Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

அரச படைகளின் அராஜகத்தின் மத்தியிலும் சப்ரகமுவ பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்!!

சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் நிர்வாகத்தினால் மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்குமுறைகளை எதிர்த்து மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். மாணவர் ஒன்றியம் மற்றும் ஐந்து மாணவர்கள் மீதான வகுப்பு தடையை நீக்க கோரி மூன்று மாதகாலமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் போரடி வருகின்றனர். இதன் உச்சகட்டமாக கடந்த வைகாசி 18 அன்று (ஜீன் 1) மாணவர்கள் நடத்திய ஆர்பாட்த்தின் மீது ஸ்ரீலங்கா பொலிசார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தி தடியடி பிரயோகம் மேற்க்கொண்டனர்.

இதன்போது அறுபதிற்கும் அதிகமான மாணவர்கள் காயங்களுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றனர். ஏராளமானோர் சிறிய அடிக்காயங்களுக்குள்ளாகினர். ஆர்பாட்டத்தில் நின்ற பெண் மாணவர்கள் மீதும் பொலிசார் காடைதனமான தாக்கதல் மேற்கொண்டனர்.

சம்பவத்தின் போது வவுனியாவினை சேர்ந்த மாணவி ஒருவர் ஒரு காட்டுமிராண்டி பொலிசுகாரனின் தாக்குதலினால் அவ்விடத்திலே விழுந்தார். மேலும் பத்திற்கும் அதிகமான மாணவர்களை பொலிசார் தரதரவென்று இழுத்து சென்று பொலிஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். பிறகு கைது செய்ததாக ஊடகங்கள் மூலம் அறிவித்தனர். இத்தனை நடந்தும் மாணவர்கள் போராட்டங்களை கைவிடோம் என்று அறிவித்து, தங்கள் போராட்டத்தினை தைரியத்துடன் முன்னெடுத்தனர். சக பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிசார் நடத்திய காட்டுமிராண்டி தாக்குதலினை கேள்வியுற்று கொதித்தெழுந்த பேராதனை, றுகுனு,ரஜரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கி ஆர்பாட்டம் நடத்தினர். நிலைமை கட்டுக்கடங்காமல் கைமீறி செல்வதை உணர்ந்த சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகம் கொஞ்சம் இறங்கி வந்து வகுப்புதடை விதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பரீட்சை எழுத அனுமதி அளித்தது.

கடந்த பங்குனி 2 ம் திகதி (மார்ச் 15) அன்று மாணவர் ஒன்றியம் மீது தடை விதிக்கப்பட்டது, அதனை தொடர்ந்து பங்குனி 4 (மார்ச் 17) ஒழுக்காற்று நடவடிக்கை என்ற பெயரில் 5 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதி கட்டடத்தையும் மைதானத்தினையும் திறந்து வைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயளாலர் கோட்டபாய ராஜபக்சவும் உயர்கல்வி அமைச்சர் திசாநாயக்கவும் வரவிருந்தனர்.

இவர்கள் இருவரும் திறப்பு விழாவிற்காக பல்கலைக்கழகத்திற்குள் வருவதினை எதிர்த்த மாணவர் ஒன்றியம் அவர்கள் கலந்துகொண்டால் எதிர்ப்புநடவடிக்கைகளை நடத்துவதோடு விழாவினை முற்றாக புறகணிப்போம் என்று அறிவித்தனர். வேறு வழியின்றி திறப்புவிழா கைவிடப்பட்டது. இதனால் மாணவர் ஒன்றியத்தினை பழிதீர்க்க காத்திருந்த நிர்வாகம் ஒன்றியத்தினை தடை செய்ததோடு போலிகுற்றசாட்டின் பெயரில் ஒன்றியத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் ஐவர் மீது வகுப்பு தடை விதித்தது.

தடையை நீக்க கோரி நிர்வாகத்துடன் நடத்திய தொடர் பேச்சுவார்த்தை தோல்வியடைய, மாணவர்கள் தடையை நீக்க கோரி பங்குனி 15 ம் திகதி (மார்ச் 28) முதல் வகுப்பு புறகணிப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இடையில் பிரதேச மக்கள், ஊடகவியளாளர்கள், தொழிற்சங்கங்களுடன் இயக்கம் ஒன்றினை ஆரம்பித்து அநீதிக்கு எதிராக போராட ஆரம்பித்தனர். சுழற்சி முறையில் நடத்திய தொடர் வகுப்பு புறகணிப்பிற்கு நிர்வகாம் மசியாததினால் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். உபவேந்தரின் அலுவலகத்திற்கு முன்னால் கொட்டில் அமைத்து இடைவிடாத சத்தியாகிரகத்தில் குதித்தார்கள் மாணவர்கள்.

சத்தியாகிரகத்தின் போது கடந்த வைகாசி 9 ம் திகதி ( மே 23) அன்று நள்ளிரவு ஒரு மணியளவில் பல்கலைக்கழக பிரதன நுழைவாயிலிற்கு அருகில் வெள்ளை வாகனத்தில் வந்த குழுவினர் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை நடத்திவிட்டு சென்றனர். சத்தியாகிரகத்தினை அச்சுறுத்தி அடக்கும் முயற்சியின் பின் பொறுமை இழந்த நான்கு மாணவர்கள் வைகாசி 15 (மே 29) முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் குதித்தனர்.

தொடர்ந்து நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததாலும் நிர்வாகம் கண்டும் காணாமலும் இருந்ததாலும் வெகுண்டெழுந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் செல்லும் பதுளை- கொழும்பு வீதியை இடைமறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தினையே பொலிசார் காட்டுமிராண்டிதனமான தாக்கி களைத்தனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இறங்கிடவே நிர்வாகம் மாணவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கும் பல்கலைக்கழகத்தினுள் பிரவேசிப்பதற்கும் விதித்திருந்த தடையை நீக்கி நிலைமையயை சமாளித்தது. பரீட்சைகள் நடைபெறுவதினால் போராட்டங்களை தற்காலிகமான இடைநிறுத்திய மாணவர்கள் தொடர்ந்து நீதி நிலைநாட்டப்படும் வரை போராட போவதாக அறிவித்துள்ளனர். சில அரசியல்வாதிகள் தங்கள் அரசியலிற்காக பல்கலைக்கழகங்களை தவறாக பயன்படுத்த முனைவதும், அதற்கு அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் பதவிக்கு வரும் நிர்வாகத்தினர் துணைபோவதும் கண்டிக்கதக்கதும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்கதக்கதுமாகும்.

சம்பந்தபட்டவர்கள் இது போன்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்திட வேண்டும். இந்தவிடயத்தில் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டு பல்கலைக்கழகங்களையும் உரிமைகளையும் பாதுகாக்க செயற்படுவதும் அவசியமானதாகும்.