Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளிநொச்சியில் பயங்கரவாத குற்றச்சாட்டில் மூதாட்டி கைது

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அதற்கான பணத்தை விடுதலைப்புலிகளே இந்தப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அஜித் ரோஹண கூறினார்.

தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தார்.

வவுனியா ஆசிகுளம், தரணிக்குளத்தைச் சேர்ந்த சசிகரன் தவமலர் என்ற 42 வயது தாயாரும், அவருடைய மகளான யதுர்சினி என்ற 16 வயது பாடசாலை மாணவியும் கடந்த வாரம் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் ஜெயக்குமாரி என்ற பெண்ணும், அவருடைய 14 வயதான மகள் விபூசிக்காவும் சில வாரங்களுக்கு முன்னர் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு உதவி வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

அண்மைக் காலமாக வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் இராணுவ சுற்றிவளைப்புகள்- தேடுதல்களின்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பெண்கள் அதிக அளவில் கைது செய்யப்படுவதைப் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு அண்மையில் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.