Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இனவெறி வெற்றியாக கொண்டாடவுள்ளனர்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் முன்றாண்டு நிறைவை முன்னிட்டு, நேற்று 8 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரையில் ஒரு மாத காலத்தை போர் வீரர்கள் மாதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரகடனப் படுத்தியுள்ளார்.

இலங்கையில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட, இராணுவ வீரர்களின் போர் வெற்றியை கொண்டாடும் முகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இராணுவ சேவைகள் அதிகாரி சபையின் உறுப்பினர்கள் இராணுவக் கொடியினை நேற்று அலரிமாளிகையில் வைத்து அணிவித்தனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை முதல் போர் வெற்றியின் தேசியவிழா தலைநகர் கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெறவுள்ளதுடன் கிளிநொச்சி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் விஷேட இராணுவ வெற்றி விழாக்கள் நடைபெற உள்ளது.

கொண்டாடப்படவுள்ளது… புலிகளை வெற்றி கொண்டதிற்கான கொண்டாட்டமாக கொள்ளமுடியாது. இது தமிழ் மக்களை படுகொலை செய்ததிற்கான வெற்றியாகவே கொள்ளலாம்.

ஆம் இது இனப்படுகொலைக்கான கொண்டாட்டம் தான். இதைக் கொண்டாடி… சிங்கள மக்கள் மத்தியில் இனவெறியினை தொடர்ச்சியாக்கி… பயங்கரவாதத்தை ஒழித்தோம் எனும் போர்வையில் இனவெறி களியாட்டங்கள் ஆக்கப்படுகின்றன.

பாசிஸ குடும்பாட்சியை தொடர… சிங்கள மக்கள் தாங்கள் அன்றாடம் அனுபவிக்கும் இராணுவ-அரசியல்-பொருளாதார-ஜனநாயக மறுப்பு சர்வாதிகார சதிராட்டங்களின்பாலான கவனங்களில் இருந்து, அவர்களை திசை திருப்ப, இப்பேர்ப்பட்ட இனவெறி வெற்றிக்கொண்டாட்டங்கள் மகிந்தாவிற்கும்… அவரை அடிவருடும் சிந்தனையாளர்களுக்கும் தேவைதான்… கண்டிப்பாக தேவைதான்..

ஆனால் மகிந்த ஆட்சியின் இனவெறிச் சூட்சுமத்தின் தார்ப்பரியத்தை சிங்கள மக்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர். நீண்டகால நோக்கில் அவர்களை ஏமாற்ற முடியாது.

சமகால அரசியல் தளத்தில் நீங்கள் மக்களை தற்காலிகமாக இனவெறியில் வெற்றி காணலாம். நீண்டகால நோக்கில் அவர்கள் உங்களை சகலதிலும் வெற்றி கொள்வர். அரசியல் அரங்கில் இருந்து உங்களை அப்புறப்படுத்துவர்… தங்களுக்கானவைகளை சரியாக செய்வர். அதுகொண்டு எதிலும் சமமாக இருப்பர். அப்போ உங்கள் இனவெறி குப்பைத்தொட்டிக்குள் வீசப்படும்.

-அகிலன்

9/5/13{jcomments on}