Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

பொருளாதாரத்தை தீர்மானிப்பது அன்னிய சக்திகளே!!!

கடந்த சில நாட்களாக பத்திரிகையில் தொழிலாளர்கள் வேலையிழப்பதும், களியாட்டத்திற்கான வரிவிலக்கு என்று பல்வேறு செய்திகளை வாசிக்க முடிகின்றது. அவ்வாறான செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

செய்தி1: தற்காலிக ஊழியர்களின் நிரந்தர நியமனம் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுத் தரப்படும் என மாநகர சபை முதல்வர் உறுதியளித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் 021013 முடிவுக்கு வந்தது.

யாழ். மாநகர சபையில் கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் தீர்மானத்தினை எதிர்த்து மாநகர சபை தற்காலிக ஊழியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் யாழ். மாநகர சபை முன்பாக சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்து வந்தனர்.

செய்தி-2: தேர்தலுக்கு முன்னதாக வடக்கில் வழங்கப்பட்ட நியமனங்கள் ரத்தாகியுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட நியமனங்களே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக வட மாகாணத்தில் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு துறைகளில் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.

தேர்தல்களின் பின்னர் இந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஒப்பந்த காலம் நிறைவடைந்த காரணத்தினால் சிலரின் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகளவில் வைத்தியசாலை சேவையைச் சேர்ந்தவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.

நியமனங்கள் ரத்து செய்யப்பட்டமை குறித்து வட மாகாண ஆளுனரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித சாதக முடிவும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி-3: அவுஸ்திரேலிய பெரும் வணிகரான ஜேம்ஸ் பக்கரால் கொழும்பு நகரில் ஸ்தாபிக்கவுள்ள பெரியதொரு சூதாட்ட நிறுவனத்திற்கு வரிவிலக்கு அளிப்பதை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாடாளுமன்றம் விவாதித்து அங்கீகரிக்கவுள்ளது.

தாராளமயமாக்கல்-

உலகவங்கி, உலக வர்த்தக ஒன்றியம், உலக நாணய நிதியம் ஆகியவற்றின் கொள்கையை நடைமுறைப்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமையாகின்றது. ஆட்சியாளர்கள் அரச நிறுவனங்களை தனியார் நிறுவனங்களாக மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றார்கள். அதற்கமையான அரச நிறுவனங்கள் தனியுடையாக்கப்பட்டு தனியாரின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றது.

முன்னர் மாநகரசபையின் கீழ் இருந்த வடிகால், குப்பையகற்கும் தொழில்கள் தனியார் கைகளுக்கு மாற்றம் பெறுகின்றது. தனியாருக்கு தாரைவார்ப்பதினால் அங்கு லாப நோக்கே முதன்மை பெறுகின்றது. தனியாருக்கு தாரைவார்ப்பது என்பதில் மாத்திரம் அன்றி உலக வங்கி, உலக வர்த்தக ஒன்றியம், உலக நாணய நிதியம் ஆகியவற்றின் திட்டத்தின்படி இலவச என்பதோ அல்லது மானியம் என்பதற்கு இங்கு இடமில்லாது போகின்றது.

இலவச மருத்துவம், இலவசக் கல்வி என்பது முதல் கட்டண மலசலகூடம், குடிநீர் கூட காசுக்கு விற்கும் நிலைக்கு தாராளவாதப் பொருளாதாரம் கொண்டு வந்து விடுகின்றது. மனிதர்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படை உரிமைக்கே உலைவைக்கின்றது இந்த பொருளாதாரத் திட்டம். இலங்கை போன்ற நாடுகள் உற்பத்தி சக்தி என்பது மேலை நாடுகள் போல வளர்ச்சியடைந்ததாக இல்லை. இலவசக்கல்வி, இலவச மருத்துவம், குடிநீர், உணவுமானியம் (கூப்பன் – ரோசன்) என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. நலிந்தவர்கள் மென்மேலும் நலிந்த நிலைக்கு இட்டுச் செல்வதும், கிடைத்தவற்றையே பாதுகாத்து வாழும் மனநிலையை உருவாக்கிவிட்டு அடிமைகளாக வைத்துக் கொள்கின்றது.

உதாரணத்திற்கு விவசாயம் சார்ந்த உற்பத்திகளுக்கு வரிச்சலுகையோ அல்லது மானியம் வழங்குவதையோ உலக வங்கி மற்றும் நிறுவனங்கள் வழங்க அனுமதிப்பதில்லை. ஆனால் கேளிக்கை, மற்றும் சொகுசுபண்டங்கள், மற்றும் அன்னிய நிறுவனங்களை எமது நாடுகளில் அனுமதிக்கும்படியும் அவற்றிற்கு வரிச்சலுகை கொடுக்கும்படியும் நிர்ப்பந்தம் உலக வர்த்தக ஒன்றியத்தின் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்படுகின்றது. வரிச்சலுகை கொடுக்கின்ற போது அரசின் திறைசேரிக்கான வருவாய் என்பது தடைப்படுகின்றது. இதேபோலவே தனியார்மயமாக்கலும் ஆகும்.

எங்கு எல்லாம் இலவசம், மானியம் என்ற நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளதோ அங்கெல்லாம் உலக வங்கி, உலக வர்த்தக ஒன்றியம், உலக நாணய நிதியம் நுழைந்து எலலாவற்றிற்கும் பணத்தினை நிர்ணயிக்கின்றது. இவ்வாறு பணம் நிர்ணயிக்கின்ற போதும் அவைகள் தனியார் மயமாவதால் தனியாருக்கே பணம் சென்றடைகின்றது. இவ்வாறு தனியாருக்கு சென்றடைவதால் அரசின் வருவாய் என்பது இழப்பிற்கு உள்ளாகின்றது. அரசானது வருவாயை இழப்பதினால் மற்றைய நலத்திட்டங்களை நடத்திக் கொள்வதற்கான வருவாய் இல்லாமல் போகின்றது. அரசின் வருவாய் என்பது இல்லாது போகுமிடத்தில் அன்னிய நிதிநிறுவனங்களின் உதவியைக் கொண்டே நாட்டின் பற்றாக்குறையை தீர்க்க வேண்டிய நிலைக்கு உருவாகின்றது. இங்கு ஒரு நாடு இறைமையை கட்டிக் காக்கும் நிலைக்கு அப்பால் சென்று இன்னொரு நாட்டின் அல்ல பணம்படைத்த நாடுகளின் நிதிநிறுவனத்திற்கு தனது இறைமையை இழப்பதுடன், அவர்களின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.

ஒரு அரச நிறுவனத்தின் கீழ் தொழிற்துறைகள் இருக்கின்ற போது அங்கே நிரந்தரமான வேலையை உருவாக்கிக் கொள்ள முடியும். அப்போது நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம், (நீண்ட மணிநேர வேலைசெய்யவேண்டிய நிர்ப்பந்தம்) நிச்சயமற்ற சம்பளத் தொகை, விடுமுறை, வரையறுக்கப்பட்ட வேலை, தொழிற்சங்க உரிமை போன்ற தொழிலாள விரோத போக்குக்களை கொண்டதாகவே அமைந்து விடுகின்றது. இதனால் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் வீட்டிற்கு அனுப்ப முடியும். வலிமை இருக்கின்ற வரையில் உழைப்பது (எந்தத் துறை என்பதைப் பொறுத்தது) வழங்குகின்றனர். இவ்வாறு கசக்கிப் பிழியப்படும் உழைப்பாளிகள் சிறிய வயதிலேயே நோயாளிகளாகவும் மாறிவிடுகின்றனர். இவ்வாறு உழைத்து நோயாளியாகப் போகும் உழைப்பாளிகளின் தொகை தினசரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது ஒரு தொடர் கதையாகவே இருக்கின்றது.

ஒப்பந்த வேலைமுறை ஊடாக தனியாரே அதிக பயனை அடைகின்றனர். ஒப்பந்தத்தின் மூலம் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் நிரந்தர ஊழியாராக்க வேண்டிய தேவை என்பது இல்லாது போகின்றது. அதாவது ஊழியர்களை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னராகவே வேலையில் இருந்து நீங்கி விட்டு பின்னர் சேர்க்கின்ற போது தொழிலாளிகள் நிரந்த வேலை கொடுக்க வேண்டிய தேவை இல்லாது போகின்றது. உதாரணத்திற்கு 6 மாதம் தற்காலிக ஊழியராக வேலை செய்திருப்பாராயின் அந்த 6 மாதங்களின் பின்னர் நிரந்தர பணியாளராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த 6 மாதம் முடிவதற்கு முன்னர் வேலைநீக்கம் செய்த பின்னர் மறுபடியும் இணைக்கின்றபோது தொழிலாளர்களை நிரந்திரப்பணியாளர்களாக நியமிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்து வேலைவழங்கும் நிறுவனங்கள் தப்பித்துக் கொள்கின்றன.

இலாப நோக்கில் இயங்க வேண்டும் என்ற காரணத்தினால் சுகாதாரத்துறையில் கூட நிரத்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கு தயாராக இருப்பதில்லை. இங்கு பணியாளர்களை நியமிப்பதற்கும், முகாமைத்துவம் செய்வதற்கும் தனியாரே அரசிடம் இருந்து ஒப்பந்த அடிப்டையில் பொறுப்பை பெற்றிருக்கின்றது. இவ்வாறு ஒப்பத்தத்தை பெற்ற தனியார் நிறுவனம் செலவைக்குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக ஊழியர்களை பற்றாக்குறையாக வைத்து உழைப்பை உறுஞ்சுவதும், தற்காலிக ஊழியர்களாகவும் வைத்திருக்கின்றது.

இவ்வாறான பொருளாதாரத்திட்டத்தினால் ஒரு நாட்டில் அரசியல் பொருளாதார பிரச்சனைகள் பெரும் சிக்கல் உடையாதாக உருவாக்கப்படுகின்றது.

இதிலும் இலங்கை போன்ற நாடுகளில் தனியார்மயப்படுத்தலும், அன்னிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களின் கைகளில் உற்பத்திச் சாதனம் கையப்படுத்தியிருப்பதனால் முரண்பாடுகள் அதிகரிக்க முடிகின்றது.

இங்கு சந்தர்ப்பத்தை இழந்த சிறுபான்மை இனத்தின் முதலாளிவர்க்கம் உற்பத்திச் சாதனத்தை தனதாக்கிக் கொள்ள இடையறாது போராட்டத்தில் ஈடுபடுகின்றது. இவ்வாறான நிலை காரணமாக எப்பவும் பதட்டத் தன்மை இருந்து கொண்டே இருக்கும். இந்த வேளையில் சமூகத்தில் உள்ள முரண்பாடுகளை கவசமாக பயன்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. அதாவது, இனம்,மதம், சாதி, பிரதேசம் என்ற பாகுபாடு முதன்மை பெறுகின்றது.

இன்றைக்கு ஆட்சியதிகாரத்தை வேண்டிநிற்கும் வடமாகாண அரசு தொழிலாளர் நலன் கொண்ட திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்தப் போகின்றார்கள்? இதற்கான தெளித்த திட்டத்தை முன்வைப்பார்களாக?