Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

டெல்வின் தோட்டச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை உடனே கைது செய்!

இறக்குவானை டெல்வின் தோட்ட பி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அல்லது பாலியல் வன்முறைக்குட்படுத்திய சந்தேக நபரை உடனே கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மக்கள் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுப்பதுடன், அச்சமூக விரோத குற்றச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.

தோட்டத் தொழிலாளர் வர்க்க அல்லது மலையகத் தமிழ் குடும்ப பெண்களும், சிறுமிகளும் இலகுவாக இவ்வாறான குற்றச் செயல்களுக்குள்ளாக்கப்படுவதுடன் அவர்கள் மீது குற்றச் செயல்களை புரிந்தவர்கள் இலகுவாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடுகின்றனர். இந்நிலைமையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.

அதேவேளை டெல்வின் தோட்டச் சிறுமிக்கு ஏற்பட்ட துன்பியல் சம்பவத்தை அனைத்து தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும், பொது அமைப்புக்களும் அச்சம்பவத்தை எதிர்த்து பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கவும், குற்றவாளி தண்டிக்கப்படவும் நேர்மையான செயல்களில் ஈடுபட வேண்டும் எனவும் மக்கள் தொழிலாளர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா இறக்குவானை டெல்வின் தோட்டத்தில் சிறுமி பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டமை தொடர்பாக விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இறக்குவானை டெல்வின் தோட்டத்தின் பி பிரிவில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்முறைக்கு அல்லது துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை அவரது சமூக அந்தஸ்து, இனம், பண பலம் என்பவற்றை பாவித்து கைதுசெய்யப்படாமல் தப்பி இருப்பதாக அத்தோட்டத்து மக்கள் சினமடைந்துள்ளனர். அவரை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தாவிட்டால் அப்பிரதேசத்தில் மட்டுமன்றி, மலையகத் தோட்டப்பகுதிகளில் பெரும் அமைதியீனம் ஏற்படும் அபாயமிருக்கின்றது.

அக்குற்றச்செயலை கண்டித்தும் சந்தேக நபரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரியும் தோட்டத்தொழிலாளர்கள் (நேற்று) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி மக்கள் கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாலியல் வன்முறையை அல்லது துஷ்பிரயோகத்தை யார் புரிந்தாலும் அது தண்டணைக்குரிய குற்றச்செயல் மட்டுமன்றி சமூகவிரோத செயலுமாகும். அதனை புரிந்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதுடன் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது பெண்களும், சிறுவர், சிறுமியரும் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சட்டத்தரணி இ.தம்பையா

பொதுச்செயலாளர்

மக்கள் தொழிலாளர் சங்கம்.