Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

கூட்டமைப்புக்கு வந்துள்ள ஞானோதயம்!

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கூட்டமைப்பின் பிறேமச்சந்திரன் மக்களிடம் அபிப்பிராயம் கேட்கும் படலத்திற்கு சென்றுள்ளார். இதை தமிழ் தேசிய அரசியல் இயலாமையின் பாற்பட்ட நிகழ்வாக கொள்ளலாம்.

நாங்கள் சொல்வதை நீங்கள் (மக்கள்) செய்யுங்கள் உங்களுக்கானவற்றை நாங்கள் செய்வோம். இதுவே தமிழ் தேசிய அரசியலின் கடந்தகால வரலாறு. பாராளுமன்ற அரசியலானாலும் சரி தமிழீழப்போராட்ட அரசியல் ஆனாலம் சரி தமிழ் மக்கள் பார்வையாளர்களாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியத்தின் அரசியல் வரலாறானது ஏகப்பெரும்பான்மையான தமிழ் மக்களின் அபிலாசைகள், ஜனநாயகம், சுதந்திரம், சுயாதிபத்தியம் பற்றிய எந்தவித புரிதலுமற்றது. ஒற்றைப்பரிமாணமாக இட்டுக்கட்டி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் அரசியலாக ஆக்கப்பட்டது. இதை நடைபெற்ற வடமாகாணசபை தேர்தலுக்கு ஊடாகவும் காணமுடியும். தாங்களே தமிழ் மக்களின் சர்வமயம் என்றிருந்தவர்களிற்கு மக்களிடம் அபிப்பிராயம் கேட்கும் ஞானோதய அறிவு எப்படி வந்தது?

சமகால உலகின் அரசியல் பொருளாதார ஓட்டம் இவர்களின் பழமை கொண்ட பார்வைகளின் பாற்பட்டதல்ல. உலகமயமாதலின் அரசியல் நவயுக நிலை கொண்ட தன்மையையும் அதன் மக்கள் விரோத சூட்சுமத்தையும் சரிவரக் கைக்கொள்ளாததால் தமிழ்த் தேசியத்தின் அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் இயலாமையின் பாற்பட்டதாக்கியது. இருந்தும் இவர்கள் இப்போதும் இதை சரிவரக் கைக்கொள்வதாக கொள்ள முடியாது. தற்போது ஏற்ப்பட்டுள்ள அரசியல்

இயலாமையின் இக்கட்டில் மக்களிடம் அபிப்பிராயங்கள் என்னும் நிலையை எடுத்தள்ளனர். இருந்தும் வந்தடைந்துள்ள நிலையை முன்னிறுத்தி மக்கள் அபிலாசைகளை மேம்படுத்தி முன் சென்றால் அரசியல் இயலாமையில் இருந்து விடுபட முடியும். உலகில் அடக்கி ஒடுக்கப்படும் தேசியங்கள் மக்களை முன்னிறுத்திய வெகுஜன போர்களின் மூலமே அடக்கி ஒடுக்குதலை முறியடித்து முன்னேறுகின்றன எனும் எளிய உண்மையினை உணர்வார்களா? உணர்ந்தால் எம்மக்களிற்கும் விடிவு உண்டு.