Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பல்கலைக்கழக ஆசிரியர் போராட்டம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை


கடந்த தொண்ணூற்றொன்பது நாட்களாக ஆறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டம் கடந்த வாரம் முடிவுக்கு வந்துள்ளது. அரசாங்கம் இதில் வெற்றிபெற்றுத் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டது என்றே சொல்லவேண்டும். எந்தவொரு கோரிக்கைக்கும் முழுமையான உத்தரவாதத்தை அளிக்காமல் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவந்துள்ளமை நிச்சயமாக அரசாங்கத்திற்கு வெற்றியே. இப்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனச் சார்பில் ஆளாளுக்குக் கதை சொல்கிறார்கள்.

'வேலைநிறுத்தம் நிரந்தரமாகக் கைவிடப்படவில்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போராட்டத்தின் தற்காலிக நிறுத்தமே இது. நாம் மேலும் உறுதியுடன் போராட்டத்தை தொடக்குவோம். எந்தவொரு விடயத்திற்கும் அரசாங்கம் எமக்கு ஒழுங்காகப் பதிலளிக்கவில்லை. குறைந்தபட்சம் அரசாங்கம் தான் ஒப்புக்கொண்டதைச் செய்யுமென எதிர்பார்;க்கின்றோம். நாம் கவனமாக அவதானித்துக் கொண்டுள்ளோம். மாணவர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டே நாம் வேலைநிறுத்தத்தைக் கைவிடுகிறோம்" எனப் பல்கலைக்கழங்கள் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனப் பேச்சாளர் கலாநிதி மஹிம் மென்டிஸ் கூறினார்.

'க.பொ.த. (உஃத) விடைத்தாள்கள் புள்ளிடவேண்டியிருப்பதாகவும் பல்கலைக்கழக பாடநெறிகளை தொடரவேண்டியிருப்பதாலும் விரிவுரையாளர்கள் 3 மாதச் சம்பளமின்றி இருப்பதாலும்  நாம் வேலைநிறுத்தத்தை கைவிட்டோம்" எனச் சம்மேளனத் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.

மொத்தத்தில் போராட்டத்தைக் கைவிட்டதற்குக் காரணம் சொல்லவேண்டும் என்பதற்காக இருவரும் காரணம் சொல்கிறார்கள். அரசுடனான பேச்சுவார்த்தையில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன? எட்டப்பட்ட உடன்பாடுகள் எவை? அவை தொடர்பாகச் சம்மேளத்தின் நிலைப்பாடு என்ன? எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் எவை? இவை யாவும் இன்னமும் பதிலை வேண்டிநிற்கும் வினாக்கள். மொத்தத்தில் இன்னொரு மக்கள் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு மாணவர்களின் ஆதரவு வீணடிக்கப்பட்டிருக்கிறது. இவை உறுதியான மக்கள் போராட்டங்களின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிப்பன. இவ்வாறான தவறுகள் மக்களிடையே போராட்டங்கள் மீது நம்பிக்கையின்மையை வளர்க்கின்றன.

திட்டமிடாத முன்னோக்கற்ற போராட்டங்கள் திசைதவறுவது இயல்பானது. அதுவே இங்கும் நடந்திருக்கிறது. மக்கள் திரளின் ஆதரவும் ஊடக ஒளியும் வெறுமனே ஒரு போராட்டத்தை வென்று தராது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டம் தொடங்கியது முதல் காலத்தைக் கடத்துவது அவர்களின் தந்திரோபாயமாகவிருந்தது. காலம் செல்லச்செல்ல மக்கள் மத்தியில் இப் போராட்டம் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவு குறைவடையும் என அரசாங்கத்திற்கு தெரியும். ஏனெனில், பொதுத்தளத்தில் இப் போராட்டத்தை முன்னிலையில் வைத்திருப்பது கடினம். காலம் செல்லச் செல்ல மக்கள் தங்களது ஏனைய முக்கிய பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகளின் வரிசையில் இப் போராட்டம் மெதுவாகப் பின்நோக்கிப் போகும். அப்போது போராட்டத்தின் வீரியம் இயல்பாகவே குறைவடையும்.

அரசாங்கம் இன்னொரு விடயத்தையும் அறிந்து வைத்திருந்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது. காலம் கடத்துவதன் மூலம் பலர் இயல்பாகவே பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாவார்கள். அதே வேளைமுடிவின்றி இழுபட்டுச் செல்லும் எப் போராட்டத்தையும், பொதுப்புத்தி மனோநிலையில், பலர் விரும்புவதில்லை. எவ்வாறோ போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதே அவர்களது விருப்பாகும். அடிப்படையில், கோட்பாட்டு ரீதியான நியாயங்களை ஏற்றுக்கொண்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிக்கவில்லை. பலருக்கு இந்தப் போராட்டம் இரண்டு கோரிக்கைகட்காக முக்கியமானது. முதலாவது சம்பள உயர்வு@ இரண்டாவது முன்னணிப் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளுக்கு அனுமதி வழங்கப்படுதல். இதையும் அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது. காலத்தை இழுத்தடிப்பதே இவர்களை வழிக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி என்பதை அரசாங்கம் அறிந்திருந்ததால் முதல் இரண்டு மாதங்களுக்கு எவ்வாறான பேச்சுவார்த்தையையும் அது மேற்கொள்ளவில்லை. குளத்தைக் கலக்கியும் மீன் பிடிக்கலாம். குளத்தை வற்றவிட்டும் மீன் பிடிக்கலாம் என்பதை அரசாங்கம் நன்கு அறியும். மீன் அகப்படும் அளவில் வகைமுறைகள் பற்றி அதற்குக் கவலையேதும் இல்லை.

சம்பள உயர்வுக்கு ஒத்துக்கொள்கிறோம் என்ற தூண்டிலை அரசாங்கம் போட்டதும் மீன் சிக்கிவிட்டது. போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நியாயங்கள் கற்பிக்கப்பட்டு மாணவர்கள் மீதான தணியாத கருணையாலும் அரசாங்கத்தின் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கையாலும் மீண்டும் வேலைக்குப் போவதாக இப்போது பல்கலைக்கழக ஆசிரியர்கள் சொல்கிறார்கள். இவர்கள் வார்த்தெடுக்கப்போகிற எதிர்காலச் சந்ததி குறித்து அஞ்ச நிறையவே இருக்கிறது. தங்கள் சம்பள உயர்வுக்காக அனைத்தையும் அடகுவைப்பவர்கள் உருவாக்கும் வித்துகள் விஷவிருட்சங்களாகத்தானே வளரமுடியும். இது மிகக் கவலைக்குரியது.

இப் போராட்டமானது பொதுத்தளத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஏகோபித்த மக்கள் ஆதரவு இருந்தது. குறிப்பாக இலவசக் கல்விமுறையைப் பேணுவதற்கான போராட்டம் என்ற வகையிலும் கல்விக்கு  6மூ ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அவசியமானது என்ற வகையிலும், அது, இன்றைய இலங்கைச் சூழலில் விட்டுக்கொடுக்க்கூடாத மிக முக்கியமான கோரிக்கைகளையுடைய போராட்டமாகியது. ஆனால் போராட்டம் ஆரம்பமான சில காலத்தின் பின், அரசாங்கம் அவர்களது கோரிக்கைகளைப் பொருட்டாகவே மதிக்காத நிலையில், மகாநாயக்கர்களைச் சந்தித்தல், மதத் தலைவர்களுக்கு விளக்கம் அளித்தல் என்றவாறு, அரசாங்கத்தை எவ்வாறேனும் பதிலளிக்க வைக்க வைத்தல் என்ற போக்கில் போராட்டம் நகரத்தொடங்கியது. இவை இவர்கள் மக்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என்பதற்கும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்ப முனையவில்லை என்பதற்குமான சான்றுகள். மேலும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் தனியார் பல்கலைக்கழகங்கள் வேண்டாம் என்று தாங்கள் சொல்லவில்லை ஆனால் அரச பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்தவே கோருகிறோம் என்றெல்லாம் பேசத் தொடங்கினார்கள்.

இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் போராட்டங்களுக்கும் எண்பத்தைந்து வருடங்களுக்கு மேலான வரலாறு உண்டு. தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகள் பலவற்றைத் தொழிற் சங்க இயக்கம் போராடியே வென்றெடுத்து வந்தது. தொழிலாளர்களும் தொழிற் சங்கத் தலைவர்களும் அதற்கான அர்ப்பணிப்புமிக்க பணிகளையும் உயிர்த் தியாகங்களையுங் கூடச் செய்துள்ளனர். அதன் பயனாகவே இந் நாட்டில் இடதுசாரி இயக்கம் உயிர்ப்புடனும் உறுதியுடனும் வளர்ந்தது. ஆனால் இன்று அவை பழங் கதையாகி விட்டன. ஏnனில் நேர்மையாக போராட்டம் ஒவ்வொன்றுக்கும் குழிபறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இன்னொரு அத்தியாயத்தையே இப்போது காணுகிறோம். 1977 முதல்; நாடும் பொருளாதாரமும் தாராள, தனியார்மயத்திற்கும் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கும் உள்ளாக்கப்பட்டு வந்துள்ளன. இக் காலத்திற் தொழிற்சங்க உரிமைகளும் போராட்டங்களும் திட்டமிட்ட பல வழிகளில் நசுக்கி அடக்கப்பட்டு வந்துள்ளன. பல காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இப் பின்னணியில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் ஒரு முக்கியமான திருப்புமுனையாகத் தெரிந்தது.

வரவு செலவு திட்டத்தில் கல்விக்கான வருடாந்த ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதைத் தமது உரிமைப் போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்தமை இப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்ததுடன் அதைத் தேசியப் பிரச்சினை என்ற மட்டத்துக்கு உயர்த்தியது. அதுவரை தமது சம்பள உயர்வைப்பற்றி மட்டும் பேசிவந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் இம்முறை மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6மூ ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொழிற்சங்கப் போராட்டங்கட்கு ஒரு புதிய திசையைக் காட்டியது. இது ஏனைய தொழிற் சங்கங்களும் சிவில் அமைப்புக்களும் போராட்டத்தில் இணையும் வாய்ப்பை ஏற்படுத்தியது. அதனாலேயே பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களும், ஆசிரியர் தொழிற்சங்கங்களும் உட்பட்ட பல அமைப்புக்களும் தொழிற்சங்கங்களும்இப் போராட்டத்திற்குத் தமது ஆதரவை வழங்கின. போராட்டக் கோரிக்கைகளின் மக்கள் சார்புத்தன்மையால், இப் போராட்டத்தை ஆதரிப்பது இன்றைய மக்கள் விரோத அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கான ஒரு தூண்டுதலாக இருக்கும் என ஜனநாயக மக்கள் சார்புச் சக்திகள் கருதின.

இன்று எல்லாம் பொய்யாய்ப் பகற்;கனவாய்ப் போய்விட்டன. ~பேச்சுப் பல்லக்கு தம்பி கால்நடை| என்பது இன்னொரு முறை நிரூபணமாகிவிட்டது. தமது கோரிக்கைகட்கு என்ன நடந்தது எனச் சொல்ல அவர்கட்கு முடியாதுள்ளது. அவர்கள் இனி அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு ஒதுங்கிவிடுவார்கள். இது இன்று இலங்கையில் ஐனநாயகத்துக்கான போராட்டத்திற்கு ஒரு பின்னிடைவை வழங்கியுள்ளது.

இலவசக் கல்வி என்பது உண்மையில் ஒரு சமூகத்தின் எதிர்காலத்திற்கான முதலீடு. அவ் வகையில் அது காக்கப்படவேண்டியது. அதைக் காக்கும் போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமானது. ஆசியாவின் நாடுகள் பலவற்றிற்கும் முன்னரே இலங்கையில் இலவசக் கல்வி பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப் பட்டு விட்டது. அத்துடன் தாய் மொழிக் கல்வியுஞ் சேரக், கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சிறிய, ஆனால் புறக்கணிக்க இயலாத, ஒரு தொகையினருக்கும் உயர் கல்வி வாய்ப்புக்கள் கிட்டின. இவை நினைவிற் கொள்ள வேண்டிய விடயங்கள்.

இன்று பின்னிடைவைச் சந்திருக்கும் பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டம் நல்ல சில படிப்பினைகளைத் தருகிறது. குறுகிய காலத்திற் தீர்வு கிட்டும் என்ற முன்முடிவில் எப் போராட்டத்தையும் தொடக்கவோ நடாத்தவோ கூடாது. மேலும் போராட்டம் நீளுகின்ற போது அதைத் தக்கவைக்கும் பொறிமுறைகளையும் உயிர்ப்புடன் பேணும் வழிமுறைகளையும் உபாயங்களையும் கண்டறிவது பிரதானமானது. இவை பற்றிய அறிவும் திட்டமிடலும் இன்றி எப் போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது.

இவிவிடத்தில், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கெதிராகக் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போராடிவரும் மக்களின் நெஞ்சுரத்தையும் நம்பிக்கையையும் நினைவுகூராமல் விட இயலாது. தொடர்சியான வன்முறைகட்கும் தாக்குதல்ட்கும் அவமானங்கட்கும் உயிரிழப்புக்கட்கும் மத்தியில் அந்த மக்கள் தொடர்ந்தும் தங்கள் உரிமைகட்காகப் போராடுகிறார்கள். தங்கள் போராட்ட உத்திகளைத் தேவைகட்கமைய மாற்றுகிறார்கள். அனைத்து மக்களுக்கும் அறிவூட்டுகிறார்கள். தமது நியாயத்தை விடாது எடுத்துரைத்து ஆதரவுத்தளத்தைப் பெருக்குகிறார்கள். தங்கள் இலக்கை அடையும் வரை அவர்கள் ஓயாது தொடர்ந்து போராடுவார்கள்.

எந்தவொரு போராட்டமும் மக்கள் திரளின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவ்வாறு நிகழ, அதற்குரிய ஒரு வர்க்கக் குணாம்சம் அவசியமானது. வர்க்க நோக்கற்ற போராட்டம் காலப்போக்கில் தன் முகத்தை மெதுமெதுவாக வெளிக்காட்டும். பல்கலைக்கழக ஆசிரியர்களது போராட்டத்தில் நடந்ததை உற்றுநோக்கின் இது விளங்கும். பேரம் பேசல் ஒருபோதும் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்கும் வழியல்ல.
மக்கள் போராட்டம் என்பது மக்களின் நலன்களைப் பிரதானமாகக் கொண்டது. அதைச் சில்லறைப் பிரச்சனைகளின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவர இயலாது. தங்கள் சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்காகப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 6மூ கல்விக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோஷத்தைப் பயன்படுத்திக் கொண்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், இலங்கையில் மக்கள் கவலைப்பட எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் மேவித், தமிழ் மக்களுக்குக் கூட்டணியின் இந்திய விஜயம், கிரிக்கெட்டில் இலங்கை அணியின் தோல்வி, மாற்றான் படத்தின் வருகையும் துப்பாக்கி படத்தின் எதிர்பார்ப்பும் என எத்தனையோ சோலிகள் இருக்கையில் அவர்கள் ஏன் போராட்டத்தை கைவிட்டார்கள் என்று கேட்கப்போர் யார்? சாதாரணமானோராலேயே மக்களை ஏய்க முடிகிறபோது பல்கலைக்கழக ஆசிரியர்கட்கு முடியாதா என்ன?

ஆனால் ஒன்று. 'மக்கள் போராட்டங்களை புத்திஜீவிகள் முன்னெடுக்க முடியாது ஏனெனில் அவர்கள் தான் மக்களின் மிகப்பெரிய எதிரிகள்" என்று எப்போதோ கேட்ட நினைவு. அது மிகச் சரி போல இப்போது தோன்றுகிறது.

-  செஞ்ஞாயிறு