Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழில் தொடரும் கைதுகள்- 25 பேர் வரை கைது?!

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எனக் கூறி இலங்கையின் வடக்கே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிசாரால் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரி ஒருவர் BBC இக்கு தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து "பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக" குற்றம்சாட்டப்பட்டு யாழ்ப்பாணம் பகுதியில் 10 பேர் புதனன்று கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.

ஆனால் 20 முதல் 25 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சந்திரா வாகிஸ்ட தெரிவித்துள்ளார்.

நேற்று (05.12.2012) இந்த தளத்தில் எழுதியபடி (http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/220-2012/1589-2012-12-05-13-04-32) 13 நபர்கள் கைது செய்யப்படதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது . அதேவேளை 14 நபர்களை கைது செய்வதே தமது நோக்கமென , பாதுகாப்பு அமைச்சும் , யாழ் ராணுவ தலைமையும், அவர்களுடன் பேச்சுவார்த்தையின் ஈடுபட்ட தமிழ்த் தரப்பினருக்கு தெரிவித்துள்ள நிலையில் , இன்று உதயன் பத்திரிகை 14 கைது செய்யப்ப் பட்டிருக்கலாம், என்ற தகவலை வெளியிடுள்ளது .

மேலும் உதயனில் செய்திப்படி :

யாழ். குடாநாட்டில் கடந்த இரு தினங்களாக பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 வயது முதல் 55 வயது வரையான 13 பேர் இது வரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று "உதயன்' பத்திரிகைக்கு நம்பகரமாகத் தெரியவந்தது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று கூறப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்தமுடியவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேரின் உறவினர்கள் அது பற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தி இருக்கின்றனர். இவர்கள் கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்டவர்கள்.

நேற்று முன்தினம் இரவோடு இரவாக இவர்கள் கைது செய்யப்பட்டு வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் சென்ற வாகனத்தில் 14 பேர் இருந்துள்ளனர் என்று ஒரு தகவல் "உதயன்' பத் திரிகைக்குக் கிடைத்தது. எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

சுன்னாகத்தில் ஐவர் கைது

இவர்கள் தவிர சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 பேர் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். காலையில் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்ட இவர்கள் பின்னர் வவுனியாவுக்கு ஏற்றப்பட்டனர்.

சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் தெரிவித்திருக்கிறார் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகார் எஸ்.கனகராஜ் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் அனேகமாக எல்லோரும் வன்னி இறுதிப் போரின் பின்னர் அரசினால் நடத்தப்பட்ட முகாம்களில் இருந்து திரும்பி மீளக்குடியமர்ந்தவர்கள். அவர்களில் சிலர் முன்னாள் போராளிகள்.

இன்றும் சிலர் கைதாகலாம்

கைது செய்யப்பட்டவர்கள் தவிர வேறு சிலரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் அடக்கம்.

இன்று காலை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தனிச் சிங்களத்தில் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ள கடிதம் "உதயன்' பத்திரிகைக்குக் கிடைத்துள்ளது.

தாமும் கைது செய்யப்படலாம் என்று இவர்கள் அஞ்சுகிறார்கள்.

காணாமல்போனவர் கைது

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை, ஊரணியைச் சேர்ந்த அருளம்பலம் டிசோக்ராஜ் (வயது 19) என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

நேற்று முன்தினம் காலையில் தண்ணீர் அள்ளுவதற்காகச் சென்ற தனது உறவினரான டிசோக்ராஜ் பயங்கரவாத விசாரணைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என்பது நேற்று மாலையே தமக்குத் தெரியவந்தது என்று உறவினர் ஒருவர் "உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தார்.

"பிள்ளையார் கோயில் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காகச் சென்றிருந்தார். பின்னர் அவர் பற்றிய தகவல் ஏதும் இல்லை. உயர்தரம் படித்துவிட்டு கணினி கற்றுக் கொண்டிருந்தார். நேற்று மாலையில் வீட்டுக்கு வந்த பொலிஸார், பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.

அவரது கணினி மற்றும் பென்ட்ரைவ் உடன் பெற்றோரையும் சகோதரர்களையும் இன்று வவுனியாவுக்கு வருமாறு அவர்கள் பணித்துள்ளனர்'' என்று அவர் தெரிவித்தார்.