Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

அமிர்தலிங்கம் கொலையை கண்டிக்காதவர்கள் எப்படி மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்!!

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் 1989 ம் ஆண்டு ஜூலை 13-ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்ட 25 வது ஆண்டு நினைவை ஒட்டி, அதற்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என்று பிபிசி சம்பந்தனிடம் கேட்டது. அதற்கு அவர் கொலையை அன்று கண்டித்திருந்தால் பலர் பாதிக்கப்படைந்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே, தமிழ் அரசியல் தரப்பில் அவரது இழப்பு குறித்து மௌனம் சாதித்ததாக கூறுகின்றார்.

புலிகளின் மனித விரோதத்துக்கு எதிராக சாதாரண மக்கள் குரல்கொடுத்துப் போராடி மரணித்து வந்த  காலத்தில், இவர்கள் தாங்களாக போட்ட அரசியல் வேஷத்தை அவிழ்த்துக் காட்டியிருக்கின்றார் சம்பந்தன்.

தங்கள் தலைவரின் கொலைக்கு எதிராக போராடாதவர்கள், மக்களுக்காக எப்படித் தான் குரல் கொடுத்து இருப்பார்கள்? பல பத்தாயிரம் மக்கள் புலிகளால் பாதிக்கப்பட்டும், ஆயிரம் ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது, இவர்கள் மௌனமாய் இருப்பதில் தொடங்கி, புலிகளின் இறுதிக் காலத்தில் கூடிக் கூத்தாடியவர்கள் அல்லவா இவர்கள்?

அமிர்தலிங்கம் வளர்த்த புலி தான், அவரைக் கொன்றது. உண்மை இப்படியிருக்க அன்று புலிகளால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டது, மக்களுக்காக குரல் கொடுத்ததால் அல்ல. மாறாக தாங்கள் மட்டும் தான் தமிழரின் தலைமை என்ற கூட்டமைப்பின் அதே கொள்கை அடிப்படையில் கொல்லப்பட்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் விரோத புலிகள் மக்களை ஒடுக்கியும், பல முன்னணியாளர்களை கொன்றும் வந்த காலத்தில், அதைக் கூட கண்டித்து போராடாது புலிகளிடம் தங்களுக்கேற்ற பேரத்தை செய்ய பேச்சுவார்த்தை நடத்திய ஒரு சூழலிலேயே கொல்லப்பட்டனர்.

அன்று இவர்களின் மக்கள் விரோத நடத்தை எப்டியோ, அதே போன்று இன்றும் மக்களுக்காக செயற்படப் போவதில்லை. தமிழ் மக்கள் நலனுக்காக இவர்கள் போராடுவதாக நம்புவதானது, பகுத்தறிவற்ற மனித அறியாமையாக மட்டும் தான் இருக்க முடியும்.