Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்கள் வாக்களித்ததோடு மட்டும் நின்று விடாது அரசியல் விழிப்புடன் இருக்க வேண்டும்!

தமிழ் மக்கள் மீதான பேரினவாத ஒடுக்குமுறைக்கும், வடக்கு கிழக்கில் தொடரப்படும் இரானுவத் தலையீட்டுக்கும், ஜனநாயக மறுப்புகளுக்கும், இயல்புவாழ்வு மீதான குறுக்கீடுகளுக்கும் எதிரான தமது உறுதிமிக்க எதிர்ப்பை வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அதனூடாக தமக்கான அரசியல் தீர்வையும் அடிப்படை வாழ்வாதார உரிமைகளையும் இழக்கத்தயாரில்லை என்பதனையும் இவ்வாக்களிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். எனவே மக்கள் வழங்கியுள்ள இத்தேர்தல் ஆணையை மகிந்த சிந்தனையின் கீழான ராஜபக்ச சகோதரர்களது ஆட்சியானது ஏற்று நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு முன்வர வேண்டும். அவ்வாறு செயல்படுத்துவதற்கு ஜனாதிபதியும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்ணனி அரசாங்கமும் முன்வராது தொடர்ந்தும் தமது பேரினவாத இராணுவ ஒடுக்குமுறையினை முன்னெடுக்க முனைந்தால் அது மீண்டும் நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதற்கே வழிவகுக்கும்.

யுத்தம் முடிவடைந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ் மக்கள் இழப்புகளையும் அவலங்களையும் அனுபவித்ததால் ஏற்பட்ட அரசியல் விரக்தியில் இருந்து வந்தனர். அதனால் முன்னைய தேர்தல்களில் குறைந்தளவு மக்களே பங்குகொண்டு வந்தனர். அதேவேளை இராணுவ அச்சுறுத்தல்கள் பலநிலைகளிலும் தொடர்ந்து வந்தன. அதனால் இராணுவ செயல்பாடுகள் ஜனநாயக மறுப்புகள் நிலப்பறிப்புகள் சிறைப்படுகொலைகள் அரசியல்கைதிகளின் தடுப்பு போன்றவற்றுக்கெதிரான கவனயீர்ப்புப் போராட்டங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வீதிக்கு கொண்டுவரப்பட்டன.

இவற்றில் தமிழ்தேசிய மக்கள் முன்னனி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி, நவசமசமாஜக்கட்சி மற்றும் பொது அமைப்புகள் இணைந்து இத்தகைய போராட்டங்களை துணிவுடன் முன்னெடுத்தன. கடந்த இரண்டு வருடங்களில் இத்தகைய வெகுஜனப்போராட்டங்கள் அரசியல் விரத்தியுடன் இருந்து வந்த மக்கள் மத்தியில் படிப்படியான நம்பிக்கையை ஏற்படுத்திவந்தன. மக்கள்சக்தி அணிதிரட்டப்படுவதன் அவசியம் மக்கள் மத்தியில் உணர்த்தப்பட்டது. அவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது இடம்பெற்ற வடமாகான சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமது வன்மையான எதிர்ப்பைத் துணிவான வாக்குப்பதிவின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை அபிவிருத்தி சலுகைகள் இரானுவ அச்சுறுத்தல்கள் மூலம் மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்று பேரினவாத ஒடுக்குமுறையினைத் தொடரலாம் என்ற ஆட்சித்தரப்பின் அகங்காரத்திற்கும் மக்கள் தமது உறுதியான பதிலடியை வழங்கியுள்ளனர். அதேவேளை இத்தேர்தலில் மூன்றில் இரண்டு ஆசனங்கள் பெற்றுக்கொண்டமையை 1977ம் ஆண்டு தேர்தல் வெற்றியுடன் ஒப்பிட்டு தவறான கொள்கைகளிலும் பிழையான அரசியல் அணுகுமுறைகளிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது தொடர்ந்தும் செல்லுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கு மீண்டும் அழிவுகள் அவலங்களைத் தேடித்தருவதாகவே அமைந்து கொள்ளும்.

எனவே மாகாணசபைத் தேர்தல் வெற்றியை நிதானமாக அணுகி பரந்துபட்ட தமிழ்மக்களின் பிரச்சனைகளை உள்ளடக்கிய நேர்மையான அரசியல் சக்திகளை உள்வாங்கிய பொதுவேலைத்திட்டத்தின் அடிப்படையில் முன்செல்வதற்குத் தமிழர் தரப்புக் கட்சிகளும் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளும் இணைந்து முன்செல்ல முன்வரவேண்டும். அல்லாதுவிடின் கடந்தகாலங்களின் தேர்தல் வெற்றிகளை வைத்து தவறான திசையில் பயணித்தது போன்று “வேதாளம் மீண்டும் முருங்கையில்” என்றகதையாகிக் கொள்ளக்கூடாது. எனவே அத்துடன் தமிழ் மக்கள் வாக்களித்ததோடு மட்டும் நின்றுவிடாது அரசியல் விழிப்புடன் இருந்து சரியான அரசியல் மார்க்கத்தில் வழிநடக்கவும் முன்வரவேண்டும்.

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

23.09.2013