Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

சிறுகதையா...........? தொடர்கதையா.......? (சிறுகதை)

கதவைத் திறப்பதற்கு முன்னரே சத்தம் வெளியாலே பெரிசாய்க் கேட்டது. ஞானமண்ணையின்ரை பெருத்த குரல் கோபக் கனலாய் வெடித்துப் சிதறிக் கொண்டிருந்தது.

சந்திராக்கா ரெலிபோன் அடிச்சுக் கூப்பிட்டதால் தான் நான் இங்கே உடனே வந்தனான்.

வாடா வா... அப்ப சொல்லச் சொல்ல எல்லாத்தையும் பிழையெண்டு பேசுவாய்... இப்ப வந்து கேள்.... எல்லாம் எங்கே வந்து நிக்குதெண்டு.

அண்ணை முதலிலே இந்தச் சத்தம் போடுறதை கொஞ்சம் நிப்பாட்டுங்கோ.. அக்கம் பக்கத்தவன் கேட்டிட்டு பொலிசுக்கு அடிச்சுச் சொல்லப் போறான்.

ஜயோ.... இப்ப எத்தனை தரம் சொல்லிப் போட்டன்... இந்த மனுசன் ஏதோ குடி முளுகிப் போனது போலே ஆர்ப்பாட்டம் செய்து உந்தத் துள்ளல் துள்ளிக் கொண்டிருக்கிறது.

யேய்... சும்மா கதையாதையடி... உன்னை அடிச்சு முறிச்சாத்தானடி எல்லாம் சரிவரும். நீதாண்டி கண்டறியாச் செல்லங்களைக் கொடுத்து இந்தப் பிள்ளையளைப் இப்படி பழுதாக்கி வைச்சிருக்கிறாய்..... எத்தனை தரம் சொல்லியிருப்பேன், ஆனால் இவளோ பிள்ளையளை விட்டுப் பிடியுங்கோ விட்டுப் பிடியுங்கோ என்று கடைசியிலே இப்ப எங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறாள் என்றபடி எட்டி அடிக்க நீட்ட ஒரு மாதிரி அவரை பிடித்து சோபாவில் அமர்த்தினேன்.

அண்ணை முதலிலே ஆறுதலாய் நிதானமாய் இருங்கோ, எதுவெண்டாலும் முதல்லே பொறுமையாய் இருந்து கதைப்பம், பிறகு என்ன செய்வது ஒண்டு முடிவெடுப்பம். அக்கா நீங்களும் வந்திருங்கோ..... இருங்கோ

தம்பி நான் இங்கே கலியாணம் எண்டு முடிச்சு வந்த காலத்திலிருந்து பிள்ளையள் பிறந்து.... அதுகளும் இப்ப வளர்ந்து எல்லா நல்லது கெட்டதுகெளுக்கெல்லாம் நீ தான், நிக்கிறனி... எல்லாம் உனக்குத் தெரியும் தானே...

சந்திராக்கா.... உந்தச் சரித்திரங்களை விட்டிட்டு விசயம் என்னெண்டு முதலிலே சொல்லுங்கோ....?

விடியக்காலமை உதிலே பக்கத்துக் கடையிலே பால் வேண்டுவதற்கு சில்லறைக் காசு இல்லாத படியினால் உவன் மூத்தவன்றை பேர்சைப் போய் காசு கிடக்கும் எண்டு பார்க்கப் போனால்..... அதை என்னெண்டு என்றை வாயால சொல்ல....

முடியாதவளாய் தலைகுனிந்தா....

அவன்றை பேர்ஸ்சுக்குள்ளே கொண்டோம்.... அது தான் ஆணுறை கிடந்ததை இவள் கண்டிட்டாள் என்று ஞானம் அண்ணை முந்திக் கொண்டு சொன்னார். இல்லை தெரியாமல் தான் கேட்கிறன் இவன்றை வயதென்ன... இவன்றை வேலையென்ன.... வரட்டும் இண்டைக்கு ஒரு முடிவெடுக்கின்றேன்..

அவன் வெளியிலே போனப்பிறகு தான் இவருக்கு இதைச் சொன்னனான். இந்த மனுசன் பிரச்சினையை சுகுமுமாய் அணுகி தீர்க்கணும் என்று முனையாமல் பிரச்சினைகளை பெரிசாக்கி கிடக்கிறதை குழப்பிப் போடும் போலே.... கிடக்கு.

ஞானமண்ணை சோபாவிலிருந்து ஒரு முறுகு முறுகினார்.

அண்ணை அக்கா சொல்வது தான் சரி. நாங்கள் பத்திசாலித்தனமாய் நடந்து கொள்வது தான் நல்லது என்று சொல்லி முடிப்பதற்குள், தம்பி தயவு செய்து இவரை அவனுடன் இது பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம் என்று சொல்லு... பிறகு அதுகளும் சண்டை பிடிச்சுக் கொண்டு வீட்டைவிட்டு வெளிக்கிட்டிடுங்கள். முதலிலே இந்தாளைச் சாந்தப்படுத்தி பிறகு அவனோடு கதை தம்பி என்று அழுவாரைப் போல் என்னிடம் கெஞ்சி நின்றார்.

அண்ணை அக்கா சொல்லுறது உங்களுக்கும் விளங்கும் என்று நினைக்கிறன். நாங்கள் எங்கடை நாட்டிலே வாழ்ந்த மாதிரி இங்கே எங்கடை பிள்ளையள் வாழினம் எண்டு நினைக்கக் கூடாது, வாழவேண்டும் என்று எதிர்பார்க்கவும் கூடாது. அக்கா சொல்லுற மாதிரித் தான் இடைக்கிடை விட்டுப்பிடிக்க வேண்டும்.

இதுவெல்லாம் குழந்தைகளாக இருக்கின்ற காலகட்டங்களிலிருந்தே நாம் பிள்ளைகளுடன் கதைத்துக் கொண்டிருக்க வேண்டிய விடையங்கள். இன்று இந்தப் புலம்பெயர் மண்ணில் பெரியவர்களே தங்கள் வாழ்வியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிக்கும் போது, பிள்ளைகளை எப்படிச் சொல்லி வளர்ப்பது. இருபத்திநாலு மணிநேரமும் இந்த நாட்டுப் பிள்ளையளோடும் இந்தக் கலாச்சாரச் சூழலில் வாழும் இந்தக் குழந்தைகளில் எப்படி மாற்றம் ஏற்படாமல் போகும், இண்டைக்கு எத்தனை தாய் தகப்பன் பிள்ளையளை வெளியாலே படிக்க என்று அனுப்பிப் போட்டு, ஒவ்வொரு நாளும் நிம்மதியில்லாமலும் நித்திரையில்லாமலும், மடியிலே நெருப்பைக் கட்டிக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்....

இப்ப எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் எப்படியும் அவனை இண்டைக்கு சந்தித்துக் கதைப்பேன். அண்ணை தயவு செய்து அவனுடன் இது பற்றி ஒன்றும் கதைக்க வேண்டாம். நான் அவனிடம் இது பற்றிக் கதைத்து ஆவன செய்கிறேன் என்று போட்டு வெளியே வந்து விட்டேன்.

டினேஸ்... ஞானமண்ணையின் முத்த மகன். அவன் பிறந்த காலங்களில் இருந்து இன்று வரையும் மாமா என்றால் மாமா தான். அப்படி ஒரு நல்ல பிள்ளை. இன்று வரையும் இங்கே இளைஞர்கள் மத்தியில் நடந்த கோஸ்ரி சண்டைகளிலோ அல்லது வேறு பிரச்சினைகளிலோ அவன் பெயர் அடிபட்டதில்லை. தானொன்று தன் வேலையென்று வாழ்ந்து கொண்டிருப்பவன். சென்ற வருடம் தான் யூனிவசிற்றியிலே போய்ச் சேர்ந்த பிள்ளை. இப்ப ஏதோ லீவு காலமானதால் வீடு வந்திருந்த போது தான் இந்தப் பிரச்சினை.

காரில் ஏறுவதற்கு முன்னர் ரெலிபோன் எடுத்தேன், யார் டினேஸா கதைக்கிறது. நான் மாமா கதைக்கிறன் இப்ப எங்கே நிக்கிறையள்..... ஒரு முக்கியம்... ஆ.. ஆ.. ஆ அப்ப அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில் இருக்கும் கபிபாருக்கு வா என்று சொல்லிவிட்டு போய் இறங்கினேன்.

எனக்குத் தெரிந்த ஒரு குருட்டிஸ்தான் நண்பனின் பிட்சாபார் தான். நான் ஒருவனின் வருகைக்காக காத்திருக்கிறேன். அவன் வந்த பின்னா ஒடர் பண்ணுகிறேன் எனச் சொல்லிவிட்டு போய் அமர்ந்து கொண்டேன். பிட்சா மணமும், வாட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கெபாப் இறைச்சி வாசமும் மூக்கைத் துளைத்தது.

இவனுடன் இதை எப்படிக் கதைப்பது எப்படித் தொடங்குவது... என்னுடைய இந்த இக்கட்டான நிலையை விளங்கிக் கொள்ள யாரும் பக்கத்தில் இல்லை. வேலைத்தளத்திலாவது எமக்காக சேர்ந்து வேலை செய்யும் உளவியலாளனிடம் கேட்டு விளங்கிக் கொள்ளலாம்.

என்ன விசித்திரம் வினோதம். நான் வேலை செய்யும் அந்தப் பராமரிப்புச் நிலையத்தில் இரவு வேலையில் நிற்கும் போது யாரவது இளைஞனோ அல்லது யுவதியோ ஒரு வெள்ளியோ, சனியோ ரவுணுக்குப் போக வேண்டும் என்றிருந்தால், அவனுக்கு தேவைப்படும் ஆணுறைகளையும் அவளுக்கு தேவைப்படும் ஆணுறையோ அல்லது கற்பத்தடை குளிசையோ கட்டாயமாக கொடுத்து அனுப்ப வேண்டியது என்னுடைய கடமை. அதுவும் உன்னுடைய இன்றைய இரவை சந்தோசமாய் களித்துக் கொள் என்று சொல்லி அனுப்பி வைக்க வேண்டும். தவறின் அதனால் வரும் விளைவுகளுக்கும் பொறுப்பானவன் நானே.

ஆனால் இந்தப் பிள்ளைக்கு, நான் தூக்கி வளர்த்த குழந்தைக்கு...... இவனுக்கு என்ன சொல்லி விளங்கப்படுத்த என்று நினைத்துக் கொண்டிருக்க...... டினேஸ் வந்து முன்னின்றான்.

இரண்டு சோடாவுக்கு ஓடர் செய்து விட்டு இருந்தோம். மாமா என்ன....? அப்படி என்ன பெரிய பிரச்சினை. அதுவும் இங்கே வந்து கதைக்குமளவிற்கு.... உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா மாமா.... நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமா....?

மனதுக்குள்ளே சிரித்துக் கொண்டு இல்லையப்பன்... இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் உன்ரை வீடு போயிருந்தேன். அங்கே ஒரே குழப்பம்...

என்ன அப்பா அம்மாவுக்குள் பிரச்சினையா... அப்படியென்ன..... மாமா...? குழந்தை போல் கேட்டான்.

அப்பா அம்மாவுக்குள் பிரச்சினை தான், ஆனால் அது உன்னாலே... நீ இங்கே ஜிம்முக்கு வந்திட்டாய் அங்கே பால் வாங்க உன்ரை பேர்சிலே காசு எடுக்கப் போன உன்ரை அம்மா அதிலே கொண்டோம் இருந்ததைக் கண்டு தான் அவர்களுக்குள் சண்டையும் குழப்பமும்.

கொஞ்சம் யோசித்தவனாய்.... மிகவும் சாதரணமாய்.... என்ன மாமா இது பிழையா...? கொண்டோம் பாவிப்பது தானே நல்லது ஆரோக்கியமானது, அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும். பள்ளிக் கூடத்திலேயும் எங்களுக்குப் இப்படித் தான் நடந்து கொள்ள வேண்டும் என்று பல முறை சொல்லித் தந்தவை, இதையிட்டு அம்மா அப்பா சந்தோசமடைவதை விட்டிட்டு ஏன் சண்டைபிடிக்க வேண்டும் கோபப்பட வேண்டும். எனக்கு உண்மையிலே விளங்காமல் இருக்கு...மாமா..

ஒரு குழந்தைப் பிள்ளை கதைத்தது போலவே எந்தக் கள்ளம் கபடமில்லாமல் என்னைப் பார்த்துக் கேட்டான்.

எனக்கு பெரிய சங்கடமாய் இருந்தது.

டினேஸ்..... தெரியாதே நீ இப்ப சின்னப்பிள்ளை... அது தான் அம்மா அப்பா பயப்பிடினம்.. என முடிப்பதற்குள் மெல்லமாய் சிரித்துக் கொண்டபடியே மாமா எனக்கு இப்ப பத்தொன்பது வயதாகிறது. இப்பவும் அம்மா அப்பாவும், நீங்களும் என்னை குழந்தைப்பிள்ளை என்று நினைப்பதை நினைக்க சிரிப்பாய் தான் இருக்கிறது.

இல்லை இப்ப படிக்கிற வயதிலே.... உதுகளிலே போனால் பிறகு குழந்தை குட்டி என்று ஒன்று வந்து விட்டால்.... ? நீ எவ்வளவு சீக்கிரம் தகப்பானாகிறையோ அவ்வளவு வேகத்தில் பேரனாகியும் விடுவாய், பிறகு நீ விரும்பினாலென்ன விரும்பாவிட்டாலென்ன சேர்ந்து வாழவிட்டால், குழந்தைக்கென மாதாமாதம் படி கட்ட வேண்டும். இப்படி ஒரு நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக உன் தாய் தகப்பன் கவலைப்படுவது இயற்கை தானே....

மாமா.... இப்ப இதை அம்மா கண்டதாலே தானே இப்படியெல்லாம் யோசிக்கிறையள். காணா விட்டால்... எப்பவும் நான் நல்ல பிள்ளை என்றும் படிப்பிலே கெட்டிக்காரன் என்றும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள்... பிடிபடும் போது தான் கள்ளன் பிடிபடாமல் விட்டால் எப்போதும் நல்லவன்.

விளங்காமல் கேட்கிறன்... இது ஒரு தமிழ் பெண்ணின் பேர்ஸ்சில் இருந்திருந்தால் அந்தத் தாய் தகப்பன்.... என்ன செய்திருப்பார்கள் எனக்கு..... நினைத்துப் பார்க்கவே பயமாயிருக்கிறது....

மாமா செக்ஸ் என்ற இந்த விடையம் ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பன்னிணைடு பதின்மூன்று வயதுகளிலே ஆரம்பிக்கின்றது. இது வலிந்து ஏற்படுகிற விசயம் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வு, எங்கடை நாட்டிலே அதைக் கட்டுப்படுத்தி கலியாணம் என்ற ஒன்றின் பின்னர் தான் அது உகந்தது என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே இது ஒரு இயல்பான இயற்கை நிகழ்வாகவும் கருதுவதாலே, இதை இங்கே சுதந்திரமாய் விட்டிருக்கின்றார்கள். அதை ஆதரிக்கின்றார்கள். அதுக்காக எங்கடை நாட்டு வாழ்க்கை முறை பிழையென்றோ அல்லது இந்த நாட்டு வாழ்வியல் தான் சரியெண்டு சொல்ல வரவில்லை.

இந்த வயதிலே செக்ஸ் தேவையென்பதற்காக ஒரு கலியாணத்தைச் செய்து குடும்பம் நடாத்த முடியாது. இந்த நிலையில் நானும் தயாரில்லை. இங்கே என் நண்பர்கள் மத்தியில் பதினைந்து பதினாறு வயதிலிருந்தே ஒவ்வொருவர் ஒவ்வொரு துணையை வைத்திருக்கின்றார்கள். என்னைப் போன்ற சில பேர் எப்போதாவது படிக்கிற இடங்களில் பழகிற போது ஏற்படும் சந்தர்ப்பங்களில்... காதலியாய் இல்லாமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நன்றாய் பழகும் போது சந்தர்பம் கிடைக்கும் காலங்களில் பாதுகாப்புக் கருதி இதை உபயோகிக்கின்றோம்.

பாலியல் பற்றிப் பேசுவது பாவம் என்று கருதப்பட்டாலும்.. அதை ஒருத்தரும் ஒதுக்கி வைப்பதில்லை. நாள் முளுதும் அதையே தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக எங்கடையாக்கள்... ஏன் இந்த வயது வந்து திருமணம் செய்த கொண்டவர்கள்... கூட எவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளுகிறார்கள்.

இந்த இளமைக்காலத்திலே இப்படியெல்லாம் நடப்பது மிகச் சாதாரண விடையம். இது எங்கடை நாட்டிலேயும், வேறு ஆசிய நாடுகளிலும், மற்றும் அதி கட்டுப்பாடுகள் கொண்ட அரபு நாடுகளிலும் ஒரு இளைஞனும் யுவதியும் தம் பருவகாலத்தில் ஏற்படுகின்ற இந்தப் பாலியல இச்சையைத் தீர்ப்பதற்கு ஒரு இளைஞன் இன்னொரு இளைஞனையும், ஒரு யுவதி இன்னொரு யுவதியையே இரகசியமாய்த் தேர்ந்தெடுக்கின்றனர், இவர்கள் செக்ஸ் என்றால் என்ன என்பதை இன்னொரு தன்னினத்தைச் சேர்ந்தவர்கள் மூலமே தெரிந்து கொள்கின்றார்கள் என்ற ஒரு கசப்பான உண்மையிருக்கின்றது.

இங்கே வயது வந்த ஓரு ஆணோ பெண்ணோ இந்தக் காலத்தில் ஒரு துணையைத் தேடா விட்டால அவர்களுடை தாய் தந்தையர் ஒரு உளியலாளரிடம் அணுகி ஆலோசனைப் பெற்றுக் கொள்ளுகின்றார்கள்.

ஆனால் எங்கடையாக்களும், இந்த வேறு இனத்தவர்களும் ஏதோ செய்யக் கூடாத பாவம் ஒன்றைச் செய்து விட்டதாக எண்ணி கதிகலங்கிப் போகின்றார்கள். இந்தப் புலம்பெயர் தமிழர்கள் இந்த வெளிநாட்டுக் கலாச்சாரங்களுக்குள் எப்போதோ மூழ்கித் திளைத்து விட்டோம். இதிலே மட்டும் எங்களுக்கப் பாகுபாடு காட்டுகிறிர்கள்.

தம்பி இது உடனே கதைத்து முடிக்கிற விடையமல்ல... உடனே தீர்த்து நியாயம் வழங்கும் விடையமுமல்ல. நீ சொல்வதையும் நான் ஓரளவு ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் கட்டுப்பாடுகள் வரையறைகள், ஒழுங்குமுறைகள் என்று சில எழுதப்படாத சட்டதிட்டங்கள் இருக்கு. மனிதனானவன் வாழ்வதற்கு என்று சில நடைமுறைகளும் இருக்கு.

தம்பி, குறிப்பாக இந்த மேற்குலகம் உங்களைப் போன்ற இளைஞர்களையும் யுவதிகளையும் வேறு எந்தவொரு பக்கமும் திரும்பாத வகையிலே லாடன் கட்டிவிட்டு, டிஸ்கோ என்றும் ஆடல் பாடல் களியாட்டுக்கள் எண்டு கண்டறியாத குப்பைகளையெல்லாம் உங்களுக்காக திறந்து விட்டிருக்கிறது. இவற்றை விட நீங்கள் வேறு என்ன யோசிக்கிறையள்.......?

வாயடைத்தவன் போல் நின்றான். மாமா என்னை நான் நியாயப்படுத்த வரவில்லை. ஆனால்.... வெயில் வந்தவுடன் இவர்களைப் போல் உடுப்பைப் போடுறையள். விழாக்கள் என்று வந்தால் ஆண் பெண் என்று சேர்ந்திருந்து குடிச்சுக் கும்மாளம் போடுறையள். பிறகு ஆடுறையள். இப்ப குடும்பத்தில் ஒரு சின்னப் பிரச்சினை வந்து விட்டால் பிடிக்கவில்லை என்று இலகுவாக விவாகரத்தும் செய்யிறையள். ஆனால இதிலே மட்டும் ஏன் மறைவாகவும் தெரியாமலும், கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என்று எதிர் பாக்கிறையள்..........?

மாமா... இது தமிழ் இளைஞர்களுக்கு மட்டுமுள்ள பிரச்சினையாய் பார்க்காதீர்கள், எங்கள் இன யுவதிகளுக்கும் இது பொருந்தும். எங்கடை நாட்டிலே எவையெல்லாம் தடையாய் கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவைகள் இங்கே இலகுவாயும் சுதந்திரமாயும் இருக்கு, இன்று பல இளம் பெண்கள் மதுவருந்துகிறார்கள், புகையும் பிடிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படிக் கொள்ளப் போகிறையள்.

ஆரம்ப காலங்களிலிருந்தே இந்தக் காம விளையாட்டுக்கள் எங்களுடைய தமிழ் கலாச்சாரத்திலும் இருக்கு. ஆனால் எல்லாம் மறை முகமாக. ஆனால் இங்கே இவை வெளிப்படையாக.

இப்ப ஏற்பட்டிருக்கும் புதிய புதிய மாற்றங்களினால்... ஏன் எங்கடை நாட்டிலேயும் இன்று முறையற்ற, வரையறையற்ற பாலியல் தொடர்புகள் இருக்கு என்றும், இளவயது கருக்கலைப்புக்கள் நடக்குது என்று அப்பாவும் நீங்களும் அடிக்கடி கதைப்பதை நானும் கேட்டிருக்கின்றேன். இனி காலப்போக்கில் இவையெல்லாம் இந்த நாடுகள் போல மாறலாம் என்பதற்கு கனதூரம் இல்லை.

இந்த நாடுகள் மாதிரி எங்கடை நாட்டிலும் சமூக உதவித்தித்திட்டங்கள், குடும்ப உதவித்திட்டங்கள் போன்று பல உதவித்திட்டங்களும் இருந்திருக்குமேயால், அங்கேயும் ஒருவரை ஒருவர் தங்கியிருக்கும் நிலை ஏற்படாமல் இருந்திருக்குமேயானால் இந்த விடையங்களில் வெளிநாடுகளை விட எமது நாடே முதலிடம் வகித்திருக்கும்.

எனக்கு செக்ஸ் பிடிக்கும் என்று சொல்லும் அளவிற்கு எந்தப் பெண்ணோ அல்லது ஆணோ வளர்க்கப்படுவதில்லை. அதிக கட்டுபடபாடான சமூக அமைப்பிலிருந்து வந்து அதிக கட்டுப்படியான மனநிலைகளைக் கொண்ட பெற்றோரால் இவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது தான்.

இது தான் உண்மை மாமா. நீங்கள் விரும்புவது போல்... என்ரை அம்மா அப்பா விரும்புவது போல, பொதுவாக எங்கடை தமிழ்ச் சமூகம் விரும்புவது போல் இதை ஒழித்து மறைத்து வாழ முயற்சிக்கின்றேன். ஆனால் இது எனக்கு சரியான கஷ்டம்.

பொதுவாக இங்கே பிறந்து வாழும் என்னைப் போன்ற பலபேர் வீட்டிலே ஒரு வாழ்வையும் வெளியிலே இன்னொரு வாழ்வையும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இல்லை... நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் நிஜம்.

எப்போவாவது ஒரு இரு முறை ஊருக்கு போய் வருவதாலே, நீங்கள் நினைக்கின்ற எங்கடை கலாச்சாரம் பண்பாடு என்பதை நாம் முளுமையாக அறிந்து விடலாம் என்றும், ஊற்றுக் கொள்ளலாம் என்றும் நினைத்து விட முடியாது. மாறாக இங்கே நடக்கிற சாமத்திய வீடுகளையும் கலியாண வீடுகளையும் வைத்து இவை தான் எங்கடை கலாச்சாரங்கள் பண்புகள் என்றும் கற்றுக் கொள்ளவும் முடியாது. அதற்காக எங்களுடைய நல்லது என்று இருப்பதை மறந்து விடவும் முடியாது.

போரின் பின்னர் தமிழினம் புலம்பெயர்ந்து முப்பது வருடங்களைத் தாண்டிக் கொண்டிருக்கின்றது. மற்றைய இனத்தவரை விட எமது இனத்தவர்கள் தான் இலகுவிலே இந்த வெளிநாடுகளிலே நல்ல இணைவாக்கம் அடைந்திருக்கிருக்கும் இனம் என்றும் சொல்லப்படுகின்றது. காலப்போக்கில் இப்படியான விடையங்களையும் நீங்கள் எல்லோரும் இலகுவாய் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே நினைக்கின்றேன். இது சம்பந்தமாக அம்மா அப்பாவுடன் கதைப்பேன் என்ற படி சோடாவை எடுத்து உறிஞ்சினான்.

முதல் சந்ததியினரான எங்களால் இவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வதோ, அங்கீகரிப்பதோ ஜீரணிக்கவோ முடியாத காரியம் தான். ஆனால் காலப்போக்கில் விரும்பியோ விரும்பாமலோ இவையெல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள நாம் தயாராகத் தான் வேண்டும் என்ற நினைப்புடன் அவனோடு நானும் சேர்ந்து வெளியில் இறங்கினேன்.

முற்றும்.