Sat04202024

Last updateSun, 19 Apr 2020 8am

புரட்சிகர மேதினத்தில் அணிதிரள்வோம்!

தேசத்தின் பெயராலும் தேசபக்தியின் பெயராலும் அபிவிருத்தியின் பெயராலும் மேற்குலக அன்னிய சக்திகளின் ஆசீர்வாதத்தோடு பேரினவாத ஆட்சி அதிகாரம் கோலோச்சி நிற்கும் இன்றைய இலங்கைச் சூழலில் ஜனநாயக மறுப்பும் மக்கள் விரோதச் செயற்பாடுகளும் மிகப்பெரும் சவாலாக எழுந்து நிற்கிறன. ஏகாதிபத்தியத்தின் வழிகாட்டலோடு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்பன வலிந்து திணிக்கப்பட்டுவருகிறன. இந்தப் பின்புலத்தில் ஆளும் அரச குடும்பத்தின் சர்வாதிகாரத்திற்குப் பின்னால் வாய்பொத்திக் கைகட்டி நிற்கும் அரசியல் கலாசாரமே இன்று மேலோங்கி வருகிறது. இச்சூழலில் தொழிலாளர்களின் புரட்சிகர தினமான மேதினம் ஆளும் வர்க்கதினதும் அதன் அடிவருடிகளினதும் பொய்ப் பிரச்சார மேடைகளாக மாறி வருகின்றன. எனவேதான் மாற்று அரசியற் தலைமைக்கான வெகுஜனத் தளத்தைப் பலப்படுத்துவதே இன்று நாடு வேண்டி நிற்கும் முதன்மைக் கடமையாக உள்ளது. எனவே தொடர்ந்தும் மக்கள் சார்பாக நின்று குரல் கொடுத்து வரும் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதினத்தில் அணிதிரளுமாறு கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேதினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இன்று எமது நாடு தினசரி உயரும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், கரிசனையற்று நட்டாற்றில் விடப்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தித் துறை, திறந்து விடப்பட்டுள்ள உலக மயமாக்கலின் நுகர்வுப் பண்பாட்டு விரிவாக்கம் என்பன இன்று சாதாரண மக்களின் அன்றாட வாழ்வின் மீது மிகப்பெரும் சுமையாக ஏறி நிற்கிறது. மறுபுறம் 2009ம் ஆண்டு இராணுவ வெற்றியின் பின்னர் வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கமும் நிலப் பறிப்பும் அத்துமீறிய குடியேற்றங்களும், அண்மைக் காலமாகப் புலிப் பூச்சாண்டியைக் காட்டி இடம்பெறும் கைதுகளும் காணாமற் போதல்களும், தொடரும் கொலைக் கலாச்சாரமும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை மேலும் வலுவாக்கி அவர்களை அடிமைக் கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதற்கான எத்தனிப்பாகவே அமைகிறது.

இந்தச் சூழலில் தாமே தமிழ்த் தலைமைகள் எனக் கூறிக்கொள்வோர் இந்தியா வரும், ஜெனிவா தமிழீழம் வென்றுதரும், எல்லாம் சர்வதேசமயம் என்று வெண்பா பாடிக் குற்றுயிராய்க் கிடக்கும் தமிழ் மக்கள் மீது குட்டிக்கரணமடித்து இப்போது அமெரிக்கா காக்கும் என்று சாஸ்திரம் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

மலையக மக்களோ இன்றும் தேசிய இன அடையாளம் மறுக்கப்பட்டவர்களாகவும் காணி வீட்டுரிமையற்ற மூன்றாந்தரப் பிரஜைகளாகவும் வஞ்சிக்கப்படும் வரலாறு இன்னும் தொடர்கிறது. மலையகத் தலைமைகள் எனத் தம்மை மார்த்தட்டிக் கொள்ளும் அரை அரசியல் தொழிற்ச்சங்கத் தலைமைகள் மகிந்தவுக்குச் சாமரம் வீசி நாற்காலி சுகம் அனுபவிக்கின்றனர். இவர்கள் பேரினவாதம் வீசும் எலும்புத்துண்டுகளே மலையக மக்களின் வாழ்வாதார உரிமைகள் என வழமைபோல் ஏமாற்றி வருகின்றார்கள்.

அதே போல் இன்று முஸ்லிம் மக்கள் கல்விப் பொருளாதாரத் துறைகளில் மெதுவாகக் கண்டுவரும் வளர்ச்சி அவர்களை சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதான எதிரி என்ற நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது. மறுபுறம் இலங்கையின் பெரும்பாலான தொழிற்துறைகள் அடக்குமுறைகளும் சுரண்டலும் மிக்க தளங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அங்கு மேலெழக்கூடிய போராட்டங்கள் மிகக் கொடூரமாக அடக்கியொடுக்கப்பட்டு வருகிறது. இன்று நாட்டின் இராணுவ மயமாக்கம் என்பது சிறுபான்மைத் தேசிய இனங்களை அடக்க மட்டுமன்றிப் பெரும்பான்மை சிங்கள மக்களின் மீதும் ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கப் பயன்படுத்தப்படுவதனை, கட்டுநாயக்க தொடங்கி ரத்துபஸ்வெல, ஹங்வெல வரை மேற்க்கொள்ளப்பட்ட மீனவர், தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர் போராட்டங்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அரசப் பயங்கரவாத தாக்குதல்கள் நிரூபித்து வருகின்றன.

இந்த நாட்டின் கல்வித் துறையும் சுகாதாரமும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய மெல்ல மெல்ல முழுமையான தனியார் மயத்தை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது. தனியார்மயமும் தாராளமயமும் இன்று எல்லா அத்தியாவசியப் பொதுச்சேவைகளிலும் மிக நாசூக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் இன்னுமொரு பரிமாணமாக அரச ஊழியர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவினை வங்கிக் கடனாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அபிவிருத்தி எனும் பெயரிலான நாசகாரத் திட்டங்கள் இயற்கை வளங்களையும் மனித வாழ்வுக்குரிய சூழலையும் அதன் லாப வேட்கைக்கு பலியாக்கத் தயாராகி நிற்கின்றது.

பௌத்த தேசமெனப் பெருமை பேசி ஆதிக்க மாயைக்குள் இந்த நாட்டின் பெருபான்மை சிங்கள மக்களைக் கட்டி வைத்திருக்கும் இந்த நாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு போதைப் பொருள் வியாபாரம் கொடிக் கட்டி பறக்கிறது. ஆசியாவின் பொருளாதார கேந்திரமாக இலங்கையை மாற்றுவோம் எனக் கூறியவர்களின் உள்நோக்கம் இலங்கையை போதைப்பொருள் கடத்தல், களியாட்டம், கசினோ சூதாட்டம், விபச்சாரம் போன்றவற்றிற்குக் கேந்திர மையமாக்குவதே என்பதனை அண்மைய சம்பவங்களும் நடைமுறைகளும் நமக்குக் காட்டுகின்றன. கொலை கொள்ளை வன்புணர்வு சிறுவர் துஷ்பிரயோகம் எனச் சீரழிவுகள் மலிந்த நாடாக இலங்கை மாறிவருகிறது. ஆசியாவின் ஆச்சரியம் விலைவாசி உயர்விலும் தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையிலும் தொழிற்சங்க உரிமை மறுப்பிலும் இழி நிலைக் கலாச்சாரங்களை ஏந்தி நிற்கும் தரத்திலும் அரச பயங்கரவாதத்திலும் சாதனைப்படைத்து நிற்கிறது.

இன்றைய இந்தச் சீரழிந்த அரசியல் பொருளாதார சமூகப் பண்பாட்டு சூழலில் தேசிய இனங்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அனைத்து மக்களுக்குமான சமத்துவ இலங்கையைக் கட்டிவளர்க்கவும் பேரினவாத, குறுந்தேசிய அரசியல் தொழிற்ச் சங்கத் தலமைகளை நிராகரித்து மாற்று அரசியல் தலைமைக்கான வெகுஜன தளத்தைப் பலப்படுத்துவதே இன்றைய அவசியத் தேவையாக இருக்கின்றது.

இன்றைய சூழ்நிலையில் உழைக்கும் மக்களின் புரட்சிகர மே தின நிகழ்வு என்பது ஆளும் வர்க்க நலன் சார்ந்த உழைக்கும் மக்களை ஏமாற்றும் கேளிக்கைக் கூத்தாட்டங்களாக மாறியிருக்கின்றது. அதேவேளை தொடர்ந்து மக்கள் சார்பாக நின்று சமூக விடுதலைக்காக, இன மத மொழி பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் குரல் கொடுத்து வரும் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி இம்முறை யாழ்பாணம், வவுனியா, மலையகம் ஆகிய பிரதேசங்களில் தனது மேதினக் கூட்டங்களை நடத்தவுள்ளது. உழைக்கும் மக்களினதும் தேசிய இனங்களினதும் விமோசனத்திற்க்காய்க் குரல் கொடுக்கும் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினக் கூட்டங்களில் அனைத்து உழைக்கும் மக்களையும் ஜனநாயக, இடதுசாரி, முற்போக்குச் சக்திகளையும் அணிதிரண்டு வெகுஜன அரசியல் மார்க்கத்தைப் பலப்படுத்துமாறு புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ. மகேந்திரன் வேண்டுகோள் விடுக்கின்றார்.

ஊடகங்களுக்கான அறிக்கை

16.04.2014