Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின் வடக்கே இன்னும் கைதுகள் நடக்கும்!

இலங்கையின் வடக்கே கைதுசெய்யப்பட வேண்டிய நபர்கள் இன்னும் இருப்பதாக இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் 45 பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பூசா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் பேச்சாளர் செவ்வி

மாற்று மீடியா வடிவில் இயக்க

இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்துவந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறைப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்பதை நிச்சயமாக உறுதிசெய்ததன் பின்னரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்துவாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அதன்பின்னர் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழு

மாற்று மீடியா வடிவில் இயக்க

தமிழோசை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரிஷாந்த ஜயக்கொடி, புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைதுசெய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் கூறினார்.

ஒருவர் மாணவர், மூவர் பெண்கள்

இதேவேளை, இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தமது ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி டி. கனகராஜா தமிழோசையிடம் கூறினார்.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பள்ளி மாணவர் ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.