Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

பாசிச அட்டுழியம் புரியும் அரச யந்திரத்தினை ஒன்றிணைந்து எதிர்த்து போராடுவோம் - புதிய-ஜனநாயக மா-லெ கட்சி

வடக்கில் தொடரும் வன்முறைத் தாக்குதல்களுக்குப் பின்னால் பேரினவாதப் பாசிசத்தின் அடக்குமுறைக் கரங்கள் இருந்து வருகின்றன. இதனை ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், ஊடகப் பணிமனைகள், பல்கலைக்கழக மாணவர்கள், மக்கள் போராட்டங்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் மீது தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் மோசமான வன்முறைத் தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன. அண்மையில் கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணிமனையும் அதனைத் தொடர்ந்து உதயன் பணிமனையும் குண்டர்களின் வெறித்தனத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. இவற்றின் மூலம் கருத்துரிமைச் சுதந்திரமும் அரசியல் கட்சிகளுக்கு உரிய ஜனநாயக உரிமைகளும் அப்பட்டமாகவே மறுக்கப்பட்டுள்ளன. இவற்றை எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இவற்றுக்கு மக்கள் மௌனம் சாதிப்பதற்குப் பதிலாக அணிதிரண்டு எதிர்ப்புத் தெரிவித்து நியாயம் கேட்க வேண்டும். இதில் கட்சிகளின் தலைமைகள் ஒன்றினைந்து பொதுக் கோரிக்கைளை முன்வைத்து வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாதுவிடின் அடக்குமுறையானது மேன்மேலும் விரிவடைந்து செல்லவே செய்யும்.

யுத்தம் முடிவுற்று நான்கு வருடங்களாகின்றன. இன்றுவரை வடக்கு கிழக்கில் ஜனநாயகம், இயல்பு, வாழ்வு அரசியல் தீர்வு என்பன மறுக்கப்பட்டவைகளாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் ஊடகங்களையும், அரசியல் கட்சிகளையும், மாற்று அரசியல் கருத்துக்களையும் ஒடுக்கும் வகையிலேயே அரச யந்திரம் நடந்து கொள்கின்றது. இவற்றின் மூலம் மறைமுகமாகவும் நேரடியாகவும் மக்கள் மிரட்டப்படுகின்றனர். அரசியல் பேசுவது ஆபத்தானது என்ற பல்முனை அடக்குமுறைக் கரும்புகை அரச தரப்பில் இருந்து பரப்பப்பட்டு வருகின்றது. அதன் வெளிப்பாடே உதயன், யாழ் தினக்குரல், வலம்புரி ஆகிய வடபுலத்து பத்திரிகைகள் மீதான தொடர் தாக்குதல்களாகும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்கள் கைதுகள் இளந் தலைமுறையினரை அச்சுறுத்தி மௌனிக்கச் செய்யவே முன்னெடுக்கப்பட்டது. இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிளிநொச்சி பணிமனை தாக்கப்பட்டுள்ளதுடன் அப்பிரதேசத்தின் உதயன் பனிமனையும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. ஏனைய அரசியல் கட்சிகளும் தீவிர கண்கானிப்புக்கும் மிரட்டல்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. இடம்பெறும் தொடர்த் தாக்குதல்களும் அடக்குமுறைகளும், வடக்கில் ஜனநாயகம், மனித உரிமைகள், இயல்பு வாழ்வு, அரசியல் தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் பதிலுக்குப் பேரினவாதப் பாசிசம் மென்மேலும் தமது கோரக் கரங்களை விரித்து வருவதையுமே வெளிப்படுத்தி வருகின்றன. இவற்றுக்கு உரிய பதில் இறுக்கும் வல்லமையும் சக்தியும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் அனைத்து மக்களிடமே இருக்கிறது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.{jcomments on}