Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தனிமரம்

நான் விழுந்து கிடக்கிறேன்.

மூச்சை இழுத்து விட முடியவில்லை. ஏதோ வந்து அடைத்து நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கு. இடதுபக்க கையும் தோளுமாய் சேர்ந்து வலிக்கிறது. காலும் கூட இழுத்து இழுத்து வலிக்கின்றது. நெஞ்சும் முதுகும் சொல்ல முடியாத நோவினால் என்னை இறுக்கிக் கொள்கிறது.

ஒரு கையாலே ஊண்டி மறு கையாலேயும் அமத்தியபடி மெல்ல எழும்ப முயற்சிக்கிறேன். அது என்னாலே முடியாமல் கிடக்கு. ஒரு விரலைக்கூட அசைக்க முடியவில்லை. கன்னப்பக்கமும் கூட ஏதோ ஈரமாய்… சாப்பிட்ட சாப்பாடுதான், சத்தியாய் எடுத்திருக்கிறேன் போல் இருக்கு.

சூடாய் காய்ச்சல் போலே கொதித்திருந்த உடம்பு கூட இப்போ தண்ணி போல குளிரத் தொடங்குகிறது.

ஐயோ எனக்கு காட்டற்ராக் தான் வந்திருக்கோ….

அல்லது வேறுதான் வருத்தம் வந்ததோ….

ஐயோ என்ரை பேரப்பிள்ளையளைக் கூடப் பார்க்காமல் செத்துப் போடுவன் போல கிடக்கு. வழமையாக பள்ளிக்கூடம் முடிஞ்சு வேளைக்கு வந்து விடும் இந்தப் பிள்ளைகள் கூட இண்டைக்கெண்டு எங்கே போய்ச் சேர்ந்தார்களோ தெரியாது.

ஐயோ நான் அனாதை போலச் செத்துப் போடுவேனோ….என்று வெறுமையாய் மனம் தத்தளித்தது.

போர்க்காலங்களில் சுடப்பட்டு அனாதரவாய் வீதியிலும் வெளியிலேயும் கிடந்து துடிக்கும் மக்களைப் போலவே நானும் இங்கு.. தனித்துக் கிடந்து துடிக்க வேண்டியிருக்கு.

மெல்ல மெல்ல அரக்கியாவது பார்க்கவேண்டும் எண்டு நினைக்கிறேன், முடியாமல் கிடக்கு. வழமையை விட இப்ப என்ரை நெஞ்சுக்குள்ளே ஏதோ வந்து அமுக்கி அமுக்கி இறுக்குது.

தொண்டையெல்லாம் இறுகி காற்று வரமுடியாமலிருக்கு.

ஏதோ வழிந்து வந்து வாயில் உப்புக்கைப்பது போலிருக்கு…

இரத்தம் தான். வீழ்ந்ததனால் தலையில் எங்கேயாவது அடிபட்டிருக்கோ….. தெரியவில்லை.

இது தான் என்னுடைய கடைசி நாளோ….

இவை தான் எனது இறுதிக் கணங்களோ….

இது தான் என்ரை வாழ்வின் முடிவோ….

நினைத்துப்பார்க்க முடியாமலிருக்கு.

என்னை மேலும் மேலும் பயம் சுற்றிக் கொள்ளுகிறது. என்ரை இந்த எழுபத்திரண்டு வருட வாழ்விலே இப்படி ஒரு நாளும் நான் பயந்ததே கிடையாது.

எல்லாம் இருட்டாகவும் சூனியமாகவும் கிடக்கு.

நான் இப்ப சாகக்கூடாது. எப்படியும் தப்பித்துவிடணும். ஊருக்குப் போய் என்ரை நாட்டிலே என்ரை சொந்த மண்ணிலே தான் சாக வேண்டும்.

என்ரை ஆச்சி அப்பு எரிஞ்ச சுடலையிலேதான் எரிய வேண்டும்

கடவுளே நான் இப்ப சாகவே கூடாது.

கடவுளே என்னைச் சாகவிடாதே…

அங்கே போய் என்னைப் போன்ற இந்த வயோதிபச் சனங்கள் இங்கே இந்தப் புலம்பெயர் தேசத்திலே, வந்து அனுபவிக்கின்ற வலிகளையும் கொடுமைகளையும் வேதனைகளையும் அங்கே போய் சொல்ல வேண்டும்.

என்னைப் போன்ற தகப்பன்மாரும், தாய்மாரும,; சொந்தப் பிள்ளைகளையே நம்பி, இங்கு வந்து படுகின்ற ஏமாற்றங்களையும், அவலங்களையும் என்ரை நாட்டிலே போய் சொல்லித் தீர்க்க வேண்டும்.

ஏதோ அங்கிருப்பவர்கள், இங்கே வெளிநாட்டிலே தேனும் பாலும் ஓடுதெண்டு நினைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே இனிமேலும் இவர்களோடும் இருக்கக் கூடாது, இருக்க முடியாதெண்டு நினைத்திருந்தேனே தவிர ஆனால் சாகவேண்டும் எண்டு நினைக்கவேயில்லை.

ஒரு தரமோ, இரண்டு தரமோ, எத்தனை முறை என்ரை மகனும் மருமகளும் பேசி திட்டி, அவமானப்படுத்திய வேளையில் என்ரை வெட்கத்தையும், ரோசத்தையும் விட்டிட்டு, கேட்டும் கேளாதது மாதிரியும், அந்த வலிகளைத் தாங்கிக் கொண்டு அவற்றையெல்லாம் மறுதலிக்காமல் எப்படியெல்லாம் ஒத்தோடியிருப்பேன்.

எப்படி எப்படியெல்லாம் கனவுகளுடனும் நினைவுகளுடனும் எங்கள் நாட்டிலே உங்களை வளர்த்த எங்களுக்கே இந்த நிலமையென்றால், இந்த புலம்பெயர் தேசத்திலே வளரும் உங்கள் பிள்ளைகளால் என்னென்ன….. துன்பங்களையும் துயரங்களையும் நீங்கள் அனுபவிக்கப் போறியளோ……?

பாவம் இந்தப் பிள்ளைகள், கஸ்ரப்பட்டு, இரவு பகலெண்டும், வேலை வேலையெண்டும் காசு காசு எண்டும் கண்மண் தெரியாமல் ஓடித்திரியுதுகள். இந்த வேலைக் களைப்பாலேயும் இந்த நெருக்கடிகளினாலேயும் தான் ரென்சன்படுதுகள், கோவப்படுதுகள் எண்டும், தாய் பிள்ளை வேறு தெரியாமல் நடக்குதுகளே எண்டு இவ்வளவு நாளும் பொறுத்திருந்தேன்.

இருந்தும்…..

இந்தப்பிள்ளைகளை மட்டும் கோவிச்சு என்ன பிரியோசனம் இவர்கள் என்ன மற்றவர்களிடமிருந்து விதிவிலக்கானவர்களா…. இந்தத் தமிழ்ச் சமுதாயமும், எங்கள் மக்களும் கூட தானென்றும் தனக்கென்றும் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறதுகள்.

அப்ப இருந்த அன்பும் பாசங்களும் நேசங்களும் எப்போவோ எங்கேயெல்லாம் கரைசேர்ந்து விட்டுது.

சொந்த நிலத்திலேயே எல்லாம் இவை இல்லாத போது இந்தப் புலத்திலேயா இவை கிடைக்கப் போகுது.

ஆனால் இதுகள் இரண்டும், ராத்திரி கதைச்சதுகளை நினைக்க நினைக்கத் தான்…. எனக்கு மறக்க நினைத்தாலும் முடியாமலிருக்கு….

அந்தக் கதைகள் இப்போதும் கூட என்ரை காதிலே ஒலிச்சுக் கொண்டிருக்கு.

இஞ்சையப்பா கடைசியாச் சொல்லுறன்…. கேளுங்கோ….? இனிமேல் உங்கடை கொப்பாவை இஞ்சை வைச்சிருக்கிதாலே ஒரு பிரியோசனமும் இல்லை. மாறாக சாப்பாடுக்கும் மருந்துக்கும் செலவழிப்பது தான் மிச்சம். பத்தாக் குறைக்கு, சும்மா இருந்து கொண்டு, இந்த வீட்டையும், ரொய்லற்றையும் அல்லோ நாசமாக்கிக் கொண்டிருக்கிறார்.

இவர் இனியும் இஞ்சை இருக்கிறதாலே வெளியாலே போய் ஒரு றெஸ்ரோறண்ட் எண்டு சாப்பிட முடியுதோ…..? அல்லது ஒரு மக்டோனால்ஸ் எண்டுதான் போய்வர முடியுதோ….?

முந்தித்தான் பிள்ளையள் சின்னனாய் இருக்கும் போது அப்பிடி இப்படி எண்டு விட்டிட்டு போனனாங்கள், உதவியாயும் இருந்தது. இப்ப பிள்ளையளும் வளர்ந்திட்டுதுகள்…. இனியும் இவர் இங்கே தேவைதானா…. கொஞ்சம் யோசியுங்கோ

நாட்டிலே பிரச்சினையும் முடிஞ்சுது. ஊருக்கு அனுப்பினால் அங்கே யாரெட்டையும் காசைக்கீசை கொடுத்துப் பார்க்கச் சொல்லி சமாளிச்சுப் போடலாம்.

இனி என்ன…? கனகாலம் இருக்கப் போறாரே….?

இதுக்கு கெதியா…. ஒரு நல்ல முடிவா எடுங்கோ.. இல்லாட்டி பெரிய பிரச்சினை தான் வரும்….

என்னப்பா கொஞ்சம் மெல்லவாக் கதையப்பா, அவர் முழிச்சாலும் கேட்கப் போகுது. ஏனப்பா எனக்கு உதுகள் ஒண்டும் விளங்காது எண்டு கதைக்கிறாயே. உதெல்லாம் யோசிக்காமல் இருக்கிறனெண்டு நினைக்கிறாயே…..?

ஊருக்கு அனுப்பிறது எண்டால், யாரெட்டை… அனுப்பிறது. யாரும் காசுக்குத்தான் வந்து பார்த்தாலும் எங்கே வைச்சுப் பார்க்கிறது.

அது தானே நானும் அண்ணாவும் அக்காவும் சேர்ந்து இவருக்குத் தெரியாமல் எங்கள் எல்லாருக்கும் எண்டிருந்த அந்த வீட்டையுமல்ல விற்றுப் போட்டம். பத்தாக்குறைக்கு பக்கத்துப் பனங்காணியையுமல்லே விற்றுப் போட்டம். அது தான் நானும் யோசிக்கிறன்…..?

ஐயோ என்ரை வீடும் காணியும்… விற்றுப் போட்டுதுகளோ….

ஓவெண்டு கத்திக் குளறவேண்டும் போலிருந்தது…. அது என்னால் முடியாமல் இருந்தது.

இதுக்குப் பிறகு அவர்கள் என்ன கதைத்தார்களோ…. என்னை என்னதான் திட்டிச் சபிச்சார்களோ தெரியாது. அவை என்ரை காதிலேயும் ஏறவும் இல்லை.

என்ரையம்மா சாவதற்கு முன்னர், இது எங்கடை பரம்பரைச் சொத்து. என்ரையம்மா எனக்குத் தந்ததை, நானும் இதை உனக்குத் தருகிறேன். இதையும் நீ உன்ரை பிள்ளைகளுக்குக் கொடுக்கவேணும், இது தொடர்ந்து வரவேண்டும். இந்தப் பின்வளவுப் பனங்காணிதான் எங்கள் எல்லோரையும் வளர்த்தது எண்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா எண்டு எனக்கு அம்மா சொல்லித் தந்தவ.

ஆனால் இதுகளோ எல்லாம் அழிச்சுப் போட்டு நிக்குதுகளே….

அந்தப் போர்க் காலத்தில் கூட, எத்தனையோ செல்லடிக்கும், குண்டடிக்கும், எத்தனையோ பனைகளும் தென்னைகளும் அழிந்தபோது, எங்கடை வீட்டுப் பனைகளெல்லாம் எவ்வளவு கம்பீரமாய் நிண்டு எங்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாது, எங்களுக்கு எவ்வளவு வருமானத்தைச் சேர்த்துத் தந்தது.

அதைப் போய்…

விடிய எப்படியும் இவனிடம் சண்டைப்பட்டாவது என்னை ஊருக்கு அனுப்பி வை எண்டு கேட்க வேண்டும். உங்கடை கௌரவம் குறையாமல் எங்கேயாவது போய் கோயில் குளத்திலே இருந்துகொண்டு என் காலத்தைக் கழித்து விடுவேன் எண்டு அவனுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேனே... ஆனால் இந்த வருத்தம் வந்து என்னைச் சாகடித்துவிடும் போலிருக்கே…

வழிந்தோடும் இரத்தம் நிலமெல்லாம் ஈரமாய்… என்னால் நினைக்கக் கூட முடியாமல் இருக்கு.

என்னுடைய மூச்சு நன்றாகவே குறைந்து விட்டது. உடம்பெல்லாம் தளர்ந்து முழுமையாய் சோர்ந்தே விட்டது. என்னையறியாமல் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாய் மூடிக் கொள்கிறது.

எல்லாம் வெறும் இருட்டு.

ஆடாமல் அசையாமல் பிணமாய் கிடக்கின்றேன்.

எங்கேயோ தூரத்தில் கேட்பது போலிருக்கு. யாரோ கதவைத் திறப்பது போல்…. பிரமையாகவும்….

வேகமாய் என் பேரன் ஓடிவருவது போலவும்….

ஐயோ அம்மா… இங்கே அப்பப்பா… விழுந்து கிடக்கிறார், தலையெல்லாம் இரத்தம்…

சத்தியும் எடுத்திருக்கிறார்…

டேய்… டேய் கிட்டப்போகாதே.. அவரைத்தொடாதே…

பிறகு பழியள் கனக்க வரும்..

ரெலிபோன் எடுப்போம்….

தடதடவென வந்த யாரோ இரண்டு பேர் என்னைத் தூக்கி ஒரு வண்டியில் ஏற்றுகிறார்கள்.

இருவரும் தங்கள் பாசையில் கதைக்கிறார்கள்.

அது எனக்குத் தெளிவாக விளங்கியது.

நான் செத்துவிட்டேனாம்.

(நிலாதரன்)