Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்: "தலைசிறந்த மனித நேயமிக்கது சிறிலங்கா ராணுவம்"

"மக்கள் மீது குண்டு வீசவில்லை":

இறுதி கட்டப்போரை மனிதநேய நடவடிக்கை என்று அரசு வர்ணித்த சொற்றொடரைப் பயன்படுத்தும் இந்த ராணுவ நீதிமன்றம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறப்பித்த 'ஒரு சிவிலியன் கூட கொல்லப்படக்கூடாது' என்ற உத்தரவை இலங்கை ராணுவம் எல்லாக் கட்டங்களிலும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டது என்று கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள், துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து சுட்ட போதும் கூட, இலங்கைப் படையினர், திரும்ப அந்தப் பகுதிகளுக்குள் குண்டு வீசவில்லை என்றும்  நீதிமன்றம் கூறியது.

இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகள் என்று வரையறுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேல் இன்னும் ஒரு 500 மீட்டர் தூரம் வரை , இராணுவத் தளபதிகள் துப்பாக்கிச் சூடற்ற பகுதிகளாக விஸ்தரித்துக் கொண்டனர் என்றும் அது கூறுகிறது.

சர்வதேச மனித நேய சட்டங்களையும், போர்ச் சட்டங்களையும் , போரின் எல்லா கட்டங்களிலும் அனுசரித்த ஒரு கட்டுப்பாடான ராணுவமாகவே இலங்கை ராணுவம் இருந்திருக்கிறது என்றும் இந்த ராணுவ நீதிமன்றம் கூறியது.

சிவிலியன் உயிரிழப்புகள் எல்லாம், விடுதலைப்புலிகளின் சட்டவிரோதச் செயல்களாலேயே நிகழ்ந்ததாக அது கூறியது.

சானல் 4 பதில்

'இதுபோல குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக்கொண்டு தங்களை நிரபராதிகளாக அறிவித்துக்கொள்ளும் வரலாறு இங்கே இருக்கிறது. இதில் ஒன்றும் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது புதிதாக எதையும் சொல்லவில்லை.

'இலங்கை ராணுவம் குண்டுத்தாக்குதல் நடக்கக்கூடாத பகுதி என்று அறிவித்த பகுதிகளிலும் குண்டு தாக்குதல்களை நடத்தியது. அவர்கள் இந்த குண்டுத் தாக்குதலற்ற பகுதிகளாக அறிவிக்கப்பட்டுபகுதிகளை இலக்கு வைத்தார்கள். அவர்கள் பலரை கொன்று குவித்தனர். உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இது ராணுவம் தன்னைத்தானே விசாரித்து, தன்னை நிரபராதி என்று முடிவு கட்டும் மற்றுமொரு விசாரணை. இதில் எதையும் மாற்றாது'

எமது கருத்து

இந்த மனிதநேய மக்கள் மீட்பு ராணுவமும் மகிந்தா அரசும், தமிழர் பிரதேசங்களில் எங்கும் ராணுவத்தினை நிறுத்தி வைத்துக் கொண்டு புதிய முகாம்களை அமைப்பதும், தமிழர் நிலங்களை பலாத்காரமாக பறித்துக் கொள்வதும், மக்கள் வாழ்ந்த பிரதேசங்களை பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து இங்கு ராணுவ குடியேற்றங்களை நிறுவுவதும், மீனவர்கள் சுயாதீனமாக தொழில் செய்தனை தடுப்பதும், மக்கள் ஒன்று கூடி தமது ஜனநாயக உரிமைக்காக குரல் கொடுப்பதனை அச்சுறுத்தி கைது செய்து புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்திருப்பதும், புலிகளுடனா யுத்தம் முடிவுக்கு வந்து ஏறத்தாழ நான்கு வருடங்களாகியும் இன்னமும் பலர் உயிருடன் உள்ளனரா இல்லையா என அறியத்தராது இழுத்தடிப்பதும், தெற்கிலே எழுகின்ற தமிழ் மக்களிற்க்கான ஆதரவு குரல்களை அச்சுறுத்தி அவர்கள் மீது வன்முறையினை கட்டவிழ்த்து விட்டிருப்பதுவும், தமிழ் மக்களின் மனித நேய அக்கறையின் பாற்பட்டதே என நம்புவோமாக!