Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

அளுத்கம தாக்குதல்களைக் கண்டிக்கிறது NDMLP

அண்மைக் காலங்களில் முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிராகப் பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படைவாதிகளும் மேற்கொண்டு வந்த மிகமோசமான பிரசாரங்களினதும் நடவடிக்கைகளினதும் ஒரு பகுதியாகவே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான வெறித்தனத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் இரண்டு முஸ்லீம்கள் கொல்லப்பட்டதுடன் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட அறுபது பேர் வரை காயப்பட்டுள்ளனர். வீடுகள் வர்த்தக நிலையங்கள் உட்பட மக்களின் உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வீடு வாசல்களை விட்டு வெளியேறிய மக்கள் பள்ளிவாசல்களிலும் பொது இடங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் போன்று வேறுசில பிரதேசங்களுக்கும் இதனை விரிவுபடுத்துவதற்கு பௌத்தமத அடிப்படைவாத வெறியர்கள் முயன்று வருகின்றனர். எனவே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான மிலேச்சத்தனத் தாக்குதலை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்கள்களைத் தடுத்து நிறுத்துவதற்கு பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனாவையும் அதனை ஒத்த ஏனைய பேரினவாத வெறிபிடித்த அமைப்புகளையும் தடை செய்வதே ஒரேவழியாகும்.

இலங்கையில் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர்கள் என்போருக்கு எதிரான திட்டமிட்ட பேரினவாத வன்செயல்களும் கொலைகளும் எரியூட்டல்களும் புதியவை அல்ல. 1915 இல் முஸ்லீம் மக்கள் மீதான முதலாவது பேரினவாதத் தாக்குதல்கள் இடம் பெற்று அடுத்தவருடம் நூறு ஆண்டுகள் ஆகப் போகின்றன. இச்சூழலிலேயே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான கோரத்தனமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்குப் பின்னால் அரச தரப்பின் உயர் புள்ளிகளின் ஆதரவோடு இயங்கிவரும் பொதுபல சேனா இருந்து வருவது எல்லோரும் அறிந்ததாகும். இக் கொடுர வன்முறைகளில் முஸ்லீம் மக்களும் சாதாரணத் தமிழ் சிங்கள மக்களுமே பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இவற்றின் மூலம் அரசியல் இலாபம் பெறுவோர் மட்டுமன்றி அந்நிய சக்க்திகளின் கரங்களும் இருந்து வருவதும் நிராகரிக்க முடியாது.

எனவே சிங்களவர்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என குறுகிய இன மத பிரதேச வேலிகள் இட்டு நிற்பதால் பயனேதும் எற்படமாட்டாது. தொடர்ந்து பாதிக்கப் படுவோர் சாதாரண உழைக்கும் மக்களாகவே இருக்கிறார்கள். எனவே உழைக்கும் மக்கள் என்ற அடிப்படையில் அனைத்து மக்களும் சிந்தித்து செயற்படுவதன் மூலமே இன மத அடிப்படைவாதிகளையும் அரசியல் இலாபம் பெறுவோரையும் அடையாளம் கண்டு நிராகரித்து முன்நோக்கிச் செல்லமுடியும் என்பதையே எமது கட்சி இவ்வேளையில் சுட்டிக்காட்டுகிறது.

17.06.2014

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி