Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பத்திரிகைகளின் சுதந்திர செயற்பாட்டிற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் கிடைத்துள்ள மோசமான அடியும் அச்சுறுத்தலும்!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நேற்று முன்தினம் அதிகாலையில் மூன்று முகமூடிக் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன் அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைக் கட்டுக்களும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. தாக்குதலில் படுகாயமடைந்த அப்பணிப்பாளர் யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். மிருகத்தனமான இத்தாக்குதல் திட்டமிட்டே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலை புதிய-ஜனநாயகமாக்சிச-லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிகவன்மையாகக் கண்டிக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள், விநியோக பணியாளர்கள், பத்திரிகை அலுவலகங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள் மற்றும் தீவைப்புக்கள் தொடர்ந்தும் திட்டமிட்டு குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அத்தகைய தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே நேற்று முன்தினத் தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது. இத்தாக்குதல் பத்திரிகைகளின் சுதந்திர செயற்பாட்டிற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் கிடைத்துள்ள மோசமான அடியும் அச்சுறுத்தலுமாகும். அத்துடன் யாழ்ப்பாணத்தில் ஜனநாயகம் சுதந்திரம் இயல்பு வாழ்வுக்கு இடமில்லை என்பதையே மேற்படித் தாக்குதலும் எரியூட்டலும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

-புதிய-ஜனநாயகமாக்சிச-லெனினிசக் கட்சி

8/2/2013