Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பொதுமக்களின் காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவம்! மீள்குடியேற முடியாது தவிக்கும் மக்கள்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் 23வருடங்களாக தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அந்தப்பகுதி மக்கள் மீள் குடியமர்வதற்கு அனுமதி மறுத்துவரும் படையினர், தற்போது அந்தப் பகுதியில் 180ஏக்கர் நிலப்பரப்பில் தொழில்முறை ரீதியான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரியவருகிறது. தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாது தாம் அந்தரித்து வரும் நிலையில் படையினரின் இந்த நடவடிக்கை தம்மை மேலும் விசனமடையச் செய்வதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மக்கள் இதுவரை மீளக் குடியமராத மயிலிட்டிப் பகுதியில் படையினர் அண்மையில் "யோக்கட்" தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்திருந்த நிலையில் தற்போது அவர்கள் தொழில்முறை ரீதியான விவசாய நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளமை, அந்தப் பகுதியில் மீளக்குடியமரக் காத்திருக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது.

1990ம் ஆண்டு இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக வலி.வடக்கைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். 23வருடங்கள் கடந்த நிலையில் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளத் திரும்ப முடியாமல் நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டிப் படையினர் 24கிராம சேவகர் பிரிவுகளில் மீளக்குடியமர்வதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். இதன் காரணமாக 7ஆயிரத்து 601குடும்பங்களைச் சேர்ந்த 25ஆயிரத்து 328பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் அந்தப் பகுதி மக்களின் காணிகளை அடாத்தாகப் பிடித்து வைத்துள்ள படையினர், அங்கு தமது தொழில் ரீதியான விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இந்தப் பகுதிகளில் மீளக்குடியமர முடியாத நிலையில் தொடர்ந்தும் மக்கள் நலன்புரி நிலையங்களில் அந்தரித்து வரும் வேளையில் படையினரின் இந்த நடவடிக்கை மக்களை மேலும் விசனமடையச் செய்துள்ளது. யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் பணிப்பின் பேரில் எகிப்து சென்று திரும்பிய இராணுவ விவசாயப் பிரிவுக்குப் பொறுப்பான கேணல் புத்திக குணரத்ன, எகிப்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தூவல்முறை நீர்ப்பாசனத்தைப் பலாலியில் அறிமுகப்படுத்தி விவசாய நடவடிக்கைகளை அங்கு ஆரம்பித்து வைத்துள்ளார்.

முதல் கட்டமாக 3 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வெங்காயச் செய்கைக்கே தூவல்முறை நீர்ப்பாசன முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ளப்பட்டுவரும் 180 ஏக்கர் நிலப்பரப்புக்கும் படையினர் இந்த தூவல்முறை நீர்ப்பாசனத்தை விஸ்தரிக்கவுள்ளனர். இதேவேளை, இராணுவம் விவசாயம் மேற்கொள்ளும் பலாலிப் பகுதியில் மீள்குடியமர்வதற்காகத் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் பலாலி தெற்கு (ஜே/252) கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆயிரத்து 249 பேரும், பலாலி கிழக்கில் (ஜே/253) கிராம சேவகர் பிரிவில் 475 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 837 பேரும், பலாலி வடக்கில் (ஜே/254) கிராம சேவகர் பிரிவில் 440 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 689 பேரும், பலாலி வடமேற்கு (ஜே/255) கிராம சேவகர் பிரிவில் 164 குடும்பங்களைச் சேர்ந்த 613 பேரும், பலாலி மேற்கில் (ஜே/256) கிராம சேவகர் பிரிவில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 821 பேரும் மீளக்குடியமரும் எதிர்பார்ப்பில் பதிவு செய்துள்ளனர் எனத் தெரியவருகிறது.