நாம் கோரவேண்டும். இந்த வகையில் அனைவரும் அணிதிரள்வதையே, இத் திட்டமும் - அறிக்கையும் - போராட்டத் தந்திரோபாயமும் - செயல் தந்திரமும் கோருகின்றது.
 
மேற்படி விபரிக்கப்பட்ட நான்கு பிரிவான ஒடுக்குமுறைகள் மற்றும் போராட்டத்தின் பின்புலத்தில், ஒருபுறம் ஒடுக்குமுறையை இது எதிர் கொள்கின்றதுடன், மறுபுறம் இது தனக்குள் ஒடுக்குமுறைகளை கொண்டிருப்பது மட்டுமல்ல, மனித உழைப்பை சுரண்டவும் செய்கின்றது. இங்கு மற்றொரு சமூகப் பிரிவையும் இதனுள் இது ஒடுக்குகின்றது. இதனாலேதான் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அனைத்து சமூக ஒடுக்கு முறைகளையும், எங்கும் நிலவுகின்ற சுரண்டல்களையும் முரணற்ற வகையில் எதிர்க்காத அதேவேளை, ஒருசில ஒடுக்கு முறைகளை மட்டும் எதிர்க்கின்ற வடிங்களையும், கருத்து களையும் நிராகரிக்கின்றது.    
 
சமூக ஒடுக்குமுறைகளை, வர்க்க ஒடுக்கு முறையாக  ஏன் வரையறுக்கின்றோம்?     
 
மனித உழைப்பை சுரண்டாத வடிவங்களும், கருத்துகளும் இந்த சமூக அமைப்பில் கிடையாது. இந்த சமூக அமைப்பை எதிர்த்த போராட்டங்களும் கருத்துகளும் உண்டு.
 
இந்த சமூக அமைப்பினுள், சுரண்டல் நலன் சார்ந்த சிந்தனையும், நடை முறையுமற்ற எதையும், இந்த சமூக அமைப்பில் இருப்பதாக நாம் கற்பனை பண்ணமுடியாது. அப்படியெல்லாம் இருப்பதாக பாசாங்கு செய்வது மோசடியாகும். வர்க்கங்களால் ஆனாதே இந்தச் சமூகம். ஆக, சமூக ஒடுக்கு முறைகள் இதைத் தாண்டி இருப்பதுமில்லை, இயங்குவதுமில்லை. இந்த நிலையில், இந்தச் சமூக அமைப்புக்கு எதிரான போராட்டங்களும், கருத்துகளும் எப்போதும் உண்டு.
 
இந்த வகையில், இந்தச் சமூக அமைப்பினுள்ளான எதிர்ப்புகள், போராட்டங்கள், மாற்றங்கள், கருத்துகள் என அனைத்தும் நிலவுகின்ற சுரண்டல் சமூக அமைப்பைச் சார்ந்தது. இப்படி நிலவுகின்ற சுரண்டல் அமைப்பைப் பாதுகாக்கக் கோருகின்றது. இதனால் இந்த சமூக அமைப்பையே நிராகரித்து, இதிலிருந்து மாறுபட்ட, மாற்றங்களைக் கோரும் எதிர்ப்புகள், போராட்டங்கள், கருத்துகள் என அனைத்தையும், இப்படியாக நிலவுகின்ற சுரண்டல் அமைப்பை ஒழிக்கக் கோருகின்றது.  
 
இந்த வகையில் சமூக ஒடுக்குமுறையையும், இதன் பின்னாலுள்ள சுரண்டல் சமூக கட்டமைப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஒடுக்குமுறை மூலம் மற்றவனிலிருந்து தன்னை மேனிலைப்படுத்திக் காட்டிக் கொள்வதன் பின்னணியில், மேற்படி பிரிவுகளிலுள்ள ஆதிக்க சக்திகளின் வர்க்க நலன்கள் தான் இயங்குகின்றது. பரந்த தளத்தில், தன்னை மற்றவனிலிருந்து மேலானவனாகக் காட்டிக் கொள்ளும் இந்தச் சமூக உளவியல் சார்ந்து, நீடிக்கின்ற ஒடுக்குமுறை வடிவங்கள் மூலம், இந்த  சமூக ஆதிக்கப் பிரிவுகள், இவர்களையே இலகுவாக ஒடுக்கிச் சுரண்டுகின்றது. இது மட்டுமின்றி, ஒடுக்கு முறைக்குள்ளான சமூகத்தை இலகுவாகச் சுரண்டவும் முடிகின்றது. இதன் எதிர்நிலையில், இந்த சமூக ஒடுக்குமுறையை மட்டும் எதிர்க்கின்ற சமூகப் பிரிவிலும் கூட, இதுதான் மீளவும் அரங்கேறுகின்றது.     
                
இந்த வகையில் இதை எதிர்த்து, இந்த சுரண்டல் சமூக அமைப்பை மாற்றும் வகையில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து, தொடர்ச்சியாகப் போராடுவதை புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இங்கு முன்வைக்கின்றது.
 
வர்க்க முரண்பாடுதான் இலங்கையின் அடிப்படை முரண்பாடு  என்று ஏன் கூறுகின்றோம்?
 
இந்த சமூக அமைப்பில் நிலவும் அனைத்து சமூக முரண்பாடுகளிலும் வர்க்க ரீதியான முரண்பாடு காணப்படுகின்றது. அதாவது முரண்பாட்டால் எதிரெதிராக பிரிந்து காணப்படும் கூறுகளுக்குள் காணப்படும் வர்க்க ரீதியான பிளவு, இந்த முரண்பாட்டை அணுகுகின்றபோது, அது தனக்குள் முரண்பாட்டைக் கொண்டுதான் அணுகுகின்றது. இங்கு முரண்பாட்டுக்குள்ளான முரண்பாடு, ஒடுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட எதிரெதிரான இரு தளத்திலும் இருப்பதனைக் காணமுடியும். ஆக, இது எங்கும் எதிலும் கணப்படுகின்றது.
 
இந்த முரண்பாட்டுக்குள்ளான முரண்பாடு, அனைத்து சமூக முரண்பாட்டுக்கு உள்ளும் காணப் படுகின்றது. இந்த வகையில் வர்க்க முரண்பாடு எங்கும் காணப்படுகின்றது.


சமூக முரண்பாட்டை, வர்க்கம் சார்ந்து வர்க்க சக்திகள் தத்தம் வர்க்க நலன் சார்ந்து அணுகுகின்றது. இந்த அடிப்படையில் அடிப்படை முரண்பாடாக, வர்க்க முரண்பாடு எங்கும் இயங்குகின்றது.
 
இந்த அடிப்படையிலான வர்க்க முரண்பாட்டை, சமூக அடிப்படையிலான - வர்க்கமல்லாத முரண்பாடாக இட்டுச் செல்வதென்பது, வர்க்க ரீதியான பிரதான முரண்பாட்டை மூடிமறைத்து பின் தள்ளுவதற்கேயாகும். இந்த வர்க்க ரீதியான முரண்பாட்டால் இலாபமடையும் வர்க்கமே, பிற சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கின்றன. இந்த வகையில், இது எங்கும் நிலவுகின்றது.
 
இப்படியாக இலங்கையின் வர்க்க முரண்பாடு என்பது அடிப்படை முரண்பாடாக இருக்கின்ற அதே நேரம், அது பிரதான முரண்பாடாக இயங்கவில்லை. மாறாக இன முரண்பாடு பிரதான முரண்பாடாக இயங்குகின்றது.       
 
இலங்கையின் இன முரண்பாடு தான் பிரதான முரண்பாடு என்று ஏன் கூறுகின்றோம்?
 
எங்குமே நிலவும் அடிப்படை முரண்பாடு, பிரதான முரண்பாடாக இருப்பதை, இலங்கை ஆளும் வர்க்கங்கள் அனுமதிக்காததன் விளைவுதான் இது. இந்த வகையில் இன ஒடுக்கு முறையை, ஆளும் வர்க்கங்கள் திணித்ததன் மூலம், அது பிரதான முரண்பாடாக மாறியது. இந்த வகையில் பேரினவாத ஒடுக்கு முறையின் எதிர்வடிவமாக குறுந்தேசியம் வளர்ச்சியுற்றது.   
 
இவ்விரு குறுகிய எதிரெதிர்த் தேசியப் போக்குகளையும் பிரதிநிதித்துவப் படுத்துவது, இன ரீதியான சமூகப் பிரிவுகளுக்குள்ளிருக்கும் சுரண்டும் வர்க்கந்தான். சுரண்டப்படும் வர்க்கம் இதைப் பிரதிநிதித் துவப்படுத்து இல்லை. உண்மையில் சுரண்டும் வர்க்கங்கள் தன் இனப்பற்றுச் சார்ந்து, இதை தோற்றுவிப்பதான பொதுக் கண்ணோட்டம் பொய்யானது. மாறாக, சுரண்டல் வர்க்க நலன் சார்ந்துதான், இது முன்தள்ளப்படுகின்றது.
 
இலங்கையில் இனமுரண்பாடு பிரதான முரண்பாடாக இல்லாதிருந்தால், இனக்கலப்பு என்பது இயல்பானதாக இருந்திருக்கும். இனரீதியான அடையாளப் பிளவைக் கூட இல்லாதாக்கியிருக்கும். ஒடுக்குமுறையூடான கூடிய இனப்பிளவு தான், இயல்பான இனக்கலப்பைக் கூட தடுத்து நிறுத்தியது.
 
சுரண்டப்படும் வர்க்கங்களின் இயல்பான ஒன்றிணைவும், பிளவுகளுமின்றிச் சேர்ந்து வாழும் வண்ணம் இயக்குவது, இந்த அடிப்படை முரண்பாடான வர்க்க முரண்பாடுதான். இது பிரதான முரண்பாடாக இயங்குவதை இல்லாதாக்கியே, இதனிடத்தில் இனமுரண்பாட்டைக் கொண்டு வந்தனர். இதன் மூலம் தமக்கு எதிராக மக்கள் ஒன்றிணைவதைத் தடுத்தனர். சுரண்டும் வர்க்கம் இதைத்தான் தொடர்ந்தும் முன்தள்ளுகின்றது. அதாவது இனங்களுக்கிடையில் ஒன்றிணைவைத் தடுக்கும் வண்ணம், இன முரண்பாடு தொடர்ந்து முன்தள்ளப்படுகின்றது.
 
இதற்கு மாறாக, இனங்களுக்கிடையில் வர்க்க ரீதியான ஒன்றிணைவை ஏற்படுத்துவதன் மூலமும், வர்க்க முரண்பாடு, பிரதான முரண்பாடாகுவதன் மூலமுமே, இனமுரண்பாட்டை இல்லாதாக்கும் அரசியல் நடைமுறையை இத் திட்டம் முன்வைக்கின்றது.  
 
பிரதான முரண்பாடன இன முரண்பாட்டை இல்லாதாக்குவது எப்படி?      
 
அடிப்படையான வர்க்க முரண்பாட்டைச் சார்ந்துதான், பிரதான முரண்பாடான இன முரண்பாட்டை முடிவுக்கு கொண்டுவர முடியும். சுரண்டப்படும் வர்க்கம் சார்ந்த முரண்பாட்டை, ஒருபோதும் அதைச் சார்ந்து நின்று தீர்க்க முடியாது. சுரண்டப்படும் வர்க்கத்தை எதிர்த்து நின்றுதான், இதைத் தீர்க்க முடியும். இதன் அரசியல் சாரமும்- இதன் அடிப்படையும் ஒடுக்கப்பட்ட மக்கள், இனம் கடந்து தமக்கு எதிரான, அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ஐக்கியப்படுவதே ஆகும்.  
 
இந்த வகையில், இன முரண்பாட்டை சுயநிர்ணய அடிப்படையிலே தான் தீர்க்கமுடியும். சுயநிர்ணயம் என்பது பிரிவினையல்ல. இதைப் பிரிவினைக் கோட்பாடு எனக் கூறுவோர், இரு இனத்தைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்களேயாகும். இதைத்தான் இவர்கள் மாறிமாறிக் கூறுகின்றனர். இவர்கள் தமதின மக்களைப் பிளந்து வைத்துச் சுரண்டுவதற்காகவே இதனைக் கூறுகின்றனர்.
 
இதில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒன்றிணைவதற்கானதும், பிரதான இனமுரண்பாட்டை இல்லாது போக்குவதற்குமான யுத்ததந்திரோபாயந்தான் சுயநிர்ணயம் ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்ட லெனினின் இந்த வரையறைதான் எமக்கு வழிகாட்டுகின்றது.  
 
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், தமிழ் மக்களும் - சிங்கள மக்களும் - ஏனைய இன மக்களும் பரஸ்ப்பரம் இணங்கி, ஐக்கியமாய் வாழ்வதற்குப் பிரிவினையை எதிர்த்து, பிரிந்து செல்லும் உரிமையைக் கோரவேண்டும். சிங்கள மக்கள், தமிழ் மக்களுடன் ஐக்கியமாய் வாழவேண்டுமென்ற - கட்டாயப்படுத்தும் ஐக்கியத்தை எதிர்த்து, பிரிந்து செல்லும் உரிமையையுடன் கூடிய ஐக்கியத்தைக் கோரவேண்டும். இங்கு பிரிவினையை எதிர்த்து, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன்; இணங்கி வாழும் ஐக்கியத்தைக் கோரி, அதனைத் தமிழ் மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தினது கடமையாகும்.

மறுதளத்தில், கட்டாயப்படுத்திய ஐக்கியத்தை எதிர்த்து, தமிழ் ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணங்கி வாழும் - பிரிந்து செல்லும் உரிமையை, சிங்கள மக்கள் முன் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு, சிங்களப் பாட்டாளி வர்க்கத்தினதும் கடமையாகும்.
 
தங்களைப் பலாத்காரமாக ஏனைய இனங்களுடன் ஐக்கியப்படுத்தும் ஒடுக்கு முறையை எதிர்த்து, அனைத்து இனங்களும் முன்வைக்கின்ற ஜனநாயகத்துடன் இணங்கி வாழ்வதற்கான கிளர்ச்சியை, ஒடுக்கும் இனம் முன்வைக்க வேண்டும்.
 
ஒடுக்கப்பட்ட இனம் சார்ந்த பிரிவினையை எதிர்த்து, ஒடுக்கப்பட்ட இனம் அனைத்து இனங்களுடனும் முணைற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் இணங்கிவாழும் ஐக்கியத்தை முன்வைக்க வேண்டும்.                
 
இந்த வகையில் ஒடுக்கும் இனம், ஒடுக்குதலுக்கு எதிராகப் பிரிந்து செல்லும் உரிமையை முன்வைத்து, இணங்கிவாழும் ஐக்கியத்தைக் கோரவேண்டும். ஒடுக்கப்;பட்ட இனம், ஒடுக்குதலுக்கு எதிராக முன்வைக்கும் பிரிவினையை எதிர்த்து, பிரிந்து செல்லும் உரிமையின் அடிப்படையில் இணங்கி வாழும் ஐக்கியத்தைக் கோரவேணடும்.
 
தமிழ் - சிங்கள மக்கள் மட்டுமல்ல, மலையக - முஸ்லீம் மக்களுடன் கூட, இணங்கி ஐக்கியமாக வாழ, இன முரண்பாடு தடையாக இருக்கின்றது. இன்று இதை மென்மேலும் தூண்டும் வண்ணம், இதற்குள் மத முரண்பாடுகளை இனவாதிகள் புகுத்துகின்றனர். எப்படி இன - மத - குறுகிய உணர்வுகளை இவர்கள் தூண்டுகின்றனர். இதற்கு எதிராக, நாமும் அந்த மக்களுடன் நின்று போராட வேண்டும். அதேநேரம் குறுகிய இன - மத உணர்வுகளை எதிர்த்துப் போராட வேண்டும்.
 
இந்த குறுகிய இன - மத உணர்வுகளை எதிர்த்தால், நாம் அன்னியமாகி விடுவோம் எனக்கூறி, அதிலிருந்து விலகிச் செல்வது, அதே இனவாதத்திற்கும் - மதவாதத்திற்கும் உடந்தையானதாகும். சொந்த இன - மத - குறுகிய வாதங்களை எதிர்த்துப் போராடாது, மற்றைய இன - மத மக்கள் முன்னின்று இதற்காக குரல் கொடுப்பது தவறானது. இது சொந்த மக்களின் குறுகிய - இனம் - மதம் சார்ந்த உணர்விலிருந்து அன்னியமாகிவிடாது. இது தன் சொந்த மக்களின் குறுகிய - இன - மத உணர்வுக்கு உடந்தையாக்கும்.
 
இந்த வகையில் முதலில் நாம் எமது இனவாதத்தை முதலில் களையவேண்டும்;. மற்றத் தரப்பை இதற்கு தடையாய் இருப்பதாக கூறுவதன் மூலம், நாம் இதற்குத் தடையாக இருக்க முடியாது. நாம் இணைந்து வாழ்வதற்குரிய தயார் நிலையில் நின்றுதான், அதற்குத் தடையான மறுதரப்புக் காரணத்தை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். அதன் போதும் அனைவரும் இணங்கி வாழவே அவர்களிடம் கோரவேண்டும்.
 
இணங்கி வாழும் இன ஐக்கியத்தை மக்களுக்கிடையில் நாம் கோருகின்றோம்;. அதுகும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இதனைக் கோருகிறோம். அதற்காக நாம் முன்னின்று போராடுகின்றோம். ஒடுக்கப் பட்ட மக்களின் ஐக்கியத்தை நாங்கள் நிபந்தனையின்றி முன்வைக்கவில்லை. அவர்கள் தாமாக இணங்கி வாழும் ஐக்கியத்தையே, நாம் நிபந்தனையாக முன் வைக்கின்றோம்.
 
இந்த வகையில் சுரண்டும் வர்க்கத்தை எதிர்த்து, சுரண்டப்படும் வர்க்கங்கள் ஐக்கியப்பட்டு போராட வேண்டும்.  
 
எமது நட்பு சக்திகள் யார்?
 
இரண்டு பிரதான கூறுகள் சார்ந்து, இதனை நாம் இனங் காணவேண்டும்.
 
 1. சுரண்டலுக்குள்ளாகி ஒடுக்கப்படுகின்ற வர்க்கங்கள்.
 2. சமூக ஒடுக்குமுறைகள் சார்ந்த சமூகப் பிரிவுகள்.
 
இந்த வகையில் பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்களையும், ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளையும்  அணிதிரட்டும் வண்ணம், மார்க்சிய - லெனினிய - மாவோயிச சித்தாந்த வழிகாட்டலின் கீழ், நாம் உருவாக்கிய புரட்சிகர அரசியல் முன்னணி தான் புதிய ஜனநாயக புரட்சித் திட்டம். இவ்விரண்டும் முரணற்ற ஜனநாயகத்தை அடிப் படையாகக் கொண்டு, தன்னை ஒருங்கிணைத்துக் கொள்ளும். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்காகவும், சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தன்னளவில் தான் போராடும்.
 
மறுதளத்தில், ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்த வர்க்கப் பிரிவுகளும், சமூக ஒடுக்குமுறை சார்ந்த சமூகப் பிரிவுகளும், முரணற்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் சுயாதீனமாக இயங்குகின்ற போது, அவர்களும் எமது நட்பு சக்திகள் தான். இங்கு நாம் முரணற்ற ஜனநாயகக் கூறு என்று கருதுவது, தனக்குக் கீழ்ப்பட்ட சமூகப் பிரிவுகள் மீதும், வர்க்கங்கள் மீதும் அதுகொண்டுள்ள கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது தனக்குள்ளான சுரண்டலை எதிர்த்தும், தனக்குள் ஒடுக்குவதற்கு எதிராக அது போராடவேண்டும்.
 
இந்த வகையில், சமூக ஒடுக்குமுறையான பால், இனம், நிறம், சாதி.., என்று அனைத்து சமூக முரண்பாடுகளிலும், தனக்குள் ஒடுக்குமுறையையும் - சுரண்டலையும் எதிர்த்துப் போராடவேண்டும். ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் சார்ந்து, அனைத்து சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடவேண்டும். இலங்கையில் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களான தேசிய முதலாளிகள் தொடங்கி, பாட்டாளி வர்க்கம் வரை, அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தும், தனக்குள்ளான சுரண்டற் கொள்கை என்பது, புதிய ஜனநாயக புரட்சியின் நலனுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
 
இந்த வகையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, தரகுமுதலாளித்துவ எதிர்ப்பு சக்திகளை நாம் எமது நட்பு சக்திகளாக இனம் காணவேண்டும்.
 
எமது எதிரிகள் யார்?
 
இன்று தேசங்களின் சுயதீனம் என்பது கிடையாது. மக்களின் சுதந்திரமான தெரிவும், சுதந்திரமான வாழ்வும் கிடையாது. மாறாக அன்னிய நலனைப் பேணுவதையும், அதை மக்கள் மீது திணிக்கும் கட்டமைப்பையும் தான், சுதந்திரமாகவும் - ஜனநாயகமாகவும் காட்டப்படுகின்றது. இந்த வகையில் வர்க்க ரீதியாக இரண்டு பிரதான கூறுகளைக் கொண்டு இது காணப்படுகின்றது.
 
உள்நாட்டு எதிரிகள்: மக்களைச் சுரண்டி வாழும் ஆளும் வர்க்கங்களும், அவர்களின் வர்க்க நலன் சார்ந்த அதிகார வர்க்கங்களும்.
 
அன்னிய நாட்டு எதிரிகள்: தேசத்தையும், தேச மக்களையும் சுரண்டும் (நிதி உள்ளிட்ட) மூலதனங்களும் அது சார்ந்தியங்கும் ஏகாதிபத்தியங்களும், பிராந்திய ஆதிக்க சக்திகளும். இந்த நலன் சார்ந்தியங்கும் உள்நாட்டு வர்க்கங்களும், அதிகார வர்க்கங்களும் ஆகும்.
 
இன்று நாட்டை ஆளும் வர்க்கங்களுக்கும், அன்னிய மூலதன சுரண்டல் பிரிவினருக்கும் இடையில் இடைவெளிகள் கூட இருப்பதில்லை. இரண்டும் ஒன்றாகவே, ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இயங்குகின்றன. இன்று அன்னிய மூலதனத்தின் நலனைப் பேணும், பொலிஸ்காரருக்குரிய கட்டமைப்பாகவே தேசிய அரசுகள் இயங்குகின்றன. அன்னிய நலனைப் பேணும்வண்ணம், அடக்குமுறையை ஏவும் இயந்திரமாகவே உள்நாட்டு அதிகாரவர்க்க கட்டமைப்புகளும், ஆட்சிகளும் இயங்குகின்றன.
 
உள்நாட்டு எதிரிகளாக தரகு முதலாளிகளும், நவகாலனிய வர்க்கப் பிரிவுகளும் காணப்படுகின்றனர். தேசங் கடந்த பன்னாட்டு உற்பத்திகள், அன்னிய உற்பத்திகள், பன்னாட்டு நிறுவனங்கள் முதல் உலக வங்கி வரை, எமது எதிரிகளை பிரதிநிதித்துவப் படுத்தி மக்களைச் சூறையாடுகின்றது. இந்த வகையில் இதை பிரதிநிதித்துவம் செய்யும் ஏகாதிபத்தியம் முதல், பிராந்திய வல்லரசுகள் வரை எமது எதிரியாக உள்ளனர். இதனை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசும், நவகாலனிய சக்திகள்;, ஆளும் வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் தொடங்கி இதனை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யும் ஊடாகங்கள் வரை எமது எதிரியாகும்.  
 
சமூக ஒடுக்குமுறையைப் பொறுத்த வரையில், சுரண்டும் வர்க்கம் சார்ந்து நின்று இயங்குமனைத்தும் எமது எதிரிகள். அதேபோல் தனக்குள் ஒடுக்குமுறையைக் கொண்டு, எதிர்த்து இயங்கும் அனைத்தும் எமது எதிரிகளேயாகும்.
 
சமூக நடைமுறையை நிராகரிக்கும் அறிவுத்துறை பற்றிய எமது மதிப்பீடு          
 
இவர்கள் சமூக நடைமுறையை நிராகரிக்கின்ற அதேநேரம், சமூகம் குறித்து பேசுகின்ற ஒட்டுண்ணிப் பிரிவாகும். இவர்கள் தமது அறிவை மட்டும் கொண்டு, தம்மைச் சமூகத்தில் முன்னிறுத்துகின்ற தனியுடமைச் சமூக அமைப்பின் கள்ளக் குழந்தையாவர். இவர்கள் தமது அறிவுமூலம் சொல்வதை, தமது நடைமுறைக்கு உள்ளாக்காது, அதனை மற்றவர்மீது திணித்து, பிறர்மீதேறிச் சவாரி செய்யும் அறிவுசார்ந்த மோசடிப் பேர்வழிகளாவர்.         
 
இவர்கள் சமூக நடைமுறையில் ஈடுபடுவதை தன்னளவில் மறுப்பதால், நடைமுறை அரசியலுக்கு எதிரான கோட்பாடுகளையும் - தத்துவங்களையும் உற்பத்தி செய்வார்கள். அதன் மூலமாக தங்களைச் சமூகத்தில் தக்கவைக்க முனைவார்கள். மார்க்சிய நடைமுறையில் இருந்து பிரித்தல், மார்க்சிய எதிர்ப்பு, மார்க்சியமல்லாத சமூக முரண்பாடு சார்ந்த கோட்பாடுகளென அனைத்தும், இவர்களது சொந்த நடைமுறை மறுப்பிலிருந்துதான், இப்படியான அறிவுத்துறைப் பிரமுகர்களால் முன்வைக்கப் படுகின்றது. தனிச்சொத்துடமை அமைப்பில், தனிமனிதனை முதன்மைப்படுத்தும் அதே சமூக சிந்தனையின் அடிப்படையில், இப்படியான அறிவுசார் பிரமுகர்கள் தம்மை மையப்படுத்தி, தம்மைத் தாம் முதன்மைப்படுத்துகின்றனர்.  
 
இந்த வகையில், சமூக நடைமுறையில் ஈடுபடாது, புதிய நடைமுறையைக் கோராது, இவர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கின்றனர். இவர்கள் மக்களின் பின்தங்கிய அறிவு மட்டத்தை மூலதனமாகிக் கொண்டு, சமூக ஒட்டுண்ணிகளாகவே, சமூத்தின் மேற்தட்டில் இயங்குகின்றனர். இதை சமூக நலன் சார்ந்ததாக இவர்கள் கூறுவதன் மூலம், நடைமுறையற்ற சமூக நலனென்ற மோசடி மூலம் சமூகத்தை ஏமாற்றி, இவர்கள் தம்மை சமூகத்தில் தக்கவைக்க முனைகின்றனர். சமூகம் பற்றிய தனது கண்ணோட்டத்தை அங்கீகரிக்க கோருகின்ற இவர்கள், அதே நேரம் தமக்குச் சிறப்பு அங்கீகாரத்தையும்; கோருகின்றனர். சமூகத்தில் இருந்தும், அதன் நடை முறையிலிருந்தும் பிரிந்திருந்தவாறே இவர்கள் தமதிருப்பை முன்னிலைப்படுத்தக் கோருகின்றனர்.  
 
இப்படி சமூக விடையங்கள் பற்றி பேசுகின்றவர்கள், தாம் பேசுகின்ற விடையத்துக்காக, நடைமுறையில் வாழாதவர்கள். அதற்காக போராடாதவர்கள். மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட சுரண்டும் வர்க்கம் இருப்பது போல், அறிவை மூலதனமாக கொண்டு, மனித வாழ்வியலை உறுஞ்சும் ஒட்டுண்ணியாக வாழ முனைபவர்கள்தான் இவர்கள்.
 
தங்கள் சொந்தக் கருத்துச் சார்ந்த, அதன் நடைமுறைக்கு அவர்களே எதிரானவர்களாக இருப்பதால், அவர்களின் கருத்து சமூக நடைமுறை சார்ந்தல்ல. நடைமுறையில் போராடி வாழும் மக்களுக்கு, இது எதிரானதாகவே இயலில் இருக்கின்றது.
 
இதைவிட, சமூகத்தின் நடைமுறை வாழ்வு சார்ந்த போராட்டத்தை வைத்துப் பிழைப்பு நடாத்து- வோரிலும் இரண்டு வகையானோருண்டு. அவர்கள்வாழ்வியல் சார்ந்த போராட்டத்துடன் தம்மை நடைமுறையூடாக இணைக்காது, அது சார்ந்துநின்று பிழைப்பவர்கள். வாழ்வியல் சார்ந்த போராட்டத்தைத் திரித்துப் புரட்டிப் பிழைப்பவர்கள்.
 
இவை இவ்விரண்டும் மக்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளாது, ஆனால் இப்போராட்டத்தையும் மக்களையும் தமது நலனுக்காகப் பாவிக்கின்றது. இதன் மூலம் சமூகத்தில் ஒட்டுண்ணியாக வாழ்வது முதல் அதை மூலதனமாக்கிச் சம்பாதிப்பது வரை அங்குமிங்குமாக தம்மை அரங்கேற்றுகின்றது. தம்மை சமூகத்தின் அறிவுசார் பிரமுகராக முன்னிறுத்துவது தொடங்கி, தம்மை புரட்சியாளராக காட்டிக் கொள்வது வரை, இந்த பிரமுகர் தனத்தில் அரங்கேற்றுகின்றது.
 
சமூக நடைமுறையை முன்வைக்காத, மக்களின் நடைமுறையுடன்; தம்மை இணைத்துக் கொள்ளாதவர்களின் அறிவுசார்ந்த கருத்துக்கள், இயல்பாக மக்களின் போராட்டத்துக்கும் நடைமுறைக்கும் எதிரானது. இது போராட்டத்தை ஆதரித்தாலும் கூட, இது அதே முரண்பாட்டுடன்; தான் இயங்குகின்றது. இதை தொடற்சியாக அம்பலப்படுத்துவதன் மூலந்தான், நடைமுறையுடன் கூடிய பொது அறிவு, மக்கள் மத்தியில் வளர்ச்சி பெறும். இந்த வகையில் இதற்கு எதிரான போராட்டம் எப்போதும் முதன்மையானது. இதுதான் பிரமுகர்களில் இருந்து விலகிய புரட்சிகரமான நடைமுறைக் கட்சியை உருவாக்குகின்றது.
 
தனிநபர் மையவாதத்தை அடையாளம் காணல்  
 
இவர்கள் கருத்தை மையப்படுத்தாது, கருத்துச் சார்ந்த அமைப்பை முதன்மைப்படுத்தாது, தன்னை மட்டுமே முதன்மைப்படுத்துகின்ற போக்கை கொண்டோராவர். இவர்கள சமூக நடைமுறையில் ஈடுபடாத அறிவுத்துறை சார்ந்து, தனிமனிதனை மையப்படுத்தும் நடைமுறை சார்ந்து. சமூகத்தில் ஏதேதோ வகையில் செல்வாக்கு வகிப்பர். அல்லது அப்படி வகிக்க முனைவர்.
 
இப்படியானோரின் செயற்பாடு தன்னை மாத்திரம் கவனித்து, பொது நலனைப் புறக்கணித்து விடுகின்றனர். அமைப்பினுள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இவர்களுக்குள்ளே கூலி மனப்பான்மையை உருவாக்குகின்றது. தனக்கு மேல் உள்ளவர்களுக்காக, அவர்களைத் திருப்தி செய்ய முனைகின்றது. தாங்கள் தான் புரட்சியைச் செய்யும் சக்திகள் என்பதை மறந்து, அதை மறுதளித்து விடுகின்றது. அதேவேளை மற்றவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றது. மற்றவர்களை அதற்காக குற்றம் சாட்டுகின்றது.
 
இது அரசியலை அரசியல் மையப்படுத்தாது. அதிலிருந்து தன்னை மட்டும் தனிமைப்படுத்துகின்றது. இறுதியில் எதிராளியின் தனிப்பட்ட கூறுகளைச் சார்ந்து இயங்கத் தொடங்குகின்றது. கோட்பாட்டு விவாதத்திலிருந்து இது படிப்படியாக விலகிச் செல்கின்றது. அப்படியே தனிநபர் விவகாரத்துக்குள் மூழ்கி, அதை விவாதப் பொருளாக்குகின்றது.
 
வேலையில் ஊக்கமின்மை, முரண்பாடுகளின் பின்பாக செயலற்ற தனம், அரசியலுக்குப் பதில் கட்டுப்பாடு களைத் திணித்தல், இப்படிப் பலவுள.    
 
இவர்கள் இப்படிச் சமூக நடைமுறையிலிருந்து அன்னியமாகி, அமைப்பு நடை முறையிலிருந்து விலகியிருக்கின்றபோது, கருத்தியல் வறுமையுடன் இந்த தனிநபர் மையவாதம் அதிகளவில் வெளிப்படும். இது பிரமுகர்த் தனத்தின் மற்றொரு அரசியல் வெளிப்பாடாகும்.
 
பூரண சமத்துவவாதத்தை அடையாளம் காணல்
 
இது அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவத்தை மறுதளிக்கின்றது. அரசியல் வழி காட்லை மறுதளிக்கின்றது. அனைவருக்குமான சம உரிமையை அரசியலிலும் நிலைநாட்டக் கோருகின்றது. ஒரு அமைப்பின் அரசியல் மற்றும் அமைப்பு வடிவத்தை பூரண சமத்துவம் மூலம் மறுதளிக்கின்றது.
 
இது கற்றல் கற்றுக்கொள்ளல் மூலமான அரசியல் வழிகாட்டலை மறுத்து, சம உரிமை மூலம் அதை முன்னிறுத்த முனைகின்றது. சமத்துவம் என்பது ஆட்களை பிரதிநிதித்துவப் படுத்துவதல்ல. மாறாக அரசியலையும், அரசியல் ரீதியான ஜனநாயக மத்தியத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டது.        
 
பெரும்பான்மைக்கு சிறுபான்மை என்ற கட்டுப்பாட்டை மறுதளிக்கின்றது. சமத்துவத்தின் அடிப்படையில் தன்னை மையப்;படுத்தி, முதன்மைப்படுத்தி இயங்க முற்படுகின்றது. மற்றவர் இயங்காவிட்டால், தன் இயக்கத்தையும் மறுதளிக்கின்றது.
 
இலங்கையில் நடந்த  இரண்டு பிரதான ஆயுதப் போராட்டங்களை மதிப்பிடல்
 
 
தமிழ்த் தேசிய இயங்கங்களின் ஆயுதப் போராட்டம் பற்றி :
 
இலங்கையில் இடதுசாரியத்துக்கு எதிரான, வலதுசாரிய நாடாளுமன்ற அரசியல் தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றது. இக்காலத்தில் இடதுசாரியத்தையும், பாட்டாளி வர்க்க அரசியல் நடைமுறையையும் அரசியல் ரீதியாகக் கைவிட்டு, சீரழிந்து சிதைந்து வந்த காலகட்டமுமாகும். அதே நேரம் தமிழ்த் தேசிய ஆயுதப் போராட்டத்திலிருந்து இடதுசாரிய வர்க்கக் கூறுகளை அழித்து, உருவான வலதுசாரிய போராட்டமுமாகும்.
 
இது மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை மறுதளித்து, அரச ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாக அதைக் குறுக்கியது. மக்களை ஒடுக்குவதும், அதே நேரம் அவர்களுக்காக தாம் போராடுவதான இரட்டை அணுகு முறையை அது கட்டமைத்துக் கொண்டது.   
 
அரச ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமென்ற அளவில், சுயநலமற்ற தியாகங்களையும், அர்ப்பணிப்புகள் நிறைந்த போராட்டமாகவும் நடந்தேற்றியது. இந்த வகையில் இதுதான் போராட்டம் எனக்கருதிய அர்ப்பணிப்புகளை, தியாகங்களை, போராட்ட அனுபவங்களை நாம் நிராகரிக்கக் கூடாது. அதை எமதாக்க வேண்டும்.
 
நாம் இங்கு நிராகரிக்க வேண்டியது அதன் அரசியலையும், அது சார்ந்த நடைமுறைகளையும், அதை முன்னெடுத்த தலைமையையும் தான்.          
 
இங்கு சுயநலமற்ற தியாகங்களுடன் கூடிய அர்ப்பணிப்புகளை மதிக்கவும், அதேநேரம் சுயநலத்துடன் கூடிய தலைமையை நிராகரிக்கவும் வேண்டும். போராட்டம் வழங்கிய பல்துறை அறிவை உள்வாங்கவும், அதேநேரம் மக்களுக்கு எதிரான போக்குகளை நிராகரிக்கவும் வேண்டும்.    
 
ஜே.வி.பி நடத்திய இரண்டு ஆயுதப் போராட்டங்கள் பற்றி:
 
சரியான சர்வதேச கம்யூனிச கோட்பாட்டைக் கொண்ட, ஆனால் சரியான வர்க்க நடைமுறையை கொண்டிராத ஒரு கட்சியிலிருந்து தான் ஜே.வி.பி. உருவானது. இந்த வகையில் சண் தலைமையிலான சரியான சர்வதேச கம்யூனிசக் கோட்பாட்டை நிராகரித்து உருவானது தான் ஜே.வி.பி. இனவாதத்தை பிரதான முரண்பாடாகக் கொண்ட இலங்கையில், சரியான சர்வதேச நிலைக்கு தமிழினத்தை சேர்ந்த சண் தலைமை தாங்கினார். அதே நேரம் அதிலிருந்து விலகி, ஜே.வி.பியை உருவாக்கிய ரோகன விஜவீர, சண்ணுக்கு எதிராக இந்த இனவாதத்தையே பயன்படுத்தினார்.
 
இந்த வகையில், இலங்கையில் நிலவிய இனவாதத்தை சார்ந்து, சண் கட்சிக்கு எதிரான இடதுசாரிய குட்டிபூர்சுவா கட்சியைக் கட்டினார். மலையக மக்களை, இந்திய விஸ்த்தரிப்பு வாதத்தின் ஒரு அங்கமாகக் காட்டி, அவர்களை எதிரியாக முன்னிறுத்தினார். மறுதளத்தில் இலங்கையில் பிரதான முரண்பாடாக மேல் நோக்கிவந்த இனவாதத்தை எதிர்த்து, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியை யாருமே உருவாக்கவில்லை. சரியான அரசியலைக் கொண்டிருந்த சண்ணும் கூட, இதைச் செய்யவில்லை.
 
ஜே.வி.பி. இனவாதத்தை எதிர்த்து, வர்க்கக் கட்சியை உருவாக்காகவில்லை. இனவாதத்தை சார்ந்தும், சமரசவாதத்தை அடிப்படையாகக் கொண்டதுமான குட்டிபூர்சுவா அமைப்பையே உருவாக்கினர். அதன் வர்க்க இயல்புடன், மக்களுக்காக தாம் புரட்சி செய்யும் ஆயுதப் போராட்டத்தை நடத்தினர்.
 
இப்படி மக்களிலிருந்து விலகிய, குட்டிபூர்சுவா வர்க்கத்தின் நலனை, பாட்டாளி வர்க்க அரசியலாக முன்னிறுத்தினர். இந்த அரசியல் அடித்தளத்தில் புரட்சி மனப்பான்மை கொண்ட தியாகங்கள், அர்ப்பணிப்புகள் கொண்ட போராட்டங்களை நடத்தினர். இப்படி இதுதான் வர்க்கப்புரட்சி என்று நம்பிச் செய்த தியாகங்களையும், அனுபவங்களையும் நாம் நிராகரிக்க முடியாது.
 
நாம் நிராகரிக்க வேண்டியது, பாட்டாளி வர்க்கமல்லாத அதன் குட்டிபூர்சுவா வர்க்க அரசியலையும், அது சார்ந்த அதன் இனவாதத்தையும், அதற்கு தலைமை தாங்கியவர்களையும் தான்.
 
இலங்கையில் கடந்தகால வர்க்க அரசியலை இனம் காணல் பற்றி
 
இலங்கையில் மார்க்சியத்தின் அறிமுகம் என்பது, வர்க்கக் கண்ணோட்டத்தை நிராகரித்த திரோஸ்க்கியத்தின் மூலம் அறிமுகமானது. அன்றைய சர்வதேசிய வர்க்க அரசியலை, ஆரம்பம் முதல் நிராகரித்த கோட்பாடு, மற்றும் நடைமுறைப் பாதிப்புகள் இன்றுவரை காணப்படுகின்றது.
 
திரோஸ்க்கியத்துக்குப் பின்னரே, வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட மார்க்சியம் அறிமுகமானது. இப்படி அறிமுகமான மார்க்சியம், இலங்கையின் சமூக பொருளாதார அடிப்படையில் இருந்து நடைமுறையை அணுகியிருக்கவில்லை. மாறாக, மேற்குச் சமூக அமைப்பிற்குரிய நடைமுறையுடன் தான், இலங்கையில் அதனை முன்னெடுத்தனர். இலங்கைச் சமூக அமைப்பைத் தவறாகப் புரிந்து விளங்கிக் கொண்டதன் மூலமாக, வர்க்கப் போராட்டப் பாதையிலிருந்து அதன் நடைமுறை விலகிச்சென்றது. அதனாலேதான் ஒரு வர்க்கத்தின் கட்சியாக அதனால் இருக்க முடியவில்லை.
 
ஒரு வர்க்கக் கட்சிக்குரிய வர்க்க நடைமுறையை அது கொண்டிருக்கவில்லை. தேர்தல் கட்சியாக அது  தன்னை முன்னிறுத்தியதன் மூலம், வர்க்கத்துக்குரிய வர்க்கக் கட்சியாக அது இயங்கவில்லை. 1960களில் சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் ஏற்பட்ட பிளவின் போது, முதலாளித்துவ மீட்சியைச் சார்ந்து, அது  திரிபுவாதப் பாதையில் தொடர்ந்து பயணித்தது.
 
கம்யூனிசக் கட்சியும், வர்க்கப் போராட்டத்தை நிராகரித்த திரோஸ்கியக் கட்சியும், படிப்படியாக இனவாதக் கட்சியாக மாறின. ஆளும் கட்சிகளுடன் கூடி, ஆட்சியமைக்கும் கட்சியாகச் சீரழிந்தது. அவை பெயரளவில் மட்டும் கட்சியாக மாறி, வர்க்கத்துடன் தொடர்பற்ற தலைவர்களின் பிழைப்புவாதக் கட்சியாக உள்ளது.       
 
1960களின்போது சோவியத்தில் நடந்தேறிய முதலாளித்துவ மீட்சியை அடுத்து, சர்வதேச ரீதியாக இருந்த கட்சிகளின திரிபுவாதப் பாதையை அவை தேர்ந்தெடுத்தன. அதேவேளை இலங்கையில் சண் தலைமையிலான புரட்சிகரப் பிரிவு, இதையெதிர்த்து சரியான வர்க்கக் கட்சிக்குரிய பாதையைத் தெரிவு செய்தது.  
 
இருந்த போதும், சண் தலைமையிலான கட்சி கூட, வர்க்கக் கட்சிக்குரிய நடைமுறையைக் கொண்டு இருக்கவில்லை. அதாவது முரண்பாடுகளை இனங்கண்டு போராட்டத்துக்குத் தலைமை தாங்கவும், வர்க்கத்துக்குத் தலைமை தாங்கவும் கூடிய, ஒரு நடைமுறைக் கட்சியாக அதனால் இயங்க முடியவில்லை.
 
சாதிப் போராட்டம், தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்த அக்கட்சி, அதையே வர்க்கப் போராட்டமாக குறுக்கியது. இப்படி நடந்த போராட்டங்கள் ஒரு எல்லையை தாண்ட முடியாது போக, அவர்களது போராட்டங்களும் முடிவுக்கு வந்தன.   
 
வர்க்கக் கடமைகளையும், சமூக முரண்பாடுகளையும் கையில் எடுக்கத் தவறிய அக்கட்சி சமூகத்திலிருந்து அன்னியமானது. இதனால் முரண்பாடுகளும், பேராட்டங்களும் தீவிரமாகியது. இந்த அரசியல் பின்புலத்தில் குட்டிப்பூர்சுவா வர்க்கம் (புதிய ஜனநாயக் கோரிக்கை சார்ந்தவை) சார்ந்த   ஜே.வி.பி.யின் இடதுப் போராட்டங்களும், தமிழ்த் தேசியம் சார்ந்த குறுந்தேசிய வலதுப் போராட்டங்களும், பாரிய தியாகங்களுடன் இலங்கையில் நடந்தேறியது.   
 
ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், சமூக முரண்பாடுகளுக்கும் சண் தலைமையில் ஆன கட்சியால் தலைமை தாங்க முடியாத ஒரு கட்சியாக அது இருந்தது. அதனால் படிப்படியாக பல்வேறு தொடர் நெருக்கடிக்கு உள்ளாகிய அக்கட்சி, பல குழுக்களாக உடைந்தது. ஆனால் இவை எதுவும் வர்க்கக் கட்சியாக, நடை முறையில் வர்க்கத்துக்கு தலைமை தாங்க முடியவில்லை. அதேபோல் சமூகத்தில் நிலவிய முரண்பாடுகளுக்கு வழிகாட்டவும் இவற்றால் முடியவில்லை. பெயரளவிலான கட்சியாக அவை இருந்தன, இருக்கின்றன.   
 
இவர்களுக்கு வெளியில் ஜே.வி.பி.யும், தமிழ் இயக்கங்களும் குட்டிப்பூர்சுவா வர்க்கம் சார்ந்து, முரண்பாடுகள் மீதான தீவிர அரசியற் பாத்திரத்தை இலங்கையில் வகித்தன. வர்க்க அரசியலற்ற குட்டிபூர்சுவாக் கண்ணோட்டம் கொண்ட இடதுசாரிய ஜே.வி.பி.யின் முரண்பாடுகள், தொடர்ச்சியான உடைவுகளை ஏற்படுத்தியது. இதே போல தமிழ் இயக்கங்களுக்குள் பல உடைவுகளும் நடந்தேறின. அதேவேளை இடதுசாரிய சிறிய குழுக்கள் தோன்றிய போதும், அவையும் வர்க்கக் கட்சியாகாமலே அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன. இன்று வர்க்க நடை முறையைக் கோரும் கருத்துகளும் - குழுக்களும் மீண்டும் காணப்படுகின்றது. ஆயினும் இவையோர் வர்க்கத்தின் கட்சியாக தம்மை மாற்றியமைக்க முடியாதுள்ளனர். அத்துடன் கோட்பாட்டு ரீதியாகவும் - நடைமுறை ரீதியாகவும் தொடர்ந்தும் இவை பின்தங்கியே காணப்படுகின்றன. இலங்கையின் வர்க்கக் கட்சிகளின் அரசியல் நிலைமை இதுதான்.
 
இலங்கையை மாறிமாறி ஆண்ட, ஆளும் கட்சிகள் பற்றி
 
இலங்கையை ஆண்ட ஆட்சிகளை, இடது - வலது என்ற பொது வகைப் படுத்துதல் மூலமாக வேறுபாடு காணல் என்பதில், இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தைச் சார்ந்தவையாகும்.  மாறாக இந்த ஆளும் வர்க்கம், இலங்கை மக்களைச் சுரண்டுவது எப்படியென்ற அடிப்படையிலேதான், இவை தமக்குள்ளே சில வேறுபாட்டைக் கொண்டிருந்தன. அதாவது சர்வதேசரீதியாக சோவியத் - சீன அமைப்புகள் ஏற்படுத்திய மக்கள் நலத் திட்டங்களால் பிற சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் பிரதிபலிப்பை ஈடுகொடுக்க, அறிமுகமான மக்கள் நலத்திட்டங்கள் சார்ந்துதான் இந்த ஆளும் வர்க்க வேறுபாடுகள் உருவானது. அதாவது சுரண்டலை நடத்தும் விதம் பற்றிய அரசியல் வேறுபாடே இங்குள்ளது. இது உலகளாவிய அளவில் எங்கும் காணப்படுகின்ற ஒன்று. இந்த வேறுபாட்டின் இடையிலான முரண்பாடுகளின் அடிப்படையாகக் கொண்டு, இவர்கள் மாறிமாறி ஆட்சிக்கு வருவது தொடர்ந்தும் நடந்தேறுகின்றது. சோவியத் - சீனச் சமூகநலத் திட்டங்கள் முடிவுக்கு வந்தநிலையில், மற்றைய நாடுகள் அறிமுகப்படுத்திய சமூகநலத் திட்டங்களும் முடிவுக்கு வர, இவர்களுக்கு இடையிலிருந்த வேறுபாடுகள் மறைகின்றது.
 
அதேநேரம் இலங்கையில் நிலவிவந்த வலது இடது வேறுபாட்டுக்குள், வர்க்கக் கட்சிகள் கூட சறுக்கி வீழ்ந்த வண்ணம், அரசியல் நடத்தும் அவலம் தொடர்கின்றது.  
 
இந்த அரசியல் பின்புலத்தில், காலனித்துவ எச்சங்களைத் தேசிய மயமாக்கியது முதல், சுய மொழிக் கல்வி வரையான கொள்கைகளையும், தேசிய பொருளாதாரம் சார்ந்த கொள்கைகள் மூலம் ஆட்சிக்கு வந்த இடது பிரிவுகள், தேசியம் சார்ந்த வர்க்கங்களைச் சார்ந்து இதனைக் கொண்டுவரவில்லை. அதாவது தேசியமல்லாத வர்க்கங்களை ஒடுக்கி, இதனை கொண்டுவரவில்லை. மாறாக தேர்தலில் வெல்வதற்காக இதனை முன்னெடுத்தவர்கள், தொடர்ந்தும் முந்தைய ஆளும் வர்க்கத்தையே சார்ந்து நின்றனர். அதே ஆளும் வர்க்கத்தையும், அதிகார வர்க்கத்தினையும் பாதுகாத்தபடி, மேலேட்டில்   செய்த வெளிப் பூச்சுகள்தான் இவை.
 
இவர்கள் மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்தது போல், இடதுசாரிய திரிபுகளும் இவர்களைச் சார்ந்தே உருவாயினர். வலதுக்கு எதிரான இடது என்ற ஆளும் ஆட்சியாளரை, தேசிய சக்தியாகக் காட்டி மதிப்பிட்ட வர்க்கத் திரிபுகள் இதனால் வெளிப்பட்டது.
 
ஆளும் வர்க்கத்தை மாற்றாத - அதிகார வர்க்கத்தை மாற்றாத - ஆட்சி மாற்றத்தைச் சார்ந்த இந்த வலது - இடதுக்கு இடையிலான வேறுபாடு, தேசியக் கொள்கை சாhந்தல்ல. மாறாக ஆளும் வர்க்கங்கள் சார்ந்த ஆட்சியாளர்கள், அதிகாரத்துக்கு வருவதற்கான வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலாகும்.
 
நவகாலனியம், உலகமயமாதல் என்ற சர்வதேச நிகழ்ச்சிப் போக்குக்கு ஏற்ப, தேசியக் கூறுகளை இன்று அழிப்பதால், சமூக நலக்கூறுகளை இல்லாதாக்குவதன் மூலம், தங்கள் அதிகாரத்துக்கு வருதற்கான இந்தக் கட்சிகள், கடந்தகாலத்தில் கையாண்ட வலது - இடது வேறுபாடுகள் கூட, இன்று மறைந்து வருகின்றது.
 
மற்றைய கட்சிகள் பற்றி
 
இவை அனைத்தும் ஆளும் வர்க்கத்தையும், நவகாலனிய உலக மயமாதலையும் சார்ந்தியங்கும் கட்சிகளாகும். இவை மாறிமாறி ஆண்ட கட்சிகளுடன் கூட்டமைத்துக் கொண்டு, பிழைக்கும் ஒட்டுண்ணிக் கட்சிகளாகும்.  
 
இதில் கணிசமான கட்சிகள் இனவாதம் - மதவாதம் சார்ந்த, பிராந்திய கட்சிகள். இவைகூட ஆளும் வர்க்கத்தையும், நவகாலனிய உலக மயமாதலையும் சார்ந்தியங்கும் கட்சிகள்தான். இன்றைய ஆளும் கட்சிகளுடன் கூட்டமைத்துக் கொண்டு பிழைக்கும் கட்சிகள். இதைவிட இன அழிப்பைச் சார்ந்து உருவான அரச கூலிக் குழுக்களும், தேர்தல் கட்சியாகி இன்றுள்ளது.  
 
மக்களைச் சார்ந்தோ - தேசியத்தைச் சார்ந்தோ, எந்தத் தேர்தல் கட்சியும் இங்கு இயங்கவில்லை. ஆனால் தேர்தலை மையமாக வைத்து, மக்களைப் பிளந்து வாழும் கட்சிகள் தான் இவை.