Thu04182024

Last updateSun, 19 Apr 2020 8am

இவ்வார நிகழ்வுகளின் சாரம்!

பிரபாகரனுக்கு நேர்ந்ததே ஹக்கீமிற்கும் நேரும் மேர்வின்!

"பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடுமென அமைச்சர் நண்பர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திருக்கிறார். பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த நாடு எப்பொழுதோ பிளவுபட்டிருக்கும் என்பதை நான் நண்பர் மேர்வின் சில்வாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். "

"ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சோற்றுப் பார்சல்களை வழங்கி பஸ்களில் ஆட்களை கூட்டம் கூட்டமாக கொண்டு வந்து சேர்க்கும் கட்சியல்ல. களனித் தொகுதியில் இருந்து தான் சோற்றுப் பார்சல்கள் கொடுத்து கொழும்புக்கு ஆட்கள் அதிகம் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றனர்."

சபாஸ் சரியான அதிரடிதான். இருந்தாலும் எங்களுடைய கட்சியின் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியதன் நோக்கம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு சுகபோகங்களை சுகிப்பதற்கு அல்ல! அவ்வாறான அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருக்கத்தான் செய்கின்றனர். என்கின்ற போது, மகிந்தாவின் காலிற்கு பாதபூசை செய்யும் மேர்வினுக்கு இவர் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யலாம்

மகிந்தரை நானே காப்பாற்றினேன் - ரணில் விக்கிரமசிங்க

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் அன்றைய பிரகடனத்தில் நான் கையொப்பமிட்டிருந்தால், இன்று இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும். பிரதமராக நான் பதவி வகித்த காலத்தில் குறித்த பிரகடனத்தில் கைச்சாத்திடுமாறு அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை - என்கிறார்.

இதைத்தான் உயிர் காப்பான் தோழன் என்கிறது. இதைக் கணக்கில் கொண்டுதான் சமபந்தனும்-சுமந்திரனும் அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்காதீர்கள், பலவீனப்படுத்தாதீர்கள் என மன்றாடுகின்றார்களோ? சோழியன் குடும்பி சும்மா ஆடாதே?

தமிழர்களுக்கு எதிராக போரை நடத்தவில்லையாம்! – மகிந்த

"போர் தமிழர்களுக்கு எதிரானதாக இருந்திருந்தால், தமிழர்களால் எப்படி நாட்டின் தென்பகுதியில் சிங்களவர்கள் மத்தியில் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ முடியும்? நாட்டில் இன, மத ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவுகிறது.!"

கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக தாங்களும் தங்களைப் போன்ற பேரினவாத இனவெறியர்களும் தமிழ்மக்களுக்கு எதிரான செயற்பாட்டில் இருந்துதான் வருகின்றீர்கள். ஆனால் தென்னிலஙகையின் ஏகப்பெரும்பான்மையான மக்கள் உங்களைப்போல் ஐந்தறிவு கொண்ட இனவெறி விலங்கினங்களாக வாழவில்லை. அதனால்தான் அவர்கள் எல்லா இனவாதங்களையும் கடந்தவர்களாக வாழ்ந்தார்கள். வாழ்கின்றார்கள். எனவே தென்னிலங்கை வாழ் மூவின மக்களின் ஐக்கிய-அமைதி வாழ்வு என்பது தங்களைப் போன்றவர்களின் இனவாதங்களின் பாற்பட்டதல்ல. இனவாதம் கடந்த புரிந்துணர்வுகளின் பாற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுமியையும் தாயாரையும் கைது செய்யவில்லை -பொறுப்பில் எடுத்துள்ளோம்!

கிளிநொச்சியில் தாய்-மகள் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதன்பின் நீதிமன்றினூடாக அவர்களை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன சொலகிறார்.

இதொரு பெரிய பகிடி: அத்தியட்சகரின் கூற்றுப்படி "கைது செய்வதற்கும் அவர்களை பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதற்கும்" இடையில உள்ள சட்ட-வல்லுணர்வு சார்பு கொண்ட நுன்னிய வேறுபாடுதான் என்னவோ? மகிந்த-கோத்தபாய அகராதியின்படி முன்னையது கடுரம். பின்னையது இலகுவோ. அதுசரி எல்லாம் முடிய உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை என்றால்… காத்தல்-அழித்தல்காரர்களிடம் ஒப்படைத்து இல்லாதாக்கல்தானே? இதுதானே உங்களின் இன்றைய சிறைக் கலாசாரங்கள்!

இராணுவத் தளபதியின் முதிசத் சொத்தாம்!

வலி-வடக்கின் மயிலிட்டியில் மீன் பிடிக்கலாம். ஆனால் மீள்குடியேற்றம் என்ற கதைக்கே இடமில்லை என்கின்றார் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா.

ஏனெனில் இவைகள் எல்லாம் இவர்கள் வாழையடி வாழையாக வாழ்ந்த பூர்வீகப் பூமிதானே?..

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உறுதிமொழி!

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்குமானால் இலங்கைக்கு எதிராக தமிழர் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் யோசனை கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உறுதிமொழி அளித்துள்ளார்!

இவவுடன் பங்கேற்கும் ஆட்சியும், ஜ.நா. சபையும் இவ சொல்வதை தட்டாமல் தயவு கூர்ந்து கேட்பதற்கு தன்காலில் விழும் சட்டமன்றம் எனும் நினைப்போ? அல்லது சசிகலாவின் அந்தரங்க சபையோ யோசனை சொல்வதற்கும், கேட்பதற்கும், செயற்படுத்துவதற்கும். இப்போ இலங்கைத் தமிழர் பிரச்சினை சகலரின் அரசியல் நலன்களுக்கும் பிழைப்பிற்கும் பெரும் முதலீடாகும். .

மலேசிய விமானத்தின் விண்ணாணம்!

"இந்து சமுத்திரத்தில் தீவிர தேடுதல் விமானத்தை கண்டுபிடிக்க மந்திரவாதியின் உதவியை நாடிய மலேசியா: இன்னமும் பறந்துகொண்டிருப்பதாக மந்திரவாதியும் அமெரிக்காவும் தகவல்!"

இங்கே இரு ஞானங்களும் தோல்வியடைந்துள்ளன. எது எப்படியிருந்த போதிலும் இது விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட மாபெரும் சவாலாகும்.