Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்களின் விடுதலையின் பின்தான் பல்கலைக்கழகம் இயக்கப்படும் என்றால் அது ஒருபோதும் நடக்காது! யாழ்.கட்டளைத் தளபதி

alt"கைது செய்யப்பட்ட நான்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் விடுதலையானால் தான் யாழ்.பல்கலைக்கழகம் மீள இயங்கும் என்றால் அது ஒரு போதும் நடக்கப்போவதில்லை.''

இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க நேற்றுத் தெரிவித்தார். இராணுவ அதிகாரி ஒருவரின் இத்தகைய கருத்தால் பல்கலைக்கழக சமூகம் அதிர்ந்து போயுள்ளது. எதிர்ப்பதற்கு மக்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையையும் மிரட்டி பணியவைக்கும் இராணுவ நடவடிக்கை இது என்று பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.

 

பலாலி படைத்தலைமையகத்தினுள், பல்கலைக்கழக துணைவேந்தர், துறைத்தலைவர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது

யாழ்.பல்கலைக்கழக சம்பவத்தை பலர் ஜே.வி.பியுடன் ஒப்பிட்டுப் பேசுகின்றனர். இது தவறு. ஜே.வி.பி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த 30வருடகாலமாக யாழ்ப்பாண மக்களும் இலங்கை மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டனர். 1981ஆம் ஆண்டு நான் யாழ்ப்பாணத்தில் இருக்கும் போது காணப்பட்ட நிலை மைக்கும், தற்போதுள்ள நிலைமைக்கும் வேறுபாடுள்ளது.

இந்தப் போரினால் மக்கள் பெற்றது என்ன?

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றமாதிரியான செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அமைதியைக் குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.

கார்த்திகை தீபத்திருநாள் சமய நிகழ்வுகளை இராணுவம் எங்குமே குழப்பவுமில்லை . அதில் தலையிடவுமில்லை. ஆனால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் பிரபாகரன் படம் கட்டப்பட்டு ஒரு குழப்பமான நிலைமை காணப்பட்டது.

அதனால்தான் பல்கலைக்கழக வளாகத்தினுள் பொலிஸார் சென்றனர். அவர்கள் உதவிக்கு அழைத்ததால் இராணுவம் சென்றது.

பல்கலைக்கழகத்துக்குள் சென்றது சிங்கள இராணுவம் அல்ல. இலங்கை இராணுவமே. இராணுவத்தில் 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்களும் இருந்தனர். புலிகளின் மிரட்டல்களினாலேயே அவர்கள் இராணுவத்தை விட்டு விலகினர்.

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கமாட்டோம்.அமிர்தலிங்கம், நவரத்தினம் போன்றோர் அன்று தூண்டிவிட்டதன் விளைவாக என்ன நடந்தது?

மீளவும் பழைய நிலைமையை, 30வருடத்துக்கு முன்னைய நிலைமையை உருவாக்க முயற்சிக்கின்றார்கள்.

உருத்திரகுமாரன், இம்மானுவேல், விநாயகம் போன்றோரின் பின்னணியிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள். அவர்கள் சிறுசிறு குழப்பங்களை நாட்டில் உருவாக்க நினைக்கின்றனர். இந்த நாட்டை அழிக்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் தனித்தமிழீழம் ஒருபோதும் கிடையாது. நிச்சயமாக சுய உரிமை வழங்கப்படும். இங்கு அமெரிக்காவோ, ஐரோப்பாவோ உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.

யாழ்ப்பாணத்தில் தற்போது 15ஆயிரத்து 100இராணுவத்தினரே உள்ளனர். இங்குள்ள இராணுவத்தினரால் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு உண்டா? என்று மனச்சாட்சியைத் தொட்டுப் பார்த்துச் சொல்லுங்கள்.

இறுதியாகச் சொல்கிறேன், கைது செய்யப்பட்ட 4 பல்கலைக்கழக மாணவர்களையும் விடுதலை செய்தால்தான் யாழ். பல்கலைக்கழகம் மீண்டும் இயக்கப்படும் என்றால் அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை என்றார்.