Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்லும்

"நடைமுறை எழுப்பும் பிரச்சனைகளுக்கு கோட்பாடு பதில் சொல்லியாக வேண்டும்" லெனினின் இக் கூற்றுப் போல், நடைமுறைப் போராட்டம் கோட்பாட்டுரீதியாக பதில் சொல்லும். நடைமுறை ஒன்றாக, கோட்பாடு வேறொன்றாக இருக்க முடியாது. நடைமுறை மூலம் உருவாகும் வர்க்க சக்திகள், வேறு வர்க்க சக்தியாக மாற முடியாது. கோட்பாடு மற்றும் நடைமுறைக்கும் உள்ள உறவே இதுதான்;. இனவாதத்துக்கு எதிரான நடைமுறை என்பது கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இங்கு கோட்பாடு தன்னை வெளிபடுத்த முன் நடைமுறை முந்திக் கொள்கின்றது. கோட்பாட்டை முன்வைத்து கீழிருந்து மேலாக ஒரு கட்சியை உருவாக்காத இலங்கை சூழலில், இன்று ஒரு கட்சி நடைமுறை மூலம் கோட்பாட்டை கீழ் இருந்து மேலாக கொண்டு செல்லும் வர்க்க நடைமுறையைக் கொண்டு உருவாகின்றது. நடைமுறை மூலமான மறுகல்வி மறுப்பது வர்க்க ஆய்வு முறையல்ல, வர்க்க அரசியலுமல்ல.

இனவொடுக்குமுறை மற்றும் இனவாதத்தை எதிர்த்துப் போராடக் கூடிய குறைந்தபட்சத் திட்டத்தை மறுக்க, சுயநிர்ணயத்தை தங்கள் தலையில் வைத்தாடுகின்றனர். பல்வேறு ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள், ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பல்வேறு தீர்வுகளைக் கொண்ட குழுக்கள், தனிநபர்கள் ஒன்றிணைந்து போராடுவதற்கான வெகுஜன அமைப்பே சமவுரிமை இயக்கம். இதை எதிர்க்க, இந்த அமைப்பில் உள்ள வௌ;வேறு தரப்பின் வேறுபட்ட திட்டத்தைக் காட்டி இதை எதிர்க்கின்றனர். இந்த அடிப்படையில் தான் சுயநிர்ணயம் பற்றி கூட பேசுகின்றனர். இனவொடுக்குமுறை, இனவாதம் இரண்டையும் எதிர்த்து போராடுவதற்கு பதில், இதை எதிர்ப்பதன் மூலம் இதைப் பாதுகாக்க முனைகின்றனர்.

இன்று இந்த அடிப்படையில் சுயநிர்ணயம் பற்றிப் பேசுகின்ற பலர், பாட்டாளி வர்க்க அரசியலையே மறுப்பவராக இருக்கின்றனர். சுயநிர்ணயத்தை தங்கள் கொள்கையாகக் கூறும் பலர், அதை பிரிவினையாகவே முன்வைக்கின்றனர். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி தன் அரசியல் வேலைத்திட்டத்தில் கொண்டிருக்க வேண்டிய சுயநிர்ணயத்தை முன்வைக்குமாறு கோரும் போது, சுயநிர்ணயம் பற்றிய அனைத்து தவறான போக்கையும் எதிர்த்து போராடுவதன் மூலமான சமரசமற்ற பாட்டாளி வர்க்க அரசியலை முதன்மையாக உயர்த்திப் பிடித்தபடி கோரவேண்டும்.

இப்படி இருக்க சமவுரிமை அமைப்பின் குறைந்தபட்ச திட்டத்தை மறுப்பதற்காக, ஒரு கட்சியின் திட்டத்தைக் கொண்டு, சமவுரிமை இயக்கத்தின் நோக்கத்தையும் அது கொண்டுள்ள உள்ளடக்கத்தையும் எதிர்க்கின்றவர்கள், மக்களை ஏமாற்ற முனைகின்றனர். இனவொடுக்குமுறை மற்றும் இனவாதத்தை எதிர்த்து மக்கள் திரட்டப்படும் போது, அது இனவாதத்துக்கு எதிரான மக்கள் சக்தியாக மாறுகின்றது. இதை எதிர்ப்பது மக்கள் விரோத அரசியலாகும். சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காவிட்டால் சமவுரிமை இயக்கத்தை எதிர்ப்போம் என்பது, சாராம்சத்தில் இனவாதமாகும். இங்கு சுயநிர்ணயத்தை இனவாதம் முதல் பிரிவினை வரையான அரசியல் எல்லைக்குள் நின்று முள்தள்ளுகின்றனர்.

இந்த வகையில்

1.இவர்கள் நடைமுறையுடன் கூடிய சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்குவதில்லை.

2.வர்க்கப் போராட்டமல்லாத தளத்தில் சுயநிர்ணத்தை திரித்து செயற்படுத்துவதை எதிர்த்து போராடுவதில்லை.

3.பேரினவாதமும், குறுந்தேசியமும் சுயநிர்ணயத்தை பிரிவினையாகக் காட்டுவதை எதிர்த்து போராடுவதில்லை.

இந்த மூன்று தளத்தில் அரசியல்ரீதியாக இயங்காதவர்கள், சுயநிர்ணயத்தைக் கோருவது என்பது மக்களுக்கானதல்ல. தங்கள் சுய இருப்புக்கானதே.

இதில் இருந்து தான் முன்னிலை சோசலிசக்கட்சி தன் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமையை இனவாதம் என்கின்றனர். இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடாத எல்லா நிலையிலும் தான், அது இனவாதம்;. மறுதளத்தில் வெறுமனே சுயநிர்ணயத்தை முன்வைத்துவிட்டால் மட்டும் போதாது. மாறாக நடைமுறையில் போராடாத வரை, இனவொடுக்குமுறைக்கும் இனவாதத்துக்கும் மறைமுகமாக துணைபோதலாகும்.

நடைமுறையில் ஒரு கட்சி தன் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கோட்பாடாக கொள்ளாமல், சுயநிர்ணயத்தின் நடைமுறை கூறுகள் பலவற்றை தன் திட்டத்தில் உள்ளடக்கியபடி, இனவொடுக்குமுறை மற்றும் இனவாதத்தை எதிர்த்து நடைமுறையில் போராடும் கட்சியை இனவாதக் கட்சியாக காட்டுபவர்கள் இனவாதிகளாகவே இருக்கின்றனர். இங்கு இவர்கள் சுயநிர்ணயத்தைப் பற்றி, குறுந்தேசியம் கொண்டுள்ள அதே பிரிவினைவாத அரசியலின் பிரதிபலிப்போடு தான் இங்கு முன்வைக்கப்படுகின்றனர்.

விடுதலைப் புலிகள் விடுதலைக்குப் பின்னர் தான் ஜனநாயகம் என்று கூறி, தமது பாசிசப் பிடியை இறுக்கியதை போலவே, இனவாதம் சிங்கள மக்கள் மத்தியில் மறையும் வரை சுயநிர்ணயம் என்பது பிரிவினைக்கானது என்று சிங்கள மக்களால் புரிந்து கொள்ளப்படும் என்றும், இதனால் சுயநிர்ணயம் பின்னாட்களில் பேசவேண்டிய ஒன்று என முன்னிலை சோசலிசக் கட்சி கூறுகின்றது என்ற வாதமும் சிலரால் திரித்து முன்வைக்கப்படுகிறது. இங்கு புலிகள் ஜனநாயகத்தை தங்களுக்குள்ளேயே வழங்காதவர்கள், ஜனநாயகத்தை நடைமுறையில் கொண்டிராதவர்கள், பாசிசத்தையே ஆணையில் வைத்தவர்கள். ஆனால் முன்னிலை சோசலிசக் கட்சி சுயநிர்ணயம் கொண்டுள்ள நடைமுறைக் கூறுகளை கீழ் இருந்து அமுல் படுத்துவதுடன, இனவாதம் இனவொடுக்குமுறையை எதிர்த்து நடைமுறையில் போராடுகிறார்கள். இங்கு இந்த ஒப்பீடு அபத்தமானவை. அதே போல் இந்த திரிபும் அபத்தமானவை.

சுயநிர்ணயம் என்பது இன முரண்பாட்டை முறியடித்து வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கான கோட்பாடு தான். இதற்கு வெளியில் இதற்கு விளக்கம் கிடையாது. பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்தான் கட்சியால் அதை அமுலுக்கு கொண்டு வர முடியும்.

வர்க்கப் போராட்டத்துக்கு முன் நடைமுறையில் நடக்கும் போராட்டம் என்பது, இனவாதம் மற்றும் இனவொடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் தான். ஆகவே சுயநிர்ணயம் என்பது வெறும் கோட்பாடு அல்ல. மாறாக நடைமுறையில் அது பிரயோகிக்கப்பட வேண்டும்.

இங்கு சுயநிர்ணயம் அல்லாத எந்தத் தீர்வையும் மார்க்சியம் முன்வைப்பதில்லை. அதுவல்லாத தீர்வுகளை முன்வைப்பது மார்க்சியமல்ல. ஒரு தீர்வு வரும்போது, அதை வர்க்க நோக்கில் இருந்து மட்டும் தான் பாட்டாளி வர்க்கம் அணுகுகின்றது. ஒரு கட்சி தன் திட்டத்தில் சுயநிர்ணயத்தை கோட்பாடாக கொண்டிருக்க வேண்டும் என்பது அடிப்படையானது. சுயநிர்ணயத்தின் கூறுகளைக் கொண்டு நடைமுறையில் போராடுவது மட்டும் போதாது அதைக் கோட்பாடாக்குவது அவசியம் என்பதால், அதன் நடைமுறையை எதிர்க்க முடியாது.

இந்த வகையில் சுயநிர்ணயத்தை தங்கள் கோட்பாடாக அரசியல் திட்டத்தில் கொண்டிருக்காது வெறும் நடைமுறையை மட்டும் கொண்டிருப்பது இங்கு முழுமையற்றதானதாக இருக்கின்றது. ஆனால் முழுமையை நோக்கி செல்வதற்கான அரசியல் அடிப்படையை அது கொண்டு இயங்குகின்றது. ஆனால் கோட்பாட்டை மட்டும் கொண்டு நடைமுறையை கொண்டிராத போக்குள்ளவர்கள் அப்படியல்ல. அது தன் செயலற்ற தனத்தின் மூலம், அதை கோட்பாடாக்கி இனவாதத்துக்கு உதவுதாகும்.

இன்று இலங்கையின் அரசியல் நடைமுறை சார்ந்த செயல்தளம் மீது, இன்று கூர்மையான விவாதப் புள்ளியாகவும், தர்க்கமாகவும் மாறி இருக்கும் விடையம் இதற்குள் தான் நடக்கின்றது. இங்கு சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை மேலிருந்து முன்வைக்காமல், சுயநிர்ணயத்தைக் கீழிருந்து முன்னெடுக்கும் நடைமுறை அரசியல் இலங்கையில் மாற்று அரசியலாக மாறி இருக்கின்றது. இது இனவொடுக்குமுறைக்கு எதிராக இனவாதத்துக்கு எதிரான பொது அரசியல் போக்காக மாறி வருகின்றது. இங்கு உண்மையில் நடைமுறை மூலமான மறுகல்வியாக இது முன்னெடுக்கப்படுகின்றது. நடைமுறை மூலம் கோட்பாட்டை வந்தடையும் போராட்டத்துக்கான அரசியல் செயல்தந்திரமாக இது இருக்கின்றது. இன்று இனவொடுக்குமுறையாளர்களும், இனவாதிகளும் இதைத்தான் எதிர்க்கின்றனர்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

04.02.2013