Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியச் செயலாளர் கைது!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளரான .தர்ஷானந் (வயது24) நேற்று நள்ளிரவு கோப்பாய் பொலிஸாரால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து அவரது தயார் கூறுகையில்

"நள்ளிரவு ஒரு மணியளவில் பொலிஸ் சீருடையில் வந்த நால்வர் வீட்டின் கதவைத் தட்டினர். பின்னர் தர்ஷானந்தின் அடையாள அட்டையை வாங்கிப் பரிசீலித்து விட்டு "வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு தர்ஷானந்தை அழைத்துச் செல்லப் போகின்றோம்' என்று கூறினார்.

"அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நான் கதறினேன். அதனையும் மீறி அந்த நால்வரும் தர்ஷானந்தை அழைத்துச் சென்று வெளியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிச்சென்று விட்டனர். அவரை கைது செய்வதற்கான எந்தவிதமான ஆவணங்களையும் எமக்குப் பொலிஸார் வழங்கவில்லை.'' என்று தெரிவித்தார்

மேலும் கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான .ஜெனமேனன், விஞ்ஞானபீட மாணவனான எஸ்.சொலமன் ஆகிய இருவரும் கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலிப் பகுதியில் நேற்று முன்தினம் கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசப்பட்டாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உண்மையில் அதுவல்ல இதற்கான காரணம். புதனன்று யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பொலிஸார் நடத்திய தடியடியில் சிக்கி எஸ்.சொலமன் அடிவாங்கும் படங்கள் ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகி இருந்தன.

போராட்டத்தில் முன்னிலையில் நின்ற மாணவர்களை கைது செய்து மிரட்டுவதன் மூலம், எதிர்காலத்தில் அரச பாசிச அடக்குமுறைகளிற்கு எதிராக எந்தவிதமான போராட்டங்களையும் எழவிடாது தடுப்பதற்கு இந்த பாசிச அரசு முயற்சிக்கின்றது. தனது அதிகாரக்கரங்கள் கொண்டு எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திலேயே செயற்படுகின்றது. ஆனால் மாபெரும் சக்தி மக்கள் சக்தி என்பதை இன்றும் இன்னமும் உணரவில்லை. இதை உணர்த்தும் நாளும் வெகு துரத்தில் இல்லை.

-சீலன்