Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

பிரச்சினைகளை மறைக்கவே இனவாதம்!

altசட்டக் கல்லூரி பிரவேசப் பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து சிலர் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிப் பிடிக்கும் நோக்கத்துடன்  கருத்து தெரிவித்து வருவதாக சம உரிமை இயக்கம் கூறுகிறது. ஜனவரி 3ம் திகதி நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய மின்சாரத் துறை அமைச்சர் சம்பிக ரணவக வெளியிட்ட கருத்து சம்பந்தமாக  கருத்து தெரிவிக்கும் போதே சம உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்ர முதலிகே மேற்கண்டவாறு கூறினார்.

இம்முறை நடைபெற்ற சட்டக்கல்லூரி நுழைவுப் பரீட்சையின் பெறுபேறுகள் சந்தேகத்துக்கிடமானவை எனவும்,பெருமளவான முஸ்லிம் மாணவர்களை இதில் சித்தியடையச் செய்திருப்பதாகவும், அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் தலையிட்டு முஸ்லிம் மாணவர்களை சித்தியடைய வைத்திருப்பதாகவும் ஜாதிக ஹெல உருமய, பொது பல சேனா போன்ற அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன. இது முஸ்லிம் மக்களால் சிங்கள மாணவர்களுக்கு செய்யப்பட்ட அநீதி என சம்பிக ரணவக கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த ரவீந்திர முதலிகே கூறியதாவது.

'சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் ஏற்பட்டுள்ள முறைகேட்டை பயன்படுத்தி மதவாதத்தையும் இனவாதத்தையும் பரப்புவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். இந்த முறைகேட்டை இனவாத கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. இது நாட்டில் பொதுவாகத் தலைதூக்கியிருக்கும் நெருக்கடியின் வெளிப்பாடாகும். சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை மாத்திரமல்லாது க.பொ.த. சாதாரண தரம், உயர்தரம், புலமைப் பரிசில் போன்ற பரீட்சைகளிலும் முறைகேடுகள் நடந்தமை வெளிச்சத்துக்கு வந்தன. இம்முறை நடந்த சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் தனியார் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியரொருவரினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தன. அது தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக் அநீதி இழைக்கும் வகையில் சிங்கள ஆசிரியர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டதாக யாரும் சொல்லவில்லை. சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்கையில் தமிழ் மொழி மூல வினாத்தாள் முன்னமேயே வெளிவந்திருந்தாலோ,  அதன் பெறுபேறுகளை வெளியிடும்போது யாதொரு முறைகேடு நடந்திருந்தாலோ பரீட்சைக்குப் பொறுப்பானவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறான முறைகேடு நடந்திருந்தால் அது கடந்த காலங்களில் கல்வி தொடர்பில் நாடுபூராவும் ஏற்பட்ட குழப்ப நிலையின் விளைவேயாகும்.

அதேபோன்று, இந்த முறைகேடு தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹகீம் தலையிட்டிருந்தால் அதுவும் கூட இந்த அரசியல் கலாச்சாரத்தின் பிரச்சினைதான். அமைச்சர்கள் தம்மால் வற்புறுத்தக் கூடிய துறைகளில் தமது நண்பர்கள்   உறவினர்கள் மற்றும் அரசியல் ஆதரவாளர்கள் மீது விஷேட கவனம் செலுத்துகின்றனர். உதாரணமாக, அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் பதுளை மாவட்டத்தை வசிப்பிடமாகக் கொண்டிருந்தவர்களே பெரும்பாலும் வைத்தியசாலைகளில் பணியாற்றினார்கள். அமைச்சர மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சரானதன் பின்னர், பொலன்னருவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதைக் காணமுடியும். அது மட்டுமல்ல ஜனாதிபதி ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்தவர் என்பதால் அனைத்து அரச மர்மஸ்தானங்களிலும் ஹம்பாந்தோட்டையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அமைச்சர் ஹகீம் அவர்களைப் பற்றி கதைக்கும் அமைச்சர் சம்பிக ரணவக கூட விதிவிலக்கானவர் அல்ல. மின்சார சபையின் உயர் பதவிகளை ஹெல உருமயவின் அரசியல் நண்பர்களைக் கொண்டு நிரப்பியிருப்பது ஊழியர்களுக்கும் தெரியும். இது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு அங்கமேயாகும்.

அமைச்சர் ஹகீமும் அந்தக் கலாச்சாரத்தை முன்னெடுப்பதாக இருக்கக் கூடும். பிரச்சினை என்னவென்றால் உண்மையான பிரச்சினையை மறைத்துவிட்டு, இந்தப் பிரச்சினையை பயன்படுத்தி இனவாத மதவாத கருத்துக்களை பிரச்சாரம் செய்ய முயற்சிப்பதுதான்.  முஸ்லிம் மக்களுக்கு எதிரான மிகமோசமான பிரச்சாரங்களும் அடக்குமுறை இயக்கமும் அரசாங்கத்தின் அனுசரனையோடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது இந்த சம்பவத்தையும் அந்தத் திட்டத்தோடு சேர்க்க முயற்சிக்கிறார்கள். இனவாதிகளின் சூழ்ச்சியை தோற்கடிப்பதற்கும், பொதுவாக நாட்டில் நல்லாட்சிக்கான அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதற்கும், கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தோற்கடிப்பதற்கும் மக்கள் சக்தியை கட்டயெழுப்புமாறு  சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.