Tue04232024

Last updateSun, 19 Apr 2020 8am

இலங்கையின் புதிய விதைகள் சட்டம்: விவசாயிகள் எதிர்ப்பு

உத்தேசிக்கப்பட்டுள்ள விதைகள் சட்டம் விவசாயிகளின் பாரம்பரிய உரிமையை பறிப்பதாக குற்றச்சாட்டு

சனத்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றங்கள் இப்படியான சவால்களை எதிர்கொண்டிருக்கின்ற உலக நாடுகளுக்கு விவசாயத்திற்குத் தேவையான விதைகளை விருத்தி செய்வதும் பாதுகாப்பதும் இன்று பெரும்பிரச்சனைக்குரிய விடயமாகியுள்ளது.

இலங்கையில் இது சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

விவசாய விதைகளைப் பாதுகாப்பதற்கான உரிமை தொடர்பில் விவசாய திணைக்களத்தின் இயக்குநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் புதிய விதைகள் சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தனியார் வணிக நிறுவனங்கள் விற்கின்ற விதைகள் மூலம் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காவிட்டால், அந்த நிறுவனங்களை அதற்குப் பொறுப்பாக்குவதே இந்த புதிய சட்டத்தின நோக்கம் என்று விவசாய அமைச்சின் விவசாய தொழிநுட்பம் தொடர்பான மேலதிகச் செயலாளர் டி.பி.டீ. விஜேரட்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஆனால், விவசாய சங்கங்களோ இந்த சட்டம் நடைமுறைக்கு வரவேக்கூடாது என்று விடாப்பிடியாக இருக்கின்றனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் அவர்களது கருத்தையே பிரதிபலிக்கின்றனர்.

பல்தேசிய கம்பனிகளின் ஆதிக்கம்

விதைகளை உருவாக்கி விற்கும் பல்தேசிய கம்பனிகளுக்கு முழுமையான ஆதிக்கத்தைக் கொடுப்பது தான் இந்த சட்டத்தின் நோக்கம் என்று அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தமிழோசையிடம் கூறினார்.

'எமது நாட்டில் 3000க்கும் மேற்பட்ட நெல்வகைகள் ஒருகாலத்தில் இருந்தன. ஆனால் இன்று 75 வரை தான் இருக்கின்றன. எமது பாப்பாளிப் பழம், தக்காளி, மிளகாய் ரகங்கள் எல்லாம் இன்று காணாமல்போய்விட்டன. இன்று எங்களிடம் இருப்பது வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகள் வழங்கிய விதை ரகங்கள் தான். அவற்றிலிருந்து இரண்டாவது தலைமுறை விதைகளைப் பெறமுடியாது' என்றார் நாமல் கருணாரத்ன.

விதைகளை உருவாக்கவும் வைத்திருக்கவும் கொண்டுசெல்லவும் விவசாய திணைக்களத்தின் அனுமதி பெற வேண்டும் இல்லாவிட்டால் 6 மாத சிறைத் தண்டனையோ அல்லது 50 ஆயிரம் ரூபா அபராதமோ விவசாயிகளுக்கு விதிக்கப்படலாம் என்கின்ற புதிய சட்டப்பிரிவே விவசாயிகள் மத்தியில் கிளம்பியுள்ள பெரும் எதிர்ப்புக்கு முக்கிய காரணம்.

ஆனால், இந்த சட்டத்தை அரசாங்கம் கொண்டுவருவதன் பின்னணி தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு சந்தேகம் இருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியத்தின் இயக்குநர் எஸ். விஸ்வலிங்கம் தமிழோசையிடம் கூறினார்.

விதை விநியோகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு இருக்கின்ற ஆதிக்கத்தைத் தடுத்து விவசாயிகளை ஊக்குவிக்க அரசிடம் உரிய நடைமுறைகளை முன்னெடுக்க வேண்டும் என்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விவசாயத்துறை மூத்த விரிவுரையாளர் கலாநிதி பி. சிவராஜா தெரிவித்தார்.

மீடியா பிளேயர்

மாற்று மீடியா வடிவில் இயக்க