Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் முடிவல்ல!!!


முள்ளிவாய்க்காலில் ஆயிரமாயிரம் மக்களும், போராளிகளும் கொல்லப்பட்டனர். அந்த வேளையில் உலக நாடுகளின் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கத்தினர்களும் தமிழர்கள் பக்கமாக தாம் இருப்பதாக பாங்கு செய்தனர். மக்களும் தமக்கு ஆதரவாக இந்த மேற்குலக மற்றும் இந்திய அரசியல்வாதிகள் எல்லோரும் குரல் கொடுக்கின்றார்கள், யுத்த நிறுத்தம் வரும், ஒரு மாற்றம் ஏற்படும் என்று நம்பியிருந்தனர். ஆனால் கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவிக்க விட்டு விட்டு, வெறும் அறிக்கைகளையும் பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளையும் கொடுத்து, தாம் தமிழ் மக்கள் பக்கம் நிற்பதாக பாசாங்கு பண்ணிய படி, இந்த அரசியல்வாதிகள் எல்லோரும் ஒதுங்கிக் கொண்டனர்.

அரசியல் நாடகம்:


“பல்லாயிரக்கணக்கான மக்கள் இருந்தபோதும் மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை சுயுறு அமைப்பு சரியாக இனங் காட்டியிருந்தபோதும் முள்ளிவாய்க்காலுக்குள் போரற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் குழுமியிருந்த பகுதியில் வலுவான தாக்குதல்களைத் தொடுக்குமாறு ஒரு குரூரமான திட்டத்தை இந்தியாவின் எம். கே. நாராயணனும் சிவசங்கர மேனனும் இலங்கைக்கு அறிவுறுத்தினர். இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புகளைக் குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையை அழிக்க வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம். கே. நாராயணனும், சிவசங்கர மேனனும் செயற்ப்பட்டனர். இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய படுகொலை.“ இந்த திட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவின் போர்க்கப்பலும், தளத்தில் இருந்த அன்னிய இராணுவமும் ஆகும்.


இந்தச் சதியினை மறைத்துக் கொண்டு இன்றைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு "இந்தியாவும், அமெரிக்காவும் தான் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்" என்று  கூற வேண்டும் என கேட்கும் அரசியல் வங்குரோத்து தனத்தையும், தொடர்ந்தும் மக்களை நம்பாது அன்னிய சக்திகளின் தயவையும் நாடியே இந்த தமது அரசியல் பிழைப்பை நடத்தும் திட்டத்துடன் கூட்டமைப்பு இருக்கின்றது.


இதேவேளை கே.பியின் விடுதலையும், புலம்பெயர் ஒரு பிரிவினரை பகடைக்காயாக பாவித்து தமிழ் மக்களின் உரிமையை மலினப்படுத்ததும் முயற்சியை மேற்கொள்கின்றன. இதற்கு உடந்தையாக புலம்பெயர் புலிகளின் ஒரு பகுதி தமது சொந்த நலனை, மக்களின் நலனாக காட்டிக் கொண்டு நடிக்கின்றது. இவர்களே புலிகளின் தலைமையை புலத்தில் இருந்து காட்டிக் கொடுத்தவர்கள். இதில் புதிய புலிகளின் தலைவராக அறிவித்துக் கொண்டவர்களும் அடங்கும். இவர்கள் நல்ல மொழியறிவும், பணமும் படைத்தவர்கள். தொடர்ச்சியாக எழுத்துலகில் இருந்துவர்கள் இதற்கு பின்புலமாக இருக்கின்றார்கள். இந்த அதிகார வர்க்கம் பிரபாவின் நாமத்தை வைத்துக் கொண்டே புலத்தில் தமது இருப்பை காப்பாற்றுகின்றனர்.


இன்னொரு பிரிவு இந்தியாவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாயக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றது. இந்தப் பிரிவு சம்பந்தனை பலப்படுத்துவதன் மூலமும் தமது இலக்கை அடைய முயல்கின்றனர். மேற்கு எஜமானர்களின் தேவையானது கனவான்களை உருவாக்கிக் கொள்ளவும். கனவான் அரசியலில் இருக்கும் பேரும் புகழுக்கு ஆசைப்பட்டு ஒரு இனத்தின் உரிமையை அடக்க துணைபோகும் நிலையை பிரபாகரனின் பெயரை வைத்தே செய்யப்படுகின்றது.


ஆனை செத்தாலும் ஆயிரம் பொண் இருந்தாலும் ஆயிரம் பொண் என்பது போல காட்டிக் கொடுத்து கொல்லப்பட்ட பிரபாகரனும் போராளிகளினதும் நாமத்தை வைத்தே அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர். அரசியல் விலைபோவார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு இன்று புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஆகியோர் ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.


வெகுஜனப் போராட்டத்தை மறுப்பது:

"அன்னியச் சக்திகளான இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தான் கூறவேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும் என்று". இதனை கூறியது வேறுயாருமல்ல  மாவை சேனாதிராஜா. இவர்கள் முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டு இருக்கையில் ஒரு ஆக்கபூர்வமான போராட்டங்களை நடாத்தாதவர்கள், ஒரு அடையாளத்திற்கு ஒரு முறை கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்ததுடன் விட்டு விட்டார்கள். நான்கு வருடங்கள் ஆகின்றன மக்களை அணிதிரட்டி மூர்க்கமான வெகுஜன போராட்டங்களை நடத்த தயாரில்லாமல் தான் இருக்கின்றார்கள்.


போராட வேண்டும் என்று கூறுகின்ற மனோ கணேசன் போன்றவர்களை அலட்சியம் செய்கின்றனர். அவரின் முகப்புத்தகத்தில் எழுதி வைத்த கூற்றின் பார்ப்போம். “ஒன்று, உள்ளூர் ஜனநாயக போராட்டம்; இரண்டு, தென்னிலங்கை சிங்கள ஜனநாயக-முற்போக்கு சக்திகளுடனான கூட்டிணைவு; மூன்று, சர்வதேச சமூகத்தை துணைக்கு அழைக்கும் செயற்பாடு. இந்த மூன்று சமாந்தர வழி தட கருத்தை நான் நீண்ட நாட்களுக்கு முன்னமேயே சொன்னேன். என்ன செய்வது? எம்மை, “குழந்தை பிள்ளைகள்” என நினைக்கும் தலைவர்களுக்கு நாம் சொல்வது கேட்காது. “ அரைநில பிரபுத்துவச் சிந்தனை கொண்ட தமிழ் தேசிய அமைப்பின் சிந்தனை என்பது மேற்கு ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பதாக இருக்கின்றது. இதனால் அன்னியச் சக்திகளை நம்பிக் கொண்டும், தேர்தலின் மூலம் பெறும் பதவி, பதவியினால் பெறப்படும் சமூக அந்தஸ்து, அந்த அந்தஸ்தினால் பெறப்படும் கையூட்டுக்கள், தமது நெருக்கியவர்களுக்கான பதவிகள், நட்புசக்திகளின் முதலீடுகள் இவைகளே போதும் என்பது தான் அரசியல் தலைமைகளின் நிலைப்பாடு. இவ்வாறான சிந்தனை கொண்ட சம்பந்தரையே புலம்பெயர் புலிகள் பலப்படுத்துகின்றார்கள். போராட்டங்களை செய்து அரசிற்கு தலையிடி கொடுக்காதே என்பது புலம்பெயர் அரசியல் வியூகங்களில் ஒன்றாக இருக்கின்றது.


தமிழர் பகுதியில் இருந்து வரும் கோரிக்கைகளை மலினப்படுத்தும் வேலையை அரசு கட்சிதமாகவே செய்கின்றது.


13வது திருத்தச் சட்டத்தை இல்லாதாக்க போவதாக அரசியல் கோமாளிகளான சிங்கள இனவாதிகளும், மகிந்த சகோதரர்களும் பத்திரிகை அறிக்கை விடுகின்றனர். இவை மாத்திரம் அல்ல இனவாதத்தினை ஊட்டும் கருத்துக்களை சிங்கள தீவிர இனவாதிகளைக் கொண்டு மக்களிடம் விதைக்கின்றது.


திவிநெகும என்ற சட்டம், மாகாணசபைக்கு உள்ள உரிமையைக் கூட இல்லாதாக்கின்றது. திவிநெகுமவிற்கு ஆதரவாக சமுத்தி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை அரச ஆதரவு ஏவல்களை வைத்து ஒழுங்குபடுத்தினர். இதனை எதிர்த்து  “வாழ்வின் எழுச்சி என்ற திவிநேகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட்சித்  தலைவர்கள் உயர் நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.


வட மாகாணத்தில் வாழும் மக்களின் ஆணையையும், உடன்பாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வட மாகாண ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது என்றும், மாகாணசபைகளின் நிதி வருவாய் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பொறுப்பெடுக்கும் அதிகாரத்தை இந்த சட்டம், மத்திய அரசாங்கத்தின் தனி ஒரு அமைச்சருக்கு வழங்குகிறது என்றும் மனுதாரர்கள் தமது மனுக்களில் தெரிவித்துள்ளனர்.” அரசானது இனவாதத்தை விதைக்கின்றது, இனப்பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையை கேலிக்குள்ளாக்கின்றது. தமிழர் பிரதேசங்களில் எதிர்ப்பலை உருவாகாது தடுப்பதற்கு புலம்பெயர் புலிகளின் அதிகார வர்க்கத்தை தனது கைக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஏற்கனவே ஈடுபட்டு ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.


இனவாதத்தினை ஊட்டிக் கொண்டு மறுமுனையில் அரசாங்கமானது தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி கலந்துரையாடவும், அது தொடர்பில் முடிவுகள் எடுக்கவும் உகந்த இடம் நாடாளுமன்றமே என்பது அரசின் நிலைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்வு எதுவானாலும் அதனை அரசாங்கம் ஏற்று செயல்படும் என்பதை ஜனாதிபதி மிகவும் தெளிவாகக் கூறியுள்ளார் என இதன்போது தெரிவித்த அமைச்சர், அடிக்கடி இந்தியா சென்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு அவர்கள் தான் காரணம் என்றார்.

இடதுசாரிகளின் கடமை:


மக்களுக்கான கோரிக்கையை முன்வைத்த போராட்டங்களை இடதுசாரிகள் இணைந்து போராட்டம் நடத்தவதன் மூலமே ஒரு காத்திரமாக தாக்கத்தை கொடுக்க முடியும். இன்றும் பாசீசம் தொடர்ச்சியாக தனது வேரை ஆழ ஊன்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கொடுத்துவிட முடியாது. இடதுசாரிகள் நிலவரத்தை ஆய்வு செய்து அதற்கு தகுத்தாற்போன்ற தான அரசியல் செயல் வடிவங்களை கொடுக்க வேண்டும். ஏனெனில் இனப்பிரச்சனையில் ஆரம்பகாலத்தில் விட்ட தவறு போல இந்தக்க காலத்திலும் விடக் கூடாது.


பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்பது பல தளங்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். எமக்கான கோரிக்கைகள் உடனடித் தேவை எனவும் நீண்டகாலத் தேவை என திட்டத்தில் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் நாம் எமது மக்களுக்காக தேவையை எந்தவிதமான பாசீச சக்திகளை ஆதரிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மையானதாகும். பாசீச எதிர்ப்பு என்ற அடித்தளத்தில் இருந்து உழைக்கும் மக்களுக்கான தேவை என்பதை நோக்கி விரிவடைந்து செல்ல வேண்டும். எவ்வாறு எதிர்காலத்தை வழிநடத்தப் போகின்றோம் என்பதைப் பொறுத்தே இலங்கையில் உழைக்கும் மக்களுக்கான விடிவைக் கொடுக்கும் போராட்டத்தை மாத்திரம் அல்ல. அனைத்து இனமக்களின் உரிமையை பெற்றக் கொள்ளக் கூடிய ஒரு போராட்ட கட்டமைப்பை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியும்.

அதாவது புலிகளுடனோ அல்லது புலியெதிர்ப்பு அணியினரின் துரோத்தனத்தினால் தமிழ் மக்களுக்காக போராட்டம் முற்றுப்புள்ளி பெற்றதாக இருகக்கூடாது. சிறிலங்கா பாசீச அரசோ அல்லது ஏகாதிப்பத்தியங்களோ எமது மக்களுக்கான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. அரசியல் ரீதியாக வளர்ச்சியடையாது மலடாகிப் போன ஒரு சமூகத்தை போராட்ட ரீதியாக தொடர்ந்தும் வளர்த்தெடுப்பது என்பது பரந்து பட்ட ஒரு அரசியல் செயற்பாட்டினால் தான் சாத்தியமாகும்.