Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

நிலச் சுவீகரிப்பு பற்றிய மாவை சேனாதிராஜாவின் புரட்டு

சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதற்காகவே இராணுவ முகாம் அமைத்தல் என்ற போர்வையில் வடக்கில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

02.07.2014 இலங்கை தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை அலுவலகத் திறப்பு விழா தெல்லிப்பளை, ஆனைக்குட்டி, மதவடியில் இடம்பெற்றது. அலுவலகத்தினைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போது, எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாமல் அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள், பரம்பரை பரம்பரையாக மேற்கொண்டு வந்த விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக வாழ்கின்றனர்.

மறுபுறத்தில், எமது மக்களின் நிலங்களில் இராணுவம் உல்லாச விடுதிகளைக் கட்டி தொழில் நடத்துகின்றார்கள். நீச்சல் தடாகங்களில் நீந்துகின்றார்கள். எமது இன விகிதாசாரத்தைக் குறைக்கும் வகையில் அரசாங்கம் திட்டமிட்ட முறையில் எமது பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சம்மந்தனுக்குப் பதில் தமிழ் இனவாதத்துக்கு தலைமை தாங்கவுள்ள மாவை சேனாதிராஜா, ஒரு உண்மையை மூடிமறைக்கின்றார். நிலங்கள் சுவீகரித்தல் முழு நாடு தழுவியதாக இருப்பதையும், நிலங்கள் நவதாராள மயமாக்கத்துக்காக தாரைவார்க்கப்படுவதையும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றார். அதற்கெனவே சுவீகரிப்பதை ஆதரிக்கின்ற அதேநேரம், இனவாதம் சார்ந்ததை மட்டும் பிரித்தெடுத்து எதிர்க்கின்ற பித்தலாட்டத்தை மேற்கொண்டு மக்களை இனரீதியாக பிளக்கின்றார்.

"விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக" மக்கள் வாழ்கின்றனர் என்றால், வெறு இனவாதம் மட்டுமல்ல நவதாராள பொருளாதாரமே இதற்கான அடிப்படைக் காரணமாகும். இனவாதத்தை  அரசு முன்னெடுக்கின்றதன் அடிப்படைக் காரணமே நவதாராள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே என்ற உண்மையை, தமிழினவாதம் அரசுடன் சேர்ந்து மூடிமறைக்கின்றது.