Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் கைதும் போராட்டங்களும்!!!


யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்து ஒரு மாதம் ஆகின்றது. மாணவர்களின் கைது பற்றி தமிழ் மக்களிடமும் எடுத்துச் செல்லாமலும், அரசிற்கும் இடையூறு செய்யாமலும் வெகு பௌவியமாக நடந்து கொள்ளும் தமிழ் “தேசிய”வாதிகளை இட்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. மாணவர்களின் கைதினைத் தொடர்ந்து தமிழ் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நிலை கண்டிக்கப்பட வேண்டும்.


மாணவர்களின் நினைவு கூறல் நிகழ்வுகள் தன்னெழுச்சிக்கும் உட்பட்டதாக கவனிக்கப்பட வேண்டும். சிலர் திட்டமிட்டு இருக்கலாம். மாவீரர் தினத்தினை நினைவு கூர்வதற்கு சில அரசியல் “சக்திகள்” பின்புலனாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நினைவு நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களின் தொகையினை தீர்மானித்தது மாணவர்களின் தன்னெழுச்சிதான். மாணவர்களின் எழுச்சிப் பாடல்கள், நினைவலைகள் எல்லாம் தன்னியல்பானது. இதனால் மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வு என்பது தன்னெழுச்சியானதாகும்.

ஏனெனில் இறந்தவர்களை நினைவு கூருவதற்குரிய உரிமை பற்றியதாகும். நினைவு கூருவதும் ஓரு அரசியல் கோரிக்கைக்கானதுதான். நினைவு கூரும் அரசியலுக்குப் பின்னால் இருக்கும் அரசியலை அடக்கும் நிலைப்பாட்டை எதிர்க்க வேண்டும். இறந்தவர்களை நினைவு கூரல் புலிகளின் சிந்தனை இருக்கின்றது என்பதற்காக மறுத்துவிட முடியாது. அதனை எதிர்க்கும் இலங்கையரசின்  உரிமை மறுப்பிற்கு துணைபோக முடியாது.


மாணவர் போராட்டம் என்பது அவசியமற்றதா??


தன்னியல்பாக உருவான போராட்டத்தின் பின்னர் பல மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த மாணவர்களின் போராட்டத்தினை மையமாகக் கொண்டு தெற்கில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த வகைப் போராட்டமென்பது ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஒரு அம்சத்தான். போராட்டங்கள் உடனடி (திடீர்) உணவுப் பண்டம் (Fast Food) போல உருவாக்க முடியாது. சமூகத்தின் முன்னால் நிகழ்கின்ற  சமூக அவலங்களையும், அடக்குமுறைகளயும், சுரண்டலையும் கையில் எடுத்துப்போராட வேண்டும்.


தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அவ்வாறான போராட்டங்களுக்கு அரசியல் வடிவம் கொடுப்பது அவசியமாகின்றது. அரசியல் வடிவம் என்பது இனம் சார்ந்த என்ற நிலைப்பாடுகளும் இனமையவாத நிலையில் இருந்து பார்க்கும் பார்வைகளும் அரைகுறை ஆய்வுமுறையே இன்றுள்ளது.


மலையகத்தில் நடைபெற்ற போராட்டம் கூட தன்னெழுச்சியான போராட்டம் தான் மூன்று பாடசாலைகளை ஒன்றாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தினை இன்னும் அரசியல் வடிவம் கொடுத்துப் போராட்ட முடியும். ஆனால் அவ்வாறான போராட்;ட வடிவத்தை நடத்திச் செல்வதற்குரிய அமைப்பு வடிவம் விஸ்தரிக்கப்படவில்லை என்பதும். இடதுசாரியம் பலவீனமாக இருப்பதும் உண்மையே. இதற்கு அரசியல் வடிவம் கொடுக்கப்படாமையால் சிதைந்து போகும் சந்தர்ப்பம் இருக்கின்றது.


தன்னெழுச்சிப் போராட்டம் அல்லது தீடீர் எழுச்சிகள் நடைபெறுகின்ற போது அவற்றிற்கு அரசியல் வடிவம் கொடுப்பது நடைபெற்றுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களாக உருவாக்குவதும்  நடைமுறையில் போராடுவதன் ஊடாகத் தான் சாத்தியமாகும். போராட்டத்தில் அன்னியப்பட்ட ஆய்வுகள் மக்கள் திரள் அமைப்புக்களுக்கும் மக்களுக்கான உறவுகளையும் கற்பனை பண்ண முடியும். கற்பனை கலந்த சமூக நிலைஆய்வும், அதன் எதிர்வினைகளும் சமூகத்தினை மாற்றத்திற்கு உட்படுத்தமாட்டாது. இந்த வகையில் தமிழ் மாணவர்களுக்காக தெருக்களில் சில பத்து மாணவர்களை இணைத்து போராடுவதும் வெற்றிதான்.  


ஆளும் கட்சியின் கோட்டையான பேராதனை பல்கலைக்கழகத்திலும், றுகுண பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களை திரட்டியும், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தன்னெழுச்சியாகவும் நடைபெற்ற போராட்டம் என்பது கவனிக்கத்தக்கதாகும். முழு இலங்கையிலும் சரி, வடக்கு கிழக்கிலும் சரி போராட்டங்களை படிப்படியாகத்தான் வளர்த்தெடுக்க முடியும். இதுதான் யதார்த்த நிலை. முன்னிலை சோசலிக் கட்சியினரின் போராட்டம் என்பது முக்கியமானதாகும். இனத்துவ பேதத்திற்கு அப்பால் மாணவர்களை சிந்திக்க தூண்டியிருக்கின்றது. மாணவர்கள் நடைமுறை ரீதியான உணர்ந்து போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். போராடிய மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னால் சர்வதேசிய சதி இருப்பதாக கற்பனை எல்லையும் கடந்து விமர்சிக்கப்பட்டது.


தொண்டூழியம்:


முற்போக்கு பேசும் தத்துவவாதிகளில், தமிழ் தேசிய ஊடகங்களும் செய்தியைத் தணிக்கை செய்தார்கள். இந்தச் சக்திகளைப் பொறுத்தவரை மக்களுக்கான நலன் என்பது அக்கறையில்லை என்பதையும் காட்டுகின்றது.
போராட்டம் என்பது மாலைநேர விருந்தல்ல என்பர். இவர்களைப் பொறுத்த வரை உடனடி (திடீர்) உணவுப் பண்டம் (Fast Food) போல ஒரு வணங்காமண் கப்பலில் கொண்டு போராட்டத்தையும் நடைமுறையற்ற கோட்பாடுகளையும் வைத்துக் கொண்டு புரட்சியை செய்து முடிக்க முடியும் என்று நினைக்கின்றவர்களும் உள்ளார்கள்.
தமிழ் தேசியம் பேசிக் கொள்ளும் இன்றைய வியாபாரிகளும், புரட்சி பேசும் அரைநிலபிரபுத்துவச் சிந்தனை கொண்டவர்களும் யதார்த்த நிலையை அறியாதவர்களே.


இரண்டு சக்திகளுக்கும் இருக்கின்ற சமூக அமைப்பும், அது சார்ந்த உற்பத்தி உறவுமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற இலக்காகும்.  இலங்கையில் நடைபெற்ற போராட்டங்களில் மக்களைப் பார்வையாளர்காக வைத்து நடத்தரப்பட்ட போராட்டங்களைப் போல அல்லாமல் இனியொரு போராட்டம் என்பது மக்கள் திரள் கொண்டதாக இருக்கும். மக்கள் திரள் கொண்ட போராட்டத்தினை வளர்த்தெடுப்பதும் ஒரு போராட்டம் தான். போராட்டங்கள் மெதுமெதுவான தனது அன்றாட வாழ்வியல் பாடங்களின் ஊடாகவும், கடந்தகாலத் தவறுகளில் இருந்து முன்னேறும் போக்கு என்பது ஒரு இரவில் நடந்து விடுவதில்லை.


புலம்பெயர் “புரட்சிகர” அரைநிலப்பிரபுத்துவ சிந்தனைவாதிகளும், தரகுவர்க்கமும் உரிமைக்காக போராடுவதாக கூறிக் கொள்கின்ற போதும் தான் சார்ந்த  இருப்பை முதன்மை கொண்டு செயற்படுகின்றது. தமிழ்ப்பகுதியில் உள்ள இரண்டு இனங்களுக்கிடையேயான ஐக்கியத்தை விரும்பாத  புரட்சிகர அரைநிலப்பிரபுத்துவ சிந்தனைவாதிகள் தரகுவர்க்கத்திற்கு அரசியல் விளக்கம் கொடுக்கும் சேவையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். முன்னர் அரசியல் ஆலோசகர்களாக ஏகபோக அமைப்பிருந்த போது செயற்பட்டவர்கள். இன்று தன்னார்வ நிலையில் இருந்து கருத்துக் கூறும் தரகுமுதலாளியத்திற்கு தொண்டூழியம் செய்கின்றார்கள்.


தொடரும்................!!!