Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

எமது தேசத்திற்கான கோட்பாட்டை சொந்தமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

உழைக்கும் மக்கள் இன ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் எப்போதுமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இதில் வர்க்க விடுதலை பற்றி விவாதிப்பவர்கள் போலவே, வெவ்வேறு வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் வெவ்வேறு பாதைகளை முன்வைக்கின்றனர். இவ்வாறான வெவ்வேறு திசை கொண்டவர்களிடத்தில் இருந்து ஒடுக்கப்பட்டும், சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்காகப் போராடக் கூடிய சித்தாந்தத்தை தேடியே இவ்வாக்கம் செல்கின்றது.

தற்போதுள்ள பல “முற்போக்குவாதிகளும்”, “மார்க்சியவாதிகளும்” சமூகத்தில் சரியான கருத்தை தேடுபவர்களுக்கு மார்க்சீயத்தை கற்றுக் கொடுக்க முற்படுவதை விடுத்து, மார்க்சீயத்தில் இருந்து அவர்களை அன்னியப்படுத்தும் வகையில் எழுதுவதைக் காண முடிகின்றது. மார்க்சீயத்தினை கற்றுக் கொண்ட இந்த “ஆசான்கள்” தத்துவத்திற்கும், அதன் கோட்பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் மக்களை குழப்புவதை பார்க்க கூடியதாக உள்ளது. இவர்கள் இவ் இரண்டையும் குறித்து தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புபவர்களாகத் இருக்கின்றனர். தாமே கோட்பாட்டாளர்கள் என்ற தற்பெருமையில் நடைமுறையை மறுக்கின்றவர்களாக இவர்கள் இருக்கின்றனர்.

மனித வரலாற்றை மாற்றுவது எவ்வாறு என்பதை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஊடாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை படைத்து கம்யூனிச சமுகத்தை உருவாக்குவது இறுதி இலக்கு என மார்க்சும், ஏங்கெல்சும் பிரகடனப்படுத்தினர்.

பொருளாதார அமைப்பு என்னும் போது, அடிக்கட்டுமானத்தில் இருந்து மேற்கட்டுமானம் என்பதாகும் உற்பத்தி சக்திகள்- உற்பத்தி உறவு மனிதனுடைய உழைப்பு, பொருள் உற்பத்தி செய்யப்படும், உபயோகிக்கப்படும் உபகரணம் என்பதாகும். இவற்றைக் கொண்டே பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. மனிதருடைய உழைப்புச் தேர்ச்சி மாறுபடவும், அதற்கு அமைய பொருள் உற்பத்தியும் அதன் உபகரணங்களும் மாறுபடுகின்றது. இதனால் புதிய பொருளாதார அமைப்பு உருவாக்கப்படுகின்றது. இதிலிருந்து உருவாக்கப்படும் நிறுவனங்களான மேற்கட்டுமானங்களான குடும்பம், அரசு, சட்டம், நீதிமன்றம், இராணுவம், மதக் கோட்பாடுகள் என்பன மனித வாழ்வைக் கட்டுப்படுத்தி வைப்பதுடன், பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் மறு உற்பத்தி செய்யப்படுகின்றது.

இக்கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வருவதன் மூலமே முழுமையான மாற்றத்தைக் கொண்டு வரமுடியும். மாற்றம் நிகழ்ந்தாலும் தோற்ற வர்க்கம் மறுபடியும் புத்தெழுச்சி பெறும். இதனை முறியடிக்கும் பொருட்டு சோசலிச சமூகத்திலும் வர்க்கப் போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்படல் வேண்டும்.

பாட்டாளி வர்க்கச் சமூகத்தினை அடைவதற்கு உற்பத்தி சாதனத்தை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றுவதுடன், புதிய பொருளாதார அமைப்பை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஆனால் மனிதர் பல வர்க்கக் கூறுகளாகவும், இனம், சாதி, மதம், பிரதேசம், நிறம், ….. என்று பிரிந்துள்ளனர். இவர்களை இணைத்து, உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றி, மாற்றத்தை கொண்டு வருகின்ற போதே பிரச்சனைகளை முழுமையாக தீர்த்துக் கொள்ள முடியும். இறுதி இலக்கான உழைக்கும் மக்களுக்கான அதிகாரத்தை அடையும் பொருட்டான இடைப்பட்ட காலத்தில் தனி மனித உரிமைகள், பெண் உரிமைகள், இனஉரிமை, தொழிற்சங்க போராட்டம் அல்லது வேறு கோரிக்கைக்கான போராட்டங்கள் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது.

இவற்றை மையமாக கொண்ட போராட்டங்களை முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பதற்காக போராடாது விடுவதோ அல்லது ஒதுங்குதோ தவறானதாகும். தொழிலாள வர்க்கம் இவற்றுடன் திருப்தியடையாது தொடர்ச்சியாக போராடவும், அடுத்த கட்டத்திற்கு வளர்த்து எடுக்கவும் பாட்டாளி வர்க்க அமைப்புகள் பாடுபட வேண்டும். இது ஒரு கட்சியின் கடமையாகும். ஓர் கட்சியானது அதனை தொடர்ச்சியாக வலியுறுத்தும்.

30 வருடங்களுக்கு முன்னர் இடதுசாரிகள் வரலாற்று தவறை செய்தார்கள். இன்றும் இவ்வாறான போக்குகள் இருப்பதாக கூறப்படுவதில் எவ்விதமான இயங்கியல் ரீதியான உண்மை இருப்பதாக தெரியவில்லை. 1981களில் இடம்பெற்ற தொழிற்சங்கப் போராட்டம் அனைத்து எதிர்க்கட்சிகளாலும் நடாத்தப்பட்ட பலமான ஒரு போராட்டம். வர்க்கங்கள் முதிர்ச்சி அற்ற நிலையில் 1983 கலவரம் தீடீர் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. வரலாற்று ரீதியாக பரீணாம வளர்ச்சியடையாத வர்க்கக் கூறுகளை உடைய சமூகத்தில் ஈழப்போராட்டம் தோற்றுவிக்கப்பட்டது. இத்தீடீர் வீக்கத்திற்கு அன்னியச் சக்திகளின் தலையீடே காரணமாகியது. வரலாற்றில் இடதுசாரிகளை குற்றம் சுமத்துவதில் எவ்வித தர்க்க நியாயமும் இல்லை. (மேலதிக விபரம் தேவை என்றால் தோழர் சண்முகதாசனின் "ஒரு கம்யூனிசப் போராளியின் வரலாற்று"ப் புத்தகத்தை வாசியுங்கள்)

இன்றும் தமிழ் இனவாதம் பலமாக புலத்திலும் நாட்டிலும் இருக்கின்றது. இதே போல சிங்கள இனவாதமும் பலமாக இருக்கின்றது. இந்த இடர் மிக்க காலத்தில் மக்கள் எவ்வாறு சொந்தத் தலைமையினை உருவாக்கி போராட்டத்தினை தொடர்வது என்பதே பிரச்சனை. ஒரு பக்கம் நிறுவனமயப்படுத்த இனவாதமும், பாசீச ஒடுக்குமுறையும் சூழ்ந்த இந்த நிலையில், முற்போக்கு சக்திகளின் செயற்பாடு சிக்கல் நிறைந்ததாகும். சிங்கள, தமிழ் மற்றைய தேசிய இனங்களிடையே உள்ள கருத்து முதல்வாதக் கருத்துக்களை உடைப்பது முக்கியமான விடயமாக இருக்கின்றது. அதிதீவிர கோசங்கள் கோரிக்கைகள் கூட சிதைக்கப்படும் காலமாகும்.

தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகி திறந்தவெளிச் சிறையில் வாழ்கின்றார்கள். தமிழ் மக்களிடையே அரசியல் மலட்டுத் தன்மையை போக்குவதே பிரதான வேலை முறையாக இருக்கின்றது. இந்த நடைமுறை ரீதியாக பிரச்சனையினை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூக இயக்கம் என்பது இருக்க வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு பல்வேறு சக்திகளால் முன்வைக்கப்படும் செயற்பாடுகள். அரசுசார்ந்த, தன்னார்வக் குழுசார்ந்த பல முயற்சிகள் பிற்போக்குத் தன்மையானவை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. புரட்சிகர சக்திகளை உருவாக்கிக் கொள்வதற்கு சமூகத்தில் முதலில் இயங்கு நிலையைத் தோற்றிவிக்க வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டே வெகுஜன அமைப்புக்களை ஊக்குவிக்கும் முறையிலான வேலை முறை அவசியமாகும்.

இங்கு அரசியல் தளத்தில் மலட்டுத் தன்மையை போக்கும் முறையில், அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தந்திரோபாய முடிவுகளையும் எடுக்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களிடம் உள்ள அரசியல் இடைவெளியை இல்லாமல் செய்வது முக்கியமானதாகும். தமிழ்மக்கள், அவர்கள் கொண்டுள்ள இனங்கள் மீதான சந்தேசப் பார்வை, மதவாதம், இனவாதம், சாதிவாதம், பிரதேசவாதம் ஆகியவற்றை இல்லாது தொழிப்பதும் முக்கியமானதாகும்.

தமிழர்களிடையே தளத்தில் பெரும் அரசியல் வெற்றிடத்தினை கொண்ட போதும் தெற்கில் இருந்து ஒரு நம்பிக்கை ஒளி வீசியுள்ளது. வரலாற்றில் தெற்கில் இருந்து வந்த சக்திகளில் பிரதானமாக சரத் முத்தேகட்டுகமவிற்கு பின்னர் இனவாதத்தினை எதிர்த்த வாசு தேவநாயணக்காராவாகும். (இவர் தனது கொள்கையை விட்டு திசைமாறியுள்ளார். இவர் இப்போ இருக்குமிடமே அவருடைய உண்மையான இடம் ஏனெனில் இவர் நிலபிரபு வர்க்கத்தை சேர்ந்தவரே.) மார்க்சீயம் பேசிக் கொண்டு ஜே.வி.பி தனது வகுப்புவாத அரசியலை பிரதானமாக கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதே போல கம்யூனிசம் பேசிக் கொண்டு எல்.எஸ்.எஸ்.பி, கம்யூனிஸ்ட் கட்சியும் இன்றைய ஆட்சியில் இருக்கின்றனர். இவர்கள் தேர்தலுக்காக நிறம் மாறுவார்கள்.

முன்னிலை சோசலிக் கட்சியானது, முற்போக்கு கருத்துக்களை முன்வைத்து ஐக்கியத்திற்காக போராட அழைக்கின்றது. ஒரு பெரும்பான்மை இனத்திடம் இருந்து வரும் ஐக்கியத்திற்கான கோரிக்கையை சிறுபான்மை இனத்தின் முற்போக்குச் சக்திகள் அந்த அழைப்பினை ஏற்று நடைமுறையில் செயற்பட வேண்டும். நடைமுறையே சரியான கோட்பாடுகளை வந்தடைய உதவுகின்றது.

முன்னிலை சோசலிசக் கட்சியானது சுயநிர்ணயத்தை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று பரவலாக எழுகின்றது. இந்த முன்னணியானது 30 வருட ஆயுதப் போராட்டத்தின் பின்னர் உருவாகிய ஒரு குழந்தை. இது இனவாதம் புரையோடிய சமூகத்தில் இருந்து வந்திருக்கின்றது. அவர்களை சமூகத்தில் இருந்து அன்னியபப்படுத்த பலசக்திகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இதன் தொடர்ச்சியாகவே முன்னிலை சோசலிக் கட்சியினை, புலிகளுடன் இணைத்து பிரச்சாரம் செய்யும் கபட சிந்தனை கொண்ட சிங்கள இனவாதிகளும், அவர்களை காட்டிக் கொடுக்கும் பழைய கூட்டாளிகளும் இருக்கின்றார்கள். இருந்த போதும் பல இடருக்குள் வளர்ந்து வரும் சக்திகயான இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். ஈழ, தமிழ் நாட்டு தமிழர்களின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் சிங்கள மக்கள் தாம் ஒரு சிறுபான்மையினர் என்ற அச்சம் உருவாக்கப்பட்டு வந்துள்ளது. தமிழர்கள் இந்த விடயத்தை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். இனங்களின் மேல் கொண்ட சந்தேகம், சிறுபான்மை என்ற சிங்கள மக்களின் மனநிலை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம். இவ்வாறான ஐதீகங்கள் இனங்களின் ஒற்றுமையை சிதறடிக்கும். இனவாத்தினுள் சிக்குண்டுள்ள சிங்களப் பாட்டாளி வர்க்கத்தை இனவாதச் சகதியில் இருந்து மீட்பதே இன்றைய முன்நிபந்தனையாகும்.

ஏனெனில் இனவாதப் புழு நெழிகின்ற சமூகக் கட்டுமாணத்தில், வெஜசன வேலை செய்வது இலகுவான காரியமல்ல. முற்போக்கு சக்திகள், பிற்போக்கு கருத்துக்களையும் கொண்ட சமூகத்தில் முற்போற்கான கருத்தை விதைப்பது அவ்வளவு இலகுவானதல்ல. இதனை நடைமுறை ரீதியாக வேலை செய்யும் போது உணர்ந்து கொள்ள முடியும். கருத்துக்கள் எவ்வளவு சிறந்தாக இருப்பதில் பயனில்லை. ஆனால் அது நடைமுறையில் மக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகளை கண்டடைய வேண்டும்.

ஒரு முன்னணியின் செயற்பாடு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து அன்னியப்படுவது தந்திரோபாயமாக இருக்குமா? இனவாதம் என்பது நிறுவனமயப்பட்ட நிலையில் இருக்கின்றது. இனவாதத்திற்கு எதிரான சிறிய துரும்பு கூட அவசியமானதாகும். கருத்துக்களை விதைப்பது மாத்திரம் அல்ல அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும். எவ்வாறு மக்கள் மத்தியல் கொண்டு செல்வது? எவ்வாறு அவர்களை அரசியல் மயப்படுத்துவது? இந்த கேள்விகளையும் கேள்வி கேட்டும் சிந்தனையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாற்றங்களை உடனடியாகவோ, புரட்சினை சர்வ உலகம் தழுவியதாகவோ நடத்தி விடமுடியாது. சாத்தியமான வழிகளில் தன்னியல்பான போராட்ட வடிவங்களை புரட்சிகரமாக நகர்த்துவதே புரட்சியை நேசிப்பவர்களின் கடமையாகும்.

புரட்சியை நடைமுறைப்படுத்த முனைபவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் நடைமுறையற்று விமர்சித்துக் கொண்டிருப்பர். தமிழர் முற்போக்குப் பிரிவு புரட்சிகர கோசத்தை வரவேற்க வேண்டும். முதன்மை முரண்பாடு இனப்பிரச்சனையே. இதனை தமிழர் தரப்பின் முன்னணி (ஜெகுஜன அமைப்பு) மக்களிடம் செல்கின்ற போது தான் சார்ந்த தந்திரோபாயக் கோட்பாட்டை முன்வைக்கும், வைக்கப்பட வேண்டும்.

முன்னணியில் செயற்படும் போது முன்வைக்கப்படும் வேலைமுறைகள் சிங்கள மக்களை மாற்றம் கொள்ள வைக்கும். முன்னணியின் வெகுஜன வேலைகள் என்பது கட்சியின் கொள்கையில் இருந்து நடைமுறை ரீதியாக மாறுபட்டிருக்கும். இது தேவைகள் நிமித்தம் உருவாக்கப்படும் முன்னணியாகும். கட்சி தனது கொள்கையை கறாராக முன்வைக்கும்.

சுயநிர்ணய உரிமை பற்றிய கருத்துக்களை முன்வைப்பதற்கு முன்னர் எத்தனையோ விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. பாட்டாளி வர்க்கச் சமூகத்தை உருவாக்கிக் கொள்வதற்கான பாதையில் வரும் இடர்களை உடைத்து முன்னேறுவதற்கே முதலாளித்துவ ஜனநாயகக் கோரிக்கைகள்ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இன்று இருக்கின்ற சமூக அமைப்பு, சுரண்டும் செயற்பாட்டை தொடர்வதற்காக சுதந்திரமான மனிதர்களை (பழைய பிணைப்புக்களில் இருந்து) உருவாக்கிக் கொள்கின்றது. இங்கு தனிமனித உரிமை என்றும், (நிறுவனமயப்பட்ட) சட்ட ரீதியான உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள் என்றும் மக்களை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்படுகின்றது.

மாற்றங்கள் உடனடியாகவோ, புரட்சியினை சர்வ உலகம் தழுவியதாகவோ நடத்தி விட முடியாது. சாத்தியமான வழிகளில் தன்னியல்பான போராட்டவடிவங்களை புரட்சிரமாக நகர்த்துவதே புரட்சியை நேசிப்பவர்களின் கடமையாகும்.

-16/10/2012