Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

பெபிலியான "பேஷன் பக்" விற்பனை நிலைய தாக்குதல் நேரடி அறிக்கை

பெபிலியான "பேஷன் பாக்" நிறுவனம் மீதான தாக்குதல் நடத்தியவர்களையும் தாக்கப்பட்டவர்களையும் சந்தித்து கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல தடைகளை தாண்டி சென்று அவர்களை சந்தித்தமை பல உண்மைகளை வெளிப்பட செய்தது.

பிரதானமாக இரண்டு விகாரைகளின் விகாராபதிகள் தாக்குதலை வழிநடத்தியுள்ளனர். அதில் பிரதானமானவர் தாக்குதல் நடத்த முன் விகாரை மூலம் பிரதேசவாசிகள் பலர் விகாரைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் . குறித்த நிறுவனத்தில் வேலை செய்யும் இஸ்லாமியர் ஒருவர், ஓர் சிங்கள பெண்ணை துஸ்பிரயோகம் செய்ததாகவும் இதனை இத்துடன் விடக்கூடாது என்றும் குறிப்பிட்ட பௌத்த பிக்கு, எனவே அவ் நிறுவனத்தை தாக்க வேண்டும் என்றும் குறித்த பிரதேசத்தில் விடுதிகளில் தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை வெளியேற அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதன் பின்னர் அயல் பிரதேசத்தவர்களும் இணைந்து கொள்ள தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதேசத்தில் வசித்த இஸ்லாமியர்கள் வெளியேறுமாறு அச்சுறுத்தப்பட்டதுடன், தாக்கப்பட்டும் உள்ளனர். சிங்கள வீடு ஒன்றில் வாடகை அறையில் வசித்த ஒரு இஸ்லாமியர் ஒருவரை மேற்குறித்தவர்கள் தாக்க முற்பட்ட வேளை வீட்டு உரிமையாளர் தடுக்க, அவரும் தாக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி கல்லெறி தாக்குதலுக்குள்ளாகி தலையில் காயபட்டுள்ளார். இக்குடும்பம் அரியல் ரீதியாக எனக்கு ஓரளவு அறிமுகமான குடும்பம். இவர்கள் பாதுகாப்பு தேடி விகாரைக்கு ஓடி உள்ளனர். அப்போது அங்கிருந்து பலர் உடை மாற்றி கொண்டு குறித்த தாக்குதலை நடத்த செல்வதை அவர்கள் கண்டுள்ளனர். பின் பொலிசார் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யவே ஊர் வாசிகள் விகாரையின் பிக்குவுடன் வாக்குவாதப்ப்டுள்ளனர். விகாரையின் பாதுகாப்பு குழு கூடி இதை தீர்த்து வைத்துள்ளது.

சிங்களவர்களால் தாக்கப்பட்ட அந்த சிங்களவரும் இஸ்லாமியர்களை அழிக்க தான் வேண்டும் என்று தான் கூறினார். பிரதேச மக்கள் விகாரையின் பிக்குவுடன் முரண்பட்டு அவரின் மேல் பெரும் கோவத்தில் இருக்கின்றார்களே தவிர பொது பல சேனாவை குறை சொல்லவில்லை. அவர்களும் இஸ்லாமியர்களுக்கு எதிராகவே உள்ளனர். விடயங்களை வெளியே சொன்னால் ஊர் விகாரைக்கு கெட்ட பெயர் என்ற பிக்குகளின் அறிவுறுத்தலுக்கு இணங்க அனைவரும் விடயத்தை மூடி மறைக்கவே முயல்கின்றனர்.

விடயத்தை சரியான பெயர் விபரங்களுடன் சிரச தொலைக்காட்சியின் உயர் மட்ட நண்பர் ஒருவருக்கு கூறிய போது சிரச தொலைக்காட்சி இனவாதம், மதவாதம் தொடர்பான செய்திகளை காட்சிப்படுத்துவதில்லை என்ற கொள்கையில் இருப்பதாக கூறி நழுவி விட்டார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பலரை என் கட்சி தோழர்கள் அறிவார்கள். அவர்கள் மூலம் பொது பல சேனா இச் சம்பவத்தை திட்டமிட்டு நடத்தியது நன்கு தெளிவாவானது.

இப்படி சிறு சிறு சம்பவங்கள் பல நடந்தும், இஸ்லாமியர்கள் அமைதி காப்பதன் மர்மம் தான் என்ன? இதற்கு பின் எல்லோரும் மறுக்கும் தவறவிடும் அரசியல் இருக்கின்றது வெளியே சொன்னால் இவனுக்கு விசர் என்கிறார்கள்... கலிலியோவையே தூற்றிய உலகம் என்னை மட்டும் விட்டு விடுமா என்ன?

-தோழர் பழ ரிச்சாட்