Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

ஒரு தளராத உறுதிகொண்ட போராளி-தோழர் தங்கவடிவேல்

தரப்படுத்தல் கண்டு தனி நாடு கேட்டு ஆயுதத்தோடு கொதிந்தெழுந்த வடக்கிலே; தனிக்குவளை, சிரட்டையில் தேநீர், கிணற்றில் நீரைக் கூட வாளியால் மொள்ளக் கூடாது, உயர் சாதியினருக்கு முன்னால் தோளிலிருக்கும் சால்வையை மடித்து கமக்கட்டுக்குள் செருகியாக வேண்டும், விவசாயக் கூலிப் பெண்கள் மார்புகளை மறைக்க குறுக்குக்கட்டு அணிய வேண்டும், வள்ளியம்மை என்றோ அல்லது கந்தையா என்றோ பெற்ற குழந்தைக்கு பெயர் வைத்தால் வள்ளி என்றும் கந்தன் என்றும் சாதிக்குறியீட்டுக்காக பெயர்கள் மாற்றி பதியப்பட்டும், இன்ன இன்ன சாதி இன்ன இன்ன ஊர்களில் குறிச்சிகளில் என்றும், தப்பித்தவறி சாதிவிட்டு சாதி காதல் கொண்டால் கடலிலோ, குளத்திலோ கிணற்றிலோ அடித்தே கொலை செய்து வீசப்பட்டு, வழக்குகள் நீதிமன்றுகளில் அப்புக்காத்துக்களால் தள்ளுபடியாக்கப்பட்டும், ஆலயங்களும் அங்கு குடிகொண்டிருக்கும் கடவுளர்கள் கூட சாதிகளுக்கென்றும், பள்ளிக்கூடங்களில் நீ பள்ளனா பறையனா என்றும், முத்தன், கந்தன் என்ற பெயரைக் கண்டால் மூட்டை சுமக்கப் போகாமல் நீ எதற்கடா வகுப்பறையில் முன் வாங்கில் அமர வேண்டும் என பாடம் நடாத்தும் சாதித்துவேசம் மிக்க "முத்துக்குமாரசாமி" வாத்தியாயர்கள் என இன்னும் பற்பல சாதிக்கொடுமைகளை ஒடுக்குமுறைகளை தமிழ்த் தேசிய சாதிமான்கள் தங்கள் புறங்காலால் ஒதுக்கிவிட்டு தங்களது தங்கப் பிள்ளைகளின் பல்கலைக்கழக வாய்ப்பு பறிபோய் விட்டதே என்று வெண்கலக் குரல்களில் வீராவேச வசனம் பேசி அணிகளைத் திரட்டி ஆயுதப் போரினை மூட்டினர்.

அவ்வழி வந்தவர்கள் தலைமுறையில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள் மட்டுமே இன்று வீர புருஷர்களாகவும், மாவீரர்களாகவும், போராளிகளாகவும் வரலாற்றில் தனித்து முன்னிறுத்தப்படுகின்றனர். இவர்கள் எல்லாம் தமிழ்த்தேசிய வீரர்களாக மலர முன்னரே தமதன்னையரில் கருவில் உருக்கொள்ள முன்னரே, நவீன போர்க்கருவிகளோடு துப்பாக்கிகளோடு, நவீன தகவல் பரிமாற்ற சாதனங்களோடு, பணபல, ஊடகப் பராக்கிரமங்களோடு நிலம் நடுங்க, உயிர்கள் இழிய நீண்ட போர் நடாத்துவதற்கு முன்னரே "தமிழர்" என்ற ஒற்றைச் சொல்லுக்குள் சண்டாளப் பேயாக தாண்டவமாடிய சாதியடிமை, குடிமை முறை, தீண்டாமை ஒடுக்குமுறையின் வேருக்கு வெடிகுண்டு வைத்தவர்கள். கரந்தடித்தல் என்னும் கெரில்லா போர்முறைக்கு "தமிழர்கள்" வரமுன்னரே வீதிகளில் தத்துவப் பதாகைகளோடு உயிர்களை நேரிடை மோதல்களில் விட்டெறிய வந்தவர்கள். வாள்களும் உள்ளுர் வெடிகுண்டுகளும் ஒரு சில நாட்டுத் துப்பாக்கிகளும் தவிர வேறு எந்த நவீனங்களும் அவர்களிடம் இல்லை, நெஞ்சில் ஏந்திய விடுதலை வேட்கையைத் தவிர.

மாலைகளையும், மலர்வளையங்களையும், மேளதாள தேர்தல் வெற்றி ஊர்வலங்களையும், வீராவேசப் பேச்சுகளில் சூடேறிய இளைஞர்களின் இரத்தத்தில் நெற்றித் திலகங்களையும் சூடிக்கொண்டோர்களுக்கிடையில், இனமானத்தலைவர்களாக தூக்கி உயர்த்தப்பட்டவர்களுக்கிடையில், அவமதிப்பையும் அடக்குமுறையையும், அநீதிகளையும், புறக்கணிப்புகளையும் வறுமையையும், தலைமறைவு வாழ்க்கையையும், தியாகங்களையும், போராட்ட அனுபவங்களால் புடம் போடப்பட்ட வரலாற்று நினைவுகளையும் தாங்கி நின்ற எத்தனையோ தோழர்களில் பலர் தமிழ்த்தேசிய ஆயுதப் போராட்டத்தலைமைகளால் நெஞ்சில் துவக்குமுனையால் எதிர்கொள்ளப்பட்டனர். எனினும் எதைக் கண்டும் துவண்டு விடாத அவர்களது நீண்டதும் நெடியதுமான போராட்டமும் அதன் பயனாய் விளைந்த சமூகத்தில் பொது இடங்களிலாவது ஓரளவுக்கு தன்னை நாகரீகமாக மறைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு யாழ் சாதியமுறைமை தன்னை இனங்காட்டாமல் இனமானப் போர்வையைப் போர்த்துக் கொண்டுள்ளது.

போராளிகள் என்ற பதம் தமிழ்த்தேசியத்தால் உச்சரிக்கப்படும் முன்னரே அடிப்படை மனிதத்துக்கு எதிரான அநீதி கண்டு கொதித்தெழுந்து முதல் மூத்த தலைமுறைப் போராளிகளாக, எழுத்தாளர்களாக, தத்துவார்த்த பிரச்சாரகர்களாக எனப் பலமுனையிலும் முறுக்கிய தம்கரங்களையும் முன்னேறிய மார்க்சிய தத்துவத்தின் வெளிச்சத்தினையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தின் முன்னின்றவர்கள் இவர்களே தவிர தேசியம் என்ற பெயரில் ஏகாதிபத்திய அடிமைகளாகவும் ஏவல் நாய்களாகவும் துப்பாக்கி ஏந்திய தலைமைகள் அல்ல.

தீண்டாமை வெகுஜன இயக்கம், சாதியம், தீண்டாமைக்கெதிராக மக்களைப் போராளிகளாக்கியது. மக்களை பாரிய இயக்கமாக்கியது. வேண்டப்பட்ட போது அவர்களை ஆயுதம் தரிக்க வைத்தது. தனிக்குவளைகளை தூக்கி வீசியது. ஆலயங்களில் உள்ளிட போராடியது. பல்வேறு சமூக கலாச்சார ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக உயர்சாதி மக்களிடையிலும் தனது ஆதரவை பெற்றுக் கொண்டு ஓரணியில் போராட்டங்களில் இணைத்து உறுதியான இடைவிடாத போராட்டங்களை நிகழ்த்தியது. மறுபுறத்தில் அதிகார மட்டத்தில் அரசியல் மட்டத்தில் சாதிப் பெரியோர்களை ஆக்ரோசமாக சாடி போர்க்கொடியோடு போராடியது. இத் தீண்டாமை இயக்கத்தின் தீரமிக்க போராளிகளில் ஒருவராக தன்னை அர்ப்பணித்தவர் தான் தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்.

"தம்பிகளா ஒடுக்குமுறையென்ற சமுத்திரத்தின் மேல் கப்பல் கட்டி மிதந்துகொண்டு போராடுகின்றவர்களுக்கு, அச்சமுத்திரத்தின் மூச்சிழுக்க முடியாத அடியாழத்தில் மேலுள்ள சமுத்திர நீரின் அமுக்கத்தையும் அதிகமாக சுமந்து கொண்டு போராடுகின்றவர்களை காண முடியாது தான். பலவிதமான சோர்வுகள், அவமதிப்புக்கள், அவதூறுகள், ஒதுக்கிவைத்தல், முரண்பாடுகள், அமைப்புத் தோழர்களின் தத்துவார்த்த நடைமுறை விலகல்கள், உயிராபத்து, அச்சுறுத்தல், குடும்பம் சுற்றங்கள் உறவுகளுக்கு கூட வேண்டாதவர்களாதல் என்ற பல இடர்ப்பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் அறிந்திருங்கள்" என்பது அவருடனான முதல் சந்திப்பில் அவர் புதிய ஜனநாயக மக்கள் முன்னணித் தோழர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகள். தன்னுடைய வயோதிபத்தின் வாசலுக்கு வந்த பின்னரும் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துரையாடல்களிலும், அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட அவர், ஒரு தளராத உறுதி கொண்ட போராளி என்பதை பதிவு செய்கிறோம். ஆனால் அவருடன் தொடர்ச்சியாக உரையாடுவதற்கென ஏற்படுத்திக் கொண்ட நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவருடைய அனுபவத்தை தொகுக்கு முன்னரே அவர் காலமாகிவிட்டதென்பது ஒரு பேரிழப்பு.

தோழர் தங்கவடிவேல் மாஸ்ரருக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி தனது செவ்வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
30.07.2014