Fri03292024

Last updateSun, 19 Apr 2020 8am

படைப்பிலக்கியவாதி சாரல் நாடன் அவர்களுக்கு எமது அஞ்சலிகள்!

மலையக படைப்பிலைக்கியத் துறையில் மறைக்க முடியாத பாத்திரமாக விளங்கும் சாரால் நாடன் அவர்களின் மறைவு ஈழத்து படைப்பிலக்கியத் துறையில் வெற்றிடத்தையும் மலையக மக்களிடயே பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

படைப்பிலக்கியம், ஆய்வு என இரு துறைகளிலும் அவர் ஆற்றிய பணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சி.வி. சில சிந்தனைகள், தேச பக்தர் கோ. நடேசய்யர், பத்திரிக்கையாளர் கோ. நடேசய்யர், மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும், மலைக் கொழுந்து மற்றும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள் என அவர் தந்த படைப்புகள் அவற்றின் தகவல்கள் மலையக மண் சார்ந்த வரலாற்று பதிவுகளாகவும் வரலாற்று ஆவணங்களாகவும் விளங்குகின்றன.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட தொழிலாளார் வர்க்கத்தை பெருந்திரளாக கொண்ட மலையக மக்களின் வரலாற்றை பதிவு செய்த மறைந்த சாரல் நாடன் அவர்களின் படைப்புகளும் பணிகளும் மனித நேயம் கொண்ட படைப்புத் தளத்தில் இருந்து வெளிவந்திருப்பதுடன் மறைக்கப்பட்ட மலையக மக்களின் வரலாற்று ஆவணங்களை தேடித் தொகுப்பதிலும் அவற்றை பதிவுகளாக வெளிக்கொணர்வதிலும் இவரின் தேடல் முக்கியத்துவம் பெறுகிறது. இன்னொரு புறம் இவரது படைப்பிலக்கியங்களான கவிதைகளும், சிறுகதைகளும் மலையக மக்களது வாழ்வை மனிதாபிமான நோக்கோடு பதிவு செய்திருக்கின்றன.

“எல்லோரும் இறக்க வேண்டியவர்கள்தான் ஆனால் இறப்பு என்பது அதன் பயனில் வேறுப்பட்டது” என மாவோ குறிப்பிடுவது போல ஒரு சமூகத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதிலும் இலக்கியத் தளத்திலும் மறைந்த நல்லையா என்ற சாரல் நாடன் அவர்களின் பங்களிப்பு வரலாற்றில் மறைக்க முடியாததாகும். அவரின் பிரிவால் துயர் சுமந்து வாடும் அவரது துனைவியார், பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அமைப்பாளர்

பா. மகேந்திரன்

மக்கள் பண்பாட்டுக் கழகம்