Fri04192024

Last updateSun, 19 Apr 2020 8am

வட இலங்கையில் இரண்டு மக்கள் போராட்டங்கள்!

இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையிலான இருவேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன.

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையாளரைக் கோரி மன்னாரிலும், ஆறுமாதங்களுக்கு முன்னர் காணாமல் போய் எலும்புக் கூட்டு எச்சங்களாக மாங்குளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசன் நிருபனின் மரணத்திற்கு காவல்துறையினர் சரியான விசாரணைகளை நடத்த வேண்டும் எனக் கோரி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் வெள்ளியன்று நடத்தப்பட்டிருக்கின்றன.

 

மன்னார் நகரில் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போராட்டத்திற்கு மன்னார் மாவட்டப் பொது அமைப்புக்களும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன.

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி உட்பட அரசியல் கட்சி பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.

மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும், அருட்தந்தையர், அருட்சகோதரிகள், காணாமல் போனோரின் உறவுகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

''யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் சரியான முறையில் பகுப்பாய்வு செய்து உரிய நீதி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும், 2009 ஆம் ஆண்டின் பின்னர் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள், சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவதுடன், கைப்பற்றப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும். காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சரியான விசாரணைகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி கண்டறியப்பட வேண்டும். சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், இனப்பிரச்சினைக்கு நிலைத்து நிற்கக் கூடியதோர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்'' என்ற கோரிக்கைகள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்திடம் மன்னாரில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.