Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்று இலங்கையில் என்ன தேவை?

 

இலங்கையில் பிரித்தானியர்களின் காலத்திற்கு பின்னர் அல்லது அநகாரிக தர்மபாலாவில் தொடங்கி இன்றைய காலத்தின் தலைவர்களில் அனேகமானவர்கள் இதுவரையிலும் சிறுபான்மையினர்களை இரண்டாம் தர பிரஜைகளாகவே நினைத்தும், நடாத்தியும் வருகிறார்கள். இதில் சிங்கள இடதுசாரித் தலைவர்கள் சிலரை சேர்க்க முடியாது. வலதுசாரிகளில் சிலர் இரக்கம் பார்த்தார்கள். இனப்பிரச்சனையில் மனிதாபிமானமாக நடக்கத் தலைப்பட்டார்கள்.

இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால், தனக்கு சமனாக சகமனிதராக எண்ணும் எண்ணம் வேறு. இரக்கம், மனிதாபிமான கண்ணோட்டத்துடன் பார்ப்பது என்பது வேறு. ஆண் - பெண் சமத்துவம் என்னும் விடயத்திலும் இதே மனப்போக்குடன் தான் அணுக வேண்டும். மானிட சமத்துவம் பாற்பட்ட எல்லா வேறுபாடுகளிலும் இப்படிதான் பார்க்க முடியும்.

இதே போக்குக்கு சமாந்தரமாக, தமிழ்த்தேசியமும் அதன் தலைமைகளும் ஒடுக்கப்படும் மக்கள் சார்ந்த அனைத்து கூறுகளையும் நிராகரித்தார்கள். எப்படி சிங்களத்தலைவர்கள் "இந்திய விரிவாதிக்கம்" அல்லது "இந்திய மேலாதிக்கம்" என்ற துருப்புச்சீட்டினை சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மையினர் மேல் வெறுப்பேற்ற பிரயோகித்தார்களோ, இதற்கு எண்ணை ஊற்றும் வகையில் தமிழ்த்தலைமை இந்தியாவையும், தமிழ் நாட்டையும் வைத்து சிங்கள மக்களை மிரட்டும் தொழிலை நடாத்தியது. நடாத்துகின்றது. இந்தப் போக்கு என்பது சிங்கள இனவாதத்திற்கு மேலும் வசதியாக அமைந்தது.

இங்கே குறிப்பிட்ட ஆய்வுகளை எத்தனையோ பேர் எந்தனையோ கோணத்தில் ஆராய்ந்து எழுதிவிட்டார்கள். ஆனால் 2009 முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின்னர் பாதிக்கப்பட்ட மக்களை முதன்மைப்படுத்தாது, எவராவது அரசியல் செயற்பாட்டை முன்னிலைப்படுத்துவாராகவிருந்தால், அது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது அவசியமானது தான். ஆனால் நிவாரணமும், மனிதாபிமான உதவிகளும் மடடும்தான் தேவை,  இதை விட வேறொன்றும் இப்போது தேவையில்லை என்று கூறுவது பிழையான உள்நோக்கத்தை கொண்டதாகும் அல்லது இலங்கை சிங்கள பேரினவாத, பௌத்த மதவாத அரசிற்கு துணைபோவதாகும்.

இதற்கு இணையான இன்னுமொரு போக்கானது, இவ்வளவு பெருந்தொகை மக்களையும் போராளிகளையும் என்ன நோக்கத்திற்காக காவு கொடுத்தோம் என்பதனைக் கணக்கிலெடுக்காமல், பிரயோசனம் அற்ற பிரிவினையையும், தமிழ் குறுந்தேசியவாதத்தையும் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் எந்தவித பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை. இந்த பொதுப்போக்ககளுக்கு அப்பால் நுணுக்கமான முறையிலும் நம்மிடையே பலர் அர்த்தமற்ற விவாதங்களில் தம்பட்டமடிப்பதை காணமுடிகின்றது.

சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது அவசியமானது. ஆனால் இது ஒன்றும் வெறும் சொற்பதங்களில் தங்கியில்லை. தமிஈழம், பிரிவினை, சுயநிர்ணயம், மாகாணசபை, மாவட்டசபை, பிரதேச சுயாட்சி, 13வது, அதுக்கும் மேல. போன்றவற்றிலல்ல இனப்பிரச்சனைக்கான தீர்வின் அர்த்தம் தங்கியிருப்பது. இனப்பிரச்சனை தீர்வுக்கான அதிகாரப்பரவலாக்கம், இனப்பிரச்சனைக்கான சரியான அம்சங்களை உள்ளடக்கிய அவசியமான வேலைத்திட்டத்தை எந்த ஸ்தாபனம் கொண்டிருக்கிறதோ! அதற்காக நேர்மையான முறையில் போராட்ட கூறுகளை கொண்டிருக்கிறதோ! அது எவ்வகைபட்டது என்பதே அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட வேண்டியது அவசியம்.

இதனை இலங்கை அரசினை பாராளுமன்ற யாப்பின் மூலம் மாற்ற எவாராயினும் எத்தனிப்பார்களாயின், அதை முற்போக்கு சக்திகள், அது எவ்வகைபட்டது என்பதனை அடிப்படையாகக் கொண்டு ஆராயப்பட வேண்டியது அவசியம். இவை அனைத்தும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மக்கள் பலத்தைக்கொண்டு நிறுவுதல் வேண்டும். இதற்கு இரும்பை விடவும் உறுதியான மனோபலமும் ஆன்மார்த்தமான உணவும் அவசியம்.

என்னைப் பொறுத்தவரையிலும், நானறிந்தவரையிலும் முன்னிலை சோசலிஸக் கட்சியானது ஜே. வி. பி யினரின் இனவாதத்திற்க எதிராக உள்ளக போரட்டததை பல ஆண்டுகள் நடாத்தியது மட்டுமல்ல பிரிந்து சென்று தனிக்கட்சியமைத்தமையும் ஒரு கவனிக்கத்தக்க முற்போக்கான மாற்றம் என்றே எண்ண முடியும். இவர்கள் தமிழ் பிரதேசங்களில் நேரடியாக சென்று பல கஸ்டங்களுக்க மத்தியிலும் வேலை செய்வது வரவேற்கத்தக்கது.

இவர்களின் நேர்மையை நடைமுறை யதார்த்தத்தில் கண்டறிதலை விடுத்து, சொற்பதங்களில் அதாவது சில வார்த்தை பிரயோகம்களினூடாக தமது அறிவியலை கக்குவதற்கு அல்லது தாம் தான் மாக்ஸிசத்தின் பிதாமகன் என்று பிரதாபிப்பதற்காக பிரயோசனமான வளர்ச்சிகளை குழப்புவதை யாராக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.

இன்று இலங்கையில் என்ன அவசியம். உயிரினம், விலங்கினம், மனித பரிணாமம், இவைகள் போன்றதே இலங்கையின் சமூக அரசியல் பரிணாமமும். இந்த பரிணாமத்தை பின்நோக்கியும் நகர்த்த முடியும். இதனை வெற்றிகரமாக பின்நோக்கி நகர்த்திய பெருமை இலங்கையில் சிங்கள, தமிழ் இனவாதிகளுக்கே சாரும். இப்போது சிலர் முயற்சிக்கிறார்கள்.

இன்றைய தற்போதைய அவசியமான அரசியல் பரிணாமத்தை எமது புலமைத்துவத்தை நிருபிப்பதற்காகவும், நம்மிடையே நடக்கும் ஈகோவுக்காகவும் இலங்கையில் அப்பாவி மக்களின் அரசியலை பணயம் வைக்க வேண்டாம் என்பதும் அதற்காக பக்குவமாக செயற்படுவது என்பதும் எம் எல்லோர் முன்னால் உள்ள  உடனடிக் கடமையாகும்.