Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பயிர்ச் செய்கையால் பாதிப்படைந்த விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும்- விவசாய போராட்ட இயக்கம்

வெள்ளத்தினால் விளைச்சல்கள் நாசமடைந்த விவசாயிகளுக் இழப்பீடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய போராட்ட இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர் திரு. எஸ்.கே. சுபசிங்க கூறினார்.

 அரசாங்கம் தனது அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து விவசாயிகளை ஓரங்கட்டி வருவதானால் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக போராடுவதைத் தவிர வேறு வழி கிடையாதெனவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒருங்கிணையுமாறும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது திரு. சுபசுங்க கேட்டுக் கொண்டார். மேற்படி ஊடக சந்திப்பினபோது விவசாய போராட்ட இயக்கத்தின் நடவடிக்கைக் குழு உறுப்பினர் திரு.ஜே.பீ.ரன்தெனியவும் சமுகளித்திருந்தார்.

 

வெள்ளம் காரணமாக மூன்று வழிகளில் விவசாயம் நாசமடைந்துள்ளது. வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பயிர்கள் அழுகியுள்ளன. வயல் வரம்புகள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.  அடுத்ததாக நெற்கதிர்கள் மண்ணால் மூடப்பட்டு அழிந்துள்ளன.

ஐம்பதினாயிரம் ஏக்கரிலிருந்து ஒரு  லட்சம் ஏக்கர் வரையிலான விவசாய நிலங்கள் அழிந்துள்ளன. இதற்கு முன்னர் வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இம்முறை வெள்ளத்தினாலும் தாக்கப்பட்டுள்ளனர். பொலன்னருவ, அம்பாறை, மஹியங்கன, அனுராதபுரம், மாத்தளை, சேருவில, அம்பாந்தோட்டை, மாத்தறை உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு கதைகளைச் சொல்லி அரசாங்கம் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. வயல் பிரதேசங்களில் 1% மட்டுமே அழிந்துள்ளதாக அரசாங்க அமைச்சர் மகிந்த யாபா கூறுகிறார். அடுத்ததாக, மாத்தளையில் மாத்திரம் மூவாயிரம் ஏக்கர் வயல் நிலம் அழிந்துள்ளதாகவும்.  20கோடி ரூபா நட்டமேற்பட்டுள்ளதாகவும் விவசாய சேவை திணைக்களம் கூறுகிறது.

இந்த இர்ரண்டு விடயங்களையுமே அரசாங்கம்தான் கூறுகிறத. இடர்கள் ஏற்பட்டதன் பின்னர் அதற்கு முகம்கொடுப்பதற்கான எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லையென்பது இதன் மூலம் தெரிகிறது. பொலன்னருவ பிரதேச விவசாயிகள் நீரில் மூழ்கி இருந்த கடந்த 23ம் திகதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைவரும் அரசியல் தலைவரும் விருந்துபசாரமொன்றில் இருந்தார்கள். நான் பொறுப்போடு இதனைக் கூறுகிறேன், அந்த விருந்துபசாரத்தில் கலந்துக்கொண்டிருந்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார், அவர் முகாமொன்றுக்குச் சென்றதாகவும், அங்கு போகும்போது பகல் 12 மணிக்கு பிஸ்கட் பகிர்ந்துக் கொண்டிருந்தாகவும் கூறியதோடு, அதனைக் கண்ட தான் பகல் உணவுக்கு முன்னர் பிஸ்கட் சாப்பிடுவதா என்று கேட்டதாகவும் அதற்கு முகாமில் இருந்தவர்கள் இதுதான் பகல் உணவு என்று சொன்னதாகவும் கூறினார். வெள்ளத்தினால் இடம் பெயர்ந்திருந்த மக்கள் அந்த நிலையில் இருக்கும்போது அரசாங்கம் தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சிக்காக 2000 கோடிய விரயமாக்குகிறது.

வெள்ளத்தினால் ஏட்பட்ட இந்த அழிவுகள் அதிகரித்தமைக்கான காரணம்  முந்தைய போகத்திற்கு நீர் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம்தான்.  நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழியும்போதும் தண்ணீர் வழங்கப்படவில்லை. ஆகவே, வெள்ளம் வரும்போது அதனை தாக்கும் பிடிக்கும் அளவுக்கு பயிர்கள் வளர்ந்திருக்கவில்லை. முழு அழிவையும் நிறுத்த முடியுமென்று நான் கூறவில்லை.  தண்ணீர் வழங்கியிருந்தால் ஓரளவாவது தாக்குப் பிடித்திருக்க முடியும். இப்போது என்ன செய்கிறார்கள்? நீர்நிலைகளில் நீர் நிரம்பி வழிவதால் வான் கதவுகள் திறந்து விடப்படுகின்றன. நீர் அநியாயமாக கடலில் கலக்கவிடப்படுகிறது. ஆதலால், அடுத்த போகத்தின்போது தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். குறிப்பிட்ட நேரத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட்டிருந்தால் குளங்களில் நீர்மட்டம் குறைந்து இந்தவெள்ளத்தினால் நீர் நிறைந்திருக்கும்.

ஏற்கனவே ஏற்பட்ட வரட்சியின்போது கமெராவின் முன்னால் தோன்றிய ஜனாதிபதி விவசாயக் கடனை வெட்டிவிடுவதாக வாய்ச்சவாடல் விட்டார். காப்புறுதி செய்திருந்த விவசாயிகள் வங்கிக்குச் சென்று கேட்டபோது கடனுக்காக கழித்துக் கொள்வதாகக் கூறி அதனைக் கொடுக்கவில்லை. வங்கி விவசாயிகளின் கடனை வெட்டியிருக்கவில்லை. ஜனாதிபதியின் வாய்ச் சவாடல் எழுத்து மூலம் வரவில்லையென வங்கி கூறியது.

பயிர்ச் செய்கையால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வற்புறுத்துகின்றோம். ஒரு ஏக்கர் நெற்செய்கைக்காக விவசாயிகள் 25,000 ரூபா செலவிட்டிருக்கிறார்கள்.

அரசாங்கம் தனது அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து விவசாயிகளை ஓரங்கட்டியிருக்கிறது. விவசாயியை விவசாயத்திலிருந்து அகற்றும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. இலங்கையில் அரிசி உற்பத்தி செய்வதைவிட, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது இலாபம் என்று அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. அதனால் தான் விவசாயிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தமது பிரச்சினைகளுக்காகப் போராடுவதைத் தவிரவேறு வழி கிடையாது. ஆகவே, தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமாயிருந்தால் அமைப்பு ரீதியாக ஒன்று சேருமாறும், போராட முன்வருமாறும் விவசாயிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

-நன்றி: லங்கா வியூஸ்