Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கை இனவெறியை ஜெனீவாவும் கண்டுகொள்ளாது!

"யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டாக்கள் மட்டுமே செலவாகியிருக்கும்" என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதுவும் மாத்தறையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூறியுள்ள விடயமாகும்.

தோதான பெயர் கொண்ட (இடர் முகாத்துவம்) அமைச்சரைத்தான் மகிந்தா மந்திரியாக்கியுள்ளார். 12-ஆயிரம் தோட்டாக்களை செலவழித்திருந்தால், இவரின் அரசால் இல்லாதாக்கிய 40,000-ஆயிரத்தோடு பிளஸ் 12-ஆயிரம்தானே கூடியிருக்கும். என வலு "சிம்பிளாக" சொல்லாமல் சொல்லுகின்றார் எம் "இடர்" அமைச்சர். மகிந்த அரசின் இனவெறிக் கொலைக்கலாச்சாரம் என்பது கரப்பான் பூச்சிகளை கொல்வது போலல்லவா இருக்கிறது.

ஒரு புறத்தில் இனப்படுகொலைகளை செய்துவிட்டு, அல்லது காணாமல் செய்தாக்கிவிட்டு, மறுபுறத்தில் அதற்கு ஆணைக்குழுக்களை அமைத்து, நாடகமாடுகின்றார்கள். ஏதோ "கற்றுக்கொண்ட நல்லிணக்க ஆணைக்குழு" என்றொரு குழு அமைத்து கூத்தாடினார்கள். இப்போ காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் நாடகம் கடந்த 4-நாட்களாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. -இதுவும் ஜெனீவாக் கூட்டம் முடிய கிடப்பில் போய்விடும்.

நடைபெற்ற நான்கு நாட்களின் போதான சாட்சியங்களின் போது, கடந்த காலங்களில் காணாமல்போன தமது சொந்த-பந்த இரத்த உறவுகளின் பதிவுகளை எவ்வளவு நம்பிக்கையோடும், உறுதியோடும் ஆதாரபூர்வங்கள் கொண்ட பல உண்மைச் சம்பவங்களை கண்ணீரும் கம்பலையுமாக பதிவுசெய்துள்ளனர். எனவே இவ்வரசு இதற்கான நடவடிக்கைகளை மனிதாபிமானத்தோடும், அந்தரங்க சுத்தியோடும் செய்யுமா? இது ஜெனீவாக் கூட்டத்திற்கான கூத்தே தவிர, வேறொன்றும் இல்லை.

மறுபுறத்தில் கடந்த நாலாண்டுகளுக்கு மேலாக தம் சொந்த-பந்த இரத்த உறவுகளை இழந்து, உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு, சாகாப் பிணங்களாக வாழும் எம் மக்களின் கண்ணீர்க்-கம்பலைக் கதைகளுக்கு ஜெனீவாதானும் தக்க பதிலை தருமா? தக்க நடவடிக்கை ஏதும் எடுக்குமா?

இலங்கை விவகாரத்தில் அமெரிக்க-மேற்கத்தைய நடவடிக்கைகள் என்பது நாம் ஜெனீவா வந்து "அடிப்பதுபோல் அடிப்போம். நீ எதிர்ப்பதுபோல் எதிர்" எனும் "கொலிவூட்" சினிமா படமெடுப்புத்தான். படப்பிடிப்பு முடிய கதாநாயகன் முதல் வில்லன்-காமடிக்காரர்கள் எல்லோரும் ஒரே விடுதியில் விருந்துண்டு மகிழ்வார்கள். அடுத்த படப்பிடிப்பிற்கான திகதி குறித்துவிட்டு செல்வார்கள்.

ஐ.நா. சபையோ அதில் வந்து கூடும் இலங்கை அரச எதிர்ப்பாளர்களுக்கோ இலங்கை மீது உறுதியான நடவடிக்கையை எடுக்க தெரியாதவர்களா? அல்லது முடியாதாவர்களா? சதாம் குசேனுக்கும்-கடாபிக்கும் ஐ.நா.சபையில் விவாதித்து, விசாரணை செய்துதான் தண்டனை வழங்கினார்களோ?

இவர்களெல்லாம் மகிந்தாவிற்கு இதுவொன்றும் தேவையில்லையெனும் முடிவில் இருந்து காலத்தை ஓட்டிக் காட்டுகின்றார்கள். காரணம் நவதாராளப் பொருளியலின் எதிர்காலச் செயற்பாட்டில், மகிந்தாவின் இலங்கை இவர்களுக்கு பல வெற்றிக்கனிகளைப் பறித்துக் கொடுக்கும். இது ஆட்டுவிப்பவர்களுக்கும் - ஆடும் மகிந்தாவிற்கும் தெரியும். இதன் தாற்பரியம் திக்கற்ற அரசியலின்பாற்பட்ட பலருக்கும் புரியாமல் கிடக்கு. என் செய்வது புடிச்சந்து இவர்களையும் கூட்டத்திலை சேர்ப்போம்.