Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல்

யாழ். பல்கலைக்கழக போராட்டங்கள்- 02

யாழ் பல்கலைக்கழகம் அனைத்து பல்கலைக்கழகங்கள் போல், இடதுசாரிய போராட்ட மரபைக் கொண்டதல்ல. மற்றைய பல்கலைக்கழகத்தில் இருந்து தன்னைத்தான் தனிமைப்படுத்தி கொண்டு, வலதுசாரி தேசியவாத கிணற்றுக்குள் வீழ்ந்து கிடந்தது. சிந்தனை செயல் அனைத்தும், யாழ் மேலாதிக்கத்தையே பிரதிபலித்தது. தமிழ் தேசிய அரசியலுடன் பின்னிப் பினைந்தாகவும், அதில் எற்பட்ட வந்த முரண் சார்ந்த பலமான சக்திகளுடனேயே தன்னை வெளிப்படுத்தி வந்தது.

இதற்கு மாறாக சமூகத்தினை முன்னின்று வழிநடத்தும் முற்போக்கான வரலாற்றுக் கூறுகளை வெளிப்படுத்தவில்லை. அரசின் இனவொடுக்முறைக்கு எதிரான யாழ் மேலாதிக்க தனத்தை தன் முன்னோக்காகக் கொண்ட, தமிழ்தேசிய பிற்போக்குவாதத்துக்கு பின்னால் பல்கலைக்கழகம் கொடி பிடித்தது நின்றது.

இலங்கையின் மற்றைய பல்கலைகழகங்கள் மாணவர்கள் நலன் சார்ந்து நடத்திய பொதுப் போராட்டங்களில் இருந்து கூட, ஒதுங்கி நின்றது. தமிழ் மக்கள் மேலான இனவொடுக்கு முறைக்கு எதிராக, மற்றைய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து

போராடக்கூட முனையவில்லை. சமூகத்தில் இருந்த அதே பிற்போக்கான கூறுகளை பிரதிபலித்தது நின்றது. தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டது, தமிழ் தேசியவாதிகள் முன்னனெடுத்த தேர்தல் அரசியலையும், அதைத் தொடர்ந்து ஆயுதக்குழுக்களின் வலதுசாரிய அரசியல் பாதையையும் பின்தொடர்ந்து வால்பிடித்துச் சென்றது. சமூகத்தின் முரண்பாடுகள் மேல், முற்போக்கான அரசியல் பாத்திரத்தை ஆற்றத் தவறியது.

அதே போல் சமூகத்தில் கூட இதற்கான அரசியல் செயற்பாட்டுத் தன்மை இருக்கவில்லை. வலதுசாரிய தமிழ் தேசியவாதமே அனைத்துமாக, இடதுசாரிய வர்க்க அரசியலை நடைமுறை முன்னோக்காகக் கொண்ட எதுவும் சமூகத்தை முன்னின்று அணி திரட்ட முற்படவில்லை. யாழ் பல்கலைக்கழகமும் தமிழ் தேசிய வலதுசாரிய பிற்போக்குள் முடங்கிக்கிடந்தது.

யாழ் பல்கலைகழகம் தொடங்கிய காலம் முதல் இன்று வரை இதுதான் நிலையென்றால், 1985 முதல் 1990 வரையான காலம் மட்டுமே விதிவிலக்காகும். 1985 வலதுசாரிய தேசியத்துக்கு எதிரான எதிர்நிலைப் போராட்டத்தையும், அரசுக்கு எதிரான போராட்டத்தையும் தன்னுள் பதிவாக்கி இருக்கின்றது. ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்தாக, மற்றைய பல்கலைக்கழகங்களுக்கு நிகராக, சமுதாயத்தின் பொது நலனை முன்னிறுத்தி அப்போது போராடியது. அரசை மட்டுமல்ல, இயங்கங்களையும் எதிர்த்து இடதுசாரிய போராட்டமாக நடைபெற்றது.

1960 களில் வடக்கில் நடைபெற்ற சாதியப் போராட்டம் போல், 1985 யில் யாழ் பல்கலைக்கழகப் போராட்டமும் முற்போக்கான வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்றியது. இது எந்த அரசியல் சூழலில், எந்த அரசியல் வடிவத்தில் எதைச் செய்தது என்பதை கற்றுக்கொள்வதன் மூலம் தான், மாணவர்கள் மீதுமான சமூகத்தின் மீதுமான தொடர் அடக்குமுறைகளை எதிர்கொள்ள முடியும்.

1980 களுக்கு முன் பராளுமன்ற தமிழ்தேசியத்தின் பின்னான அரசியலின் எடுபிடியாகவே யாழ் பல்கலைக்கழகமும் முடங்கிக்கிடந்தது. 1980களில் வெளியில் நடந்த அரசியல் ரீதியான பண்பு மாற்றத்துடன் பல்கலைக்கழத்தில் கூட மாற்றம் எற்பட்டது. தமிழ் தேசிய வலதுசாரிய பாராளுமன்ற வழிகளுக்கு துணைபுரியா வண்ணம் உருவான, தனிநபர் பயங்கரவாத அழித்தொழிப்பு அரசியல் போக்குடன் தான் இந்த மாற்றமும் அரங்கேறத் தொடங்கியது. பராளுமன்ற பாதையும், தனிநபர் அழித்தொழிப்தையும், தனக்குள் இணக்கமான அரசியல் உறவை நீண்ட நாட்கள் தொடர்ந்து நாடத்த முடியவில்லை. பராளுமன்ற சந்தர்ப்பவாதமும், பிழைப்புவாதமும், இதை வேறுபடுத்தி முரண்படவைத்தது. இந்த முரண்பாடு அரசியல் வழிமுறையில் எற்படவில்லை.

இந்த வகையில் 1980 களில் பாரளுமன்ற வழிக்கு எதிரான, அரசியல் குழுக்கள் உருவாகத் தொடங்கியது. அதற்குள் முரண்பாடுகளும், முரணான அரசியல் போக்குகளும் கூட உருவாகத் தொடங்கியது. அனைத்தும் யாழ் மேலாதிக் வலதுசாரிய தேசியத்தில் இருந்த படி, தன்னை இடதுசாரியமாகக் காட்ட முற்பட்டது.

இடது வலது கலந்த கலவையாக, வலதுக்கு வலுசேர்க்கும் வண்ணம் இடதை பிரச்சாரம் செய்தனர். மறுதளத்தில் ரூசியா எகாதிபத்திய நலனை அடிப்படையாகக் கொண்டதை இடதுசாரியமாக காட்டிக் கொண்ட வலது தமிழ் தேசியத்தை முன்வைத்த இந்தியா ஆதரவுக் குழுக்களும் உருவானது. அன்றைய உலக ஒழுங்கில் இந்தியா ரூசியா ஏகாதிபத்தியத்தை சார்ந்து இருந்த போக்கில், இந்தியா ஆதரவை இடதுசாரியமாக காட்டிக் கொண்டது.

பல்கலைக்கழகத்தில் கூட இது சார்ந்த முரண்பட்ட குழுக்கள் இயங்கிய போதும், அனைத்தும் வலதுசாரிய தமிழ்தேசியத்தை தமது அரசியல் அடிப்படையாகக் கொண்டு இருந்தது. பல்கலைக்கழகம் இந்த வலதுசாரிய பாதையிலேயே தொடர்ந்து சென்றது. ஆயுதப்போராட்டத்தை ஆதாரிக்கும் சூழலுக்குள், வலதுசாரியமாகவே பல்கலைக்கழகம் இருந்தது. வலதுசாரிய பாதை தவறானது, மக்கள் சார்ந்த இடதுசாரிய பாதையே சரியான என்ற கருத்து ஆயுதப்போராட்டத்தை முன்னிறுத்திய வலதுசாரிய தளத்தினுள் இருந்து மேலெழுந்த வந்த போது, அதைத் தடுத்த நிறுத்தி பிற்போக்கான வலதுசாரிய தேசியமாக சீரழித்துவிடவும், இலங்கையில் மேலாதிக்கத்தை நிறுவவும், இந்தியா ஆயுதப் பயிற்சியை கொடுக்கத் தொடங்கியது.

1983 இல் இந்தியப் பயிற்சியுடனும், பண வழங்களுடனும் உருவான முரண்பட்ட குழுக்களின் வளர்ச்சி, பராளுமன்ற பாதையை முற்றாக நிராகரிக்க வைத்தது. மறுதளத்தில் எழுந்து வந்த இடதுசாரிய கூறுகளை எதிரியாக்கியது. அதே நேரம் ரூசியா சார்பாக இந்தியா - அமெரிக்கா என்று, அந்நிய கைக்கூலி அமைப்புகளாகவே இயக்கங்கள் வளர்ச்சியுற்றன. இந்த கைக்கூலி அரசியல் போக்கில் தான், பல்கலைக்கழகமும் பயணித்தது. இதில் இருந்து வேறுபட அது பயணிக்கவில்லை.

ஆயுதம் ஏந்தியக் குழுக்களோ அந்நிய நலனைகளைப் பேணிய படி, பணத்ததையும் ஆயுதங்களை முதன்மைப்படுத்தியது. பரந்துபட்ட மக்களை நிராகரிக்கத் தொடங்கியதுடன் முரண்பட்ட மக்களை எதிரியாகவே கண்டது. இந்த அரசியல் வழிமுறை மக்களின் வாழ்கை முறைக்கு முரணாக வளர்ச்சியுற்ற போது, மக்கள் மேலான பொது ஒடுக்குமுறையாக மாறியது. யாழ்பல்கலைக்கழகம் இதையிட்டு அலட்டிக் கொள்ளாது தமிழ் தேசியத்தின் பின் நின்றது. மக்கள் விரோத அந்நியக் கைக் கூலி இயக்கங்களாகவே இயக்கங்கள் வளர்ச்சியுற்ற போது, அதற்குள் முரண்பாடுகள் தோன்றின.

தங்கள் அடிப்படை ஜனநாயக உரிமை சார்ந்தும், முன்பு கலவையாக புகுத்திய இடதுசாரியம் இணைந்தும் எழுந்த முரண்பாடு, மாற்று அரசியல் வழியாக முனைப்புப் பெற்றது. 1984-1985 இந்த முரண்பாடுகள் இயக்கத்தினுள் மற்றும் வெளியரங்குகளில் தீவிரமடைந்தது. விளைவு தனியான சித்திரவதை முகாங்களை நடத்துமளவுக்கு இயக்கங்கள் முன்னேறியதுடன், படுகொலைகள் வரை நடந்தேறத் தொடங்கியது. எல்லா இயக்கத்தில் இந்த முரண்பாடு வெவ்வேறு அளவில் காணப்பட்டது மட்டுமின்றி, இதை கையாளும் வடிவங்களும் கூட வேறுபடத் தொடங்கியது. ஆனால் இடதுசாரியத்தை ஒழித்துக்கட்டுவதையே பொதுவாகச் செய்தனர்.

இதன் போது கூட யாழ்ப் பல்கலைக்கழகத்தில் எந்த அரசியல் எதிர்வினையும் இருக்கவில்லை. மறுதளத்தில் அமைப்புகளின் இருந்து இயக்க உறுப்பினர்கள் ஒதுங்கத் தொடங்கினர். சிலர் புதிய அரசியலைத் தேடினர். பல்கழைக்கழகம், கைக் கூலியாகி விட்ட மக்கள் விரோத வன்முறையை அடிப்படையாக கொண்ட வலதுசாரிய தேசியத்தை சார்ந்தே தொடர்ந்து இயங்கியது. இயக்கத்தில் இருந்து ஒதுங்கிய, வேறு அரசியல் கருத்து கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்த போதும் கூட, பல்கலைக்கழகத்தில் அது அரசியல் ரீதியாக பிரதிபலிக்கவில்லை.

1980க்குரிய இதே வரலாற்றுக் காலகட்டத்தில் இடதுசாரிய அடிப்படையைக் கொண்ட தமிழ் தேசிய விடுதலை முன்னணியும் (என்.எல்.எப்.ரி,) அந்நிய பயிற்சிகளை நிரகரித்தபடி இயங்கினர். இவர்கள் அரசியல் செயற்பாட்டில் இருந்து ஒதுக்கி செயலற்றுப் போன பழைய இடதுசாரியத்தில் இருந்தவர்களால், இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இது மக்கள் திரள் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய ஆயுதப் போராட்டத்தை முன்வைத்தது. இதேபோல் அதே காலத்தில் புலிகளில் இருந்து வெளியேறியவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவையோ, ஆயுத நடவடிகையில் ஈடுபடும் இரகசிய குழுவாக தன்னை மாற்றிக் கொண்டு இயங்கியது. என்.எல்.எப்.ரி.யில் இருந்து 1985-1986 இல் உடைந்து, பி.எல்.எவ்.ரி யாக உருவான மக்கள் தேசிய விடுதலை முன்னணி, ஆயுதப் போராட்டத்தை முன்னிலைப்படுத்திய மக்கள் போராட்ட பாதையை முன்வைத்தது. இதை விட தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தில் (புளாட்) இருந்து 1985 இல் உடைந்த தீப்பொறி, தனி-நபர் அழித்தொழிப்பை அடிப்படையாகக் கொண்ட இடதுசாரிய அராஜக அரசியலை முன்வைத்தது. கிட்டுக்கு குண்டு எறிந்தது உட்பட பல படுகொலை செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முனைந்தது.

இதைவிட கூலி விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட பாசறை என்ற அமைப்பு அரசியல் ரீதியாக தன்னை வெளிப்படுத்தியது. 1986இல் தமிழ் தேசியவாதிகள் முன்னெடுத்த மக்கள் விரோத அரசியலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் குழுவாக தன்னை அடையாளப்படுத்தியது.

பழைய இடதுசாரிய வழிவந்தவர்கள் தேசிய முரண்பாட்டில் இருந்தும், வாக்க அரசியல் நடத்தையில் இருந்தும் விலகியவர்களாக காணப்பட்டனர். கட்சி பெயரில் கட்சியாக, திண்ணைக்கு திண்ணை கதைப்பதை அடிப்படையாகக் கொண்டு, வலதுசாரியத்துக்கு உதவுப்பவர்களாக இருந்தனர். இதுவே அன்றைய பொதுவான அரசியல் நிலைமையாகும். இயக்க வன்முறைகள் சமூகத்தின் மேலான பொது வன்முறையாக மாறிக்கொண்டு இருந்தது.

உருவாகி வந்த புதிய நிலையில், முரண்பாடுகள் மிக வேகமாக அரசியலுக்குள் மாற்றத்தை எற்படுத்திக் கொண்டிருந்த காலம். அதை தங்கள் கையில் எடுக்க முடியாத வண்ணம், பாரம்பரிய இடதுசாரிய கட்சிகள் செயலற்றுப் போய் இருந்தனர். புதிதாக இயங்கத் தொடங்கிய இடதுசாரியம் மக்களை தலைமை தாங்கி அழைத்துச் செல்ல முடியாத வண்ணம் அக புற முரண்பாட்டுக்குள் குறுகிக் கிடந்தது. மக்கள் திரள் பாதையை முன்னோக்கக் கொண்ட, இடதுசாரியமாக அது இருக்கவில்லை. என்.எல்.எப்.ரி. அதை முன்னோக்காக முன்வைத்த போதும், அதன் யாழ் மேலாதிக்கம் சார்ந்த அதன் அக புற பூர்சுவாதனத்திலான முரண்பாட்டுகளுடன் முன்னோக்கிச் செல்லும் தகுதியை இழந்து இருந்தது. ஆனால் அற்கான கூறுகளை அது கொண்டு இருந்தது.

மக்கள் திரள் பாதையை கோருகின்ற சக்திகள், உதிரியாக காணப்பட்டனர். சமூகத்தில் எற்பட்டு வந்த முரண்பாடுகள், வெற்றிடத்தை விட்டுவிடுவதில்லை. இது பல்கலைக்கழகத்திலும் வெளிப்பட்டது. வரலாற்று இயங்கியல் சூழல் சார்ந்து இடதுசாரிய அரசியலுக்கான புற நிலையான சமூகக் கூறுகள், முழுமையாக தமிழ்தேசியத்தைச் சுற்றி அதன் முரண்பாடுகளின் மேல் கணிந்திருந்தது. இயக்கங்கள் மேலான மக்களின் பொது அதிர்த்தியும், எதிர்ப்பும் மாற்றத்தைக் கோரியது. இயக்கங்களினுள் பொது அதிர்த்தி வளர்ச்சியுற்று இருந்தது. பயற்சி பெற்ற பலர், ஆயுதங்களுடன் வெளியேறி இடதுசாரிய போராட்டத்தைக் கோரினர். அதேநேரம் பலர் மக்களை நேசிக்கின்ற புதியதொரு போராட்டத்தை எதிர்பார்த்துக் காத்து இருந்தனர்.

இந்த புறநிலையான அரசியல் சூழலில், இடதுசாரியத்தை அடிப்படையாக கொண்ட ஒரு முன்னோக்கில் இருந்து எழுந்ததே யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். 1985ம் ஆண்டு என்.எல்.எப்.ரி,யைச் சேர்ந்த சிலர் யாழ் பல்கலைக்கழகம் சென்ற போது ராக்கிங்கு எதிரான போராட்டதில், அங்கு இயக்கங்களில் இருந்து வெளியேறிய மாணவர்கள் இணைந்த போதே, யாழ் பல்கலைக்கழகத்தில் புதிய போராட்டத்திற்கான அரசியல் பாதையை வித்திடப்பட்டது.

1985 ஆண்டு என்.எல்.எப்.ரி, தோழர்கள் தங்கள் மீதான ராக்கிங்களை எதிர்த்து 'றாக்கிங் என்பது பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா!" என்று கேட்டு வெளியிட்ட துண்டுபிரசுரத்துக்கு ஆதாரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றது. அதே நேரம் ராகிங்கை வன்முறை மூலம் ஒழித்தல் என்ற வலதுசாரிய புலித் தேசியவாதிகள், ராங்கிங்க்குள் முன்றாவது அணியாக தோன்றியது.

இதைச் சுற்றிய முரண்பாடுகளும், பல்கலைக்கழகத்தில் தொடச்சியாக நடந்த போராட்டமும் மாணவர்களை இரண்டு அரசியல் அணியாக அணிதிரட்டியது. இதன் வளர்ச்சி 1986 இறுதியில் மக்கள் சார்ந்த அரசியல் போராட்டத்தை முன்னோக்காகக் கொண்ட, மக்கள் திரள் போராட்டத்துக்குள் யாழ் பல்கலைக்கழகத்தைச் இட்டுச்சென்றது.

-தொடரும்-

1.ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு!