Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தொழிலாளர் உயிர்பாதுகாப்புக்காக அணிதிரள்வோம்!

altசபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை பார்க்கும்போது, தனியார் துறையில் மட்டுமல்லாது அரசாங்கத் துறையிலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது, என முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் சமீர கொஸ்வத்த வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

' நவம்பர் 16ம் திகதி சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த எதிர்பாராத சம்பவத்தில் இரண்டு தொழிலாளர்கள் இறந்ததோடு மேலும் பலர் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் எரிவாயுக் குழாயொன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது. அதனை பழுது பார்ப்பதற்குச் சென்ற இருவரும் விஷக்காற்றை சுவாசிக்க நேர்ந்ததால் மேற்படி மரணம் சம்பவித்துள்ளது. அங்கு சேவையாற்றும் ஊழியர்களின் கூற்றின்படி, எவ்வித பாதுகாப்பு முறைகளும் இல்லாமல் இவ்வாறு ஆபத்தான வேலைகளில் ஈடுபட தொழிலாளர்கள் மறுத்துள்ள போதிலும், நிறுவன மேலதிகாரிகள் அதனைக் கவனியாது அவர்களது வாழ்க்கையை ஆபத்தில் சிக்க வைத்துள்ளனர்.

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமாக இருப்பதோடு, இப்போது நடக்கும் விடயங்களைப பார்த்தால், தனியார் துறையில் மாத்திரமல்லாது அரசாங்கத் துறையிலும் தொழிலாளர்களின் பாதுகாப்பை கவனியாது சுரண்டப்படுகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. தொழிலாளர்களின் உயிர்பாதுகாப்பு, வாழ்க்கை நிலை மற்றும் உரிமைகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை, கவனிப்பதில்லை என்பதற்கு இது முதல் சாட்சியல்ல. 2013 வரவு செலவு அறிக்கையை எடுத்துக் கொண்டாலும் தொழிலாளர்கள் முழுமையாக் கைவிடப்பட்டுள்ளமை தெரிகிறது.

நாளாந்தம் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் வாழ்க்கையை நடத்திச் செல்வதற்காக தொழிலாளர் வர்க்கத்திடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பட்டன. அவர்கள் கேட்ட சம்பள அதிகரிப்பிற்கு எவ்விதத்திலும் பொருந்தாத சொச்சத்தை அதிகரித்தாலும் அது ஒரு கொடுப்பனவு மட்டுமே. 40 லட்சத்திற்கும் அதிகமான தனியார் துறை ஊழியர்கள் தொடர்பிலும், 8 லட்சம் வரையிலான தோட்டத் தொழிலாளர் தொடர்பிலும் எந்தக் குறிப்பும் வரவு செலவு அறிக்கையில் இல்லை. இன்றைய நிலையில், அரசாங்க, தனியார், தோட்டத்தறை மற்றும் தற்காலிக, ஒப்பந்த அடிப்படையில் சேவை வழங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை கீழ் மட்டத்தில் இருப்பதோடு, உயிர்ப் பாதுகாப்பற்ற விதத்திலேயே அவர்கள் வேலை வாங்கப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை மாத்திரமல்ல, அவர்களது உயிரைக் கூட துச்மென மதித்து செயற்படுகிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்த சம்பவம்தான் சமீபத்திய சம்பவம். தொழிலாளர்களுக்கு நண்மை பயக்கும் சேவை நிபந்தனைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென குரலெழுப்பும், தொழிலாளர் போராட்டத்தை சம்பளப் போராட்டத்துக்குள் மட்டுப்படுத்தும், உடன்பாட்டுவாதத்திற்குள் மூழ்கியிருக்கும் தொழிற் சங்க அமைப்பும்  ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு பொறுப்பு கூற வேண்டும்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு  நிலையத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கும் நாங்கள், தமது சேவை நிபந்தனைகளை சரியாக நடைமுறைபடுத்துவதற்காகவும், வேலை நேரத்தில் உயிர் மற்றும் சுகாதார நிலைகளை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அந்தத் துறையில் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காகவும் ஒன்று சேருமாறு அனைத்து தொழிலாளர் மக்களிடமும் கேட்டுக்கொள்கின்றோம்."