Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

புலி "மாவீரர்" தினத்துக்கு எதிராக இராணுவ ஆட்சியும், மாபியாப் புலிகளும்

புலி "மாவீரர்" தினத்தை கொண்டாடுவதை தடுக்கும் ஒரேவிதமான சிந்தனை, ஒரே நோக்குடன் அமுலாகின்றது. இங்கு மக்கள் மேலான அடக்குமுறையுடன் கூடிய அதிகாரம் தான், வன்முறையுடன் திணிக்கப்படுகின்றது. இதற்குள் புலி "மாவீரர்" தினமும், ஆளுக்காள் குத்துவெட்டுகளும், கெடுபிடிகளும்.

இம் முறையும் மண்ணில் புலி "மாவீரர்" நாளை ஒட்டி தொடரும் இராணுவக் கெடுபிடிகள். இந்த இராணுவக் கெடுபிடிகளைப் பற்றி பேசியவர்கள் மீது, தாக்குதலை நடத்துகின்றது அரசு. வடக்கு கிழக்கில் நடக்கும் ஜனநாயக ஆட்சி என்பது, இராணுவத்தின் கெடுபிடி அதிகார ஆட்சிதான் என்பதை இது மீண்டும் தெள்ளத்தெளிவாக உறுதி செய்கின்றது.

தங்கள் மனித உணர்வை வெளிப்படுத்த முடியாத தொடர் சூழலும், அது சார்ந்த கெடுபிடியும், தனிநபர் பயங்கரவாத வன்முறை மூலம் உணர்வை வெளிப்படுத்துவதைத்தான் ஊக்குவிக்கின்றது. நாட்டின் பொதுச் சட்டம், வடக்கு கிழக்கில் அறவே கிடையாது. வடக்கு கிழக்கில் நாலு பேர் சட்டப்படி ஒன்றாக கூடுவதற்கு கூட, இன்று உரிமை கிடையாது. இதன் விளைவு புலி "மாவீரர்" தினம், இராணுவ அதிகார கும்பலுக்கு சவால் விடும் தினமாக மாறி உள்ளது. இந்த இராணுவக் கெடுபிடிக்கு எதிரான உணர்வுகள், "மாவீரர்" தினத்தை அரசுக்கு எதிரான எதிர்ப்பின் அடையாளமாக மாற்றி விடுகின்றது. இதுவொரு அரசியல் ரீதியான பண்பு மாற்றமாகும்.

அரசுக்கு எதிரான எதிர்ப்பு நாளாக இது மாறிவிடுகின்றது. தமிழ்மக்கள் மேலான பொதுவான கெடுபிடியும், அது சார்ந்த எதிர்ப்பு உணர்வும், புலிகளின் "மாவீரர்" என்ற குறுகிய வட்டத்தை கடந்த, தனக்கு எதிரான எதிர்ப்பு உணர்வாக மாற்றியிருக்கின்றது அரசு. இது ஒரு பண்பு மாற்றம். இந்த மாற்றம் புலத்தில் கிடையாது.

மண்ணின் உணர்வு நிலைக்கு முரணாக புலத்தில் புலி "மாவீரர்" நாள். புலி மாபியாக்கள், வியாபாரிகள், புலிப் பணத்தை ஏப்பமிட்டவர்கள், "மாவீரர்" தினத்தின் மீதும், "மாவீரர்" தினத்தை நடத்துபவர்கள் மேல் பரஸ்பரம் தாக்குதல் நடத்துகின்றனர். அரசுக்கு எதிராக அல்ல, தமக்குத்தாம் எதிராக வன்முறை சார்ந்த உணர்வுதான் "மாவீரர்" தின பொது வெளிப்பாடு.

"மாவீரர்" தினம் வியாபார சின்னமாகிவிட்டதால், அது பணத்தைத் திரட்ட மட்டுமல்ல அதிகாரத்தின் அடையாளமாகிவிட்டது. இதனால் உரிமை கோரி தமக்குள் மோதுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் மண்ணில் இராணுவம் செய்வதைத்தான், புலத்தில் புலிகள் செய்கின்றனர். மனித உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது. அவர்கள் மேல் வன்முறை மூலம் அதிகாரம் செய்யப்படுகின்றது. இதில் சரி பிழையை பற்றி ஜனநாயகபூர்வமாக விளக்கி ஏற்க வைக்க முடியாத மக்கள்விரோத ஜனநாயக விரோத போக்குகள் தான், புலம் முதல் மண் வரை வெளிப்படுகின்றது.

இதன் பின்னணியில் மனித உணர்வுசார் வெளிப்பாடுகளை ஒடுக்கவும், அதை வியாபாரம் செய்யவும் முனைகின்ற, இருவேறு அரசியல் இடைவெளியில் தான் அனைத்தும் ஒன்றாக கூடி நடை போடுகின்றது.

இதுதான் விடுதலைப் போராட்டம் என்ற நம்பி எந்தவிதமான மனிதவிரோதச் செயலிலும் ஈடுபடாது, தம்மைத்தாம் தியாகம் செய்தவர்கள் ஒருபுறம். மறுதளத்தில் மனிதவிரோத செயலில் ஈடுபட்டு மரணித்தவர்கள். இது இப்படி இருக்க, புலிக்கு வெளியில் இதுபோன்ற இரு கூறுகள் காணப்படுகின்றது. இப்படி மனித தியாகங்கள் இருப்பதை அங்கீகரிக்காத, அதற்குள் இருவேறு கூறுகள் இருப்பதை ஏற்றுக்கொள்ளாத உணர்வுகள் போலியானவை, புரட்டுத்தனமானவை. அவை மனித இனத்தை அடிமைப்படுத்துபவை.

உண்மையான தியாகங்களை ஏற்கவும் அதை போற்றவும் வேண்டும். அதேநேரம் மனிதவிரோதங்களில் ஈடுபட்டபடி யுத்தங்களில் மரணித்தவர்களை தியாகியாக காட்டுவதற்கு எதிராக, உண்மையான தியாகத்தை முன்வைத்து நாம் போராடவேண்டும்;. இதுதான் உண்மையான உணர்வாகும். இதுவல்லாத அனைத்தும், தியாகங்களை கொச்சைப் படுத்துபவை. இதை அர்த்தமற்றதாக்குபவை.

பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை, வியாபாரம், குறுகிய குழுவாதம், கும்பல் வன்முறை, மனிதவிரோதிகளை தியாகியாக முன்னிறுத்தல், தியாகத்தை குறுக்கி அங்கீகரிக்காமை, என்று விரிந்த தளத்தில் மனித உணர்வுகள் தொடர்ந்து காயடிக்கப்படுகின்றது. ஆக மொத்தத்தில் உண்மையான தியாகத்தை நேசிப்பவர்கள் ஒருபுறமும், மறுதளத்தில் வன்முறை மூலம் இதை வைத்து பிழைக்கும் கூட்டமும் அக்கபக்கமாக இயங்குகின்றது.

மண்ணில் இராணுவ கெடுபிடியால் அரசு எதிர்ப்பு நாளாக, பண்பு ரீதியாக மாறிவிட்ட புலி "மாவீரர்" நாள் உணர்வுகளுக்கு எதிரான திசையில் புலத்து மாபியாக்கள் பயணிக்கின்றனர். மக்கள் இந்த உண்மையை இன்று வெளிப்படையாக அனுபவிக்கின்றனர், தரிசிக்கின்றனர். இதனூடாகத்தான் புலி "மாவீரர்" தினத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பி.இரயாகரன்

27.22.2011