Tue04162024

Last updateSun, 19 Apr 2020 8am

பணிப்பெண் உழைப்பாளிகள் (பாகம் -2)

எமது நாடுகளிலிலே எமது தாய், தகப்பன் கஸ்டப்பட்டு வளர்த்து அதாவது வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி படிப்பித்து பெரியவர்களாகி எமது வரிப்பணத்தில் உயர் கல்விகற்று வெளிநாடு சென்று தமது உழைப்பைச் செலுத்துகின்றனர்.

இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்பவர்களுக்கு தகுந்த கூலி என்பது கிடைப்பதில்லை. பணிப் பெண்கள் நீண்ட மணிநேரம் உழைக்கின்ற போதும் அவர்களுக்கு போதிய சம்பளம் கிடைப்பதில்லை. இவர்களின் சம்பளம் இலங்கையில் பெறும் வருவாயை விட அதிகமாக இருப்பதுடன் இது மாதாந்த வருமானமாகக் கிடைக்கின்ற காரணத்தினால், எத்தனையோ பலர் கடன்பட்டும் அதிக வட்டி கொடுத்தும் வாழ்வின் விழிம்பில் இருந்து வெளிவரத் துடிக்கின்றனர்.

இவ்வாறான மக்களுக்கு சொந்த நாட்டில் அரசாங்கம் நிரந்தர வருவாயை உறுதிப்படுத்துவதற்கு மக்கள் போராட வேண்டும் என்ற அரசியல் முதிற்சி பெறாதவர்களாக பெரும்பான்மையான மக்கள் இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை நோக்கும் போது, இவர்கள் தாம் எப்படியாவது கஸ்டப்பட்டு மேற்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும், சென்றபின் எமது கஸ்டங்கள் எல்லாம் போய்விடும். வசந்தம் நமது வாழ்வில் வீசும் என்ற நிலப்பிரபுத்துவக் காலச் சிந்தனைக்குள் மாழ்கின்றார்கள் எனலாம்.

அன்னியச் செலாவணி:

இலங்கையில் இருந்து 18 லட்சம் உழைப்பாளிகள் மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பணிப்பெண்கள் அனுப்பும் பணமே மிக முக்கிய வருவாயாகும். ஆண்டொன்றிற்கு பெண்களை ஏற்றுமதி செய்யும் அரசாங்கம் வருடமொன்றிற்கு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை அன்னியச் செலாவணியாக பெற்றுக் கொள்கின்றது. ஆனால் வரவு செலவு அறிக்கையில் ஆண்டொன்றுக்கு கிடைக்கும் 6பில்லியன் டொலர்களை 10 பில்லியனாக ஆக்க இலக்கை கொண்டுள்ளதாக வரவுசெலவுத் திட்டத்தில் உரையாற்றிய போது மகிந்த தெரிவித்தார்.

உடலுழைப்பைப் போன்று மூளையுழைப்பை மத்தியகிழக்கு, ஐரோப்பியா, கனடா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா என செல்கின்றது. இவ்வாறு அந்நாடுகளுக்கு செல்கின்ற போது அந்தந்த நாடுகளுக்கு மனிதமூலதனமாக மாறுகின்றது. இன்று படித்த பின்னர் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று பணக்கார நாடுகளையே வளம்படுத்துகின்றனர், பணக்கார நாடுகளோ முன்னேறுகின்றன. எமது நாடுகளோ உழைப்பாளிகளை, அறிஞர்களை இழந்துவிட்டு தவிக்கின்றது.

“இந்த சந்தேகத்திற்கு இடமற்ற சார்பு உறவைத்தான் வாங்குவோனுக்கும் விற்போனுக்கும் இடையிலான மூலதனம் என்ற பண்டத்தின் சொந்தக்காரன், உழைப்பென்ற பண்டத்தின் சொந்தக்காரன் ஆகிய சம அளவு சுதந்திரமான இருபண்டச் சொந்தக்காரர்களுக்கு இடையிலான சுதந்திர ஒப்பந்த உறவாக உருமாற்றம் செய்ய முடிகிறது. ஆனால் கொலனிகளில் இந்த அழகான கற்பனை சிதறடிக்கப்படுகிறது. அறுதியான சனத்தொகை தாய்நாட்டை விட இங்கே வெகுதுரிதமாகப் பெருகுகிறது, ஏனெனில் பல உழைப்பாளிகள் ரெடிமேடு வயது வந்ததோராக இவ்வுலகில் நுழைகின்றனர், எனின் உழைப்புச் சந்தை எப்போமுமே இருப்புக்குன்றியுள்ளது. உழைப்பின் சப்ளை-கிராக்கி விதி பொடிப் பொடியாக நொறுங்கி விழுகிறது. ஒரு புறம், பழைய உலகம் சுரண்டல் மற்றும் “துறவின்” தாகமெடுத்து மூலதனத்தை இடையறாது உள்ளே போடுகிறது.” (ப 121 -மூ.தோற்றம்) அங்கு சென்று வேலைகளை வழங்குகின்ற போது அது அனைவரும் மூலவளம் என அந்நாடுகள் கணிப்பிடுவதில்லை. வறிய நாடுகள் மேற்குதேசங்களின் நலனில் அமைந்து கல்வித் திட்டத்தின் ஊடாக மூளையுழைப்பாளிகளை உருவாக்கிக் கொள்கின்றது. இதற்கு வறிய நாடுகளின் வரிப்பணம் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு வறிய நாடுகளின் வரிப் பணத்தின் மூலம் உருவாக்கப்படும் மூளையுழைப்பை வழங்கக் கூடியவர்களுக்கான திறமையை பயன்படுத்தக் கூடிய முறையில் நாட்டில் தொழிற்துறை உருவாக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கை சிங்கப்பூர் போல உருவாகும் என்பது கற்பனைக்கு உரியதாகும்.

வெளிநாடுகளில் நாடுகளில் 18 லட்சம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 70 வீதத்தினர் பெண்களாவர். சவுதியில் மட்டும் 5.5 மில்லியன் வெளிநாட்டவர்கள் பணிபுரிகின்றனர். இதில் 4 லட்சம் பேர் இலங்கையர்கள். இலங்கையின் சனத்தொகையில் 10 வீதத்தினர் இவ்வாறு வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மாதாந்தம் 18 ஆயிரம் பெண்கள் மத்தியகிழக்கிற்கு வேலைக்காக பயணிக்கின்றனர்.

தொழிற்துறைகளை மக்களின் திறமையையும், வாழ்வாதாரத்தை வளம்படுத்தும் முகமாக விரித்தி செய்யாததினால், தமது உடலுழைப்பை வழங்க அன்னிய தேசங்களுக்குச் செல்கின்றார்கள். நிரந்தர வேலையின்மை, போதிய வருமானமின்மை, போதிய உயர்கல்வியற்ற நிலமை, சீதனம் என்று பல காரணங்களால் அன்னிய தேசங்களுக்கு உடலுழைப்பை விற்பதற்கான செல்கின்றார்கள்.

எப்படியாவது வறுமையைப் போக்க வேண்டும் என்பதற்கான மத்திய கிழக்கிற்கு (சின்னநாடுகள்) செல்ல முயற்சிக்கின்றார்கள். (தமிழர்கள் மேற்கு தேசங்களுக்கு செல்ல முயற்சிக்கின்றார்கள்) றிசானா போன்று லட்சக் கணக்காணவர்கள் படிக்க வேண்டிய வயதிலும், சொந்த நாட்டில் தொழில்துறைகளில் உழைப்பை வளங்க வேண்டிய நிலையில் வறுமையைப் போக்க செல்கின்றார்கள். எத்தனையோ றிசானாக்கள் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து சிறு தொகையை சம்பளமாக பெற்றும் அவர்களின் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்தை காண முடியாமலும் இந்த பொருளாதார அமைப்பு சுரண்டுகின்றது.

இன்று றிசானாவிற்கு மனமிரங்குவது, கண்டிப்பது, அவளுக்கான ஆதரவுச் செயற்பாடுகளை செய்துவிட்டு பின்னர் நாளை மறந்துவிடுவதல்ல. மீண்டும் றிசானாக்களை உருவாகாமல் தடுப்பது எவ்வாறு என்ற கேள்வியூனுடே தேடல்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்தச் சமூகம் உற்பத்தி செய்யும் மனித வளத்தை எவ்வாறு உயர் உற்பத்தி சக்தியாக வளர்த்தெடுக்க முடியும், தொடர்ச்சியாக வேலையற்றவர்களை உருவாக்கிக் கொள்ளாத முறையில் திட்டமிட்ட பொருளாதார அமைப்பை எவ்வாறு உருவாக்குவது என்று சிந்திக்க வேண்டும்.

நாம் அரசாங்கப் பிரதிநிதிகளை தேர்தல் காலத்தில் தெரிவு செய்து விட்டு போய்விடுவது தான் நாட்டின் குடிக்கான கடமையாகக் கொள்கின்றோம். ஆனால் அதுவல்ல நாட்டின் குடிக்கான கடமை. தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பொருளாதாரத்தினை வளர்த்துக் கொள்ள என்ன திட்டங்களை உருவாக்குகின்றார்கள் என்று கவனிக்க வேண்டும். அவர்கள் போடும் திட்டமென்பது மக்களின் பொருளாதாரத்தினையும், நாட்டிற்கு வளர்ச்சியை ஏற்படுத்துகின்றதா என மக்கள் கவனிக்க வேண்டும். இவ்வாறான தேடலின் ஊடே மொத்த அவலத்திற்குமான முடிவும், தீர்வுகள் எட்டப்பட வேண்டும்.

மக்களை திவாலாக்கும் முதலாளித்துவம்... (பகுதி 1)