Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அரசினால் புதைகுழி திறக்கப்படுகிறது!

 

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்களை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் புகைப்பட்டுள்ள சடலங்களையே எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் நேற்று (23) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புலிகளால் கடத்தப்பட்டு 100க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் கடற்கரையோரப் பகுதியில் தனது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சடலத்தை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய அதனை தோண்டி எடுத்து தருமாறு மக்கள் 3 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அரசு அதைத் தட்டிக் கழித்து வந்தது.

இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி உரிய இடத்தினை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

இந்நிலையில் இலங்கையில் அடையாளங் காணப்பட்டு, திறக்கப்பட்ட புதை குழிகளைப் பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத ஜனாதிபதி ஆணைக்குழு, திடீரென சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குருக்கள்மடம் பிரதேசத்துக்கு கடந்த 22ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பராணகம தலைமையிலான குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டியிருந்தனர்.

இலங்கையின் அரசின் உதவியுடன், முஸ்லீம் சகோதரர்கள் மீதான வன்முறை நாளுக்கு நாள் கொடுங்கோன்மையாக நிகழ்த்தப்படுகிறது. இதனால் மஹிந்த அரசு மீது உள்நாட்டிலும், வெளிநாடுகளிலிருந்தும் கண்டனங்கள் குவிந்த வண்ணமுள்ளது. இதைத் திசைதிருப்பும் விதமாக, புலிகள் கலாலத்தில், அவர்களால் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்களின் பாரிய புதைகுழியை திறக்க மஹிந்த அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அளுத்கம தாக்குதல், மற்றும் கொலைகளின் பின் தமிழ் - முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களிடையேயான இணைவு ஏற்படும் சூழல் காணப்பட்டு வருகிறது. அதேபோல சிங்கள ஒடுக்கப்படும் மக்களும், இனவாத - மதவாத அரசுக்கெதிராகக் கிளம்பியுள்ளனர்.

எல்லாவகையிலும் முஸ்லிம் சகோதரர்களுக்கு, நியாயம் கிடைத்தே ஆக வேண்டும்! அதேவேளை புதைகுழிகளைத் தோண்டி நியாயம் வழங்கப் போகிறோம் என்ற போர்வையில் அரசும் அதன் அடிவருடிகளும் நடாத்தும் நாடகத்தில் மக்கள் மயங்கி விடக் கூடாது. எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகப் போராடுவதன் மூலம் மட்டுமே இந்த அரசையும், அதன் அடிவருடிகளையும் தூக்கி எறிய முடியுமென்பதை மக்கள் மறந்து விடக் கூடாது.