Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் ராணுவ அரசை எதிர்த்து போராடுவோம்!

தர்மபுரம் பகுதியில் நடந்த பாலேந்திரா ஜெயக்குமாரி மற்றும் அவரது மகள் விபூசிகா கைதும், மன்னாரில் ஒட்டப்பட்டுள்ள தேடப்படும் நபர்கள் குறித்த சுவரொட்டியும் எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கின்ற மாகாணசபை தேர்தல் பெருவெற்றிக்கா மகிந்த அரசால் திட்டமிடப்பட்டு நடாத்தப்படுகின்ற இனவாத நடவடிக்கைகளே!

ஜ.நா மனித உரிமை சபையில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்த பிரேரணை பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்றைய வேளையில், மகிந்த அரசு காணாமல் போனவர்களுக்காக போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்ற உறவினர்களையும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் பழிவாங்கும் நோக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதன் மூலமாக இந்த அரசு மக்களுக்கு ஜனநாயகத்தை மறுக்கின்ற தனது போக்கிலிருந்தும்-இனவாதம், மதவாதம் கொண்டு மக்களை மோதவிட்டு நாட்டை மோசமான நிலைமைக்குள் இழுத்து செல்வதிலும் இருந்தும் பின்வாங்கப் போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

ஜெயக்குமாரி அவரது குடும்பத்தில் இரு ஆண்களை வன்னி யுத்தத்தில் இழந்ததுடன், எஞ்சியிருந்த மகனை யுத்தத்தின் இறுதியில் 2009ம் ஆண்டு ராணுவத்திடம் கையளித்து விட்டு அவர் எங்கிருக்கின்றார் என்று தெரியாது மகள் விபூசிகாவுடன் தேடி அலையாத முகாம் கிடையாது.

இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களை விடுவிக்க மற்றும் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என அறிய பல உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுதத்த போது அவர்களுடன் இவர்களும் இணைந்து தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்த வேளையில் எல்எல்ஆர்சி (LLRC)  வெளியிட்ட கைதிகள் தொடர்பான புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தில் இவரது மகன் ராணுவ தடுப்பு முகாமில் இருக்கின்ற படம் வெளியாகியிருந்தது. இது ஜெயக்குமாரிக்கும் அவரது மகள் விபூசிகாவிற்கும் தமது உறவு உயிருடன் உள்ள நம்பிக்கையினை கொடுத்ததுடன், உறவுகளை தேடும் ஒரு அடையாள சிறுமியாக விபூசிகா தனது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமாக பிரபல்பம் அடைந்திருந்தாள்.

அரச படைகள் காணாமல் போன உறவுகளிற்க்காக போராட்டங்களை முன்னெடுப்பவர்களையும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு இது குறித்த விபரங்களை தெரிவிப்பவர்களையும் அச்சுறுத்துவதற்க்காகவும், எதிர்காலத்தில் காணாமல் போனவர்களிற்க்காகவும் காணாமல் போகவிருக்கின்றவர்களிற்க்காகவும் மக்கள் போராடுவதனை இல்லாது செய்வதற்க்காகவும் திட்டமிட்டு செயலாற்றுகிறது. சிறுமி விபூசிகாவையும் அவரது தாயையும் புலிகளிற்கு ஒழிந்திருக்க இடம் கொடுத்தது போன்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றி, கைது செய்து பூஸா முகாமிலும், சிறுவர் நன்னடத்தை மற்றும் புனாவாழ்வு முகாமிலும் அடைத்துள்ளது. இந்த நாடகத்தில் சூட்டுக்கு காயமடைந்ததாக கூறப்படும் படையினர் குறித்தோ அன்றி துப்பாக்கி பிரயோகம் செய்ததாக கூறப்பட்ட நபர் குறித்த எந்த தகவல்களும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.

மகிந்தா ஆட்சியில் காணாமல் போன உறவுகளை தேடுவதும் மனித உரிமைகள் பற்றி கதைப்பதும் பயங்கரவாதமாகி விட்டன.

புலிகள் மீளவும் இயங்குகின்றனர் என பிரச்சாரப்படுத்துவதன் மூலம் தெற்கிலே இனவாதத்திற்கு பலியாகிப்போன மக்களிற்கு அச்சத்தை ஊட்டி தம் பின்னால் வைத்திருக்க அரசு முயல்கிறது. மேலும் அதிகரித்து செல்லும் வாழ்க்கை செலவு மற்றும் சமூக பொருளாதார காரணிகளை முன்னிறுத்தி அரசிற்கு எதிராக எழும் மக்களின் போராட்டங்களை மழுங்கடித்து தமது ஆட்சி அதிகாரத்தை ஸ்த்திரப்படுத்த  மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கின்றது அரசு.

வன்னி யுத்தத்தின் பின்னர் தெற்கில் இந்த அரசிற்கு எதிரான பல மக்கள் போராட்டங்கள் நடந்துள்ளன. மீனவர்கள் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக போராடிய போதும், சுதந்திர வர்த்தக வலயத்தில் சேமலாபநிதி மோசடிக்கு எதிராக போராடி போதும், கம்பகாவில் சுத்தமான குடிநீருக்காக மக்கள் வீதிகளில் இறங்கி தமது ஜனநாயக உரிமைகளிற்க்காக போராடிய போதும் இந்த அரசு அவற்றை பயங்கரவாத நடவடிக்கை போன்று ராணுவத்தினை கொண்டு துப்பாக்கி சூடுகள், உயிர்ப்பலிகள் மூலம் அடக்கி ஒடுக்கியது. பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்த அரசினை பற்றி தமது சொந்த அனுபங்களினூடாக புரிந்து கொண்டுள்ளதுடன், வடக்கு-கிழக்கு மக்களிற்கு கடந்த பல பத்தாண்டுகளாக என்ன நடந்துள்ளது என்பதனை தமது சொந்த அனுபவங்களின் மூலம் புரிந்து கொள்ள முடிவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் காலியில் சமூக ஆர்வலர் ஒருவர் தொழிற்சாலை ஒன்றினால் சூழல் மாசடைவது குறித்து மக்களிற்கு விழிப்புணர்வினை ஏற்ப்படுத்திய போது கொழும்பிலிருந்து விசேடமாக சென்ற சிலர் அவரது வீட்டில் வெடி குண்டொன்றை வைத்து விட்டு சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்தார் என கைது செய்திருந்தனர். கல்வியை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது அவர்களது கல்வி உரிமையினை மறுப்பது தொடங்கி அச்சுறுத்தல், கைதுகள் என அரச ஒடுக்குமுறை நீடித்து செல்கின்றது.

இந்த அரசு சிறுபான்மை இன மக்களை மட்டும் அடக்கி ஒடுக்கவில்லை. தனது ஆட்சி அதிகாரத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராக எழும் பெரும்பான்மை சிங்கள மக்களையும் போலி குற்றச்சாட்டுகள் மீது கைது செய்து, சிறையில் அடைப்பதுடன் மக்கள் போராட்டங்களை ஆயுதப்படைகளை கொண்டு அடக்கி ஒடுக்கின்றது.

யுத்தத்தில் புலிகளை இந்த அரசு வெற்றி கொண்டுள்ளது. ஆனால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தியதற்க்கான அரசியல் காரணங்களிற்கு தீர்வு காண கடந்த ஜந்து வருடங்களில் எந்த முன்முயற்சியையும் இந்த அரசு எடுக்கவும் இல்லை. எதிர்க்கட்சிகளும் இது பற்றி அக்கறை கொண்டதும் கிடையாது.

மாறாக நில அபகரிப்பு, ராணுவ பிரசன்னம், ஜனநாயக உரிமைகளிற்க்கான அச்சுறுத்தல்கள் அதிகரித்து செல்வதுடன் தமிழர்களை அடிமைகள் போன்று மகிந்த அரசு நடாத்துகின்றது.

தமிழ் அரசியல் கட்சிகள் இவற்றினை கருத்தில் எடுத்து போராட்டங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மாறாக, தமிழ் மக்களை தமது "தமிழ் இனவாத" அரசியல் எல்லைக்குள் முடக்கி வைத்து அரசியல் இலாபங்களிற்க்காக மக்களின் ஜனநாயக உரிமைகளிற்க்கான போராட்டங்களை பயன்படுத்திக் கொள்வதுடன், அந்நிய நாடுகள் எல்லாவற்றினையும் தீர்த்து வைக்கும் அவர்களிடம் முறையிடுங்கள் என மக்கள் போராட்டங்கள் நீர்ந்து போகும் வண்ணம் செயற்படுகின்றன.

தமிழ், முஸ்லீம் மக்கள் அரசிற்கு எதிராக போராடும் சாதாரண உழைக்கும் சிங்கள மக்களின் போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலமும்; உழைக்கும் சிங்கள மக்கள் ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இன மக்களின் போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொள்வதன் மூலமும் தான் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை வலுப்பெற்றச் செய்து அரச பயங்கரவாதத்தினை முறியடிக்க முடியும்.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

19/03/2014