Thu03282024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 46)

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - (பகுதி 46)

தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு

தளமாநாட்டினால் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், குழப்பநிலையும், அணிச் சேர்க்கைகளும், இந்தியாவில் புளொட்டின் தலைமைக்குள் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், புளொட்டின் பின்தள மாநாட்டைக் கூட்டுவதை நோக்கிய தயாரிப்புகளின் போது வெளிப்படத் தொடங்கின. உமாமகேஸ்வரன் தலைமையில் படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியல் செயலர் வாசுதேவா, மாணிக்கம் தாசன் போன்றோர் ஓரணியாகவும், பரந்தன் ராஜன் தலைமையில் ஆதவன் (ராமசாமி), ஈஸ்வரன், பாபுஜி, செந்தில் ஆகியோர் உட்பட ஒரு குழுவினர் மற்றொரு அணியாகவும் புளொட் பிளவுற்றது. சந்ததியார் தலைமையில் "தீப்பொறி" குழுவின் வெளியேற்றத்தின் பின்னராக புளொட்டுக்குள் ஏற்பட்ட பெரியதொரு பிளவாக அது காணப்பட்டது.

 

நாம் புளொட்டிலிருந்து சிறுகுழுவாக வெளியேறியிருந்தோம். ஆனால், பரந்தன் ராஜன் தலைமையில் புளொட்டின் மத்தியகுழுவில் அங்கம் வகித்தவர்களில் கணிசமான தொகையினரும், புளொட்டின் இராணுவப்பிரிவில் அங்கம் வகித்த பலரும் இணைந்து செயற்படத் தொடங்கியிருந்தனர். ஈழ விடுதலை இயக்கங்களுக்குள்ளேயே பயிற்றப்பட்ட போராளிகளை அதிக எண்ணிக்கையாகவும், பல்வேறுபட்ட அமைப்புவடிவங்களையும் கொண்டு ஈழவிடுதலைப் பேராட்டத்தில் முன்னரங்கத்திலிருந்த புளொட் அதன் சிதைவை நோக்கியதாகவும், அதன் எதிர்காலம் கேள்விக்குரியதொன்றாகவும் மாற்றமடைந்து கொண்டிருந்தது.

இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவதற்காக போராட்ட உணர்வுடன் முன்வந்திருந்த பலர் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்பட்டவர்களாய் விரக்திக்குட்பட்டு தமது சொந்த வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் சிறு சிறு குழுக்களாகச் செயற்படத் தொடங்கிய அதேவேளை சிலர் எம்முடனும் தொடர்பு கொண்டு பேசினர். குறிப்பாக, செல்வராஜா(கருணா), மாசில் பாலன், செல்வி, தில்லை, விஜயரட்ணம் போன்றோர் உட்பட சிலர் இதிலடங்குவர். புளொட் பல குழுக்களாகச் சிதறுண்டு போன பின்பும் கூட எம்முடன் தொடர்பு கொண்ட புளொட்டின் அங்கத்தவர்கள் ஒரு சிலராகவே காணப்பட்டனர்.

 

                                                                     (வவுனியா தம்பி)

புளொட்டிலிருந்து வெளியேறிய நாம் "தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்டு புளொட்டின் அராஜகச் செயல்களை அம்பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினோமே தவிர புளொட்டில் அங்கம் வகித்த முற்போக்குச் சிந்தனை கொண்டவர்களையும் ஜனநாயகசக்திகளையும் வென்றெடுத்து எமது பக்கம் கொண்டுவரத் தவறியிருந்தோம்.

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதன் மூலம் அல்லது புளொட் பல குழுக்களாகச் சிதறும் போது முற்போக்கு சக்திகள் எம்முடன் தாமாகவே இணைந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்த நாம் அவர்களை வென்றெடுப்பதற்கான செயற்பாடுகளை எமது பக்கத்திலிருந்து முன்னெடுத்துச் சென்றிருக்கவில்லை.

தளத்தில் நிலைமைகள் மேலும் மோசமடைந்தவண்ணமிருந்தன. தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள் (TELO) தோன்றிய முரண்பாடுகளால் அவ்வியக்கத்தின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் தலைமையில் ஒரு குழுவினர் தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறுவதில் முடிவுற்றிருந்தது. தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து வெளியேறிய தாஸ் குழுவினருக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கும் (TELO) இடையிலான முரண்பாடு பகைமை வடிவம் பெற்றதன் வெளிப்பாடு யாழ் போதனா வைத்தியசாலையில் தாஸும் அவரது நான்கு மெய்ப்பாதுகாவலர்களும் தமிழீழ விடுதலை இயக்கத்தால் (TELO) கொல்லப்படுவதில் முடிவடைந்திருந்தது.

சரியானதெரு அரசியல் தலைமைத்துவம் இன்றி, போராட்டம் பற்றியும் அதில் மக்களின் பாத்திரம் குறித்தும் சரியானதொரு அரசியல் பார்வையின்றி, இந்திய அரசின் இராணுவப் பயிற்சியுடனும், இந்திய அரசினால் வழங்கப்பட்ட ஆயுதங்களுடனும் திடீர் வீக்கமடைந்துவிட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பிளவுகளிலும், அப்பிளவுகள் ஆயுதவழிமுறை கொண்டு தீர்க்கப்படுதலை நோக்கிய வழிமுறையிலும் சென்று கொண்டிருந்தன.

வவுனியா மாவட்டத்தில் எமது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வவுனியா தம்பியும் அவருடன் எம்மை வந்து சந்தித்துப் பேசிய வண்ணன், கபிலன், யோகன், ராஜன் போன்றோரும் வலியுறுத்தினர்.

தொடர்ச்சியான சந்திப்புக்களின் பின் எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்த இவர்கள் வவுனியா மாவட்டத்தில் "தீப்பொறி" க் குழுவின் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு எமது வெளியீடுகளான "தீப்பொறி" பத்திரிகை, "புதியதோர் உலகம்" நாவல் , "அரசியலும் இராணுவமும்" என்ற கையடக்கத் தொகுப்பு என்பவற்றை வவுனியா எடுத்துச் சென்று மக்கள் மத்தியில் விநியோகிக்கத் தொடங்கினர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வெளியே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதானது நம்பிக்கையளிப்பதாக இருந்ததோடு ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்படும் அரசியல் வறுமையும், முரண்பாடுகளும், மோதல்களும் புதிய புரட்சிகர அமைப்பின் தேவையையும் கூட வேண்டி நின்றது.

துப்பாக்கி வேட்டுக்களும் குண்டுவெடிப்புக்களும் அதிகாலையின் அமைதியைக் குலைத்துவிட்டிருந்தது. பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவர்ர்த்தையின் தோல்வி, இராணுவம் முகாம்களில் இருந்து வெளியேறி பாரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவே வழிவகுக்கும் என்பது எவராலும் ஊகிக்கக் கூடியதாக அமைந்திருந்தது.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இராணுவரீதியில் பலமாக இருந்ததால் இலங்கை அரசபடைகளின் தாக்குதல் அவ்வளவு இலகுவாக நடைபெற முடியாது என்பதையும் அனைவரும் அறிந்திருந்தனர். ஆனால் தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுகளும் குண்டுவெடிப்புகளும் பலமான ஒரு மோதலின் வெளிப்பாடாகவே அமைந்திருந்தது. நிலைமையை அறிவதற்காய் வீட்டிலிருந்து புறப்பட்டு வீதிக்குச் சென்றேன். வீதிகளில் மக்கள் வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்தவர்களாய் ஒருவித கலக்கத்துடன் தமது ஊகங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

"நாவற்குழி இராணுவ முகாமிலிருந்து இராணுவம் வெளியேற முயற்சி செய்ய பெடியள் இராணுவத்துடன் மோதுகிறார்கள்" என்றார் ஒருவர். "என்ன இருந்தாலும் பெடியள் இராணுவத்தை முகாமிலிருந்து வெளியேற விடப்போவதில்லை" என்றார் மற்றொருவர். ஒவ்வொருவரும் தத்தமது ஊகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்க நானோ துப்பாக்கி வேட்டுகளும் குண்டுவெடிப்புக்களும் கேட்ட திசையை நோக்கி சைக்கிளில் சென்றேன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஆயுதம் தாங்கிய உறுப்பினர்கள் ஒரு போருக்குள் தள்ளப்பட்டுவிட்ட இராணுவம் போல வான்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் அங்குமிங்குமாக அலைந்து திரிந்தனர். நிலைமை பாரதூரமானதொன்றாய் இருப்பதென்பதை அவர்களின் முகங்களில் காணப்பட்ட கடுமைத்தன்மை எடுத்துக்காட்டி நின்றது. நான் திருநெல்வேலிச் சந்தியை அண்மித்தபோது ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அவ்விடத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

உண்மைநிலையை அறியும் பொருட்டு வீதியில் நின்றவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். "இயக்க மோதல்" என வீதியில் நின்றவர்கள் தெரிவித்தனர். ஆம், தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவ முகாம் மீதல்ல; தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) மீது ஒரு முழு அள(அழி)விலான யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதன் அறிகுறியை வீதிகளில் கொலைவெறியுடன் அலைந்து திரியும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னணி உறுப்பினர்களான கிட்டு, மயூரன், ரகீம் மூலமும், தொடர்ந்துகொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களும் குண்டுத் தாக்குதல்களும் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

தமிழீழ வீடுதலை இயக்கத் தலைவர் (TELO) சிறீசபாரட்ணம் தங்கியிருந்த கல்வியங்காட்டுப் பகுதியை சுற்றிவளைத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்குமிடையில் (TELO) பலத்த மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

திருநெல்வேலிச் சந்தியிலிருந்து கல்வியங்காட்டுப் பகுதியை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். திருநெல்வேலி அம்மன் கோவிலுக்கு அருகில் தமிழீழ விடுதலை இயக்க(TELO) போராளிகள் இருவரை சுட்ட பின் அவர்கள் உயிர்பிரிந்திராத நிலையில் அவர்கள் மேல் ரயர் போட்டு தீயிட்டிருந்தனர்.

இலங்கை இனவாத அரசுகளால் தமிழ்மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மை இனங்கள் மீதும் ஏவிவிடப்பட்ட வன்முறை நடவடிக்கைகளால் பலர் அடையாளம் ஏதுமின்றி எரியூட்டப்பட்டிருந்தனர் என்பதே வரலாறாக இருந்தது. 1984 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஆதரவாளர்களால் யாழ்ப்பாண பௌத்தவிகாரை எரியூட்டப்பட்டபோது அதற்குப் பழிவாங்கும் முகமாக இலங்கை இராணுவத்தினர் எமது தோழர்கள் கேதீஸ்வரன், கிருபாகரன் உட்பட பல அப்பாவிப் பொதுமக்களை சுட்டுக்கொலை செய்து விகாரைக்கு அருகில் உள்ள பாலத்தினுள் அவர்கள் அனைவரையும் ரயர் போட்டு தீயிட்டிருந்தனர்.

இத்தகைய கோரத்தனங்கள் மூலம் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடும் போராளிகளையும் அதற்கு ஆதரவளிக்கும் மக்களையும் பீதிகொள்ளச் செய்ய முடியும் என இலங்கை அரசு எதிர்பார்த்திருந்தது. இலங்கை இனவாத அரசால் மேற்கொள்ளப்பட்ட ஈனச்செயல்களை அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களும், மக்களும் கண்டித்திருந்ததுடன் இத்தகைய கொடுமைகளுக்கெதிராகப் போராடுவதற்கெனத்தான் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்களும் யுவதிகளும் இணைவதற்கு காரணமாய் அமைந்தது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO)மீது முழு அளவிலான யுத்தத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்து வைத்ததன் மூலம், சக ஈழவிடுதலைப் போராளிகளை அழித்து அவர்களை வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டியதானது இலங்கை இனவாத அரசின் செயற்பாடுகளை ஒத்த செயலே ஆகும். இதன் மூலம் மக்களின் நலன், ஈழவிடுதலைப் போராட்ட நலன், என்பதை முதன்மைப்படுத்தாத குறுகிய இயக்க நலன், தலைமையின் நலன் என்பன தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்ததன.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தாம் யாருக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டார்களோ அந்த மக்களுக்கெதிராக துப்பாக்கிகளின் அதிகாரத்தை முன்நிறுத்தினர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரானவர்கள் கதி என்னவாகும் என பொதுமக்களும் சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்ககளும் புரிந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்படுவதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) கொல்லப்பட்டவர்களின் உடல்கள் தெருவோரங்களில் பகிரங்கமாக எரியூட்டப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டது.

இயக்கங்களுக்குள் தோன்றிவிட்டிருந்த அராஜகங்களும், உரிமை கோரப்படாத படுகொலைகள் கொள்ளைகளையிட்டு மக்களை விழிப்படையுமாறும் எச்சரிக்கை கொள்ளுமாறும் எம்மால் வெளியிடப்பட்டிருந்த "ஓர் அவசர வேண்டுகோள்" என்ற துண்டுப்பிரசுரத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இப்பொழுது தமது துப்பாக்கிகள் மூலம் பதிலளித்துக் கொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைந்திருந்த போராளிகள் - ஈழவிடுதலை போராட்டத்திற்கென தம்மை முழுமையாக அர்ப்பணித்த போராளிகள் - தமிழீழ விடுதலைப் புலிகளால் நரபலியாக்கப்பட்டு திருநெல்வேலி, கல்வியங்காடு, உரும்பிராய், உடுவில்,மருதனாமடம், தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை போன்ற இடங்களில் வீதிகளில் ரயர் போட்டு எரியூட்டப்பட்டனர்.

தமிழீழ விடுதலை இயக்கப் (TELO) போராளிகள் தங்கியிருந்த வட்டுக்கோட்டை முகாம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) சுற்றிவளைக்கப்பட்டு அனைத்து தமிழீழ விடுதலை இயக்க(TELO) உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பின்னர் சுட்டுக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டனர்.

நாம் புளொட்டிலிருந்து வெளியேறியபோது புளொட் அராஜகவாதிகள் கொலைக்கரங்களிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கு முன்வந்த தமிழீழ விடுதலை இயக்கத்தினர் (TELO) தமது வட்டுக்கோட்டை முகாமிலேயே எம்மைத் தங்கவைத்து எமக்குப் பாதுகாப்பளித்திருந்தனர். இம்முகாமிலிருந்த தமிழீழ விடுதலை இயக்கப் (TELO) போராளிகளில் பெரும்பாலானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். ஈழவிடுதலை இயக்கங்களுக்குள் இடதுசாரி அரசியல் பேசியவண்ணம் இயக்க அராஜகங்களுக்கும் இயக்கப் படுகொலைகளுக்கும் அரசியல் விளக்கம் கொடுத்தவர்கள் போலல்லாமல், அரசியல் பேசமுடியாதவர்களாக பெருமளவுக்கு அரசியல் அறிவு குறைந்தவர்களாக காணப்பட்ட போதும் எளிமையானவர்களாகவும் கபடத்தனமற்றவர்களாகவும் காணப்பட்ட இவர்கள் எமக்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்திருந்தனர்.

ஈழ விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்து விட்டிருந்த அப்போராளிகள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளால் வேட்டையாடப்பட்டு தீயுடன் சங்கமமாக்கப்பட்டனர்.

 

பத்மநாபா ( EPRLF), சிறீசபாரத்தினம், (TELO)  வே.பாலகுமார்.(EROS) வே.பிரபாகரன் (LTTE)

1983 யூலை நாடு தழுவிய அளவில் இன அழிப்பையும் இனவன்முறையையும் இலங்கையின் பேரினவாத அரசு கட்டவிழ்த்துவிட்டதையடுத்த வேளையில் தமக்கு கிடைத்த தொடர்புகள் மூலம் தமக்கிருந்த தெரிவாக தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைந்து கொண்ட இளைஞர்கள், இன ஒடுக்குமுறைக்கெதிராக போராடுதல் என்ற ஒரே நோக்கத்திற்காகவே தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO) இணைந்து கொண்டவர்கள்.

இந்தப் போராளிகள் அனைவரையும் - கைது செய்த அல்லது சரணடைந்த போராளிகள் அனைவரையும் - கொன்றொழித்து எரியூட்டியதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமிழ் மக்களுக்கும், சக ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் சொல்லிய செய்தி ஒன்றுதான். இலங்கை இனவாத அரசுக்கும் அதன் அரசபடைகளுக்கும் தாம் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதுதான் அச்செய்தி.

ஈழவிடுதலைப் போராட்டம் என்ற கருவறையில் தோன்றிய புற்றுநோய் - சுத்த இராணுவக் கண்ணோட்டமும் ஜனநாயகமறுப்பும் - ஈழவிடுதலைப் போராட்டத்தில் உருவாகிய இயக்கங்களுக்குள் வளர்ந்து தடம்பதித்து வந்தது. அது இதயசுத்தியுடனும் அர்ப்பணிப்புடனும் ஈழவிடுதலைக்காகப் போராட முன்வந்த போராளிகளை மட்டுமல்லாது மக்களையும் கூடவே அவர்களது புதைகுழிக்கு அனுப்பிக்கொண்டிருந்ததோடு உள்ளடக்கத்தில் பாசிசத்தன்மை கொண்டதாகவும் மாற்றம் காணத் தொடங்கியிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) நன்கு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க(TELO) அழிப்பு நடவடிக்கை தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் சிறீசபாரட்ணம் கோண்டாவிலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தளபதி கிட்டுவிடம் சரணடைந்த பின் சுட்டுக்கொலை செய்யப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கையானது - தமிழீழ விடுதலை இயக்க அழிப்பு நடவடிக்கையானது - ஆற்றமுடியாத வடுவை ஈழவிடுதலைப் போராளிகள் மனங்களிலும் மக்கள் மனங்களிலும் ஏற்படுத்தி விட்டிருந்ததுடன் விடைகாணப்பட வேண்டிய பல கேள்விகளையும் எழுப்பிவிட்டிருந்தது. தமிழீழ விடுதலை இயக்க (TELO)அழிப்பு நடவடிக்கையை பலர் கண்டிக்கத் தொடங்கினர். தமது கண்களால் பார்த்த கொடூரங்களிலிருந்து மீண்டுவர முடியாதவர்களாய் பலர் மௌனிக்கத் தொடங்கினர். இன்னுமொரு பகுதியினரோ தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைவெறிச் செயல்களைப் பாராட்டி குளிர்பானம் கொடுத்து உற்சாகமூட்டினர்.

நாம் இலங்கை அரசின் இனவொடுக்குமுறையையும், ஜனநாயக மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும், படுகொலைகளையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்; சர்வதேசத்திடம் முறையிட்டோம். ஆனால் இப்பொழுதோ ஈழவிடுதலைப் போராட்டத்தின் பேரால், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கம் எனக் கூறிக்கொண்டு எமது தெருக்களில் ஜனநாயக மீறல்களையும் படுகொலைகளையும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அரங்கேற்றி வந்தனர்.

தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடுவதற்கான உரிமையை மறுத்து தமிழீழ விடுதலை இயக்கத்தை அழித்ததன் மூலம் அவர்களின் ஜனநாயக உரிமையை மறுத்தனர். சரணடைந்த தமிழீழ விடுதலை இயக்கப் (TELO) பேராளிகளையும் அதன் தலைவர் சிறீசபாரத்தினத்தையும் கொன்றதன் மூலம் மனித உரிமையை மீறினர். தெருக்களில் தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகளை சுட்டுக்கொலை செய்து தெருவோரங்களில் தீயிட்டு எரித்ததன் மூலம் கோரத்தனமான படுகொலைகளை செய்து முடித்திருந்தனர்.

இப்பொழுதோ ஈழவிடுதலைப் போராட்ட நலன்களில் அக்கறை கொண்டவர்களினதும், மக்களினதும் கடமையானது இலங்கை இனவாத அரசுக்கெதிராக, அதன் ஜனநாயக, மனித உரிமை மீறல்களுக்கெதிராகப் போராடுவது மட்டுமல்ல, ஈழவிடுதலையின் பேரால் ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள் தோன்றிவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், அவர்களின் பாசிசத்தன்மை கொண்ட செயல்களுக்கும் படுகொலைகளுக்கும் எதிராகவும் போராட வேண்டியதாக இருந்தது.

(தொடரும்)

02/03/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45